விழித்திருந்த
உள்ளமும் எண்ணங்களும் வெளியில் தெரியாதபடி அதுவரை மூடியிருந்த கண்களைத் திறந்தாள் தமிழ்ச்செல்வி.
கட்டிலில் எழுந்து அமர்ந்தவள், மற்ற இருவரும் தூங்கி விட்டார்களா என உறுதி செய்து கொள்ள
முயன்றாள். அரவமே இல்லாமல் எழுந்து தயங்கியபடியே விளக்கைப் போட்டாள். விளக்கொளியால் அவர்களிடம் எந்தச் சலனமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனாலும், நடுவில் தான் விழித்துக் கொண்டது தெரியாமல் அவர்கள் பேசிக் கொண்டிருந்தது
போல் இப்பொழுது அவர்களும் ‘அறிதுயிலில்’ இருக்கிறார்களோ என்ற ஐயப்பாடும் எழுந்தது.
நின்ற வாக்கிலேயே சில மணித் துளிகள் அவர்களைக் கூர்ந்து பார்த்தவள் 'தூங்கிட்டாங்க'
என வாய்க்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். பிறகு மேஜை மேல் சங்கவை வைத்திருந்த தனது நோட்டுப்
புத்தகத்தை எடுத்துக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்தாள். விலை மதிப்பற்ற வைரக் கல்லை உள்ளடக்கிய தங்கப் பேழையைத் திறப்பது போல அந்த நோட்டுப்
புத்தகத்தைப் பிரித்தாள். அதனுள்ளிருந்த புகைப் படத்தை அப்படத்திற்கு நோகுமோ என்று
அஞ்சியவள் போல் மிக மென்மையாகக் கையில் எடுத்து விழிகளுக்கு வெகு அருகில் கொண்டு சென்றாள்.
சங்கவை, எபியின் நிழல் உருவங்கள் பார்வையில் பதிந்ததும் மனம் நிறைந்து போனதாக உணர்ந்தாள்.
ஈஸ்வரி சொன்னது
உண்மைதான். தனது முகத்தில் எத்துணைப் பரவசம்! பனியில் குளித்த தாமரை மொட்டு பரிதியின்
ஸ்பரிசத்தில் கட்டவிழும் மலர்ச்சி அதில் தெரிந்தது. செவ்வரளிப் பூக்கொத்து ஒன்றை இரண்டு
கைகளும் சேர்த்துப் பிடித்திருந்தன. இதில் என்ன காம்பிநேஷன் இல்லை என்று எதைப் பற்றி
ஈஷு பேசினாள்?
செவ்வரளிப்
பூமாலை காளிக்கும் துர்க்கைக்கும் சாற்றப்படுவது.
சக்தியின்
வடிவங்களான பெண் தெய்வங்களுக்குரிய பூ தன்னுடைய கையிலிருப்பது பொருத்தமற்றது என ஈஷு நினைத்தாளோ; அல்லது தீமையை அளிக்க வல்ல பலம் மிக்க
ஆற்றலின் அடையாளங்களாக நிற்கும் கம்பீரமான காளிக்கும் துர்க்கைக்கும் உரிய பூவினைப்
பலவீனமான தன் கைகள் ஏந்துவதற்கு, தான் தகுதியற்றவள் என்று எண்ணினாளோ?
பிறந்ததிலிருந்தே
பீடை என்னும் அடைமொழியோடு கஷ்டங்களை மட்டுமே சந்தித்திருந்த தாயின் கண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்ட
தான் எப்படிப் பலவீனமானவளாக இருக்க முடியும்? சாராயத்து மயக்கம் தெளியாமலேயே சவமாகிப்
போன புருஷன் விட்டுச் சென்ற ஒரே வரவு செலவுக் கணக்கான தன் மூன்று
மாதப் பெண் குழந்தையின் சிரிப்பில் அழுகையைப்
புதைத்து விட்டு, உழைத்துக் காய்த்துப் போன கைகளில் ‘அட பொட்டை!’ என்று பூமியில் விழுந்ததும்
பரிகசிக்கப் பட்ட தன் மகளைத் தாங்கிக் கொண்ட தாயின் கரம் பற்றி எழுந்து நடந்த தான்
எப்படி பலவீனமானவளாக இருக்க முடியும்? இல்லாமையிலும் இயலாது என எதுவும் இல்லை என, தன் வாழ்க்கையை மகளுக்குப் பாடமாக்கிய தாயின் சுடு நிழலில்
வளர்ந்த தான் பலவீனமானவளாக இருக்க முடியுமா? ஒவ்வொரு படி ஏறும் பொழுதும் எதிர் கொண்ட
சங்கடங்களையும் சறுக்கல்களையும் சவாலாக ஏற்று சிரமப்பட்டு அடுத்தடுத்த படிக்கு வந்திருக்கும்
தான் எப்படி பலவீனமானவளாக இருக்க முடியும்?
