மரத்தடியிலிருந்த சிமென்ட் பெஞ்சில் உதிர்ந்து கிடந்த சரக்கொன்றை மலர்கள் தாயைப்
பிரிந்து ஏக்கத்தில் வதங்கிப் போன குழந்தைகள் போல சுருங்கிப் பொலிவிழந்து போயிருந்தன.
இவை, மரத்தில் புத்தம் புதிதாய் மலர்ந்திருக்கும் போது, என்றேனும் தான் மேல் நோக்கிப்
பார்த்து அதன் மலர்ச்சியைக் கண்டு மகிழ்ந்திருக்கிறோமா என யோசித்தாள் சங்கவை. இல்லை
என்றே மனம் சொல்லியது. பக்கத்தில், பார்க்கும்
தூரத்தில் எட்டும் உயரத்தில் இருப்பவை மட்டுமே வாழ்வின் ரசனைக்குரியதாகவும் எண்ணங்களில்
இடம் பெற்று சிந்தனையில் பதிவதாகவும் இருக்கின்றனவோ? மனிதர்களிலும் கூட யாரேனும் நம்மைவிட
சிந்தனையிலும் செயலிலும் வாழ்வைப் பற்றிய மதிப்பீடுகளிலும் விழுமியங்களிலும் மேம்பட்டு
இருந்தால் அவர்களை எப்போதாவது அண்ணாந்து பார்த்து அதிசயிப்பதோடு நின்றுவிடுகிறோம்.
அவர்கள் எட்டிய உயர்ந்த இலட்சியத்தை எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் பற்றித் தெரிந்துகொள்வதுபோல
தெரிந்துகொண்டு அத்துடன் விட்டுவிடுகிறோம் - அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே! பாதை பயணம்
செய்வதற்கு இலகுவானதாகவோ, சுகமானதாகவோ இல்லையென்று நிச்சயமாகத் தெரிந்தால் அதில் முதல்
அடியைக் கூட எடுத்து வைக்காமல் கவனமாகத் தவிர்த்துவிடுகிறோம். கடினமான, கரடு முரடான
பாதையில் முதலில் பாதம் பதிப்பவர்களுக்கு அது பெரும் சவாலாக இருக்கக் கூடும். ஒவ்வொருவராகப்
பின்பற்றிச் செல்ல, செல்ல, அந்த வழியே எளிதான ஒன்றாக மாறிவிடக்கூடும். தொடர்ந்து பலரும்
அதில் பயணப்படத் தொடங்கினால், செம்மையான பாதையாக மட்டுமல்லாமல், அதுதான் சரியான பாதை
என்றும் உருவெடுத்துவிடும். ஆனால், சாதாரணமாக,
நியாயமாக நடக்கவேண்டிய இந்த நிகழ்வுகள் கூட நமக்கு அசாதாரணமானதாகப் போய்விடுகின்றன.
எது தங்களுக்கு சௌகரியப்படுகிறதோ, அல்லது உலகில் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் அள்ளித்
தருகிறதோ, அந்த ஆதாயமான, உறுத்துவதற்குச் சிறு கல்லும் முள்ளும் இல்லாத வழியையே நாம்
தேர்ந்தெடுக்கிறோம். இலட்சிய இலக்குகள், உயரங்கள் போன்ற எதுவும் நோக்கமாக இல்லாமல்
மனிதர்களின் குறைகள் அத்தனையையும் ஆசையுடன் தோளில் தூக்கிக்கொண்டு, இதுதான் தங்களுக்குப்
பிடித்த பாதையென்று பயணம் செய்கிறார்கள். அதிலும் கூட இடையே மேடு பள்ளங்கள் எனக் குறுக்கிட்டால்,
உடனே ஒட்டுச் சந்து வழி இருக்கிறதா எனக் குறுக்கில் தாவுகிறார்கள். தான் நினைப்பவை,
தனது ஆசைகள், அது சரியோ, தவறோ, எப்படியாயினும் நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற உத்வேகத்துடன்
வெகுஜனங்கள் சென்ற வழி தயாராகவும் எளிதாகவும் இருக்கும்போது வெகு அரிதாக யாரோ சிலர்,
எப்பொழுதோ கடந்து சென்ற, அல்லது செல்ல முனைகின்ற பாதையைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளவோ,
பரீட்சித்துப் பார்க்கவோ விருப்பமும் தேவையும் இல்லையென விலகிவிடுகிறோம். அதனால், சிகரங்களைத்
தொட்ட அரிதான மனிதர்களை, அவர்களின் வாழ்வை அண்ணாந்து பார்ப்பதோடு நிறுத்திக்கொள்கிறோம்.
அதுவும் கூட கழுத்து வலிக்கும் என்றால், மேல் நோக்கிப் பார்த்திடும் எண்ணமே எழாமல்
நம் வழியில் போய்விடுகிறோம். எனவேதான் உலகத்தில் இன்னமும் குற்றங்களும் வஞ்சனைகளும்
பேராசைகளும் அதன் பயங்கர விளைவுகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. இல்லையென்றால் உலகம்
எப்பொழுதோ களங்கமில்லாத மனிதர்களின் பிரசன்னத்தில் தூய்மையாய், ஆதிச்சூரியனின் அங்கமாகப்
பிரகாசித்திருந்திருக்கும். கட்டற்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளின் கவனத்தில் யதார்த்த
நிகழ்காலம் சட்டென்று வந்து நின்றது.
“மரங்கள் எல்லாம் போதி மரங்கள்தானோ!” தனக்குள் சிரித்தபடி முழுவதும் சருகு ஆகாமல்
மிச்ச ஈரப்பசையுடன் இயற்கையின் வெட்டுண்ட விரல்கள் போலக் கிடந்த பூக்களைக் கைகளால்
ஒருபுறம் ஒதுக்கிவிட்டு சிமெண்டு பெஞ்சில் அமர்ந்த சங்கவை, கைக்கடிகாரத்தைத் திருப்பி
மணியைப் பார்த்தாள். மாலை நான்கு மணி ஆகியிருந்தது. இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்கவேண்டும்?
கருப்பு இனப் பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தருவதாக பேராசிரியர் சௌந்திரா அழைத்ததாகவும்
அதனால் ஆங்கிலத் துறைக்குச் சென்று அவற்றை வாங்கிவருவதாகவும், தனக்காகச் சிறிது நேரம்
காத்திருக்குமாறும் தமிழ்ச்செல்வி கூறிச் சென்றிருந்தாள். ஒருவேளை தாமதமானால் விடுதிக்குச்
சென்றுவிடுமாறு அவள் சொல்லியிருந்தும், தனிமையில் மரங்களோடும் செடிகளோடும் உணர்வு பூர்வமாக
உறவாடும் பொற்கணங்களில், அந்தத் தருணத்தில் வாழ விரும்பினாள் சங்கவை.
சரக்கொன்றை மரத்தையடுத்திருந்த புங்கை மரத்தில் அதன் தாவரவியல் பெயரெழுதிய பலகையையும்
கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். அதைச் சிரமப்பட்டு உச்சரித்து வாசிப்பதில் அவளுக்கு
ஆர்வம் எழவில்லை. புங்க விதையின் எண்ணெயையும், வேப்பெண்ணெயையும் கலந்து இயற்கை முறை
பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தலாம் என ஈஷூவின் அக்கா கலைவாணி சொன்னது நினைவுக்கு வந்தது.
அப்போது,
“பூச்சிக்கொல்லின்னுதானே சொல்லணும்? அதென்ன புதுசா பூச்சிவிரட்டி?” என ஆச்சரியமாகக்
கேட்டிருந்தாள் சங்கவை.
“பூச்சிகளை ஏன் கொல்லணும்? விரட்டினாப் போதுமே” என்ற கலைவாணி சிறிது இடைவெளி
விட்டு, “நான் சொல்றது இயற்கை முறையில ரசாயனம் கலக்காம செய்ற மருந்து. செயற்கையான உரங்களாலயும்
மருந்துகளாலயும் பயிர்களப் பாதுகாக்கிற பூச்சிகள் கூட செத்துப்போகுது. நம்ம மண்ணும்
கூட தாய்மையிழந்து போச்சு.” எனப் பெருமூச்செறிந்தாள்.
“அதனாலதான், அக்கா, விவசாயத்துக்குத் துணையா இருக்கிற பூச்சிகள் பத்திப் படிக்கிறதோட,
அதப் பாதுகாக்கிறது பத்தியும் ஆராய்ச்சி பண்றா” என்ற ஈஸ்வரியின் முகத்தில் பெருமிதம்
பொங்கியது.
குறு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஈஸ்வரி, அதன் நுணுக்கங்களை விவரமாகக் கூறும்போதெல்லாம்
சங்கவை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பாள். தமிழ்ச்செல்வியும் தன் பங்குக்கு, தனக்குத்
தெரிந்ததை சொல்லிக்கொண்டிருப்பாள்.
“உங்க வீட்லயும் வயல் இருக்கா தமிழ்” என்று சங்கவை ஒருமுறை கேட்டபோது,
“இல்லை. ஆனா, ஊர்ல மத்தவங்க வயல்ல நாத்து நடப் போயிருக்கேன்.” என்றாள் தமிழ்ச்செல்வி.
அவளுடைய பதிலில் இயல்பான தொனி தெரிந்தாலும் சங்கவைக்கு ஏனோ அன்று நெஞ்சடைத்தது. அதே
கனமான உணர்வு இப்போதும் கூட சங்கவையை ஆக்ரமித்தது. தங்களுக்குச் சொந்தமாக தங்களைத்
தவிர தன்னிடமும் தன் தாயிடமும் வேறு எதுவுமே இல்லை என்பதைத் தமிழ்ச்செல்வி வெவ்வேறு
சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தியிருக்கிறாள். ஆனால் ஒருமுறை கூட அவளது
குரலிலோ வார்த்தைகளிலோ வருத்தத்தின் சாயல் தென்பட்டதேயில்லை. அதுபோன்ற நேரங்களில் சங்கவையின்
நெஞ்சில் இனம் விளங்காத பாரம் ஏறி உட்கார்ந்து அழுத்தும்.
