ஆசிரியரிடமிருந்து...

பெண்ணுக்கும் இயற்கைக்குமான இயைபு பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் ஏராளமான பாடல்கள் காணக் கிடக்கின்றன. மரத்தைச் சகோதரியாக நினைத்து நேசிக்கும் பெண்ணைப் பற்றிய பதிவினை நற்றிணையில் பார்க்க முடிகிறது. இன்று நம் தமிழ்ச் சமூகத்தில் பெண்ணியம், பெண்ணியவாதி என்ற சொற்களைக் கேட்டாலே ஏதோ கேட்கக் கூடாத அபச்சாரத்தைக் கேட்டுவிட்டதுபோல முகம் சுளிக்கிறார்கள். அச்சொற்களைப் பிரயோகிக்கின்ற பெண்களைத் தீண்டத்தகாதவர்களைப் பார்ப்பது போல் வெறுப்புடன் நோக்குகிறார்கள். நியாயமான உரிமைக்காகப் போராடும் பெண்ணைக் கூட “நீ என்ன பெண்ணியவாதியா?” என்று படித்து, பெரும் பதவியில் இருக்கின்ற கல்வியாளர்கள் கூட கடுமையாகத் தாக்குகிறார்கள். 

பெண்ணியம் என்று தனியே எதுவும் இல்லை. அது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு பகுதி அல்லது வாழ்க்கை முறை என்றே சொல்லலாம். இன்றும் பெண்ணியம் பேசியும், எழுதியும் வரும் புரட்சிகரப் பெண்கள் கூட அது பெண்ணின் உடல்மொழி, பெண் தன் உடலைப் பற்றியும் அதன் ஆசைகள் பற்றியும், அல்லது இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் பாலுறவு பற்றியும் எந்த அரங்கிலும் துணிந்து பேசுவதே, அல்லது எழுதுவதே பெண்ணியம் என்று ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளிலிருந்து கடன் வாங்கப்பட்ட இந்த ஏட்டுச் சுரைக்காய்கள் இந்தியாவின் இருண்ட கிராமங்களில் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும் பெண்களுக்கான குரலாக ஒலிக்கும் என்றால், நிச்சயமாக இல்லை.

தன் உடல் அழகைப்பற்றி தானே ஒரு பெண் பேசக்கூடாது என்ற 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொல்காப்பிய இலக்கணத்தையும் மீறி, தன் உடல் அழகையும், காதல் வேட்கையையும் புலப்படுத்துகின்ற பெண்பாற் புலவர்கள் எழுதிச்சென்றிருக்கின்ற பாடல்களும் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கின்றன. எனவே தாங்கள் புதிதாகப் பேசுகிறோம் என்று உடலைப் பற்றிப் பேசும் பெண்ணியவாதிகள் வறண்டுபோன அல்லது வறட்டுத்தனமான மேற்கத்திய கலாச்சார கொள்கைகளை இதுதான் பெண்ணியம் என்று தூக்கிப் பிடிப்பதற்கு முன்னால் யதார்த்தத்தில் நகரத்திலும் கிராமத்திலும் பெண்கள் எதிர்கொள்ளும் எவ்வளவோ பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்ததாக இருக்கும் என்பது என் திடமான எண்ணம்.

பெண்ணின் உடல் மொழி, உடல் இன்பம் பற்றிப் பேசுகின்ற பெண்ணியவாதிகள், வறுமையில் தன் குழந்தைகளைக் காப்பதற்காக உடல் நலம் பேணாது உழைக்கும் பெண்கள், எங்கு வேலை பார்த்தாலும் தங்களுக்கு மேலதிகாரிகளாய் இருக்கும் பாலியல் வக்கிரம் பிடித்த ஆண்களின் தொந்தரவுக்கு ஆளாகி, அதே நேரத்தில் தங்கள் உடலைக் கீழானதாக்கிக் கொள்ள முடியாமல் போராடும் பெண்கள் (இதில் கல்லூரிப் பேராசிரியர்களிலிருந்து சித்தாள் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை அடக்கம்) பற்றியும் அவர்களின் இருத்தலுக்கான போராட்டம் பற்றியும் ஏன் எழுதுவதில்லை என்ற ஆதங்கம் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இருக்கிறது. இயற்கையைச் சுரண்டுவதுபோலவே மனிதன் பெண்ணையும் பல நிலைகளில் சுரண்டுகிறான். இந்தச் சுரண்டலுக்குப் பலியாகும் பெண்களின் கூக்குரல் பதிவு செய்யப்படாமல், பாலுறவில் அதிக இன்பம் பெறுவது ஆண்களே என்று பேசியும் எழுதியும் வருவது நம் சமூகத்தில் அடிப்படை உரிமையின்றி குரல் வளை நெறிக்கப்படும் பெண்களுக்கு எந்த விதத்திலும் பயன்படப்போவதில்லை.