இரும்பு
உறுதியானது, திடமானது என்பதை யாரேனும் அதைக் கையில் தூக்கி உடைத்துப் பார்க்க முயற்சிக்கும்
போதுதானே புரிந்துகொள்ள இயலும்? ஆனால் நட்பு வட்டம் பலப் பிரயோகம் செய்து பார்ப்பதற்குரிய
தளம் அல்ல. நண்பர்களிடம் காட்டப்பட வேண்டியது சுயபலம் அல்ல. உண்மையான அன்பு மட்டுமே.
மேலும் நெடு-துன்ப-வாடை வீசும் தன் வாழ்க்கைக் கதை ஈஷூவுக்கும் தெரியும் என்பதால்,
தான் பலவீனமானவள் என்று கண்டிப்பாக அவள் எண்ணமாட்டாள்.
ஒருவேளை
ரோஜாப் பூ போன்ற மலர்களையே மக்கள் விரும்பும் போது, தான் அரளிப்பூவைக் கையில் வைத்திருப்பதால்
வித்தியாசப்பட்டு நிற்பதாக ஈஸ்வரி எண்ணியிருப்பாளோ என்று பலவாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்
தமிழ்ச்செல்வி. பிறகு அவளே, தன்னைப் பற்றி அல்லது தன்னோடு தொடர்புடைய ஒரு நிகழ்வைப்
பற்றி மற்றவர்கள் என்னென்ன யோசிக்கிறார்கள், அல்லது யூகம் செய்கிறார்கள் என்று எவ்வாறு
அவர்களது மனதைப் படிக்க முடியும்? மேலும் அவ்வாறு பிறரது எண்ணத்துக்குள் புகுந்து பார்க்க
வேண்டிய அவசியம்தான் என்ன? தன் ஆழமன இரகசியங்களை, பகிர்ந்துகொள்ள முடியாத, வெளியில்
சொல்ல இயலாத, தனக்கேயுரிய தான் மட்டுமே உள்ளுக்குள் எண்ணி, எண்ணிப் பரவசப்படும் அல்லது
மறுகி, மறுகி ஆதங்கப்படும் அந்தரங்கங்களை, பிறர் மோப்பம் பிடித்து விடுவாரோ என்ற அச்சத்தினால்தான்
இதுபோன்ற யூகங்கள் எழுகின்றனவா? குழம்பிப் போன தமிழ்ச்செல்வி, தன்னையறியாமலேயே புகைப்படத்தை
எடுத்து எபியின் முகத்தைப் பார்த்தாள். உலகத்திலேயே தனக்குப் பிடித்தமான, எந்த ரப்பராலும்
அழிக்க முடியாதபடி தன் நெஞ்சில் பதிந்திருந்த முகம் எபியின் முகம் எனத் தோன்றியது.
அவன் கண்களில் தெரிந்த குறும்பை ரசித்தவளுக்கு, ‘குழிக் கண்ணா’ என்று அவனை வாஞ்சையுடன்
அழைக்கும் சங்கவையின் குரல் மனதில் ஒலித்தது. ஆண் – பெண் பேதமற்ற அற்புதமான நட்பின்
அடையாளங்கள் எபியும் சங்கவையும் என ஈஷு அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. ஆண்- பெண்
வேறுபாடு இல்லாமல் ‘சோஷியலாகப் பழகுகிறோம்’ என்று நகர்ப்புறத்து நாகரீக வாழ்வில் வேகமாக
ஆரம்பித்து நீர்க் குமிழி போல பட்டென்று உடைந்துபோகும் பல உயிரற்ற நட்புக் கதைகளை தமிழ்ச்
செல்வி கேள்விப்பட்டிருக்கிறாள். சில சமயம் நேரடியாகவும் பார்த்திருக்கிறாள். அதில்,
சில முகங்கள் அவள் நினைவில் இப்போது வந்து போயின.
அதே நேரத்தில்
தன்னுடைய முத்தாலங்குறிச்சிக் கிராமத்தில் தன் வயதொத்த ஆண் - பெண்கள் சிறு பிராயத்தில்
இருந்து விளையாட்டிலும் சண்டையிலும் ஆற்றில் ஒன்றாக நீச்சல் அடிப்பதிலும் எந்த பேதமும்
இல்லாமல் பழகி உறவாடிய அழகான நட்பு உலகம் அவள் நினைவில் விரிந்தது.