‘தமிழ் எப்போது வளமையிலும் சந்தோஷத்திலும் உயிர்ப்பிக்கப்படுவாள்?’ இந்தக் கேள்வி
எழுந்த மறுகணமே ஏன் இப்போது ‘அவளுக்கென்ன குறை?’ சந்தோஷமாகத் தானே இருக்கிறாள் என்ற
எதிர்க் கேள்வியும் எழுந்தது. வெயிலோ மழையோ, புயலோ பூகம்பமோ எதுவென்றாலும் ஏற்றுக்கொள்ளும்
பூமித்தாய் போல, எதற்காகவும் ஓட்டத்தை நிறுத்திக்கொள்ளாத சலனமற்ற நீரோடை போல வாழ்வை
அதன் போக்கில் எதிர்கொள்பவள் தமிழ் என்று தோன்றியது. ‘இளம் வயதில் இந்த மனமுதிர்ச்சி
அவளுக்கு எப்படி வாய்த்தது?’ குழந்தைப் பருவத்திலிருந்து ஏற்படும் முரண்பட்ட அனுபவங்களே
மனிதர்களை முழுமையாக மாற்றும்போலும்! அதிலும் குறிப்பாக இழப்புக்கள்! பிறந்து மூன்று
மாதங்களிலேயே தந்தையை இழந்தவள் தமிழ்ச்செல்வி. ஒரு பனை மரம் போல அடி முதல் முடி வரை
தன்னை, தன் மகளுக்குப் பயன்படுபவளாக மாற்றிக் கொண்டவள் அவள் தாய். அவளிடமிருந்து கற்றுக்
கொண்டதாலோ என்னவோ, தான் எப்படி இருந்தாலும், மற்றவர்களுக்குத் தானும் தன் வாழ்க்கையும்
பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கிறாளோ தமிழ்? இதில் குறிக்கோள்,
இலட்சியம் என்ற பெரிய, பெரிய வார்த்தைகள் ஏன் வரவேண்டும்? தமிழின் வாழ்க்கை எதார்த்தமாகவே
அப்படித்தானே அமைந்திருக்கிறது! கேள்விகளும் பதிலுமாக முன்னும் பின்னும் ஊஞ்சலாடிக்
கொண்டிருந்த சங்கவையின் மனம் இப்போது தன்னைப் பற்றிய மதிப்பீடுகளுக்குள் சென்றது.
தானும் கூட விவரம் தெரியாத வயதில் தாயை இழந்துவிட்டு காசிக்குப் போயிருக்கிறாள்
என்று சொல்லப்பட்ட கதையை நம்பிக்கொண்டு தூங்கும் போதெல்லாம் அடுத்த நாள் காலையில் கண்
விழிக்கும் வேளையில் அம்மாவின் முகம் பக்கத்தில் தெரியும் என்ற ஆசையுடன் நாட்களை நகர்த்தியதும்,
வரவே மாட்டாள் என நிச்சயமாய்த் தெரிந்ததும் உடைந்து போன இருதயத்தில் இறுக்கத்தை ஏற்படுத்திக்
கொண்டதும் நினைவுக்கு வந்தது. அப்பாவின் மரணம் கூட எதிர்பாராத இடியாகத்தானே தன் வாழ்வில்
இறங்கியது. இப்போது யோசித்துப் பார்த்தாலும் அந்த அதிர்ச்சியின் அலைகள் தன் மனதைக்
கலங்கச் செய்வதை உணர முடிகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதிவிட்டு
விடுமுறையில் வீட்டிலிருந்த போது, அடுக்குச் செம்பருத்திப் பூச் செடி வேண்டுமென்று
அப்பாவைத் தினமும் கேட்டுக் கொண்டிருந்தாள் சங்கவை. ஒரு நாள் மாலையில், “ரொம்ப நாளாக்
கேட்டுட்டிருந்தியேம்மா” என்று பாலித்தீன் கவரிலிருந்து, எடுக்கப்பட்ட இடத்திலிருந்த
மண்ணோடு அவர் கொண்டு வந்திருந்த அடுக்குச் செம்பருத்திச் செடியைக் கையில் வாங்கிக்
கொண்டதும், அவள் கண்கள் அகல சிரிப்பதைக் கண்டு அவர் புன்னகைத்ததும், பிறகு, வீட்டின்
முன்புறம் அந்தச் செடியை நட்டு வைக்க அவளுக்கு உதவியதும் எல்லாமே இப்போது நடந்ததுபோல்
இருக்கிறது. அன்று இரவுதான் அந்தச் சோகம் நிகழ்ந்தது. வாழ்க்கையின் பயணச்சுவடுகளில்
பதியம் போடப்பட்ட ஈர வடுக்களில் ஒன்றாக இன்றுவரை அந்தச் சோகம் அவளைத் துரத்துவதாய்
விசனப்பட்டாள். மரணம் என்பது எதிர்பாராத தருணத்தில் வந்து நம்மை வரவேற்கும் வேண்டாத
விருந்தாளி என்றாலும் வர முடியாதென்று யார்தான் அடம்பிடிக்க முடியும்? ஒருவேளை அப்பா
நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கண்களில் நீர் வழிய கடைசியாய் அவள் மடியில் சாய்ந்தபோது
என் மகளுக்காக இன்னும் சொஞ்ச நாள் விட்டு விடேன் எனக் காலனை கெஞ்சியிருப்பாரோ? காலமும்
காலனும் யாருக்காகவும் எந்த நேரத்திலும் சமரசம் செய்துகொள்வதில்லையே. ஆழ்ந்த தூக்கத்தில்,
தான் இருந்தபோது தன் பெயரை எத்தனை முறை சொல்லி அப்பா அழைத்தாரோ. கனவில் அம்மா வந்து
தன் தலையை வருடிக் கொடுத்தது போலிருந்த சமயத்தில்தான் அப்பாவின் அழைப்புக் குரல் சன்னமாகக்
கேட்டது. அதுவும் கனவோ என்று ஒருக்களித்துப் படுத்த போதுதான் அப்பாவுடைய கைகளின் ஸ்பரிசம்
அவளை உசுப்பி விட்டது. அவரைத் தன் பாசக் கயிற்றால் கட்டி வைத்திருந்தவள் திடுக்கென்று
எழுந்து பார்த்தாள். எதிரில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்பா... தூக்கம் முற்றிலும்
கலைந்துபோக செய்வதறியாது திகைத்தவள், பதறியெழுந்து அவரைத் தன் படுக்கையில் மெல்லக்
கிடத்தினாள். நெஞ்சு வலியின் உக்கிரம் அவரது முகத்தில் தெரிந்தது. கண்களில் தெரிந்த
இயலாமை இவளது இதயத்தைத் திருகியது. தன் மேஜை டிராயரில் அவசரமாகத் தேடி தலைவலி தைலத்தை
எடுத்து நெஞ்சில் தேய்த்துவிட்டாள். அதனால் பயன் எதுவும் ஏற்படப் போவதில்லை என்று அறிவில்
உறைத்ததால் ‘கொஞ்சம் இருங்கப்பா வர்றேன்’ என அண்ணனைக் கைபேசியில் தொடர்புகொள்ள முயன்றாள்.
அது எடுப்பாரின்றிச் சிறிது நேரம் எதோவொரு ஆங்கிலப் பாட்டைப் பாடிவிட்டு ஓய்ந்தது.
மீண்டும் தந்தையிடம் ஓடினாள். மூச்சு விட முடியாமல் அவர் திணறுவது இவளை மூச்சடைக்கச்
செய்தது. அவர் கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, “ஒண்ணும் ஆகாதுப்பா.”
என உடைந்த குரலில் கூறினாள். அவரோ தன்னை முன் வராந்தாவிற்கு அழைத்துச் செல்லும்படி
சைகையால் தெரிவித்தார். “இல்லப்பா இங்கயே படுத்துக்கோங்க. நான் பக்கத்தில யாரையாவது
கூட்டிட்டு வர்றேன்பா” என்று அவள் செல்ல முயன்றாள். அவரோ அவள் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு
முன்பு தெரிவித்ததையே மீண்டும் சைகையால் தெரிவித்தார். வேறு வழியின்றி அவரைக் கைத்தாங்கலாக
சிரமப்பட்டு வராந்தாவிற்கு அழைத்துவந்து ஈஸி சேரில் அமர வைத்தாள். அவரோ சற்று தள்ளிப்
போடப்பட்டிருந்த மேஜை நாற்காலிக்குப் பக்கத்தில் தன்னை அழைத்துச் செல்லுமாறு குளறும்
வார்த்தைகளில் கூறினார். அப்பா ஏன் இவ்வளவு பிடிவாதமாக அங்கு செல்லவேண்டுமெனக் கூறுகிறார்
எனப் புரியாத சங்கவை அவர் சொன்னபடியே குறிப்பிட்ட அந்த நாற்காலிக்கு அழைத்துச் சென்று
அவரை அமர வைத்தாள். பிறகு, கொஞ்சம் பொறுத்துக்கோங்கப்பா என்றவள், கதவைத் திறந்துகொண்டு
வெளியில் ஓடினாள். நகர வாழ்க்கையின் அடையாளங்கள் ஆரம்பித்திருந்த பாளையங்கோட்டை இருள்
மூடி, முடங்கிப்போய்க்கிடந்தது. பக்கத்து வீட்டுக் கதவை முதலில் மெதுவாகவும், பிறகு
வேகமாகவும் தட்டிப் பார்த்தாள். யாரும் திறப்பதாகத் தெரியவில்லை. அழைப்பு மணியின் சுவிட்ச்
எங்காவது தென்படுகிறதா என்று தட்டுத் தடுமாறித் தடவிப் பார்த்தாள். அதுவும் பிரயோஜனப்
படவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மருந்துக் கடைகளும் திறந்திருப்பதாய் தெரியவில்லை.
