படலைக் கதவுக்கு வெளியே நின்று அக்கா வீட்ல இருக்கீயளா என்று தயக்கமாகக் குரல்
கொடுத்தான் பூத்துரை. பதிலெதுவும் வராது போகவே மருதாயிக்கா, மருதாயிக்கா என்று சற்று
குரல் உயர்த்திக் கூப்பிட்டுப் பார்த்தான். அப்போதும் வீட்டிற்குள்ளிருந்து பதில் குரல்
எழவில்லை. நாழி ஓடுகள் வேயப்பட்டிருந்த அந்தச் சிறிய வீட்டைச் சுற்றிப் போடப்பட்டிருந்த
தென்னங்கிடுகுகள் அவனுக்கு வித்தியாசமாகத் தோன்றின. காரைவீட்டுக்கு காம்பவுண்டுச் சுவர்
போல இந்த ஓட்டு வீட்டுக்கு தென்னங்கிடுகுப் பாதுகாப்பா? கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு
மருதாயிக்கா அப்படி என்ன பதுக்கி வைத்திருக்கிறாள்? மற்றவர்கள் வயலில் வேலை செய்து
பிழைப்பவளுக்கு குவித்து வைப்பதற்கு நெல் மூட்டையும் இருக்கப்போவதில்லை. யோசித்தபடி
மீண்டும் உரத்த குரலில், “ஏ மருதாயிக்கா உள்ள இருக்கீகளா?” எனக் கூப்பிட்டான். அந்த
வழியாக சைக்கிளில் வந்த பரமசிவம், சைக்கிளை இவன் பக்கம் நிறுத்திவிட்டு, ஏன் அண்ணாச்சி
ஊருக்கே கேக்குறாப்ல கத்தீட்டிருக்கீக என்று சிநேகத்துடன் கேட்டான்.
“ஒண்ணுமில்ல பரமு, மருதாயிக்காவ பாக்கணும்.” என்றான் தலையைச் சொறிந்துகொண்டே
பூத்துரை.
அதுக்கேன் எங்க ஊரு மாப்பிள்ளை இப்படி நெளியிறீக? முத்தாலங்குறிச்சியில பொண்ணு
கட்டுனவக நிமிந்து நிக்க வேண்டாமா அண்ணாச்சி? அதுவும் எங்க ராஜகனி மைனிய கட்டிக்கிட்டு...?
பூத்துரை இப்போது இன்னும் அதிகமாக நெளிந்தான்.
“மருதாயி அக்காகிட்ட ஒரு விஷயம் கேட்டுப்புட்டுப் போலாம்னு வந்தேன்.”
“தாராளமா கேளுங்க. உள்ள போய் இருக்காகளான்னு பாருங்க.”
“ரொம்ப நேரமா கூப்பிட்டுப் பாத்துட்டேன். ஒரு அசைவையும் காணோம். ஒரு வேள அக்கா
தூங்கிட்டிருக்காகளோ என்னவோ.”
பரமசிவம் சிரித்துவிட்டான். “காத்துக்கு ஏதுண்ணே தூக்கம்? மருதாயி அத்த அர்த்த
ராத்திரியில கூட வெருவு கணக்கா முழிச்சிக்கிட்டு வௌக்குமாரு கட்டிக்கிட்டிருக்கும்.
வித்தா நாலு காசு கெடைக்குமேன்னு...” பரமசிவத்தின் வார்த்தைகளில் ஆதங்கம் தெரிந்தது.
பிறகு அவனே தொடர்ந்து, “தமிழ்ச்செல்வியப் படிக்க வைக்கிறதுக்கு உயிரைக் கூட விட்ரும்ணே.
அதுக்குத் தூக்கமா பெருசு” என்றான். சொல்லிவிட்டு, “அத்தை, மருதாயித்த” எனக் கூப்பிட்டான்.