இவள் சிறுமியாக
இருந்தபோது உள்ளூரில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வந்த பால்வாடியும், வெயிலையும்,
மழையையும் தாராளமாக, சமமாக வரவேற்கும் ஓடுகள் உடைந்த ஆரம்பப் பள்ளியும் மட்டுமே இருந்தன.
மூன்று வயதிலிருந்து ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் பால்வாடியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
சிலேட்டில் ஆனா ஆவன்னா எழுதக் கற்றுக் கொடுத்ததுடன், காளத்தி மடத்திலிருந்து வரும்
சுந்தரி டீச்சர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாடல்கள் சொல்லிக்கொடுப்பார்கள். கையைத்
தட்டி, தலையை அசைத்து, குழந்தைகள் பாடும்போது டீச்சரும் கைதட்டி உற்சாகப்படுத்துவார்கள்.
ஒரு நாள், பால்வாடிக்கு வெளியே வேப்ப மரத்தடியில் ஒத்தையா ரெட்டையா விளையாடிக்கொண்டிருந்தபோது
சில் வண்டு என எல்லாராலும் அழைக்கப்பட்ட பச்சைக்கிளி மட்டும் ‘ரெய்ன் ரெய்ன் கோ அவே,
கம் அகெய்ன் அனதர் டே’ என்று உரக்கப் பாடிக்கொண்டிருந்ததும் அங்கு வந்த, குடி மயக்கத்தில்
இருந்த அவளுடைய அப்பா, “எம்மவ எம்புட்டு அழகா வெள்ளக்காரிக் கணக்கா பாடுறா! ஏ புள்ள
உனக்குப் பாடத் தெரியுமா?” என்று கேட்டதும், அப்போது தான் சற்று பயந்துபோய் வேப்பமரத்துக்குப்
பின்னால் பதுங்கியதும், அவளது ஞாபக வங்கியில் எட்டிப் பார்த்தது. தமிழ்ச் செல்வியின்
உதடுகளில் படர்ந்த சிரிப்பில் குழந்தைக் காலப் பதிவுகளின் பசுமை ஒளிர்ந்தது. பச்சைக்
கிளியின் அப்பா விடாமல் தன் மகளுடைய புகழைப் பாடி “உனக்குத் தெரியாதா புள்ள?” என்று
சொன்னதையே சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த இவளுடைய ஆத்தா, “என்
பிள்ளையும்தான் பாடுவா” என சவால் விடுவதுபோல் பேசிவிட்டு இவளிடம் “செண்டு, பாடு தாயி”
என்று முகவாயைப் பிடித்துக் கெஞ்சியதும் நேற்று நடந்ததுபோல் கண் முன் வந்தது.
மற்றவர்கள்
பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் பழக்கம் சிறு வயதிலிருந்தே
தமிழ்ச் செல்விக்கு இல்லை. எனவே, அவள் வெறுமனே நின்றிருந்தாள். சாராயம் குடித்து சிவப்பேறியிருந்த
பச்சைக்கிளியின் அப்பாவின் கண்கள் வேறு இவளை மிரள வைத்தது.
“எந் தாயி
பயப்படுறா. ஒம் முன்னாலலாம் பாடமாட்டா” என்று தமிழின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு
வந்த ஆத்தா, படலைக் கதவைத் திறந்ததும் “செண்டு, பாடு தாயி. ஆத்தாளுக்கு கேக்கணும்னு
ஆசையா இருக்கு” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள். தமிழ் உரத்த குரலில் ‘ரெய்ன், ரெய்ன்
கோ அவே’ எனப் பால்வாடியில் பாடுவது போலவே மண்டையை ஆட்டி, கைகளைத் தட்டிப் பாடியதும்,
அவளை மீண்டும், மீண்டும் பாடச் சொல்லி கேட்டுப் பூரித்துப் போனாள் மருதாயி.
பழைய நினைவுகளில்
மூழ்கியிருந்த தமிழ்ச்செல்வி, கட்டிலில் மெல்லச் சாய்ந்துகொண்டாள். செண்டு என்று ஆசையாக
மருதாயி வைத்த பெயர், பள்ளியில் சேர்த்தபோது விஜயலட்சுமி டீச்சரால் தமிழ்ச் செல்வி
என்று மாற்றப்பட்டது. முதலில் தயக்கம் காட்டினாலும், “ரொம்ப நல்ல பேருமா, உன் மக நல்ல
பேரெடுப்பா” என்று டீச்சர் மீண்டும், மீண்டும் சொன்னதும், பெயர் மாற்றத்திற்கு மருதாயி
ஒத்துக்கொண்டாள். தமிழ்ச் செல்வி சட்டென்று சத்தமாகச் சிரித்தாள். மழையே திரும்பிப்
போ, இன்று வேண்டாம், இன்னொரு நாள் வா என்பதுதான் தாங்கள் விரும்பிக்கேட்ட ‘ரெய்ன்,
ரெய்ன் கோ அவே’ என்ற பாடலின் அர்த்தம் என்று தெரிந்திருந்தால், ஆத்தா அதைத் திரும்பத்
திரும்ப பாடச் சொல்லிக் கேட்டிருக்கமாட்டாள். கிராமத்து மக்கள் கூட சுந்தரி டீச்சரை
உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்கள்.