மீண்டும் வீட்டுக்கு ஓடினாள். கால் இடறி, பெருவிரலின் நகம் பிய்ந்து கொள்ள வலி உயிர்
போவதுபோல் இருந்தது. அதை அசட்டை செய்தவள், உள்ளே போய் அப்பா ஆசையுடன் தண்ணீர் பருகும்
பித்தளைச் செம்பில் தண்ணீர் எடுத்து வந்தாள். அதற்குள் அப்பா மேஜை மேல் கவிழ்ந்திருந்தார்.
“தண்ணி குடிங்கப்பா, தண்ணி குடிங்கப்பா என்று அவரை நிமிர்த்தியவள், அவரது வாயருகே செம்பினைக்
கொண்டுபோய் மெல்லப் பருகச் செய்தாள். இரண்டு மடக்குக்கூடப் பருகியிருக்கமாட்டார். அவளை
நீர் வழியும் கண்களால் பலவீனமாய் பார்த்தார். பிறகு எதிரில் சுவரை நோக்கித் தலையை நிமிர்த்தினார்.
அங்கு மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் அம்மா சிரித்துக்கொண்டிருந்தாள். அதில் சாத்தப்பட்டிருந்த
செவ்வந்திப் பூ மாலை இன்னும் வாடாமலிருந்தது. இப்போது அப்பாவின் கண்களில் கண்ணீர் அதிகமாய்
பெருக்கெடுத்து வந்தது. நடப்பது புரியாமல், என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக்
கொண்டிருந்த தன் மகளை அருகில் இருந்த நாற்காலியில் அமருமாறு சைகை செய்தவர், அவள் அமர்ந்த
அடுத்த நொடி தடாலென்று அவள் மடியில் சாய்ந்தார். “அப்பா! அப்பா!” என்று எத்தனை முறை
கூப்பிட்டாளோ நினைவில்லை. அவர் மீண்டும் எழுந்து கொள்ளவேயில்லை. அவர் இறந்துவிட்டார்
என்ற உண்மை உறைத்தபோது அந்த இரவில் உறைந்துபோன சங்கவை, அழவும் திராணியற்று அப்படியே
சாய்ந்தாள். ஓரளவு சுதாரித்து சுய நினைவுக்கு வந்ததும், முதலில் அவள் தொலைபேசியில்
அழைத்தது எபியைத்தான். தூக்கக் கலக்கத்தில் கைபேசியை எடுத்தவன், எதுவும் பேசாமல் குமுறி
அழுத சங்கவையின் அழுகுரலில் பதறிப்போனான். பிறகு வெகு பிரயாசப்பட்டு அவனே அண்ணனுக்கும்
தகவல் சொல்லி மறுநாள் எல்லோரும் வந்தார்கள். அப்பா நள்ளிரவு பன்னிரெண்டரை மணிக்கு இறந்த
பிறகு உயிரற்ற அவரது உடம்பிற்கருகில் திசை தெரியாத பாலைவனத்தில் மொட்டை மரத்திற்கடியில்
தனித்துவிடப்பட்ட குழந்தைபோல், தான் அன்று தவித்திருந்த நிலையை நினைத்துப் பார்த்த
சங்கவையின் கண்கள் அழுவதற்குத் தயராகின. ஆனால் அதற்குள்,
“மன்னிச்சுக்கப்பா, ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேன்.” என்று எதிரில் வந்து நின்றாள்
தமிழ்ச்செல்வி. உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியிருந்த சங்கவை, அந்தப் பரிதாப நிலையை
அவள் படித்துவிடவேண்டாம் என்பதுபோல முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்ள முயன்றாள்.
“அய்யோ கோவிச்சுகிட்டியாப்பா?” என்று தன் பக்கம் சங்கவையைத் திருப்பிய தமிழ்ச்செல்வி,
சிவந்திருந்த அவளது கண்களில் பொங்கியிருந்த துயர உணர்ச்சிகளைக் கண்டதும் அதிர்ந்தாள்.
“என்ன பிரச்சனை? அழுதிட்டிருக்கியா?”
“இல்ல. அழல...” சொல்லிய வேகத்தில் உரத்த குரலில் அழத்தொடங்கினாள் சங்கவை. திகைத்துப்போய்
நின்ற தமிழ்ச்செல்வி, அழுகையின் காரணம் புரியாமல் எப்படி அவளைத் தேற்றுவது எனத் தெரியாமல்
தடுமாறினாள். அவளைத் தன் மேல் சாய்த்துக்கொண்ட தமிழ்ச்செல்வி, அழும் வரை அழட்டும் எனப்
பேசாமல் இருந்தாள். அழுது ஓய்ந்த சங்கவை, மெல்ல எழுந்து சென்று செடிகளுக்கு மத்தியிலிருந்த
குழாயில் தண்ணீர் பிடித்து முகம் கழுவினாள். பிறகு, ஒன்றுமே நடவாததுபோல்,
“கவிதைப் புத்தகங்கள் கிடைச்சுதா?” எனத் தமிழ்ச்செல்வியிடம் வினவினாள். உடனே
பதில் சொல்ல முடியாமல் நின்றிருந்த தமிழ்ச்செல்வி, தன் பையிலிருந்து இரண்டு புத்தகங்களை
எடுத்து சங்கவையிடம் காட்டினாள். அவற்றைக் வாங்கிப் புரட்டிய சங்கவை,
“ஒன்னோட கவிதைகளும் புத்தகமா வரணும் தமிழ்.” என்றாள் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன்.
சில மணித்துளிகள் எதுவும் சொல்லாமலிருந்த தமிழ்ச்செல்வி, “நீ எதுக்காக அழுதன்னு நான்
கேட்கமாட்டேன். ஒன்னோட எந்தச் செயலுக்காகவும் யாரும் காரணம் கேட்கிறது ஒனக்குப் பிடிக்காதுன்னு
எனக்குத் தெரியும். ஆனா தயவு செஞ்சு இனிமே அழாத.” தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல்
தமிழ் உணர்ச்சிவசப்படுவது அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரில் தெரிந்தது. எந்தத்
தாழ்ப்பாளாலும் பூட்டி வைக்க முடியாத தூய்மையான அன்பின் வெளிப்பாடாக அது சங்கவைக்குத்
தெரிந்தது. “இப்ப நீ அழ ஆரம்பிச்சிட்டியா?” என்றாள் சற்றுக் கிண்டலுடன். பிறகு, அவள்
கவனத்தைத் திருப்புவதுபோல, “வரிசையா எவ்ளோ பெரிய மரங்கள் பாரு தமிழ். ஆனா, அதுக்கு
நடுவில தாள்ப்பூ செடிகள சம்பந்தமேயில்லாம நட்டு வச்சிருக்காங்க. அதனால அந்தப் பூக்களின்
அழகு பளிச்சுன்னு தெரியமாட்டேங்குது” என்றாள். அவர்கள் பேசிக்கொண்டே நகரத் தொடங்கிய
வேளையில், பின்னாலிருந்து ஈஸ்வரி பட்டென்று சங்கவையின் முதுகில் அடித்துவிட்டு அதே
வேகத்தில் அவர்கள் முன்னால் வந்து நின்றவள், “இவ்ளோ நேரமா என்ன பண்ணிட்டிருக்கீங்க?
நான் ஹாஸ்ட்டலுக்குப் போய் சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டுட்டு போர் அடிக்குதுன்னு திரும்ப
காலேஜுக்கு வந்தேன்.”
“போரடிக்குதுன்னு வந்தியா? பூச்சி புடிக்க வந்தியா?”
“போடி சங்கு. நான் மறந்தாலும் நீ விடமாட்ட போல தெரியுது.” என்ற ஈஸ்வரி, சங்கவையின்
கண்கள் தாள்ப் பூக்களிலேயே நிலைத்திருப்பதை கவனித்தாள். “அந்த பூவுல என்ன அதிசயம்னு
அத இப்படிப் பாத்திட்டிருக்க?”
ஈஸ்வரியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நீண்ட பெருமூச்செறிந்தாள் சங்கவை.
பிறகு நிதானமாக, “அம்மா உயிரோடிருக்கும்போது இந்தத் தாள்ப் பூவ ஏன் தலைல வச்சுக்கமாட்டேங்கிறீங்கன்னு
தெனமும் கேட்டு நச்சரிச்சிட்டிருப்பேன். அம்மாவுக்குப் பதில் சொல்லி மாளாது.” என்றாள்.
மீண்டும் அவளே தொடர்ந்து, “இந்திந்த பூக்களைத் தான் தலையில வைக்கணும் இத, இத சாமிக்குப்
போடணும் அப்டீன்னு ஏன் நிர்ணயிச்சாங்க?” எனக் கேட்டாள். இதற்கு என்ன பதில் சொல்வதென்று
தெரியாமல் தமிழ்ச்செல்வி அமைதியாக இருந்தாள்.
“தமிழ் நீ ஏன் பேசாம இருக்க? கோட்டுப்பூ எதுக்கு, காந்தள் பூ எதுக்குன்னு ஒனக்குத்
தெரிஞ்சதச் சொல்லு. இந்தப் பூக்களோட ஒனக்குத்தான் நெறைய பழக்கம்” என்று சிரித்தாள்
ஈஸ்வரி.
அவள் வார்த்தைகளை ஆழமாகக் கவனிக்காத சங்கவை, “தொண்ணூற்றொன்பது பூக்கள் இருக்குதுன்னு
சொல்வாங்கல்ல தமிழ்?” என்று தமிழ்ச்செல்வியிடம் கேட்டாள்.
“ஆமா. குறிஞ்சிப்பாட்டுல வருது. தமிழர்களுடைய காதலைப் பற்றி ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு
சொல்றதுக்காக, கபிலர் பாடியது!”
அவள் முடிக்கும் முன்பே, “தமிழோட காதல் பற்றி அப்ப வேற எதன்னா பாட்டு வருமா”
எனக் குறுக்கிட்டாள் ஈஸ்வரி. அவள் சொற்களின் ஜாலத்தை சிந்திக்காத சங்கவை, “தமிழ் இங்லீஷ்
லிட்டரேச்சர் படிச்சாலும் கூட நம்ம இலக்கியம் எவ்ளோ நல்லா தெரியுது பார் ஈஷு” என்று
சிலாகித்தாள்.
