முன்னுரை

விரைவில் வெளிவர இருக்கின்ற நாவல் சங்கவையின் முன்னுரை:

இலக்கியம் என்பது வாழ்க்கையிலிருந்து தோன்றுவது. வாழ்க்கையைப் பிரதிபலிப்பது. அதனால்தான் சொற்களில் பிறக்கும் கலையாகிய இலக்கியத்தைக் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்று குறிப்பிடுகிறார்கள். உரைநடையின் தோற்றம், வளர்ச்சியின் காரணமாக இலக்கிய உலகில் உருவெடுத்த அற்புதமானதொரு கலை வடிவம் நாவல். ஒரு கதாசிரியர் தன் அனுபவங்கள், அதாவது பார்த்தது, கேட்டது, உணர்ந்தது, தானே வாழ்ந்து அனுபவித்தது, உணர்ந்தது, தன்னைப் பாதித்த மனிதர்கள், நிகழ்வுகள் – இவை ஏற்படுத்தும் சிந்தனைகளிலிருந்து மொழியின் துணை கொண்டு சிருஷ்டிக்கும் மகோன்னதமான கலை வடிவம் நாவல்.

கதைகளை வாசிப்பதையும் கேட்பதையும் விரும்பும் மனிதர்களின் கதைகளைக் கூறும் நாவல்கள் பலவகைப்படும்.

திராவிட மொழி இலக்கியங்கள் என்ற புத்தகத்தில் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நாவல்கள் செழித்து வளர்ந்தது போலவே நாவல் வகைகளும் பல்வகைச் செல்வாக்காலும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளாலும் தனித்தன்மையும் புதுமையுமுடைய எண்ணங்களினாலும் இக்காலத்தில் பெருகியுள்ளன. தமிழில், கோவை நாவல், சீர்திருத்த நாவல், உளவியல் நாவல், நனவோடை நாவல், நகை விருந்து, வசன கவிதை நாவல், வசை நவில் நாவல், துப்பறியும் நாவல், அசடு துப்பறிதல், அறிவியல் புனைகதை, மெய்ப்பொருள் – உளவியல் நாவல், வரலாற்று நாவல் (சேரர் புனைவு, சோழர் புனைவு, பாண்டியர் புனைவு, பல்லவர் புனைவு, இலக்கியப் புனைவு, அயலகப் புனைவு), நடப்பியல்-அரசியல் நாவல், சமூக வரலாற்று நாவல், வட்டார நாவல், பிற இனத்தார் நாவல், சிறுபான்மையர் நாவல், நெய்தல் நில நாவல், தனிமனிதப் போராட்ட நாவல், அறநெறி நாவல், குடும்பச் சிக்கல் நாவல், காந்திய நாவல், அரசியல் சமய நாவல், மார்க்சீய நாவல் எனத் தொடக்க காலம் முதல் தற்காலம் வரையமையும் படைப்புகளை வகைப்படுத்துவர். திராவிடத்தின் பிற மொழிகளிலும் இத்தகு பல்வகைகளும் அமைதல் கூடும். இன்னும், அமைப்பால் கடித வடிவினது, நாட்குறிப்பு வடிவினது போன்றனவும், இரண்டு அல்லது பல ஆசிரியர் இணைந்து ஒரு நாவல் எழுதுதல் போன்ற முயற்சிகளும் காணப்படுகின்றன. குழந்தைகள் சிறுவர்க்கேற்ற நாவல்கள், பெண் எழுத்தாளர் படைப்புகள், புத்தலையும் (new wave) பாலுணர்வும் முன்னிட்டு நிற்கும் நாவல்கள், சமுதாயத்தின் சீர்கேடுகளான சிவப்பு விளக்குப் பகுதி நாவல்கள் குறியீட்டு நாவல்கள், வருணனை நாவல்கள் என்பனவும் உள.”

இந்த மேற்கோளில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் நாவல்களில் குறிப்பிடத்தக்க ஒரு வகைமைக்குள் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டு எழுதப்பட்டதல்ல சங்கவை. நதியில் தொடங்கி நதியில் முடியும் சங்கவை ஒரு ஆறு தன் வழித்தடத்தில் எதிர்ப்படுவதையெல்லாம் தன் வசமாக்கி இழுத்துக்கொண்டு இலகுவாகப் பயணப்படுவது போலவே கதாபாத்திரங்களையும் அவர்களது வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் இயல்பாகக் கொண்டு செல்கிறது.