இப்போதும் பதில் ஏதும் இல்லாமல் போகவே, சைக்கிளை விட்டு இறங்கி வந்து படலைக் கதவைத்
தள்ளினான். தரையில் சாப்பாடு பரிமாறலாம்போல மிக, மிக சுத்தமாக வைக்கப்பட்டிருந்த முற்றத்தையும்,
அதிலிருந்த ஏராளமான செடிகளையும், பூக்களையும் பார்த்ததும், அந்த ஓட்டு வீட்டைச் சுற்றி
ஏன் தென்னங்கிடுகுகள் போடப்பட்டிருக்கின்றன என்று பூத்துரைக்குப் புரிந்துபோனது. முற்றத்தின்
ஒரு பக்கத்தில் ஒரு நார்க் கட்டில் போடப்பட்டிருந்தது. மூலையில் தேங்காய் சிரட்டையிலிருந்த
உமிச் சாம்பலில் இருந்த ஈரப்பதம் கண்டதும், அப்போதுதான் பாத்திரங்கள் தேய்க்கப்பட்டிருக்கின்றன
என்பது தெரிந்தது. அதற்கேற்றாற்போல் மரப்பலகையின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த
இரண்டு எவர்சில்வர் கிண்ணங்களும் தட்டுக்களும் மாலை வெயிலில் பளபளத்தன. சுற்றிலும்
இருந்த செடிகளில் கேந்திச் செடிகள் அதிகமாய்த் தெரிந்தன. சின்ன ஆரஞ்சுப் பந்துகள் போல்
பூத்திருந்த செண்டுப் பூக்களின் மலர்ச்சியில் திருமணமான புதிதில் ராஜகனி சிரிக்கும்
சிரிப்பு தெரிந்தது. அவளது சிரிப்பிலும் உதடுகளைத் திறக்காமல் அவள் காட்டும் கிறங்கடிக்கும்
புன்னகையிலும் அவன் கண்ட போதையை எப்போதாவது திருவிழா சமயங்களில் பருகிய பட்டைச் சாராயத்திலும்
பார்த்ததில்லை. பிச்சிக் கொடியில் பூத்துக் குலுங்கிய பிச்சிப் பூக்களின் வாசம் அவளது
கூந்தலின் மணமாக மனதில் வந்து மோதியது. சாயங்காலமானால் போதும். தலையில் தேங்காய் எண்ணெயை
அழுந்தத் தேய்த்து, நீண்ட கூந்தலைப் படிய வாரி, பின்னல் சடை போட்டு, குறைந்தது ஐந்து
முழம் பிச்சிப் பூவையாவது அதில் தொங்கவிட்டிருப்பாள் ராஜகனி. முகத்தில் வற்றாத உற்சாகத்தையும்,
நடையில் சந்தோஷத் துள்ளலையும் மட்டுமே அவன் பார்த்திருக்கிறான். ஆனால் பயனற்றுப் போனதால்
மறுநாள் காலையில் வாடிப்போய் உதிரும் பிச்சிப் பூக்கள் போல சில காலமாய் வாட்டமுற்றுக்
காணப்படும் ராஜகனியின் முகம் நினைவுக்கு வந்து வேதனையைக் கொடுத்தது.
“என்ன அண்ணாச்சி, என்ன யோசனை?” பரமசிவம் தோள்களைப் பிடித்து உலுக்கினான்.
“ஒண்ணுமில்ல... எவ்வளவு செடிகளும் பூக்களும்பா. ரொம்ப அழகா இருக்கு பரமு!”
சிவப்பு, வெளிர் சிவப்பு, வெள்ளை நிறத்தில் மலர்ந்திருந்த ரோஜாப் பூக்களை சுட்டிக்
காட்டிய பரமசிவம், “பக்கவட்டியிலிருந்து இந்தச் செடிகளை நான் தான் கொண்டாந்தேன். நாட்டு
ரோஜாப் பூக்கள்னா தமிழுக்கு ரொம்ப இஷ்டம்” என்றான். பிறகு, “நெசமாவே அத்தை வீட்ல இல்ல
போல. இல்லைனா இந்நேரம் வரைக்கும் உள்ள இருக்காது.” என்றான்.
அப்புறமா வரலாம் என்று பரமசிவத்துடன் வெளியில் வந்த பூத்துரையிடம், “சைக்கிள்ல
ஏறுங்கண்ணாச்சி. வீட்ல கொண்டுபோய் விட்டுடறேன். இல்லன்னா எம் புருஷன நடக்க வச்சிட்டியான்னு
மைனி திட்டும்.” என்று உரிமையுடன் கைகளைப் பற்றிய பரமசிவத்தின் சைக்கிளில் பூத்துரை
ஏறப்போன சமயத்தில், “என்ன வந்துட்டு ஒடனே கிளம்பிட்டீய? அதான் நான் வந்துட்டேனேய்யா”
என்ற மருதாயின் குரல் கேட்டு நின்றார்கள். ஓட்டமும் நடையுமாக ஒரு கையில் ஆட்டுக் குட்டியைக்
கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு, மறு கையில் குழையுமாக வந்த மருதாயி, காப்பித்
தண்ணி குடிச்சிட்டுப் போகலாம் வாங்க” என்றாள். அவள் குரலில் இருந்த பாசம் கண்களிலும்
தெரிந்தது. பாசாங்கு இல்லாத பாசம் அது. அதே பாசத்தை எல்லாரிடமும் எல்லா சமயத்திலும்
இயல்பாக அவள் காட்ட முடிவதை பரமசிவம் கவனித்திருக்கிறான். “பூத்துரை அண்ணாச்சிதான்
ஒங்களப் பாக்கணும்னு வந்துருக்காக அத்த!”