“ஏன்? எனக்குக் கூடத் தெரியுமே. ஊடல்ல இருக்கிற காதலிகிட்ட சமாதானம்னு அடையாளம்
காட்டுறதுக்காக ஆண்கள் கோட்டுப்பூ சூடுவாங்களாம்! நம்ம வள்ளுவர் ஐயா கூட இதப்பத்தி
எழுதியிருக்காரு. காதல் பரிசா பொண்ணுக்குக் கொடுக்கிறதுதான் காந்தள் பூ” என்றாள் ஈஸ்வரி.
அதைச் சொல்லும்போது அவள் குறும்புடன் தமிழைப் பார்த்தாள். தமிழோ அவள் பார்வையைத் தவிர்த்து
விட்டு அண்ணாந்து விழுதுகள் பரப்பியிருந்த பெரிய ஆலமரத்தை நோக்கினாள். இலைகளை விட பழங்கள்
சிவப்பு நிறத்தில் கொத்துக்கொத்தாக தீப்பற்றி எரிவது போல அதிகமாகக் காய்த்திருந்தன.
அவள் கவிதைப் புத்தகம் வாங்குவதற்காக பேராசிரியை சௌந்திராவைச் சந்திக்கச் சென்றபோது,
அவருடன் பேசிக்கொண்டிருந்த மற்றொரு பேராசிரியையின் கோபத்தில் காய்ந்த முகம் கூட இப்படித்தான்
தெரிந்தது. எவ்வளவு தூரம் கொதித்துப்போய்ப் பேசிக்கொண்டிருந்தார் அவர்!
“என்ன யோசனை தமிழ்?”
“இன்னைக்கு புக்ஸ் வாங்கப் போனப்ப, வேற ஏதோ காலேஜ் ப்ரொஃபஸர், பேரு ஃப்ளோரா
பிலிப்புன்னு நெனைக்கிறேன்... கோபத்தில சத்தம் போட்டுட்டிருந்தாங்க.”
“சௌந்திரா மேடத்தையா?” ஒரே நேரத்தில் சங்கவையும் ஈஸ்வரியும் ஆச்சரியமாகக் கேட்டார்கள்.
“இல்ல” என்ற தமிழ்ச்செல்வி, அந்த நிகழ்ச்சியை இருவரிடமும் விரிவாகக் கூறினாள்.
தமிழ்ச்செல்வி ஆங்கிலத் துறையை அணுகியபோது வெளியில் பெண் குரல் ஒன்று உரக்கக்
கேட்டது. அதில் ரௌத்திரம் மேலிட்டிருந்தது. வாசல் வரை சென்றவள், உள்ளே போகலாமா வேண்டாமா
எனத் தயங்கியபடியே உள்ளே எட்டிப் பார்த்தாள். பத்திரகாளி போல் நின்றிருந்த அந்தப் பெண்ணிடம்,
“அவரப்பத்தித்தான் தெரியுமே, விட்டுட்டுப் போங்க ஃப்ளோரா.” என்று சமாதானமாய் பேசிக்கொண்டிருந்தார்
சௌந்திரா.
“நீங்கென்ன அந்தாளுக்கு அவரு இவருன்னு மரியாத கொடுத்துகிட்டு. அவனெல்லாம் மனுஷனே
கெடையாது.” அவர் மேலும் குரல் உயர்த்தினார்.
“உங்க மேலயும், உங்க பையன் மேலயும் போதையில காரை ஏத்த முயற்சி பண்ணார்னு மேனேஜ்மென்ட்ல
சொன்னீங்களா?”
“எழுதியே கொடுத்தேனே சௌந்திரா.”
“நடவடிக்கை எடுக்கிறதா சொன்னாங்களா?”
“கார ஏத்த முயற்சிதான பண்ணாரு. உங்களுக்கோ உங்க பையனுக்கோ எதுவும் ஆகலயே...
அப்படீன்னு அலட்சியமா சொல்றாங்க. அப்புறம் எனக்குக் கோபம் வராம இருக்குமா?”
“வாஸ்தவந்தான் ஃப்ளோரா. இதெல்லாம் இப்பத்தான் நடக்குதா? ரொம்ப வருஷமாப் பாத்துட்டுதான
இருக்கோம். ஆம்பளைங்களோட வேல செய்ய வந்தா இதெல்லாம் சகிச்சிகிட்டுதான் போக வேண்டியிருக்கு...”
சொல்லிவிட்டு வாசல் பக்கம் திரும்பிய சௌந்திரா, தமிழ்ச்செல்வியைப் பார்த்ததும் அப்புறம்
பேசலாம் என மெல்லச் சொல்லிவிட்டு இவளை உள்ளே வரச் சொன்னார். ஃப்ளோராவும் கூட முகத்தை
மாற்றிக்கொண்டு இவளைப் பார்த்துப் புன்னகைக்க முயற்சி செய்தார்.
“கிராமத்திலேர்ந்து வந்திருக்கா. ஆனாலும் நல்ல ஆங்கிலப் புலமை இருக்கு, ஆர்வமும்
இருக்கு.” என்று அவளைப் பற்றி உயர்வாகச் சொன்ன சௌந்திரா, “இவங்க ஃப்ளோரா பிலிப். வேற
காலேஜ்ல இங்கிலீஷ் டிபார்ட்மென்ட்ல ப்ரொஃபஸரா இருக்காங்க.” என்று அவரைத் தமிழ்ச்செல்விக்கு
அறிமுகப்படுத்தினார். அவளை அங்கிருந்த நாற்காலியில் அமருமாறு அவர் கூறியதும் மறுத்தவள்,
“நான் வேணும்னா நாளைக்கு வர்றேன் மேடம்” என்றாள் பணிவுடன். எழுந்து தன் புத்தக அலமாரியிலிருந்து
அவள் கேட்ட புத்தகங்களை எடுத்துக் கொடுத்த சௌந்திரா, “வாசிச்சிட்டு எப்படி இருக்குன்னு
சொல்லு.” என்றார். எட்ட நின்று புத்தகங்களைப் பார்த்த ஃப்ளோரா பிலிப், சற்று பிரமிப்புடன்
அவளைப் பார்த்து புன்னகைத்தார். அதில் நட்பும் கனிவும் சேர்ந்து தெரிந்தது. அவள் வெளியில்
வந்ததும், மீண்டும் அந்த ஃப்ளோரா பிலிப்பின் கோப மழை இடியுடன் கொட்டத் தொடங்கியிருந்தது.
தமிழ்ச்செல்வி சொன்னதைக் கேட்டதும், சிறிது நேரம் சங்கவையும் ஈஸ்வரியும் எதுவும்
பேசாமலிருந்தார்கள். பிறகு, “இதே மாதிரி பிரச்சனைகளைப் பத்தி நானும் கேள்விப் பட்டிருக்கேன்.
இந்த லட்சணத்துல எல்லாரும் ஃபெமினிஸம், விமன் ஸ்டடீசுன்னு என்னென்னவோ படிக்கிறாங்க,
பேசுறாங்க. என்ன பிரயோஜனம்” என்றாள் ஈஸ்வரி, சலிப்புடன்.
“அங்கதான் தப்பு பண்றாங்க. பெண்ணியம்கிறது வாழ்க்கையோட பிரிக்க முடியாத ஒரு
பகுதி. அது பாடம் கெடையாது. அப்படி நெனைக்கிறதுனாலதான் இந்த மாதிரி பிரச்சனைகள் வருது.
பெண்கள மதிக்கிறதும், அவங்க உரிமைகளப் பேணுறதும் சின்ன வயசுல இருந்தே தாய்ப் பாலோட
சேர்ந்து ஊட்டப்பட வேண்டியது. அப்பல்லாம் ஆம்பளச் சிங்கம் பொம்பளக் கோழின்னு வளர்த்துட்டு
திடீர்னு ஃபெமினிஸம்னு பாடம் நடத்த ஆரம்பிச்சா எவன்தான் ஏத்துக்குவான்?” என்றாள் சங்கவை.
பிறகு அவளே தொடர்ந்து “இந்தமாதிரி ஆம்பிளைங்கள எல்லாம் சும்மா விடக் கூடாது.” என்று
தீவிரமாய்ச் சொன்னாள். தமிழ்ச்செல்வியும் ஈஸ்வரியும் ஆமோதிப்பதுபோல் தலையசைத்தார்கள்.
“அந்த ஃப்ளோரா பிலிப் எந்த காலேஜ்ல ப்ரொஃபஸரா இருக்கிறாங்கன்னு தெரியலையா?” வினவினாள்
சங்கவை.
“தெரியல, நானும் விசாரிக்கல.”
சற்று நேரம் அமைதியாக இருந்த சங்கவை, ஈஸ்வரியின் பக்கம் திரும்பி, உங்கக்கா
பி.எச்டி. பண்ற காலேஜ்ல இந்த மாதிரியெல்லாம் நடக்குதா? பெண்கள் பத்திரமா இருக்காங்களா?”
எனக் கேட்டாள்.
“அக்கா அப்படி எதுவும் இதுவரைக்கும் சொல்லல.” என்றாள் ஈஸ்வரி.
வழியெங்கும் விழுந்துகிடந்த சரக்கொன்றை மலர்களின்மேல் பாதங்கள் படாமல் மூவரும்
ஒதுங்கி விடுதியை நோக்கி நடந்தார்கள்.
வேதியியல் துறையைக் கடக்கும்போது அழுகிய முட்டையின் துர்நாற்றம் வீசியது. துப்பட்டாவை
எடுத்து முகத்தை மூடிக்கொண்ட ஈஸ்வரியை பார்த்து, “ஒனக்கு கெமிஸ்ட்ரி ஒரு அலைடு பேப்பர்
தான?” என்று கேட்டாள் சங்கவை.
“ஆமாம் அந்தக் கருமம் பி.எஸ்சி. ஃபர்ஸ்ட் இயர்லயே முடிஞ்சுபோச்சு.”