என்னுடைய முதல் நாவலான பரணி, எனது குழந்தைப் பருவத்திலிருந்து அந்த நாவல் எழுதப்பட்ட காலம் வரை நினைவடுக்குகளிலிருந்து பல்வேறு சம்பவங்களைக் கோர்த்து எழுதப்பட்ட நாவலாகும். எந்தத் திருத்தமும் மாறுதலும் செய்யப்படாமல் எழுதப்பட்ட முதல் கையெழுத்துப் பிரதி அப்படியே அச்சாகி வெளிவந்தது. அந்த நாவலை எழுதி முடிப்பதற்கு எடுத்துக்கொண்ட கால அவகாசம் மூன்று மாதங்கள் மட்டுமே என்றாலும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களும், எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் வாழ்க்கையில் என்னோடு பயணப்பட்டவர்கள் அல்லது எனக்கு ஏதோவொரு விதத்தில் அறிமுகமானவர்கள். அக்கதாபாத்திரங்களைச் சுற்றிப் பின்னப்பட்ட பல நிகழ்ச்சிகளும் கூட நான் நேரில் கண்டவையே.

2014-ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதத்தில் மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் சிறந்த வாசிப்பு அனுபவத்திற்கு உரிய நாவல்களில் ஒன்றாக மாணவர்களால் பரணி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிந்தேன். வெளியிடப்பட்டு ஏறக்குறைய 13 வருடங்களுக்குப் பிறகும் அந்த நாவல் கல்வியாளர்கள் மற்றும் வாசகர் மத்தியில் சிறப்பிடம் பிடித்திருக்கிறது என்பது எனது எதார்த்தமான எழுத்துக்குக் கிடைத்த மாபெரும் கௌரவம் என்றே கருதுகிறேன்.

அந்நாவலுக்குப் பிறகு நான் எழுதிய கிளியம்மா என்ற குமணா என்ற குறுநாவலும், குழந்தைகள் உலகம் பற்றிய கடவுளின் காதல் கடிதங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பும் கூட கற்பனையில் புனைந்து சொல்லப்பட்டவையன்று.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் எழுதியிருக்கும் சங்கவை என்ற நாவல் என்னோடு என் வாழ்வில் பல வருடங்கள் பயணப்பட்ட கதை. சரியாகச் சொல்லவேண்டும் என்றால் எனக்கு நன்கு தெரிந்தவர்கள், நட்பு வட்டத்தில் நிலைத்திருப்பவர்கள் – இவர்களுக்கு நடந்தது மற்றும் நானே எதிர்கொண்ட உண்மை நிகழ்ச்சிகளே நாவல் என்ற வடிவம் பெற்றிருக்கிறது.

சங்கவை நாவலில் இடம்பெறும் மூன்று முக்கியக் கதாபாத்திரங்களில் ஒருவரான தமிழ்ச்செல்வி கவிதை பற்றித் தனது தோழிகளான சங்கவை, ஈஸ்வரியிடம் பேசுகின்றபோது பதிவு செய்வது போல மனிதர்களின் எதார்த்தமான வாழ்வை, அவர்களது வாழ்க்கைத் தளம், சூழலிலிருந்தே பிரதிபலிக்கும் படைப்பிலக்கியத்தில் உயிர் இருக்கும். மண்ணிலிருந்தும் மக்களிடமிருந்தும் அந்நியப்பட்டு நிற்கும் கற்பனையான எழுத்துக்களில் வறட்சியே எஞ்சியிருக்கும் என்பது என்னுடைய உறுதியான எண்ணம்.  சங்கவையும் மண்ணில் பாதம் பதித்து, எதிர்கொள்ளும் மனிதர்களை இயல்பாகப் பதிவு செய்து நாவல் வடிவம் பெற்றிருக்கிறது.