‘ம்...கோரஸாகக்
குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் பாடிய அந்தப் பாடலால்தான் கிராமத்தில் மழை குறைந்து போய்
விவசாயமும் முன்பு போல் இலையோ! ஆற்றில் கூட யார் யாரோ வந்து மணல் அள்ளுவதால் ஊரின்
நீர் வளம் பாதிக்கப்படுவதாகக் கடந்த முறை ஊருக்குச் சென்றிருந்தபோது ஆத்தா சொல்லியிருந்தாள்’
என்ற சிந்தனையில் பெருமூச்செறிந்த தமிழ்ச்செல்வி, மீண்டும் தம் பாலிய காலத்து நட்பு
வட்டத்துக்குள் புகுந்தாள். ஆரம்பப் பள்ளியில் முதலாம் வகுப்பு சேரும்போதே குடும்பத்தின்
உற்ற துணையாக இருப்பது வறுமையும் தங்கள் தனிமையும்தான் என்பது அவளுடைய சின்னஞ்சிறு
இருதயத்தில் ஆணி அடித்தது. அதனால்தானோ என்னவோ, தாய் சொல்லாமலேயே படிப்பில் மிகுந்த
ஆர்வம் காட்டினாள் தமிழ். விஜயலட்சுமி டீச்சர் இவளிடம் தனி கவனம் செலுத்துவது கண்டு
பால்வாடி ஆசிரியை சுந்தரி, “தமிழ் நல்ல பிள்ளை. பால்வாடியில் கூட நான் வர்றதுக்கு முந்தியே
இவ வந்து சிலேட்டோட உட்கார்ந்திருப்பா. கொஞ்சம் பார்த்துக்கோங்க” என நற்சான்றிதழ் கொடுத்தபோது
“ஒண்ணாங்கிளாஸ் வந்தாச்சு, இங்கேயும் எங்களப் பத்தி கோள் மூட்டக் கூடாது.” என்று ராசா
அவள் மண்டையில் நறுக்கென்று கொட்டியதை நினைத்தபடி, தலையைத் தடவிக் கொண்டாள் தமிழ்.
ராசா மட்டுமல்ல, மற்ற குழந்தைகளும் கூட அடிக்கடி இவளிடம் சண்டை போடுவதுண்டு. பால்வாடியில்
சாயங்காலம் நான்கு மணிக்குத் தருகின்ற பால் பவுடர் தின்பதற்காக மட்டுமே ராசாவும் பரமசிவமும்,
பெருமாளும் அவர்களுடைய கூட்டாளிகளும் ‘டான்’ என்று அந்த நேரத்திற்கு வருவார்கள். சுந்தரி
டீச்சர் துரத்தினாலும், “பாவம் டீச்சர், அவங்களுக்கும் மாவு குடுங்க” என்று இவள் தான்
பரிந்து பேசுவாள். ஆனால், கோள் மூட்டிக் குடுத்திட்டு வக்காலத்து வாங்குறியாக்கும்,
செண்டு, கொண்டு, மண்டு...” என ராசா இவள் மண்டையில் கொட்டி விட்டு ஓடுவது வாடிக்கை.
பால் பவுடர் இப்போதும் நாவில் சுவைக்க, சப்புக் கொட்டினாள் தமிழ்.
ஆரம்பப்
பள்ளி முடித்ததும் ஆறாம் வகுப்புக்காக ராசா, பரமசிவம், பெருமாள் - மூவரும் சொக்கநாதப்பட்டி
ஆண்கள் பள்ளியில் சேர்ந்திருந்தார்கள். புதுப்பட்டி பெண்கள் பள்ளியில் மருதாயி இவளைச்
சேர்த்த போது, உள்ளூரிலிருந்து ராமுத்தாய் மட்டுமே இவளோடு சேர்ந்து படிக்க வந்தாள்.