“அப்ப இதே கெமிஸ்ட்ரி லேபுக்கு நீ வந்திருப்ப தான?”
சங்கவை என்ன கேட்க வருகிறார்கள் என்பது ஈஸ்வரிக்குப் புரிந்து போனது.
“சங்கு, இந்த மடக்கி, மடக்கி கேள்வி கேக்குற வேலையெல்லாம் வேண்டாம். நேராவே
கேளு. அப்ப மட்டும் எப்படி இந்த லேபுக்கு வந்து மணிக் கணக்கா நின்னு ஆசிட் டெஸ்ட்டெல்லாம்
பண்ணுனேன்னுதான கேட்க வர்ற?”
“அட புரிஞ்சுக்கிட்டியே! கற்பூர புத்தி ஈஷு ஒனக்கு.”
“ஒனக்குக் கழுதை புத்தியா?”
“ஆமா... ஒதைக்கிற கழுதை புத்தி.”
இதுவரை பேசாமல் வந்த தமிழ்ச்செல்வி சிரித்துவிட்டாள்.
“நான் ஒத வாங்குறதுல தமிழுக்கு எவ்ளோ சந்தோஷம் பாரு!” என்ற ஈஸ்வரி, “மொதல் செமஸ்டர்ல
படாத பாடு பட்டுட்டேன். வாரத்தில மூணு நாளு இந்த கெமிஸ்ட்ரி ப்ளாக்குக்கு வர்றப்பெல்லாம்
கொடல பொறட்டிக்கிட்டு வரும். பள்ளிக்கூடத்திலயுந்தான் கெமிஸ்ட்ரி படிக்கவேண்டியிருந்தது.
ஆனா அங்க இவ்வளவு கஷ்டப்படல. டீச்சர் தெரிஞ்சவங்கதான்.”
“ஓ கத அப்படிப் போவுதா?”
“சங்கு நீ நெனைக்கிறாப்ல இல்ல.”
“நான் என்ன நெனைக்கிறேன்னு ஒனக்கு எப்படித் தெரியும்?”
“ஆரம்பிச்சிட்டியா ஒன்னோட விதண்டா வாதத்தை? அவங்க எனக்கு மெனக்கெட்டு எதையும்
செய்யல. சில ஆசிட் ஸ்மெல் எனக்கு அலர்ஜியா இருக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டு, அனுசரனையா
இருந்தாங்க. எனக்கு மட்டுமில்ல. எல்லா ஸ்டூடென்சுக்குமே உதவி செய்றவங்க அந்த டீச்சர்.”
“அதப்போல உதவி செய்றதுக்கு இங்க யாரும் பேராசிரியர் கெடைக்கலையா?”
“இல்ல. இங்க இருக்கிறதெல்லாம் சிடுமூஞ்சு சிங்காரங்களும் சிங்காரிகளும். ஆனா,
லேப்ல உதவியாளரா இருக்கிற தாஸ் அண்ணா நெறைய முறை உதவி செஞ்சிருக்காரு.”
“யாரு தாஸ் அண்ணா புதுசா?”
“எல்லாம் பழசுதான். நாம காலேஜ்ல யூ.ஜி. ஃபர்ஸ்ட் இயர் சேந்தப்ப ஃபீஸ் வாங்குற
இடத்துல இருந்தாரு. ஒரு மாசத்துக்கப்புறம் லேபுக்கு மாத்திட்டாங்க.”
“கல்லூரி அலுவலகத்தில கனகராஜ் சார் சீட்டுக்குப் பக்கத்தில இருந்தாரே. அவர்தானே?
தலையில கூட தேங்கா சிரட்டைய கமத்தி வெச்சாப்ல நடு மண்டையில சொட்டை இருக்கும்.” என்றாள்
தமிழ்ச்செல்வி.
ஈஸ்வரியும் சங்கவையும் சிரித்துவிட்டார்கள்.
“இப்படியெல்லாம் எப்படித்தான் ஒன்னால உவமை சொல்ல முடியுதோ? தெரியல தமிழ். பேசாம
ஒனக்கு உவமைக் கடல்னு பேர் வச்சிடலாம்.” என்றாள் ஈஸ்வரி.
“ஒனக்கு நான் அறிவுக் கடல்னு பேர் வைக்கிறேன்.” என்ற சங்கவை, “எனக்கு கனகராஜ்
சாரை தெரியும். நல்ல மனுஷன். சதா காலேஜ கட்டிக்கிட்டு அழுறாரு. குடும்பத்தக் கவனிக்க
நேரம் இருக்குமான்னு ப்ரொஃபசர்ஸ் பேசுறத கேட்டிருக்கேன். ஞாயிற்றுகிழமைகள்ல கூட தொண்டு
நிறுவனம், முதியோர் இல்லம்னு எங்கயாவது போய் உதவி செஞ்சிட்டிருப்பாராம்...”
“ஆங்... கரெக்ட். தாஸ் அண்ணா, அப்புறம் எங்க பாட்டெனி லேப்ல இருக்கிற வில்சன்
அண்ணாலாம் இதுல கூட்டாளிகள்” என்றாள் ஈஸ்வரி.
“கூட்டாளிகளா...?”
“ஐயோ சங்கு, வார்த்தை, வார்த்தையா பிடிச்சிக்கிட்டு கேள்வி மேல கேள்வி கேக்குறியே.
அந்த நெட்டக் கொக்கு எபிதான் ஒனக்கு லாய்க்கு. மூணு பேரும் சேந்து நெறைய நல்ல காரியம்
செய்வாங்கன்னுதான் சொன்னேன்.”
“ஓ!”
“என்ன ஓ? அடுத்த மாசம் நம்ம ஹாஸ்டல்ல இருந்து செட்டியார் அகரம்னு ஒரு எடத்துக்குப்
போறோம்லியா? அங்கதான் தாஸ் அண்ணா வீடு இருக்கு.” என்ற ஈஷு “பதிலும் விளக்கமும் சொல்லிச்
சொல்லி வாயெல்லாம் வலிக்குது.” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
தன் கைப்பையைத் திறந்த தமிழ்ச்செல்வி, சாக்லேட் ஒன்றை எடுத்து ஈஸ்வரியிடம் கொடுத்தாள்.
கூடவே தண்ணீர் பாட்டிலையும் நீட்டினாள். தண்ணீரை அவசரமாகப் பருகியதில் புரை ஏறியது.
அவள் தலையில் தட்டிய தமிழ், “எல்லாத்துலயும் ஒனக்கு அவசரந்தான் ஈஷு.” என்றாள்.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத ஈஸ்வரி, சாக்லேட்டை அப்படியும் இப்படியுமாகத்
திருப்பிப் பார்த்துவிட்டு, “வெளிநாட்டு சாக்லேட். அன்னைக்கு எபி கொண்டுவந்து கொடுத்ததுதான?
ஐயையோ சங்கு நீ எனக்குத் தந்தத மேஜை மேலயே வச்சுட்டேன். எலி எடுத்துட்டுப் போயிருக்கும்.”
என்றாள்.
“இல்ல நான் பத்திரமா எடுத்து வச்சிருக்கேன்” என்றாள் தமிழ். எதிர்பாராத விதமாக
தமிழைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள் ஈஸ்வரி. சிரித்தபடியே தமிழ்ச்செல்வி
தன்னை விடுவித்துக்கொள்ள, சம்பந்தமேயில்லாமல் கைக்குட்டையால் தன்னுடைய கன்னத்தை அழுந்தத்
துடைத்துக்கொண்டாள் சங்கவை. சாக்லேட் சாப்பிடும் ஆர்வத்திலிருந்த ஈஷு, அவளது அந்த விசித்திரமான
செய்கையைக் கவனிக்கவில்லை. ஆனால் அதைப் பார்த்துவிட்ட தமிழ், புரிந்துகொள்ள முடியாமல்
சங்கவையை வித்தியாசமாக நோக்கினாள்.
சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன. வணிகத்துறை கட்டிடத்தைக் கடக்கும்போது எதிரில்
மிக உயரமாக வந்த கறுப்பின இளைஞன் ஒருவன் ஈஸ்வரியைப் பார்த்ததும் புன்னகைத்தான். அதில்
இருவரும் பரிச்சயமானவர்கள் என்பதையும் மீறி நட்பின் அடையாளம் புலப்பட்டது. இவளைக் கண்டதும்
அவனது முகத்தில் விரிந்திருந்த சந்தோஷம் நாடும் மொழியும் இனமும் கடந்து நிறைந்திருந்தது.
ஈஸ்வரியிடம் “எப்படியிருக்கிறாய்?” என்று வினவியவன், பக்கத்திலிருந்த இருவரையும் பார்த்தான்.
அவனது பெயர் தாமஸ் என்று அறிமுகம் செய்த ஈஸ்வரி, சங்கவையையும், தமிழ்ச்செல்வியையும்
அவனிடம் தன் நெருங்கிய தோழிகள் என்று கூறினாள். “ஓ! நைஸ் டு மீட் யூ.” என்று வணக்கம்
சொல்வது போலத் தன் நெஞ்சில் கை வைத்துப் புன்னகைத்தவன், பிறகு பார்க்கலாம் எனச் சொல்லி
விட்டகன்றான்.
“இங்க பொம்பளைங்களுக்குப் பொதுவா ஆம்பளைங்க கை குடுக்கிறது பிடிக்காதுன்னு இப்படி
வணக்கம் சொல்ல நான் தான் அவனுக்குக் கற்றுக் கொடுத்தேன்” என்றாள் ஈஸ்வரி.
“தமிழ்ப் பண்பாடு சொல்லித் தர்ற அளவுக்கு நண்பர்களாயிருக்கீங்க. ஆனா எங்ககிட்ட
எதுவும் சொல்லவேயில்லையே?”
“தப்பா நெணச்சுக்காத சங்கு, சொல்லுற அளவுக்கு நெருக்கமான நண்பன் இல்ல. இவன்
சுந்தரமூர்த்தி கூட படிக்கிறான். அவன் மூலமாகத்தான் தெரியும்.”