சங்கவை நாவலில் வரும் கதாபாத்திரங்கள் யதார்த்த வாழ்வில் நான் சந்தித்தவர்களே. நிகழ்ச்சிகளும் கற்பனை முலாம் பூசப்படாத சம்பவங்களே. காதல், கண்ணீர், கழிவிரக்கம், ஏழ்மையிலும் சுய கௌரவம் இழக்காத உழைப்பு, பேதமற்ற ஆண்-பெண் நட்பு, வல்லூறுகளாகப் பெண்மையை இரையாக்க நினைக்கும் பேராண்மையற்ற ஆண்களின் வக்கிரம், அவர்களைக் கிறிஸ்தவம் என்ற பெயரில் பாதுகாத்து, பெண்களைச் சிலுவையில் அறையும் இயேசுவின் பெயரால் அமைந்த கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள், பெண்களைக் கொண்டே பெண்களை அடிமைப்படுத்த நினைக்கும் ஆண்களின் கயமைத்தனம் – இவையெல்லாம் நடந்த நிஜமான நிகழ்ச்சிகளிலிருந்தே கொடுக்கப்பட்டுள்ளன.

இலட்சியக் கதாபாத்திரங்களை இலக்கியங்களில் சந்திக்க நேரிடுகிறபோது அவர்கள் எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட அல்லது முரண்பட்ட பாத்திரப்படைப்புக்கள் என்ற விமர்சனம் எழுவதுண்டு. சங்கவையிலும் சேது குமணன், சௌந்திரா, கமலவேணி போன்றவர்கள் அரிய மனிதர்களாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களும் நிஜத்தில் நான் சந்தித்த அற்புதமான மனிதர்களே. இவ்வளவு கேவலமாகக் கூட மனிதர்கள் இருக்க முடியுமா என்று நம்மைப் பதற வைப்பவர்கள் வாழ்கின்ற அதே உலகத்தில் நான் அதிசயித்துப் பார்க்கும் இலட்சிய மாந்தர்களும் இருக்க முடியும் என்பது எதார்த்தம்தானே!

முனைவர் சு.வேங்கடராமன் ‘எண்பதுகளில் தமிழ்ப்புனை கதைகளில் பெண்ணியம்’ என்ற தனது ஆய்வு நூலில் எண்பதுகளில் பெண்ணியம் பற்றிய தமிழ்ப் புனை கதைகள் எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வாழ்க்கைச் சூழல் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதத்தில் அவை எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். ராஜம் கிருஷ்ணன், அம்பை, ஜெயகாந்தன், ஆர்.சூடாமணி, பிரபஞ்சன், வாசந்தி, எம்.ஏ.சுசீலா, சிவசங்கரி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோரது கதைகளை ஆய்வு செய்து எழுதியிருக்கும் அவர், ‘உழைக்கும் பெண்களும் கற்பு நெறியும்’ என்ற தலைப்பில் முன் வைத்திருக்கும் கருத்துக்களை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “பெண்கள் உழைப்பிற்காகச் செல்லும் இடங்களில் ஆண்கள் இவர்களின் உழைப்பை மட்டுமன்றி கற்பையும் சுரண்டும் இக்கட்டு ஏற்பட்டுள்ளது. பெண்ணை மிக எளிதில் தம் இச்சைக்கு அடிபணிய வைப்பதும், பணிய மறுப்பின் அலுவலில் இருந்து நீக்கி விடவும், பெண்ணின் கற்பு நெறி குறித்து தவறாக வதந்தி பரப்பியும் அலுவல் மகளிருக்கு இன்னல் விளைவிக்கின்றனர்.” இவை போன்ற கருத்துக்கள் எண்பதுகளில் வெளிவந்த புனை கதைகளில் அழுத்தமாக வெளிவந்துள்ளதாகவும் அவர் அப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இன்றும் கூட அதே நிலை தொடர்கிறது என்ற என்னுடைய அனுபவப் பூர்வமான வேதனையை உண்மை நிகழ்ச்சிகளிலிருந்தே சங்கவையும் பதிவு செய்துள்ளது.