மூன்று கிலோமீட்டர் தூரம் காலையிலும் மாலையிலும் நடக்க வேண்டியிருந்தாலும், படிக்க
வேண்டும் என்ற வேகத்தில் அந்த நடை பெரிதாகப் படவில்லை அவளுக்கு. பன்னிரெண்டாம் வகுப்பு
வரை அதே பள்ளிதான். ராமுத்தாய் உடம்பு சரியில்லையென்று விடுப்பெடுக்கும் போதெல்லாம்,
ராசா அல்லது பரமசிவம், பெருமாள் என யாராவது சைக்கிளில் கொண்டு போய் பள்ளியில் விடுவது
வழக்கம். பெரிய பெண், வயசுக்கு வந்தவள், ஆம்பளப் பயல்களோட போகலாமா என்று யாரும் அந்தக்
கிராமத்தில் மறந்தும் கூடப் பேசியதில்லை. சின்ன வயதில் தொட்டதற்கெல்லாம் சண்டை போட்ட
அதே ஆண் பிள்ளைகள்தான் இவள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். “கலெக்டருக்கு
படிச்சிருபுள்ள. நம்ம ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்திரலாம்.” என்று ராசா
உண்மையான கரிசனத்துடன் இவளிடம் அடிக்கடி சொல்வதை நினைத்துப் பார்த்தாள் தமிழ்.
அனிச்சைச்
செயல் போல் மீண்டும் அந்தப் புகைப்படத்தை எடுத்துக் கூர்ந்து பார்த்தாள். எபியின் சிரிப்பில்
அமுதம் தெரித்தது. இதை அள்ளிப் பருகினால் நானும் சாகா வரம் பெற்று, தேவர் உலகத்துப்
பெண் ஆகிவிடுவேனோ? என எண்ணியவள், ‘அய்யோ நான் உண்மையிலேயே பித்துப் பிடித்து அலைகிறேனா?’
என்று விரல்களைச் சொடுக்கிக் கொண்டாள். கடந்த வாரத்தில், சங்கவையுடன் எபியைச் சந்தித்தபோது,
அவனுக்குத் தெரிந்த யாரோ ஒரு பெண் எழுதிய கவிதைகளை சங்கவையிடம் காட்டி, “சின்னப் பொண்ணு.
எவ்ளோ சூப்பரா கவிதை எழுதியிருக்குது பாரு. நீயெல்லாம் என்ன பண்ற? பாட்டி மாதிரி சங்கவைன்னு
பேர வச்சிக்கிட்டு.” என்று மர ஸ்கேலால் அவள் கையில் செல்லமாய் அடித்தபோது, “சரிதான்
போடா, கவிதையெழுதிட்டா பெரிய ஆளா? எனக்கெல்லாம் வேற நல்ல வேலை இருக்கு.” என அவளும்
பதிலுக்கு எம்பி, உயரமாயிருந்த அவன் மண்டையில் கொட்டினாள். மறுநாள் சற்றுப் பழசாகிப்
போயிருந்த நோட்டுப் புத்தகத்தைத் தன்னிடம் காட்டிய தமிழ்ச்செல்வியிடம், “இது என்ன வரவு,
செலவுக் கணக்கு எழுதி வச்சிருக்கியா” என்று எபி பரிகாசம் செய்தபோது, சிரமப்பட்டு அப்பொழுது
அவள் கட்டுப்படுத்திய கண்ணீர், இப்பொழுது லேசாக எட்டிப் பார்த்தது. பிறரது பாராட்டை
என்றுமே எதிர்பாராத தான், தன்னுடைய ஒவ்வொரு செயலையும் எபி கவனிக்க வேண்டும், பாராட்ட
வேண்டும் என எதிர்பார்ப்பதை ஏன் தவிர்க்க முடியவில்லை எனத் தவித்தாள் தமிழ்ச்செல்வி.
நேற்றைய
சிறு பிராயத்து நினைவும், நிகழ் காலமும் மாறி, மாறி மனசுக்குள் ஊஞ்சலாடிக் கொண்டிருக்க,
எதுவுமே இல்லாத வசதியற்ற சின்ன வயதில், தன் வயதொத்த ஆண் - பெண் பட்டாளத்துடன் கவலையற்று
எதிர்பார்ப்புக்களும், ஏக்கங்களும் எழுதப்படாத லேசான இதயத்துடன் சந்தோஷமாய் வாழ்ந்ததாய்
தோன்றியது தமிழ்ச் செல்விக்கு.