“எந்த சுந்தரமூர்த்தி...?” இருவரும் ஒரே நேரத்தில் கேட்டதும்,
“சுந்தரமூர்த்தியைத் தெரியலையா?” என்றாள் ஈஸ்வரி ஆச்சரியத்துடன்.
இரு இன்னிக்கு செய்தித்தாள்ல தலைப்புச் செய்தியில் அவன் பெயர் வந்திருக்கான்னு
பார்த்துட்டுச் சொல்றேன்.”
“சங்கு, கிண்டல் போதும்; எம்.ஏ. எகனாமிக்ஸ் படிக்கிறான்ல... சில மூலிகைகளையும்
அதுல இருக்கிற பூச்சிகளையும் சேகரிக்குறதுக்காக நம்ம அக்கா மூணாறு பக்கம் பழங்குடி
மக்கள் வாழ்ற காட்டுக்குப் போனப்ப கூடவே இருந்து உதவி செஞ்சான்ல...”
“ஓ! சுந்தர்னு சொல்லு ஈஷு. திடீர்னு சுந்தரமூர்த்தின்னு நீளமா பெயர இழுத்ததும்
நினைவுக்கு வரல. என்ன பண்றது. பெயர்களச் சுருக்கிக் கூப்பிட்டுப் பழகிட்டு. அவங்களோட
உண்மையான முழுப் பெயர சொன்னா பிடிபட மாட்டேங்குது. பாரேன். எபி, எபின்னு கூப்பிட்டு,
யாராவது ஆபிரகாம்னு சொன்னா முழிக்க வேண்டியிருக்குது.” என்று சங்கவை சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
“அப்படியா தமிழ்?” என இடை மறித்தாள் ஈஸ்வரி. அவள் முகத்திலிருந்த குறும்பைக் கவனித்தும்
கவனிக்காதவளாக, “எனக்குக் கூட ஊர்ல கோவங்காட்டாளோட நிஜமான பேர் என்னன்னு இதுவரை தெரியாது.
ஊருக்குப் போகும்போது கேட்டுத் தெரிஞ்சுக்கிடணும்.” என சமாளித்தாள் தமிழ்ச்செல்வி.
எதையோ நினைத்துக்கொண்டவள் போல, “ஒனக்குத்தான் சரித்திரத்தில ஆர்வம் ஜாஸ்தியாச்சே
சங்கு. இந்த தாமஸ் எந்த நாட்டுக்காரனா இருப்பான்னு யூகிக்க முடியுதா?” என்று கேட்டாள்
ஈஸ்வரி.
“அவன் முகத்தில சரித்திரம் பூகோளம்லாமா எழுதியிருக்கு? அவன் பூர்வீகத்த சொல்றதுக்கு?
கருப்பர் இனத்தச் சேர்ந்தவன்னு மட்டும் தெரியுது.” என்றாள் தமிழ்ச்செல்வி.
“காக்கா கருப்பு, வாத்து வெள்ளைன்னு எனக்குத் தெரியும்னு சொல்றாப்ல இருக்கு
தமிழ்...” என்று ஈஸ்வரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
“சுவாஸிலாந்து நாட்டைச் சேர்ந்தவன்.” என்றாள் பட்டென்று சங்கவை.
“எப்படிக் கண்டுபிடிச்ச சங்கு.” என்று பரபரத்தாள் ஈஸ்வரி.
சங்கவை பதில் சொல்லாமலிருக்க, தமிழ்ச்செல்வி அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“எப்படி தெரிஞ்சுக்கிட்ட சொல்லு” என்ற ஈஸ்வரி சங்கவையைப் பிடித்து உலுக்க,
“வழக்கம்போல ஒருநாள் தூக்கத்தில பிதற்றிட்டிருந்த ஈஷு. அப்ப சுவாஸிலாந்துல பூச்சிகள்
இருக்கா? என்னென்ன வகையான பூச்சிகள் இருக்குதுன்னு யார்கிட்டையோ கேள்வி கேக்குறாப்ல
பேசிட்டிருந்த.” என்றாள் சங்கவை. ஈஸ்வரி சற்று வெட்கப்பட்டாள். “அவன் சுவாஸிலாந்துன்னு
சொன்னத, சுவிட்ஸர்லாந்துன்னு நெனச்சுக்கிட்டு, ஆல்ப்ஸ் மலை அழகா இருக்குமா? பனிப் பிரதேசத்தில
பூச்சிகள் இருக்குமானெல்லாம் கேட்டுக்கிட்டிருந்தேன். அவன் திரு, திருன்னு முழிச்சுக்கிட்டிருந்தான்,
நம்ம தமிழ் சில நேரம் எங்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிற மாதிரி... பிறகு சுந்தரமூர்த்திதான்
அது சுவாஸிலாந்துன்னு புரிய வச்சான்.” என்ற ஈஸ்வரி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
ஆரம்பத்தில் தான் அவனிடம் அவ்வளவாகப் பேசவில்லையென்றும், அதில் துளி ஆர்வம்
கூட காட்டவில்லையென்றும் கூறினாள். திடீரென்று ஒரு நாள் அவன் தன்னிடம் நேரடியாகவே கருப்பர்கள்
என்றால் இந்தியர்களும் தள்ளிப்போய் விலகி நிற்கிறார்கள் என்றும் சுந்தரமூர்த்தி தவிர
சென்னையில் யாரும் தன்னிடம் நட்பு பாராட்டவில்லையென்றும் உடன் படிக்கும் எந்தப் பெண்ணும்
தன்னிடம் இயல்பாகப் பேசியதில்லை என்று கூறியதாகவும், அப்போது அவன் குரலிலிருந்த ஆற்றாமை
தன் மனதை மிகவும் பாதித்ததாகவும் அதன் பிறகே பார்க்கும்போதெல்லாம் அவனிடம் நன்றாகப்
பேசுவதாகவும் தெரிவித்தாள் ஈஸ்வரி. மேலும், “நம்மிலிருந்து வித்தியாசப்பட்டு நின்றால்,
அது உடலமைப்பிலோ, நிறத்திலோ, உணவுப் பழக்கத்திலோ, எதுவாக இருந்தாலும், விலக்கி வைத்துவிடுகிறோம்
இல்லையா என்றும் கேட்டாள். அவள் கேள்வியில் ஆழமான பொருள் இருப்பதாய் பட்டது சங்கவைக்கும்
தமிழுக்கும். சூழ்நிலை இறுக்கமாக இருப்பதை உணர்ந்த தமிழ், “ஆனாலும் கருப்பர்கள் ரொம்ப
உயரம்பா. அண்ணாந்து பார்க்கும்போதே பயமா இருக்கு.” என்றாள்.
சட்டென்று குறுக்கிட்ட ஈஸ்வரி, “எபி கூட நல்ல உயரம்தானே?” என்றாள்.
“அதனாலதான் உயரமான பொண்ணு தேடுறதா அவங்கம்மா சொல்லிட்டிருந்தாங்க.” இதற்கும்
ஈஸ்வரி ஏதோ பட்டென்று சொல்லிவிடுவாளோ என்று தமிழ்ச்செல்வி அஞ்சிய வேளையில், ஈஸ்வரியின்
கைபேசியில் அழைப்பு மணி ஒலித்ததால், நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
“அக்காதான் கூப்பிடுறா” என்று எடுத்துப் பேசியவள், “இப்பத்தான் வெளியில போய்ட்டிருக்கோம்.
மறுபடியும் காலேஜுக்குள்ள அதுவும் கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்டுக்குப் போகச் சொல்றியேக்கா?”
என்று சிணுங்கினாள். மறுமுனையில் அவள் அக்கா ஏதோ பேச, இரண்டு நிமிடங்களாக ‘ம்’ கொட்டிக்கொண்டிருந்தவள்,
‘சரி’ என்று தொடர்பைத் துண்டித்தாள்.
அவளது அக்கா கலைவாணி ஆய்வுப் படிப்பு மேற்கொள்ளும் கல்லூரியிலிருந்து வேதியியல்
துறைப் பேராசிரியை ஒருவர் தன் ஆய்வு மாணவர்கள் பூச்சியியல் துறைத் தலைவரிடம் ‘அனிமல்
எதிக்ஸ்’ பற்றிச் சில விளக்கங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ள வந்திருப்பதாகவும், அவர்களுக்கு
இந்தக் கல்லூரி புதிதென்பதால் குறிப்பிட்ட துறைக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லுமாறு
தன் அக்கா கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்த ஈஸ்வரி, “நீங்க ஹாஸ்டலுக்குப் போங்க. நான்
பாத்துக்குறேன்.” என்றாள்.
“பூச்சியியல் துறை பக்கத்திலதானே இருக்கு. நாங்களும் வர்றோம்.” என்றாள் சங்கவை.
இல்லை என்று மறுத்த ஈஸ்வரி, இது கல்லூரி வளாகத்திற்குள் தனியாக இயங்குகின்ற
ஆய்வு நிறுவனம் என்றும் அதன் இயக்குனராக இருப்பவர் கல்லூரியின் முன்னாள் முதல்வராக
இருந்தவர் என்றும் அவரது அந்தக் காலத்தைப் பொற்காலம் என்று கூறுவார்கள் எனவும் தெரிவித்தாள்.
பூச்சியியல் துறையில் உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகளில் அவரும் ஒருவர் எனக் கூறியதோடு,
சட்டென்று நினைத்துக்கொண்டவள் போல், “அக்கா சொல்லுச்சே. புங்கெண்ணெய், வேப்பெண்ணெய்
கலந்த பூச்சி விரட்டி மருந்து. அதக் கண்டுபிடிச்சது அவரும் அவருடைய ஆராய்ச்சி மாணவர்களும்தான்.
அந்த ஃபார்முலாவைதான் அக்கா எங்க கிராமத்திலயும் பக்கத்து கிராமங்கள்லயும் விவசாயிகளுக்குச்
சொல்லிக் கொடுத்திட்டிருக்காங்க.” எனக் கூறினாள். தன்னுடைய அக்காவைப் பற்றிப் பேசும்போதெல்லாம்
அவள் குரலில் வெளிப்படும் பெருமித உணர்வு இப்போதும் தெரிந்தது.