ஏதோவொரு வேகத்தில் ‘பரணி’ (2001) என்ற நாவலை எழுதி முடித்த பிறகு, நீண்ட வருடங்கள் கடந்து வந்த பாதையின் அனுபவங்களில் எழுத நினைத்ததையெல்லாம் எழுத முடியாமல் பணியும், நேரமும் ஆட்கொண்டிருந்தன. பாலியல் வன்கொடுமை நடந்தால் கூட வாயை மூடிக்கொண்டு வேலை பார்க்க வேண்டும். அதைப் பற்றி வாய் திறந்தால் நியாயம் கேட்டால் வேலை கிடையாது என்று புகழ்பெற்ற கத்தோலிக்க நிறுவனத்தாரின் கல்லூரியிலிருந்து அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டப் பிறகு (ஏறக்குறைய ஐந்து வருட பாலியல் வன்கொடுமை, விசாரணை நடத்தச் சொல்லி பல மாதப் போராட்டம், விசாரணை அறிக்கை கேட்டும், நடவடிக்கை எடுக்கச்சொல்லியும் மேலும் சில மாதங்கள் போராட்டம்; நீதிமன்றக் கதவுகளைத் தட்டிய பிறகு, கல்லூரிக் கதவுகளுக்கு வெளியே தள்ளப்பட்டது; மொத்தம் ஐந்து + இரண்டு = ஏழு வருட அனுபவங்கள்) சோர்ந்து, சுருண்டு, முடங்கிப் போகாமல், பார்த்தது, கேட்டது, நேரடியான அனுபவம் என எல்லாமுமாகச் சேர்த்து ஏறக்குறைய 700 பக்கங்கள் எழுதப்பட்டிருக்கும் நாவல், ‘சங்கவை’ - இதில் காதல் இயற்கை, தன்னைப் பற்றிய புரிதலுக்கான தேடல், மொழி, பெண்கள், அவர்களின் உலகம், அந்த உலகத்தைச் சூனியமாக்கத் துடிக்கும் சில வெறிகொண்ட ஆண்கள், கத்தோலிக்க மதத்தின் கள்ளத்தனம், பதவித் திமிறில் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என ‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’  என்ற பாரதியின் சொற்களுக்கேற்ப அராஜகம் செய்யும் சில கத்தோலிக்க பாதிரிமார்கள்; ஒரு புத்த துறவியின் தேடலில் ஹரித்துவார் ரிஷிகேஷ், கங்கை நதி, தாமிரபரணி, இலங்கையின் ஸ்ரீபாத மலை, கிராமங்கள் என பல தளங்களில் பயணிக்கும் என்னுடைய நாவலின் முதல் பத்து அத்தியாயங்களை (மொத்த அத்தியாயங்கள் 82) மட்டும் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

வாசிப்பவர்களின் மேலான கருத்துக்களை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எழுதுபவர்களுக்கு மிகப் பெரிய பரிசு வாசிப்பவர்களின் விமர்சனங்களே.

பின் குறிப்பு: முதல் அத்தியாயத்தைப் படித்துவிட்டு ‘அம்புலி மாமா’ கதைகளில் வரும் ராஜா ராணி கதைபோல் இருக்கிறதே என முடிவு செய்துவிட வேண்டாம். அது பிரதான பாத்திரமான சங்கவையின் கனவு.

No comments:

Post a Comment