கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் நடத்தும் திருமதி ரங்கம்மாள் தமிழ் நாவல் பரிசுப் போட்டியில் பரிசுக்குரிய நாவலாக சங்கவை தேர்வு. ரூ.30,000 பரிசுத்தொகை.
கோயம்புத்தூரில் இயங்கி வரும் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறந்த நாவலுக்கான பரிசுப் போட்டியினை நடத்துகிறது. 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த நாவல்களுக்கான போட்டியில் சங்கவை பரிசுக்குரிய நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வமான கடிதம் 25.7.2015 அன்று கிடைக்கப்பெற்றது. போட்டிக்கு 23 நாவல்கள் வந்திருந்ததாகவும், அதில் சங்கவை நடுவர் குழுவால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போட்டி விதிமுறைப்படி நாவலை எழுதியவர் என்ற முறையில் எனக்கு பரிசுத் தொகை ரூ.30,000/-ம், நாவலை வெளியிட்ட விருட்சம் பதிப்பகத்தாருக்கு ரூ.7,500/-ம் வழங்கப்படுகிறது.
கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து அனுப்பப்பட்டிருந்த கடிதத்தைக் கண்டதும், தொடர்புகொள்வதற்காகக் கடிதத்தில் கொடுக்கப்பட்டிருந்த திரு.M.குப்புராஜ், மேலாளர் அவர்களை கைபேசி எண்ணில் அழைத்து நன்றி தெரிவித்தபோது ஒரு சுவையான, மகிழ்ச்சியான தகவல் எனக்கு கிடைத்தது.
1985-ஆம் ஆண்டு இதே போட்டியில் எழுத்தாளர் சிவசங்கரி, தமது பாலங்கள் என்ற நாவலுக்காகப் பரிசு பெற்றதாகவும், அதன் பிறகு, அதே பரிசினைப் பெறும் இரண்டாவது பெண் எழுத்தாளர் நான் என்பதும் தெரிய வந்தது. இப்போட்டியில் ஏற்கனவே பரிசு பெற்ற வேறு சில முக்கியமான எழுத்தாளர்கள் - திரு.ர.சு.நல்லபெருமாள், திரு.இந்திரா பார்த்தசாரதி, திரு.நீல பத்மநாபன், திரு.நாஞ்சில்நாடன், திரு.பிரபஞ்சன், திரு.சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் ஆவர்.
கடந்த 2013-ஆம் ஆண்டு, கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் திருமதி ரங்கம்மாள் நினைவு நாவல் பரிசுப் போட்டியில், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் ஆளண்டாப்பட்சி (காலச்சுவடு பதிப்பகம்) நாவல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகள் பாரம்பரியமும் சிறப்பும் மிக்க இப்பரிசு சங்கவை நாவலுக்காக எனக்குக் கிடைத்ததற்கு கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாவலை வெளிக்கொணர்வதில் உதவியாக இருந்த சாம்சன் துரை, அஸ்வின், பிரகாஷ் சுப்பிரமணி, சுரேஷ், அம்மா, சகோதர, சகோதரிகள் மற்றும் நட்பு வட்டங்கள் கிளாரம்மா ஜோஸ், கமலவேணி, ஜெனோ லோகநாதன் மற்றும் மாணவ சமூகம் - அனைவருக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.
பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இப்போட்டியைப் பற்றியும், அதன் சிறப்பு பற்றியும் நான் அறிந்திருந்தாலும், இந்த ஆண்டிற்சான போட்டி பற்றிய அறிவிப்பினைக் கவனிக்காமல் தவறவிட்டிருந்தேன். இறுதி நாளுக்குச் சரியாக மூன்று தினங்களுக்கு முன்பாக இதுபற்றி எனக்குத் தெரிவித்து, உடனே என்னுடைய நாவல் சங்கவையினை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்திய பேராசிரியை எம்.ஏ.சுசீலா அவர்கள் என் நன்றிக்குரியவர்கள்.
கடைசி நேரத்தில் அதை அனுப்பி வைப்பதற்காக சிரத்தை எடுத்துச் செயலாற்றிய சூரியபிரகாஷுக்கும் நன்றி.
பரிசு பற்றிய விவரத்தைத் தாங்கி வந்த கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தினரின் அதிகார பூர்வ கடிதத்தை இங்கு இணைத்துள்ளேன்.
No comments:
Post a Comment