ஆறாம் வகுப்புப்
படிக்கும்போது, அதிகாலை எழுந்து, பக்கத்து வீட்டு ராஜகனி அக்கா, எதிர்வீட்டு கோவங்காட்டக்காவுடனும்
தன் தோழியருடனும் காட்டில் சுள்ளி பொறுக்கச் செல்வது வழக்கமாய் இருந்தது. ராஜகனியக்கா
கோவங்காட்டக்காளைவிட இரண்டு – மூன்று வயது இளையவளாக இருக்க வேண்டும்... ராஜகனியக்கா
உள்ளூர்க்காரி. கோவங்காட்டக்கா திருமணமாகி முத்தாலங்குறிச்சிக்கு வந்த சில மாதங்களிலேயே
கலகலவென்று வெள்ளையாய்ப் பேசும் சுபாவத்தினால் உள்ளூர்ப் பெண் பிள்ளைகளுடன் நெருங்கி
ஒன்றாகிப் போனாள். வழி நெடுக இரண்டு பேரும் ஏதேதோ கதைகள் பேசி சிரித்துக் கொண்டு வருவார்கள்.
தமிழும் மற்ற சிறுமியரும் பாதையோரங்களில் மலர்ந்திருக்கும் அரளிப் பூக்களையும், பாதங்களுக்கு
அருகிலேயே படர்ந்திருக்கும் ஆவாரம் பூக்களையும் பறித்துச் சேர்த்து கதம்ப மாலை ஆக்க
முயற்சிப்பார்கள். செவ்வரளிப் பூக்களைப் பார்க்கும்போதே தமிழின் உள்ளத்தில் புதிய உற்சாகம்
பிறப்பதை அவள் உணர்ந்திருக்கிறாள். ஆனாலும், எல்லாப் பூக்களையும் விட அவளுக்குப் பிடித்தது
பூவரசம் பூ என்பதால் ராசாவும் பரமசிவமும் அடிக்கடி பூவரசம் மரத்தில் ஏறி பூக்கள் பறித்துத்
தருவது வழக்கம். பதிலுக்கு இவள், பாவாடையில் கொண்டுவந்த சொடக்குத் தக்காளிப் பழங்களை
அவர்களுக்குக் கொடுத்து சந்தோஷப்படுவாள். தேடித் தேடி அவளும், அவள் தோழியரும் சொடக்குத்
தக்காளிப் பழங்களைப் பறிக்க முனையும்போது, ராஜகனியும் தன் பங்குக்கு பறித்துத் தருவாள்.
சில நேரங்களில் தங்களுக்குக் கதைகள் சொல்லும்படி வற்புறுத்தினால், ராஜகனி, தன் கற்பனையிலேயே
கதை கட்டி, அபிநயங்களுடன் சொல்லும்போது கோவங்காட்டக்காவும் முழு ஈடுபாட்டுடன் கவனிப்பாள்.
இவர்களுக்கும், அந்த இரண்டு அக்காள்களுக்கும் அதிகம் போனால் எட்டு அல்லது ஒன்பது வயது
வித்தியாசம் இருக்கலாம். ஆனால் எதையும் எளிதாகக் கையாளும் அவர்களது மனப் பக்குவமும்
முதிர்ச்சியான அனுகுமுறையும் இவளுக்குப் பெரும் மலைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும்
ஐந்தாம் வகுப்புக்கு மேல் எப்போதுமே தாண்டாத முத்தாலங்குறிச்சிப் பெண்கள் மத்தியில்,
ராஜகனி, முதல் முறையாக பாளையங்கோட்டை கான்வென்ட் பள்ளியில் போர்டிங்கில் தங்கி பத்தாம்
வகுப்பு வரை படித்தவள் என்ற மரியாதையும் ஓரளவு ஆங்கிலம் பேசுபவள் என்ற பிரமிப்பும்
அக்கிராமத்துப் பெரிசுகளிடம் மட்டுமல்லாமல், சிறுவர் சிறுமிகளிடமும் கூட பதிந்திருந்தது.
அவள் திருமணமாகிச் சென்ற பிறகு கதை சொல்வதற்கு ஆளில்லாமல் போயிற்று.
தமிழ்ச்செல்வி
பதினோராம் வகுப்புப் படிக்கும் போதுதான் ராஜகனிக்குத் திருமணமாயிற்று. ‘ராஜகனி அக்காவுக்கு
மாப்பிள்ளை பாத்தாச்சு, கல்யாணம்’ என்றதும் பட்டணத்திலிருந்து, படித்த மாப்பிள்ளையாகத்தான்
வருவார் என்றுதான் தமிழ்ச்செல்வி உட்பட ஊரில் உள்ள அத்தனை சிறுசுகளும் இளசுகளும் எண்ணி
எதிர்பார்த்திருந்தார்கள். வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு நேரமாகிவிட்டதென்று தோளில்
பைக்கட்டைச் சுமந்தபடி தமிழும் ராமுத்தாயும் புதுப்பட்டிக்கு விரைந்து நடக்கையில் ஆனாப்பட்டி
விலக்கில் கொட்டு மேளத்தோடு வந்த கூட்டத்தினரைப் பார்த்து வேடிக்கை பார்க்க சற்றே ஒதுங்கி
நின்றார்கள். கூட்டத்திலிருந்த நடுத்தர வயதுப் பெண்ணொருவர், கூட்டத்தின் நடுவில் ஒல்லியாக
கணுக்கால் தெரிய வேஷ்டி கட்டியிருந்த ஒரு இளைஞனின் தோளைத் தட்டி, “பூத்துரை ஒனக்கு
யோகந்தான்ல... பொண்ணு இங்க்லீஷ் ஸ்கூல்ல பத்தாங்கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்காளாம்.