உறவுகளைக் கொண்டாடும் கிராமத்து மனிதர்கள், உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் மருதாயி போன்ற கதாபாத்திரங்கள், ஆறு, மணல் என தன்னைச் சுற்றியிருக்கும் இயற்கையைப் பாதுகாக்கப் போராடும் மனிதர்கள், நட்புக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கும் அற்புதமான பெண்கள், ஆண்கள், சுயத்தைத் தேடித் தெரிந்துகொள்வதற்காக நாடுகள் கடந்து பயணம் செய்யும் நிமலோ ஃபிரான்சிஸ், தெய்வீகமான கங்கை நதி, ஹரித்துவார், ரிஷிகேஷ், இலங்கையின் ஸ்ரீபாதமலை எனப் பல்வேறு மனிதர்களோடு பயணப்படும் சங்கவையோடு நானும் சேர்ந்து பயணப்பட்டிருக்கிறேன்.

பல நாட்கள் மனதில் நினைத்து எழுதவேண்டும் என்று மொழியோடு உறவாடி உணர்வுகளால் உயிர் பெற்ற ‘சங்கவை’ யதார்த்த வாழ்வின் இலக்கிய வடிவம் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

இந்த நாவலில் மண்ணோடும் மரங்களோடும் மனிதர்களோடும், அவர்தம் உணர்வுகளோடும் உறவுகளோடும், இயற்கையும் சங்க இலக்கியங்களும் இயைந்து இடம்பெற்றிருக்கின்றன. வாழ்க்கை என்ற பெரும் பயணத்தில் அறிவை விசாலமாக்குபவை புத்தகங்கள்; வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பவை அனுபவங்கள்; காயங்களில் தோய்ந்து கையறு நிலைக் கண்ணீரில் தனித்துத் தவித்து நிற்கின்ற வேளைகளில் கை கொடுப்பவை இலக்கியங்களே. அவற்றை வாசிக்குந்தோறும் புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து அழுந்த காலூன்றி நடக்கத் தொடங்கிவிடுகிறோம். அதே இலக்கியத்தைப் படைக்கும்பொழுதோ நாமும் சேர்ந்தே புதிதாகப் பிறக்கிறோம். காயங்களும் கண்ணீரும் கட்டுக்களும் காணாமல் போய்விடுகின்றன. வாழ்வைப் பற்றிய புரிதல் ஆழமாகிறது. அதுவே பாடமாகவும் மாறுகிறது. எழுதுவதும் ஒரு அற்புதமான அதே நேரத்தில் போராட்டமான அனுபவம்தான். தன்னோடும், தன்னைப் பிணைத்திருக்கின்ற நியதிகளோடும் போராடுகின்ற, என்னில் பல காலம் உயிர் வாழும் கதாபாத்திரங்களை, சங்கவையில் தாய் மொழியின் துணை கொண்டு வடித்திருக்கிறேன்.

இந்தக் கதையோடும் இதில் இடம்பெறும் பாத்திரங்களோடும் கதை பேசிச் சேர்ந்து நடந்து வாழ்ந்த, இன்றும் வாழ்கின்ற அனுபவம் இப்போது நாவல் வடிவில். இந்த நாவலைக் கொணர்வதில் தூண்டுகோலாகவும், உதவியாகவும் நின்றவர்கள் பலர். அத்தனை பேருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


பரணி நாவலில் இடம்பெற்றிருக்கும் பரணி, முருகன், கணேசன், செண்பகம், சிவனேசன், காந்தா, சௌர்ணா என அத்தனை பேரும் இன்றும் என்னில் நினைவுகளிலும் கனவுகளிலும் வாழ்பவர்கள். சங்கவையும், ஈஸ்வரியும், தமிழ்ச்செல்வியும், கலைவாணியும், சரோஜினி மேனனும், எபி-சங்கவையின் எல்லை கடந்த நட்பும், அதைப் போலவே பிற கதாபாத்திரங்களும் என் நினைவாகவும் நிழலாகவும் தொடர்ந்து வருபவர்கள். ஏனென்றால் வெறும் எண்ணங்களிலிருந்தும் சிந்தனைகளிலிருந்தும் உருவாக்கப்பட்டதல்ல சங்கவை. உயிரையும் ஆன்மாவையும் தொட்டு உணர்வுகளில் கலந்த உன்னதமான அனுபவமே இந்தச் சங்கவை. இனி வாசகர்களின் கருத்துக்கும் மதிப்புரைக்கும் சங்கவையை முன் வைக்கிறேன்.

No comments:

Post a Comment