“அதனால நீ வரமாட்டியாக்கும் பரமு! நீ நட்டுவச்ச ரோசாச் செடி எம்புட்டுப் பூ
பூத்திருக்கு பாத்தியா?” என அவன் கைகளைப் பற்றி அழைத்தாள். அந்த ரோஜாப் பூக்களிடம்
கூட இல்லாத அழகு உழைப்பில் களைத்துப்போன அவளது கண்களில் வழியும் கனிவில் இருப்பதாகப்
பட்டது பரமசிவத்துக்கு.
“ஆமா அத்த பாத்தேன். நாட்டு ரோஜாப்பூ வாசம் ஊரையே தூக்கிட்டுப் போகுது.”
“வெள்ளாட்டுக் கெடாவயும் வளக்குறியாக்கா! எப்படி? செடி கொடி காவலுக்காக சுத்திலும்
கிடுக போட்டுட்டு ஆடு வளர்த்தா எப்படிக்கா” என்றான் பூத்துரை.
ஆட்டுக்குட்டியின் முதுகைப் பரிவுடன் தடவிக் கொடுத்த மருதாயி, “ஆண்டிப்பட்டி
சந்தையில செண்டு ஆசைபட்டு வாங்கினது.” என்றாள்.
“அத்தை அவுக மவ தமிழ்ச்செல்விய எப்பவும் செண்டுன்னுதான் கூப்பிடும்.” என்று
பூத்துரையிடம் கூறிய பரமசிவம், “தமிழு ஆடுன்னா செடிய மேயாதா அத்தை.” எனச் சிரித்தான்.
“நெசந்தான் பரமு. மோந்து பாக்குறக்குக் கூட செடிகிட்ட போறதில்ல.” என வெகுளியாய்
சிரித்த மருதாயி, வீட்டு முற்றத்தில் தெற்கு மூலையில் இருந்த மலை வேம்பு மரத்தில் அதைக்
கட்டிவிட்டு “இதுக்குக் கொழ புடுங்கிட்டு வரலாம்னுதான் போனேன். அதுக்குள்ள கோவங்காட்டாளுக்கு
தலைய நோவுதுன்னு வந்து சொன்னாக. ஒரு எட்டு போய் சுக்கு சொரசம்பண்ணி குடுத்துட்டு வர்றேன்”
என்று ஆட்டின் முன் குழையைப் போட்டுவிட்டு சருவச் சட்டி நிறைய தண்ணீர் எடுத்து அதன்
முன் வைத்தாள்.
மூவரும் உள்ளே சென்றதும் இரண்டு மரப்பலகைகளை எடுத்துப்போட்டு உட்காரச் சொன்னாள்.
பூத்துரை முதல் முறையாக வீட்டினுள் வந்திருந்ததால் சுற்றிலும் பார்வையிட்டான். சிமெண்டு
தளம் போடப்பட்ட சற்று விசாலமான ஒரே அறை. மூலையில் மண்ணெண்ணெய் ஸ்டவ். பக்கத்திலேயே
குறைவான பாத்திரங்கள். தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருந்த செம்புத் தவலைக்குப் பக்கத்திலிருந்த
பித்தளைக் கும்பா புத்தம் புதிதாகப் பளபளத்தது. பூத்துரையின் பார்வை அதன் மேல் பதிந்திருப்பதைக்
கண்ட மருதாயி, “கல்யாணம் கட்டிக்கிட்டு வந்தாப்ல எங்காத்தா எனக்குக் கொடுத்த சீதனம்.
இதுலதான் செண்டு சின்ன வயசுல பழைய கஞ்சியோட வாழைப்பழம் போட்டு பெசஞ்சு சாப்பிடுவா”
என்றாள்.
“புதுசா அப்படியே கடையில வாங்கினமாதிரி இருக்குக்கா.” மருதாயி சிரித்தாள்.
“இந்த கும்பாவத்தான் தமிழு பள்ளிகூடத்துக்குக் கொண்டுவருவா அத்தை.” என்றான்
பரமசிவம்.
ஓரமாக இருந்த டப்பாவைத் திறந்து நான்கைந்து முறுக்குகளை எடுத்து “அடைக்கலப்
பட்டணத்திலேருந்து மைனி வந்திருந்தாக. அவுக வாங்கிட்டு வந்தது.” என்று இருவரது கையிலும்
கொடுத்தாள்.
“அவுக வீட்டுக்காரரு செத்துப்போனதுலேருந்து ரொம்பத் தவங்கிட்டாகல அத்த” என்ற
பரமசிவத்திடம், “ஆமா பரமு, அவுகளப் பார்த்தா மனசுக்குக் கஷ்டமா இருக்கு.” என்றாள்.