எந்த வேதியியல் துறையைக் கடக்கும்போது ஈஸ்வரி முகத்தை மூடிக்கொண்டாளோ, அதே வேதியியல்
துறைக்குள் இப்போது மூவரும் சென்றார்கள். “இரண்டாவது மாடி லேப்லதான் அந்த மேடம் காத்திருக்காங்களாம்.”
முதல் மாடிப் படியில் வேகமாக ஏறிய ஈஸ்வரி, இரண்டாவது மாடிப் படியில் ஏறும்போது சற்று
தாமதித்தாள். “இந்தப் படிகள் செங்குத்தா இருக்குது. நமக்கே கஷ்டம்னா, வயசான பேராசிரியர்களின்
பாடு எவ்வளவு திண்டாட்டம்” என்றாள் மூச்சு வாங்கியபடி. அதுலயும் ஃப்ரெஞ்சு மேடம் ரொம்பப்
பாவம். நான் மொத வருஷம் இந்த லேபுக்கு வரும்போது கவனிச்சிருக்கேன். இரண்டாவது மாடி
ஏறுறதுக்குள்ள அஞ்சு முறையாவது தண்ணி குடிச்சிருவாங்க.”
“யாரச் சொல்ற?” கேட்டாள் சங்கவை.
“அது ஏதோ வாயில நுழையாத ஒரு பேரு. வழ வழ கொழ கொழன்னு.”
“ஒனக்கு வாயில சொல்ல வரலேன்னா, வழ வழ கொழ கொழ பேரா?” என்ற சங்கவை, லூயிசத் சிங்கராயர்
என்று அவர்கள் பெயரைத் தெளிவாகச் சொன்னாள். சரோஜினி மேனனைச் சொல்றாளாக்கும்னு நான்
நெனச்சேன்” என்றாள் தமிழ்ச்செல்வி.
“அவங்களுக்குச் சின்ன வயசுதானே? நம்ம காலேஜுக்கு அவங்க வேலைக்கு வந்தே அதிகம்போனா
ரெண்டு மூணு வருஷம்தான இருக்கும்? ஆளு பாக்குறதுக்கு வேகவச்ச உருளைகிழங்குபோல கொஞ்சம்
உருண்டையா இருப்பாங்க. இல்லையா சங்கு? அவங்ககிட்ட நீ ஃப்ரெஞ்சு ஸ்பெஷலா கத்துக்க ஆரம்பிச்சதுல
இருந்து, நமக்கும் நெருங்கிய சிநேகிதியாயிட்டாங்க.” என்று சிரித்தாள் ஈஸ்வரி.
“ஆமா அலையன்ஸ் ஃப்ரான்செய்ஸ்ல படிச்சாலும் இவங்ககிட்ட நேரில சந்தேகத்தைக் கேட்டுத்
தெரிஞ்சுக்கிறது பயனுள்ளதாயிருக்கு ஈஷு.” என்றாள்.
“அவங்களுக்கு ஏதோ... ” என்று ஆரம்பித்த தமிழ்ச்செல்வி, பாதியிலேயே நிறுத்திவிட்டாள்.
“ஃப்ரெஞ்ச் பற்றிப் பேசத் தொடங்கிய தமிழ் ஏன் தடுமாறுது” என ஈஸ்வரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே;
ஒரு மாணவி வந்து, “விஜயா ராஜேந்திரன் மேடத்தைப் பாக்கத்தானே வந்திருக்கீங்க...? உங்களுக்காகத்தான்
காத்திட்டிருக்காங்க” என அழைத்துப் போனாள். பேராசிரியை கவிதாவுடன் பேசிக்கொண்டிருந்த
பேராசிரியை விஜயா ராஜேந்திரன் மிகவும் இளமையாகத் தெரிந்தார். கைகளிலும் கழுத்திலும்
அணிந்திருந்த நகைகளில் ஒளிவீசிய முத்துக்கள் அவர்கள் சிரித்தபோது பற்களில் பளிச்சென
மின்னின. “மஞ்சள் ஊற்றி அவிச்ச பனங்கிழங்கு போல அழகா இருக்காங்க என சங்கவை ஈஸ்வரிக்கும்
தமிழுக்கும் மட்டும் கேட்பதுபோல முணுமுணுத்தாள். சக மாணவியரிடம் பேசுவதுபோல கலகலப்பாகப்
பேசிய விஜயா, தன்னுடைய ஆய்வு மாணவியை அறிமுகப்படுத்திய பின், “ஊர்ல இப்ப பனங்கிழங்கு
சீசன். அம்மா குடுத்துவிட்டிருந்தாங்க. மஞ்சள் ஊத்தி அவிச்சிருக்கேன். இந்தாங்க” என்று
மூவரிடமும் கிழங்குகளை எடுத்து நீட்டியபோது அதிர்ந்த தமிழும் ஈஸ்வரியும் சங்கவையை ஏறிட்டுப்
பார்த்தார்கள். அவளோ இயல்பாக இருந்தாள். ஆளுக்கொரு கிழங்கை எடுத்துக்கொண்டதும், கவிதாவிடம்
விடைபெற்றுக்கொண்டு, ‘போகலாம்’ என நடக்கத் தொடங்கிய விஜயாவின் புயல் நடைக்கு ஈடு கொடுக்க
முடியாமல் ஏறக்குறைய ஓடினார்கள்.
தொண்ணூற்றாறு ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்தப் பெரிய கல்லூரியின் கிழக்கு மூலையிலிருந்த
பூச்சியியல் ஆய்வு நிறுவனத்துக்கு முதன் முறையாக
அப்போதுதான் தமிழ்ச்செல்வியும் சங்கவையும் வந்திருந்தார்கள். வழியிலேயே ஒவ்வொருவரும்
என்ன படிக்கிறார்கள் எனக் கேட்டுத் தெரிந்துகொண்ட விஜயா ராஜேந்திரன், மூவரும் இளங்கலை
இங்கேயே முடித்துவிட்டு முதுகலை முதலாமாண்டு படிப்பில் இருப்பதாக அறிந்ததும் “கையோட
இங்கயே பி.எச்டியையும் முடிச்சிருங்க.” என்றார் உற்சாகமூட்டும் குரலில்.
“நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு பி.எச்டி. முடிச்சீங்களா, இல்ல பி.எச்டி. முடிச்சிட்டு
கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா” எனத் திடீரென கேட்டாள் ஈஸ்வரி. சிமெண்ட் தரையில் சோளிகளை
சிதறவிட்டதுபோல சிரித்த விஜயா, “என்னோட கல்யாணமும் பி.எச்டி.யும் பிரிக்க முடியாதவைமா.”
என்றார். அந்த சுவாரஸ்யமான பல திருப்பங்கள் நிறைந்த திருமணமும் பி.எச்டி. பட்டமும்
இணைந்த கதை அவர் கண் முன் விரிந்தது. அப்போது திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் வேதியியல்
துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டிருந்தார் விஜயா. ஆய்வேட்டை
சமர்ப்பித்த பிறகே திருமணம் என உறுதியாக இருந்ததால் நிச்சயம் செய்த திருமணத்திற்காக
ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. மாப்பிள்ளையும் முழு மனதுடன் அதற்கு
இசைவு தெரிவித்திருந்தார். விஜயாவிடம் கேட்டுத் திருமண நாளை நிச்சயித்த பிறகும் ஆய்வேட்டை
சமர்ப்பிப்பதில் சில பல காரணங்களால் தடங்கல் ஏற்பட்டு நாள் கடந்துகொண்டே போனது. மறுநாள்
காலையில் முகூர்த்தம். முந்தின நாள் மாலை நான்கு மணி வரை கடைசி நேர தட்டச்சுப் பணி
நடந்துகொண்டிருந்தது. இரவு ஏழு மணிக்குப் பிறகு, தான் தங்கியிருந்த பெண்கள் விடுதிக்குள்
செல்ல முடியாது என்ற நிலையில் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தார் விஜயா. கூடவே தோழி
கவிதா உறுதுணையாக நின்றது பெரும் ஆறுதலாக இருந்தது. எல்லாவற்றையும் ஏழு மணிக்கு முன்
முடித்துவிட்டு, மறுநாள் ஆய்வேட்டை சமர்ப்பிக்குமாறு கவிதாவிடமே கொடுத்துவிட்டு விடுதிக்குச்
சென்று உடைமைகளைப் பாதி எடுத்தும் எடுக்காமலும் கிளம்பியபோது களைத்துப்போயிருந்தார்
விஜயா.
இடையே மறித்த ஈஸ்வரி, “அப்படீன்னா உங்க கல்யாண நாளும், பி.எச்டி. தீசிஸ் சப்மிட்
பண்ண நாளும் ஒரே நாளா?” என்று கேட்டாள்.
“ஆமா. ஒரே நாள்தான்.” சிரித்த விஜயா, தொடர்ந்து அந்தப் பரபரப்பான திருமண நாளை
விவரித்தார். திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலில் இருக்கும் தங்கள் வீட்டிற்கு
அவர்கள் வந்து சேர்ந்தபோது இரவு மணி பதினொன்றைக் கடந்திருந்தது. அடுத்தநாள் அதிகாலை
ஐந்து மணிக்கு முகூர்த்தம். ஆய்வேட்டை சமர்ப்பித்துவிட்டு வந்திருந்த மகளைத் தட்டிக்கொடுத்த
தந்தை, “போய் தூங்கும்மா. களைச்சுப் போயிருக்க.” என்று பெருமை கலந்த கனிவுடன் கூறியிருந்தார்.
கண்களில் தூக்கம் டன் கணக்கில் ஏறி அழுத்தியது. மறுநாள் முகூர்த்தத்திற்குக் கட்டவேண்டிய
பட்டுச் சேலையை எடுத்துப் பார்த்தபோதுதான் இன்னும் ஜாக்கெட் தைக்கவில்லை என்பது தெரியவந்தது.