கல்யாணத்துக்கு கவர்மென்டு பணம் வேற அவளுக்குக் கெடைக்கும்.” என்று சிரித்தாள். அப்போது
அவர் முன் கையிலிருந்து முழங்கை வரை அணிந்திருந்த தங்க வளையல்களும் சேர்ந்து குலுங்கி
ஒலி எழுப்பின.
“ஏளா, வெள்ளத்துரை
பொண்டாட்டி, அந்தப் பணம் வந்து இங்க நெறையப் போகுதாக்கும். பூத்துரை மேய்க்கிற செம்மறியாட்டுக்
கூட்டமே எவ்வளவு தேறும். அந்தக் கூட்டத்துக்கு அவளும் அவ படிப்பும் காணாது.” ஏதோவொரு
பெரிசு சொல்லி விட்டுச் சிரிக்க, அந்த சிரிப்பில் மற்றவர்களும் ஐக்கியமானார்கள். ‘ஒருவேளை
ராஜகனி அக்கா பற்றிப் பேசுகிறார்களோ’ என்று சந்தேகப்பட்ட தமிழ்ச்செல்வியும் ராமுத்தாயும்,
மற்றவர்களுடைய கிண்டல் பேச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல், அதே நேரத்தில் முகம் முழுக்க
சிரிப்புடன் வந்துகொண்டிருந்த அந்த இளைஞனை நன்றாகப் பார்த்தார்கள். அணிந்திருந்த பட்டு
வேஷ்டியும், பட்டுச் சட்டையும் தவிர, வேறு எந்த மாப்பிள்ளைக் களையும் இல்லாமல் செம்மறியாட்டுக்
கூட்டத்தில் ஒருவன் போல வந்துகொண்டிருந்த அந்த பூத்துரை ராஜகனியக்காவுக்குக் கண்டிப்பாக
மாப்பிள்ளையாக இருக்கக்கூடாது என்று தங்கம்மனிடம் வேண்டிக்கொண்டார்கள்.
“என்ன படையோட
எங்க கிளம்பிட்டிருக்கீக” என்று ஆனாப்பட்டிப் பேருந்து நிலையத்தில், காதிலிருந்த பாம்படத்தை
ஆட்டியபடி கேட்ட சீனிக் கிழவியிடம், “பரவாயில்லையே, இன்னும் கல்லுக்குண்டு மாதிரி உசுரோட
இருக்கியே” என மாப்பிள்ளை கோஷ்டியிலிருந்த, தலையெல்லாம் மீன் முட்கள் முளைத்தது போல
நரைத்திருந்த பெரிசு ஒன்று பரிகசித்தது.
“ஒங் கண்ணு
அவிஞ்சு போக” என்று பதிலுக்குச் சிரித்தபடி ஏசிய கிழவியிடம், “நம்ம பூத்துரைக்கு முத்தாலங்குறிச்சியில
பொண்ணு நிச்சயம் பண்ணப் போறோம்.”
“அங்க யாருல
பூத்துரைக்குப் பொண்ணு குடுக்கறது?”
“ஏங் கிழவி,
ஒன்னையே ஒரு அப்பாவி மனுசன் கட்டிக்கிட்டு அழுதாரே. பூத்துரைக்குப் பொண்ணு கெடைக்காதா?
பேரு ராசகனியாம்!”
“அந்த தாயி
ரொம்ப படிச்சிருக்காளேவ!”
“அதான் பூத்துரைக்கு
டீச்சராக்கிரலாம்னு பாக்குறோம். அவம் பேரையாவது எழுதச் சொல்லிக் குடுப்பால்ல.”
அவர்களைக்
கடந்து சென்ற கூட்டத்தில் பூத்துரை நாணிக் கோணி நெளிவதுபோல் தெரிந்தது. “ச்ச... எனக்கிந்த
மாப்பிள்ள புடிக்கவேயில்ல.” என்று ராமுத்தாயிடம் புலம்பினாள் தமிழ்ச்செல்வி.