பிறகு, “இந்தா வந்திடுதேன்” என்று வெளியில் ஓடினாள். முறுக்கைக் கடித்த பரமசிவம், அரிசி
முறுக்கு அண்ணாச்சி என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த கும்பாவின் மேல் பார்வையைச் செலுத்தினான்.
தமிழும் அவனும் சின்ன வயதில் போட்டுக்கொண்ட சண்டை, எவ்வளவு தூரம் தமிழ் தன்மான உணர்வு
கொண்டவள் என்பதை நெஞ்சில் பதிய வைத்து அவள் மேல் மதிப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்திய
அந்த நிகழ்ச்சி சட்டென்று மனக்கண்ணில் தோன்றியது.
உள்ளூர் ஆரம்பப் பள்ளியில் அவர்கள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதுதான்
அந்தச் சண்டை நடந்தது. சத்துணவு சாப்பிட ஊர்ப் பிள்ளைகள் பெரும்பாலும் அலுமினியத் தட்டு
எடுத்து வருவார்கள். தமிழ் மட்டும் இந்தப் பளபளக்கும் பித்தளைக் கும்பாவுடன் வருவாள்.
வரிசையில் உட்கார்பவள், பரிமாறுவதற்கு சத்துணவு ஆயா பக்கத்தில் வரும் வரைக்கும் அதைக்
கீழே கூட வைக்காமல் மடியிலேயே வைத்திருப்பாள். உணவு சரியாகப் பரிமாறப்படுகிறதா என்று
கண்காணிக்க வரும் ஹெட்மாஸ்டர் சார்வாள், “ஏ புள்ள கும்பாவைக் கீழ வை” என அதட்டினால்தான்
கீழே வைப்பாள், கும்பாவுக்கும் தரைக்கும் நோகாதபடி! சாப்பாடு பரிமாறப்பட்டு சார்வாள்
அந்தப் பக்கம் போனதும் கும்பாவைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு நடையைக் கட்டிவிடுவாள்.
முற்றத்தில் அமர்ந்து ஆத்தாவுக்கு ஒரு வாயாவது கொடுத்துவிட்டுதான் சாப்பிடுவாள். பரமசிவம்
ஓரளவு வசதியான வீட்டுப் பையன் என்பதால் அவன் அம்மா ஒருபோதும் சத்துணவு சாப்பாடு சாப்பிட
அனுமதித்ததில்லை. ஆனாலும், சாப்பாட்டை வேடிக்கை பார்த்துவிட்டுப் போவது அவன் வழக்கம்.
ஒரு நாள் அவள் பின்னாலேயே சென்ற பரமசிவம், “ஏ தமிழு ஒனக்கு மட்டுமென்ன தனிச் சட்டமா?
நீயும் பள்ளிகோடத்துல ஒக்காந்துதானே சாப்பிடணும்” என்று வம்பிழுத்தான்.
“போடா தடியா ஒன்னோட வேலைய பாரு.”
“இன்னிக்கு ஒன்ன நான் வீட்டுக்கு உடமாட்டேன்.”
“உங்க மாமா ஊரு நாட்டாமன்னா அத ஒங்க வீட்டுக்குள்ள வச்சுக்கோ. போடா.” சொல்லிவிட்டு
அவள் பாட்டுக்கு நடந்துகொண்டிருக்க, எதிர்பாராத தருணத்தில் கும்பாவைப் பிடுங்கி எறிந்தான்
பரமசிவம். அதிர்ச்சியில் நிலைகுலைந்த தமிழ்ச்செல்வி, அதிலிருந்து விடுபட்டதும் ஓவெனப்
பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். வரிசையாகப் படர்ந்திருந்த சொடக்குத் தக்காளிச்
செடிகளுக்கு மத்தியில் போய் விழுந்திருந்த கும்பாவைக் கையில் எடுத்தவள், சிதறிக் கிடந்த
சாம்பார் கலந்த சோற்றுப் பருக்கைகளை மண் ஊதி எடுக்க முடியுமா என்று அழுதுகொண்டே முனைந்தாள்.
அது முடியாது எனத் தெரிந்ததும் அங்கேயே கால்களை நீட்டி அமர்ந்து, “ஆத்தா சோத்த கொட்டிவிட்டுட்டான்
தடியன்” என்று நெஞ்சில் அறைந்துகொண்டு எழவு வீட்டு ஒப்பாரி போலக் கத்தத் தொடங்கியிருந்தாள்.