“வெளியில எங்கயும் குடுக்க வேண்டாம். நானே வந்து சட்டைய தச்சிக்கிறேன்னு நீதான சொன்ன.
இப்ப என்ன செய்றது. நானும் மற்ற வேலைகள்ல அதை மறந்துட்டேன்.” கையைப் பிசைந்தார்கள்
அம்மா. செம்பு நிறைய குளிர்ந்த தண்ணீரை எடுத்து முகத்தில் அறைந்துகொண்ட விஜயா, மளமளவென்று
தன்னுடைய கல்யாண ஜாக்கெட்டைத் தைக்கத் துவங்கினாள். முடிக்கும்போது விடிகாலை மூன்று
மணியாகியிருந்தது. பிறகு எங்கே தூக்கம்? குளித்துவிட்டு மணவறையில் ஐந்து மணிக்குப்
போய் அமர்ந்தபோது, களைப்பு தெரியாமல் முகமெல்லாம் சிரிப்பு மலர்ந்திருக்க, பக்கத்தில்
வந்தமர்ந்த மணப்பெண்ணை கர்வத்துடன் பார்த்தார் மாப்பிள்ளை.
மூவரும் அவரை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். விஜயாவோ, “பெண்கள்
வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்மா” என்றார் சர்வசாதாரணமாக. “ஈஸ்வரியோட அக்கா கலைவாணியப்
பார்த்தா எனக்கு ஆச்சரியமா இருக்கும். எங்கப்பா காலேஜ்ல ப்ரொஃபஸரா இருந்தாரு. ஆனா ஒரு
விவசாயக்கு மகளா கிராமத்துல பிறந்து... இவ்ளோ தூரம் வளர்ந்திருக்கான்னா, அது பெரிய
விஷயம். அவ சீக்கிரமா டாக்டர் பட்டம் வாங்கி நிறைய நல்லது பண்ணணும்” என்று ஆசீர்வதித்தார்
முழு மனதுடன். ஆழ்மனதிலிருந்து பீரிட்டு எழுந்து கண்களில் கண்ணீராய் துளிர்த்த தன்
உணர்ச்சிகளை மறைக்க முயன்ற ஈஸ்வரி, “இப்படிக் குடுங்க மேடம். நான் தூக்கிட்டு வர்றேன்”
என்று விஜயாவின் கையிலிருந்த புத்தகங்களை வாங்கி தன் கையிலிருந்த புத்தகங்களோடு சேர்த்துக்கொண்டாள்.
எங்ககிட்டயும் குடு ஈஸ்வரி” என்று சுமையைப் பங்குபோட்டுக்கொண்டார்கள் சங்கவையும் தமிழும்.
பூச்சியியல் ஆய்வு இயக்குனர் மிகுந்த மரியாதையுடன் விஜயா ராஜேந்திரனை வரவேற்று
அமரச் செய்தார். ஈஸ்வரியைப் பார்த்ததும் முகம் மலர்ந்த அவர், “எப்படிம்மா இருக்க? அக்காவோட
ரிசர்ச்செல்லாம் எப்படிப் போய்ட்டிருக்கு” என அக்கறையுடன் விசாரித்தார். அவள் தலையசைத்துச்
சிரித்தாள். வழக்கமான குறும்புத்தனம் சிறிதும் தென்படாத சாந்த சொரூபியாக அவள் நிற்பதைக்
கண்டதும், சங்கவைக்குச் சிரிப்பு பொங்கியது. அதைக் கவனித்துவிட்ட ஈஸ்வரி, அவசர அவசரமாக
தன் இரு தோழிகளையும் அறிமுகம் செய்து வைத்தாள். அவர்களுடைய படிப்பு பற்றி விசாரித்த
அவர் எழுந்து பக்கவாட்டில் இருந்த புத்தக அலமாரியிலிருந்து ஆளுக்கொரு புத்தகங்களைக்
கொண்டு வந்து கொடுத்தார். ‘வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் பெற...’ என்ற தலைப்பை
வாய்விட்டுப் படித்த சங்கவை, அவரது முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அதில் சுடர்விட்டுப்
பிரகாசித்த அறிவோடு, தூய்மையான அன்பும் தோய்ந்திருந்தது. புத்தகத்தைக் கையில் வாங்கியதும்
தலைப்பை வாசித்துவிட்டு அதிலேயே ஆழ்ந்துபோயிருந்த தமிழ்ச்செல்வியின் தோள்களில் சங்கவை
தட்டியதும், மூவரும் புறப்படத் தயாரானார்கள்.
“நல்லது, பார்க்கலாம்.” என்று இயக்குனரும். “எப்பவும் இப்படி ஒற்றுமையா, ஒருத்தருக்கொருத்தர்
உதவியா, சந்தோஷமா இருங்கம்மா” என்று விஜயா ராஜேந்திரனும் விடைகொடுத்த பின் வெளியில்
வந்தவர்கள், பெரிய ஆய்வுக் கூடத்தில் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எலிகளையும்
முயல்களையும் பார்வையிட்டார்கள். அடுத்தடுத்த கூண்டுகளில் இலைகள் பரப்பப்பட்டிருக்க,
அதில் விடப்பட்டிருந்த விதவிதமான பூச்சிகள் இலைகளைக் கொஞ்ச கொஞ்சமாக அரித்துத் தின்றுகொண்டிருந்தன.
“ஒன்றின் அழிவில் தானே மற்றொன்றின் வாழ்க்கை இருக்கிறது. இது என்ன நியதியோ” என்று ஆயாசப்பட்டாள்
சங்கவை. மொத்தமாகப் பூச்சிகளைப் பார்த்ததும், தலைவனைக் கண்டதும் பரவசத்தில் ஆழ்ந்துபோன
சங்க இலக்கியத்துத் தலைவிபோல தன்னை மறந்து நின்றிருந்த ஈஸ்வரியை ஏறக்குறைய இழுத்துக்கொண்டு
வெளியில் வந்தார்கள். சிறிது தூரம் நடந்ததும், “ஏன் ஈஷு, உங்கக்கா இங்கயே பி.எச்டி.
பண்ணியிருக்கலாமே?” கேட்டாள் சங்கவை. சற்று நேரம் பதிலெதுவும் சொல்லாதிருந்த ஈஸ்வரி,
பிறகு நீண்ட பெருமூச்செறிந்தாள். “நீ சொல்றது சரிதான் சங்கு. இவ்வளவு பெரிய சயன்டிஸ்ட்
கிட்ட பிஎச்.டி. பண்றதே பெரிய சாதனை. மேலும் இங்க ஆராய்ச்சி செய்றவங்களுக்கெல்லாம்
தவறாம உதவித் தொகை வாங்கிக் குடுத்திடுறாரு டைரக்டர். இப்ப பாரு. அப்பா அம்மாவ தொல்ல
பண்ணக்கூடாதுன்னு அக்கா எல்.ஐ.சி. ஏஜென்ட் வேல பார்த்து, தன் படிப்பையும் கவனிச்சு,
எனக்கு ஃபீஸ் கட்டி, வீட்டுக்கும் கூட கஷ்டப்பட்டு அப்பப்ப பணம் அனுப்புறாங்க. போன
மாசம் கூட அக்கா அனுப்பின பணத்திலதான் வெத நெல்லு வாங்கியிருக்காங்க. பாவம் அக்கா.”
சொல்லிவிட்டு தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்ட ஈஸ்வரி, “இந்த டைரக்டர் ரொம்ப நல்லவருதான்.
ஆனா, தன்னோட நிறுவனத்தில பெண்கள ஆராய்ச்சிப் படிப்புக்கு சேத்துக்கிடறதில்லன்னு பிடிவாதமா
ஒரு கொள்கை வச்சிருக்காரு. அக்கா கூட எவ்ளோ கேட்டுப் பாத்துட்டா. முடியாதுன்னுட்டாரு.
மற்றபடி எந்த உதவியும் தயங்காம கேட்கச் சொல்லியிருக்காரு. தங்களோட லேபக் கூட பயன்படுத்திக்கிட
அனுமதி தந்திருக்காரு. அவரோட கொள்கைக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்.” என்றாள் ஈஸ்வரி.
“யாருக்குத் தெரியும்? ஏதோவொரு இங்லீஷ் டிபார்ட்மென்ட்ல இருக்கிறது போல இங்கயும்
மோசமான ஆம்பிளைங்க வேலை செய்யலாம். அதத் தெரிஞ்சுகிட்டு எதுக்கு பிரச்சனைனு இப்படி
ஒரு முடிவெடுத்திருக்கலாம்.” என்றாள் தமிழ்ச்செல்வி.
“ஈஷு ஒங்கக்காவுக்கு படிக்கிற இடத்தில இப்படி ஏதாவது பிரச்சனை இருக்கா?” சங்கவை
கேட்டதும் சற்று வியப்புடன் அவளைப் பார்த்தாள் ஈஸ்வரி. “இதே கேள்விய எங்கிட்ட ரெண்டாவது
முறையா கேக்குற சங்கவை. இப்படிக் கேக்குறதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கா?” என்றாள்.
“தெரியல. பேசிக்கொண்டே பாதி தூரம் வந்த பிறகுதான் கவனித்தார்கள். விஜயா ராஜேந்திரனின்
புத்தகங்களைத் திரும்பக் கொடுக்காமல் சேர்த்துக் கொண்டு வந்துவிட்டோம் என்பதை. தானே
சென்று அவரிடம் தந்துவிட்டு வருவதாக ஈஸ்வரி செல்ல, இருவரும் அங்கிருந்த புங்க மரத்தினடியில்
காத்திருந்தார்கள். அந்த மரம் கலைவாணி அக்காவைப் பெருமையுடன் நினைவுபடுத்தியது. ஈஸ்வரி
திரும்பி வந்ததும் விடுதியை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்கள். தங்களுடன் இனி பயணிக்கப்
போகும் ஒரு கதாபாத்திரத்தையும் தங்களுடன் எடுத்துச் செல்வதைத் தெரிந்துகொள்ளாமலேயே!
/அத்தியாயம் 7 முடிவு/
No comments:
Post a Comment