“எனக்குந்தான்...
பாவம் ராஜகனியக்கா” என்றாள் ராமுத்தாயி.
இவர்களுடைய
உரையாடலைக் கேட்ட கிழவி, “என்ன பண்றது தாயி, ராசகனிக்கு ராசா வருவான்னு பாத்தா சேவகனல்ல
புடிச்சிட்டு வந்திருக்காக. ம்ம்... சந்தோஷமா இருந்தா சரிதான்.” என்றாள்.
தன் மனதில்
பதிந்துபோன, ராஜகனியக்காவின் தலையெழுத்தை மாற்றிய அந்த நாளின் சம்பவங்களை ஒன்று விடாமல்
எண்ணிப் பார்த்த தமிழ்ச்செல்வி, ‘அக்காவுக்கு குழந்தைங்கன்னா எவ்வளவு இஷ்டம், ஆனா இன்னும்
அந்தப் பாக்யம் அவங்களுக்குக் கெடைக்கவேயில்லையே’ என்று சங்கடப்பட்டாள். மீண்டும் நினைவுகள்
அவளது ‘சேக்காளிகளை’ சுற்றிப் படர்ந்தது.
ஊர் வயல்களில்,
குறிப்பாக ராமர் பாண்டியன் தோட்டத்தில் வேர்க்கடலைச் செடியை வேரோடு பிடுங்கி மண்ணைத்
தட்டிவிட்டு, பச்சைக் கடலை மணமணக்க, தன் நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டதும், தட்டான்பாறையில்
வட்டமாக உட்கார்ந்து விடுகதைகள் சொல்லி, பதில் தெரியாதவர் மண்டையில் மற்றவர்கள் ஓங்கிக்
குட்டிவிட்டுப் பிறகு தடவிக் கொடுத்ததும், ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் எடுத்துவந்த
அரிசி, பருப்பு கொண்டு கூட்டாஞ்சோறு சமைத்து தேங்காய் சிரட்டையில் பரிமாறி உண்டதும்,
இன்னமும் சுவாசத்தில் நட்பின் வாசம் கலந்திருந்தது. அங்கெல்லாம் சின்னப் பெண்ணாகத்
திரிந்தபோது உடுத்தியிருந்த ஆடை பற்றியோ, அணிந்திருந்த அணிகலன் பற்றியோ யாரும் விசாரித்ததும்
இல்லை, விமர்சித்ததும் இல்லை. கோரைப் புல்லில் வளையல் செய்துதரும் சிறுவர்கள்; சட்டையில்
பொத்தான் இல்லாத சிறுவர்களுக்குக் காக்கா முள் எடுத்து லாவகமாகக் குத்திவிடும் சிறுமியர்,
பனை ஓலையில் காற்றாடி செய்து இருபாலரும் எதிர்த் திசையில் “ஓ எங் காத்தாடி வேகமா சுத்துது
பார்” என ஓடிக் களைக்கும் நட்பின் ராஜபாட்டைப் பயணம் எல்லாமே பழைய புத்தகத்து வாசனை
போல் நெஞ்சுக்குள் வீச, விகற்பமற்ற அந்த உறவுகளைக் கண்களை மூடி மனதிற்குள் கொண்டாடினாள்
தமிழ்ச் செல்வி. அதே நட்பின் ஒரிஜினல் சாயல்தான் எபி - சங்கவை நட்பு என எண்ணிக்கொண்ட
தமிழ்ச் செல்வி, போர்வையால் மூடிக் கொண்டு படுக்கையில் சுருண்டுகொண்டாள்.
கண்ணயர்ந்த
வேளையில் கோவங்காட்டக்காவின் இயற்பெயர் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. கல்யாணமாகி
வந்த புதிதில் ஊர்ப் பெரிசுகளெல்லாம் கோவங்காட்டா என்றழைக்க, சிறுசுகளோ கோவங்காட்டாக்கா
என்று கூப்பிட, அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது கோவங்காட்டக்காவின் நிஜப் பெயர் என்ன என்பதை
விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணியபடியே தூங்கிப் போனாள் தமிழ்ச் செல்வி.
அவளுக்கும்
கனவு வந்தது. கையில் பெயர் தெரியாத மலருடன் நின்றிருந்தான் எபி. புரியாமல் பார்த்தவளிடம்,
சங்கத் தமிழில் “பெண்ணே இது காந்தள் மலர். என் கையுறைப் பொருள்.” என்று சிரித்தான்.
அந்தச் சிரிப்பு அவள் உயிரைத் தொட்டது.
/அத்தியாயம் 3 முடிவு/
No comments:
Post a Comment