அவ்வப்பொழுது தன் அம்மா, அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு, “இந்த பாழாப் போன மனுஷன்
கையில என்ன புடிச்சுக் கொடுத்து வாழ்க்கைய சீரழிச்சுட்டீகளே ஐயா. அண்ணன் தம்பியெல்லாம்
இருந்தும், பாத்து, பாத்து பாழுங்கெணத்துல தள்ளிவிட்டுட்டீகளே ஆத்தா” என்று நடு வீட்டில்
கால்களைப் பரப்பி உட்கார்ந்து தலைவிரி கோலமாக நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவதும், அப்போது
தன் தந்தை கருங்கல்லைக் கொண்டு வந்து “எதுக்குப் புள்ள கையால அடிச்சிக்கிட்டு அழுவுற,
கை நோவப்போகுது. இந்தக் கல்லால அடிச்சுக்கிட்டு அழு. சட்டுனு போய் சேந்துட்டேனா நான்
நிம்மதியா இருப்பேன்.” என்று சொல்வதும் நினைவுக்கு வர, அவனும் அதேபோல ஒரு கல்லைக் கொண்டு
வந்து அவளிடம் நீட்டி, “இதால அடிச்சுக்க தமிழு.” என்றான். அவ்வளவுதான். அவளுக்கு ஆத்திரம்
தலைக்கு மேல் ஏறியது. எழுந்த வேகத்தில் குத்தியிருந்த ஊக்கு கழன்றுகொள்ள கீழே நழுவிய
சாயம் வெளுத்துப்போயிருந்த பூப்போட்ட சீட்டிப் பாவாடையை இறுகப் பற்றி அதே வேகத்தில்
ஊக்கினை மாட்டிக் கொண்டவள், அவன் கையிலிருந்த கல்லைப் பிடுங்கி அவன் மேல் வீச முற்பட்டாள்.
அவள் முகத்திலிருந்த ஆவேசத்தைப் பார்த்துப் பயந்துபோன பரமசிவம் வரம் கொடுத்துவிட்டு
கொடுத்த வரத்தை பரீட்சித்துப் பார்ப்பதற்காகத் தன் தலையிலேயே கை வைக்க வந்த அசுரனிடமிருந்து
சிவபெருமான் தப்பிக்க ஓடிய அதே வேகத்துடன் ஓட்டமெடுத்தான். வழியில் ஒடமரத்துக் கிளையில்
சட்டை மாட்டிக்கொண்டு கிழிந்துபோக, எதிரில் வந்த பெருமாள் சட்டையை விடுவித்ததுடன்,
பின்னால் ஓடிவந்த தமிழுடைய கையிலிருந்த கல்லைப் பிடுங்க முயற்சிக்கவும் அவள், “போடா
கருவாயா. ஒம் மண்டைய ஒடச்சிருவேன்.” என மூச்சிறைக்க அவனைத் தாக்க முயன்றாள்.
“வேண்டாம் தமிழு” என்று பெருமாள் விலகிக் கொள்ள இன்னும் வேகமாக ஓடத் தொடங்கிய
பரமசிவம், தங்கள் வீட்டு வாசலில் போய் பொத்தென்று விழுந்தான். துரத்தி வந்த தமிழ்ச்செல்வி
கும்பாவைக் கீழே வைத்துவிட்டு வலது கையில் இருந்த கல்லால் அவன் தலையில் அடிக்கப் போனாள்.
பிறகு திடீரென்று பலம் இழந்தவள் போல் அதைக் கீழே போட்டுவிட்டு கும்பாவை எடுத்து மார்போடு
அணைத்தபடி அழ ஆரம்பித்தாள்.
“நீ நாசமா போயிருவ. வௌங்கவே மாட்ட, சோத்துல மண்ணள்ளிப் போட்டுட்டல்ல. தங்கம்மன்
ஒங் கண்ண புடுங்கும். எங்க ஆத்தாவையும் என்னையும் பட்டினி போட்டுட்டல்ல” என்று ஏசத்
தொடங்கினாள். சத்தம் கேட்டு வந்த பரமசிவத்தின் தாய், கல் பதித்த பொன் வளையல்கள் மினுங்கிய
கைகளால் தன் மகனை அணைத்துக் கொண்டு, “ஏம்புள்ள அழுவுற? என்ன நடந்துச்சு?” என்று விசாரித்தாள்.
கலாட்டா ஓய்ந்திருக்குமா என்று மோப்பம் பிடிக்க வந்த பெருமாள், துணைக்கு ராசாவையும்
அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.
“ஒங்க ரெண்டு பேருல யாருடா இவள அடிச்சது” என்று பரமசிவத்தின் தாய் கேட்டதும்,
“அய்யய்யோ நா இப்பத்தான் வர்றேன்” என்றான் ராசா அவசரமாக. தானும் அடிக்கவில்லை என தலையாட்டி
மறுத்த பெருமாள், “தமிழை அழ வச்சது ஒங்க பரமசிவந்தான்” என்றான். உடனே நடந்ததை பரமு
அப்படியே தன் தாயிடம் கூற, “இதுக்குத்தானா இவ்வளவு பெரிய அழிச்சாட்டியம் பண்ற தாயி?
இரு வர்றேன்” என்று உள்ளே சென்றாள். வெளியில் வரும்போது ஒரு கையில் எவர்சில்வர் தட்டில்
அப்போதுதான் வடித்திருந்த சம்பா அரிசிச் சோறும், இன்னொரு கையில் சிறு கிண்ணத்தில் மணக்க,
மணக்க முருங்கைக்காய் சாம்பாரும் ஏந்தி வந்தாள். பொறிச்ச மொறக் கருவாடு எடுத்து வச்சிருக்கேன்.
போய் கொண்டா பரமு” என்று அவனைப் பணித்தாள். அவனும் ஓடிப் போய் எடுத்து வந்தான். நிறைய
சின்ன வெங்காயம் போட்டு வறுத்திருந்த கருவாட்டைப் பார்த்ததும் பெருமாளுக்கும், ராசாவுக்கும்
நாவில் நீர் சுரந்தது.
“இந்தா தாயி. எல்லாம் ஒனக்குத் தான். எடுத்துட்டுப்போய் ஆத்தாளோட சேர்ந்து வயிறார
சாப்பிடு.” என்று எல்லாவற்றையும் அவளிடம் நீட்டினாள், பரமுவின் அம்மா. ஒரு கணம் அவள்
நீட்டிய சாப்பாட்டைப் பார்த்த தமிழ்ச்செல்வியின் முகம் அவமானத்தில் சிறுத்துப் போனது.
உதடுகள் துடித்தன. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே, “நான் பிச்ச சாப்பாட்டுக்காக
வரல” என்றாள்.
“என்ன புள்ள பெரிய பேச்செல்லாம் பேசிக்கிட்டு? இந்தா புடி. பள்ளிகொடத்துச் சாப்பாட்டை
விட இது நல்லாருக்கும்.”
“அது அரசாங்கம் நாங்க படிக்கிறதுக்காக எங்களுக்குக் கொடுக்குற சாப்பாடு; பிச்சையில்ல.
நீங்க போடுறது பிச்சை. எனக்கு வேண்டாம். ஒழைக்காம வாங்குற எல்லாமே பிச்சன்னு ஆத்தா
சொல்லுவா. நான் போறேன்.” என்று வெற்றுக் கும்பாவை தூக்கிக் கொண்டு கை வீசி நடந்தவளைப்
பார்த்து, “பெரிய மனுஷி மாதிரி பேசிட்டுப் போறா ரோஷக்காரி. புள்ளைய நல்லாத்தான் வளத்திருக்கா
மருதாயி.” என்று அவன் அம்மா சிலாகித்தபோது இவனுக்கும் தமிழ் மேல் பிரமிப்பும் மதிப்பும்
ஏற்பட்டது. அதன் பிறகு அவளிடம் பின்னாலேயே போய் அவன் மன்னிப்புக் கேட்டதும் அவள் போடா
என்று மன்னித்து நட்பாகிப் போனதும், பிறகு அதே தமிழ்ச்செல்வி கோபமே எழாதவளாக பக்குவப்பட்டு
மாறிப் போனதும் எல்லாமே நேற்று நடந்ததுபோல் தோன்றியது பரமசிவத்துக்கு. அந்த பித்தளைக்
கும்பாவை கையில் எடுத்துப் பார்த்தான். அதில் மருதாயி என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
கீழே வைத்துவிட்டு பூத்துரை பக்கம் திரும்பினான். அவன் தலையில் கையை வைத்தபடி கண்களை
மூடி விளங்கிக்கொள்ள முடியாத சோகம் முகத்தைக் கவ்வியிருக்க அமர்ந்திருந்தான். விஷயம்
என்னவாயிருக்கும் என்று பரமசிவம் யோசித்துக்கொண்டிருந்த அதே வேளையில் உள்ளே வந்த மருதாயி,
“செண்பா கடை டீ. ஏலக்கால்லாம் தட்டிப்போட்டுக் கொடுத்திருக்கா. அவ கடைய மூடுறதுக்குள்ள
வாங்கணுமேன்னு ஓடிப்போய் வாங்கிட்டு வந்தேன்.” என்று செம்பிலிருந்த டீயை இரண்டு டம்ளர்களில்
ஊற்றி அவர்கள் கையில் கொடுத்தாள். டீ குடித்து முடிக்கும் வரைக்கும் யாரும் எதுவும்
பேசவில்லை.
“வெவரம் என்னன்னு சொல்லு பூத்துரை.” என்று மருதாயி வினவியதும் பூத்துரை சற்று
தயங்குவதுபோல் தெரிந்தது.
“ஆத்தா தேடிட்டிருக்கும். நான் அப்புறமா வர்றேன் அத்தை. நீங்க பேசிட்டு வாங்க
அண்ணாச்சி” என்று பரமசிவம் எழுந்து போனான்.
பூத்துரை நிமிர்ந்து பக்கத்தில் வந்தமர்ந்த மருதாயியைப் பார்த்தான். அதிகம்
போனால் அவளுக்கு நாற்பது வயதிருக்கலாம். ஆனால், அறுபது வயதுக் கிழவி போல தொளதொளவென்று
வெள்ளைச் சட்டையும் சுருங்கிப் போன நீலநிறச் சேலையுமாக ஒரு வயதான பெண்ணின் பாவனையை
அவள் வலிந்து ஏற்படுத்த முனைந்திருப்பதுபோலத் தோன்றியது. இளமைத் தோற்றம் மாறாத முகத்தின்
பொலிவும் உடம்பின் மென்மையும் வாளிப்பும் யாருடைய கண்களையும் உறுத்தாதபடி ஒரு முதிர்ந்த
கோலத்தை அவள் திட்டமிட்டே உருவாக்கியிருக்கிறாளோ? சின்ன வயதில் புருஷனை இழந்ததால் யாருடைய
பார்வையும் தன் மீது படர்ந்துவிடக் கூடாது என்ற அதி ஜாக்கிரதை உணர்வின் வெளிப்பாடுதான்
இந்தக் கோரமோ? ராஜகனிக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்று குழம்பிக்கொண்டிருந்த
அவனது தோள்களில் தட்டி,
“என்ன இம்புட்டு கவலையா இருக்கீக தம்பி? நான் என்ன செய்யணும் சொல்லுங்க.” என
மிகுந்த கரிசனத்துடன் கேட்டாள் மருதாயி. அவன் அப்பொழுதும் அமைதியாய் இருக்கவே, “ராஜகனி
நல்லாயிருக்கால்ல. நேத்துக் கூட பாத்தேன். தூரத்தில பாத்ததுனால பேச முடியல. அவளுக்கெதுவும்
பிரச்சனையா?” எனக் கேட்டாள்.
“நான்தான் பிரச்சனை.” மருதாயின் காதுகளுக்கு எட்டாமல் முணுமுணுத்தவன் தயங்கியபடி,
“அக்கா ஒங்க மலவேம்பு மரத்திலேர்ந்து கொஞ்சம் கொழ பறிச்சுத் தர முடியுமா?” என்று கேட்டான்.
மருதாயி கலகலவென்று சிரித்தாள். அவளுக்கு வியப்பாக இருந்தது. ஆண்டிப்பட்டி ஊரிலேயே
வசதியான குடும்பம் பூத்துரையுடைய குடும்பம். இரண்டு அண்ணன்களும் கண்ணுக்கெட்டிய தூரம்
வரை விரிந்துகிடந்த நிலங்களைப் பார்த்துக்கொள்ள வீட்டிலிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட
செம்மறியாடுகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பூத்துரையடையதாய் இருந்தது. ராஜகனியைத்
திருமணம் செய்து கொடுத்தபோது, “மாப்பிள்ளை படிக்கல. எழுதப் படிக்கத் தெரியாது. ஆனா
வசதியா இருக்காக. நம்ம பிள்ளதான் பத்தாங்கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்காளே. வரவு-செலவுக்
கணக்கெல்லாம் பாத்துக்குவா.” என்று பெருமைபட்டுக் கொண்டார்கள் அவளது பெற்றோர்கள்.
“வசதியான வீட்டுப் புள்ள. சும்மா கெடக்கிற மலவேம்ப கேக்குறதுக்கு இவ்ளோ யோசிக்கிறீயளே?
வாங்க. இப்பவே பறிச்சுக்கோங்க.” என்று எழுந்தாள் மருதாயி. அவனோ எழுந்துகொள்ளாமல், “மலைவேம்பு
எல சாப்டா புள்ள பொறக்கிறதுல ஏதாவது கொறை இருந்தா தீந்திருமா” என்று மிகவும் சங்கடப்பட்டுக்
கொண்டு கேட்டான். அப்போது அவளுடைய முகத்தைப் பார்க்க முடியாமல் தலையை தாழ்த்தியிருந்தான்.
சட்டென்று அவன் பக்கத்தில் சம்மணமிட்டு அமர்ந்த மருதாயி, “கல்யாணமாகி கொஞ்சம் வருஷம்
ஆவுதேன்னு கவலப் படுதீயளா? ஒவ்வொருத்தருக்கும் கடவுள் ஒவ்வொரு மாதிரி எழுதியிருப்பாரு.
ரெண்டுபேருக்கும் இன்னும் வயசிருக்கு. ஊர்க்காரவுக பேசுறாகன்னு கவலப்படாதிய. மனசப்
போட்டு கொழுப்பாம சந்தோசமாயிருங்க.” என்றாள். பிறகு அவளே, “ராஜகனிக்கு ஒடம்புல எந்தக்
கொறையும் இருக்காது. இந்த ஊர்ல புள்ள பெத்துக்குற ஒவ்வொரு பொம்பிளையும் பெத்துக்குறதோட
சரி. அத எடுத்துக் குளிப்பாட்டி சோறு ஊட்டி தூங்க வச்சு, தோள்ல தூக்கிட்டு அலஞ்சதெல்லாம்
ராஜகனி தான். புள்ளைங்கன்னா அவளுக்கு ரொம்ப இஷ்டம். அதனால கடவுள் அவளுக்குக் கண்டிப்பா
இதுல கொறை வைக்கமாட்டாரு.”
“அவகிட்ட கொற இருக்குன்னு நான் சொல்லலியேக்கா. எங்க மாமியார்தான் மல வேம்புக்
கொழய அரைச்சுக் குடிச்சா வயித்துல பூச்சியிருந்தா செத்துரும். புள்ள தங்கும்னு சொன்னாக.
அதான் வந்தேன்.” என்றான். அவன் குரலில் தடுமாற்றத்தைவிட வேதனை அதிகம் இருப்பதாய் தோன்றியது
மருதாயிக்கு.
“நாளைக்கு நானே அரைச்சு எடுத்தாரேன். கவலப்படாத பூத்துரை. எல்லாம் சரியாயிடும்.”
பூத்துரை எழுந்து வெளியில் வர மருதாயி உடன் வந்தாள். பூத்துரை வானத்தை அண்ணாந்து பார்த்தான்.
மேகம் விலக உள்ளிருந்து பூத்த நிலவு வெள்ளை நிறக் கேந்திப் பூவாய் அவனுக்குத் தோன்றியது.
மருதாயிடம் விடைபெற்றுத் திரும்பும் வழியில் தளர்ந்துபோன நடையைச் சரி செய்ய முயன்றபடி
மீண்டும் வானத்தைப் பார்த்தான். நட்சத்திரக் கூட்டங்கள் எப்போதாவது ராஜகனியின் முகத்தில்
திடீரெனத் தோன்றும் பருக்களை நினைவுபடுத்தின. சட்டென்று கடந்த மாதத்தில் இதேபோன்ற இரவு
தொடங்கியிருந்த வேளையில் மூத்த அண்ணன் வெள்ளத்துரையின் மனைவி மல்லிகா நடுக் கூடத்தில்
ராஜகனி கால்களில் விழுந்து எதையோ கெஞ்சிக் கேட்டதை தான் பார்க்க நேர்ந்ததும் அதுபற்றி
அவளிடம் விசாரித்தபோது பதில் எதுவும் சொல்லாமல் அழுததும், தன்னை முத்தாலங்குறிச்சியில்
கொண்டுவந்து விட்டுவிடும்படி மன்றாடியதும் நினைவுக்கு வந்தது. அதற்கெல்லாம் என்ன காரணம்
என்பது அவனுக்கு இன்றுவரை விளங்கவில்லை. அன்று ராஜகனியின் காலில் விழுந்து கெஞ்சிய
மல்லிகா அண்ணி அடுத்த நாளிலிருந்து தன்னிடமே, “ஒம் பொண்டாட்டிய அடக்கி வை. சீவி சிங்காரிச்சிக்கிட்டு
எல்லார்கிட்டயும் பல்லிளிக்க வேண்டாம்னு சொல்லிவை.” என்று தூற்றத் தொடங்கியிருந்ததற்கும்
காரணம் அவன் புத்திக்கு எட்டவில்லை.
ராஜகனி தன்னால் சந்தோஷப்பட முடியாது என்பது மட்டும் நிச்சயமாக அவனுக்குத் தெரிந்தது.
எவ்வளவோ ஏமாற்றங்களுக்குப் பிறகும் ஒரு குழந்தையிடம் பரிவு காட்டுவதுபோல தன்னிடம் அன்பு
செலுத்தும் அவளுக்குத் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் என்ன
செய்வது? யோசித்தபடியே மீண்டும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். நிலவு மேலும் பிரகாசமாய்த்
தெரிந்தது.
<
அத்தியாயம் 9 முற்றும் >
No comments:
Post a Comment