Tuesday, May 20, 2014

அத்தியாயம் - 1

ஒரே ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தாராம்.  அந்த ராஜா நல்லவரா இருந்ததினால நாட்டு மக்களெல்லாம் மகிழ்ச்சியா இருந்தாங்களாம்.  அவர் வல்லவராகவும், பெரிய வீரராகவும் இருந்ததனால மற்ற நாட்டு ராஜாக்கள் எல்லாரும் இவரிடம் அன்பும் நட்பும் பாராட்டினாங்களாம்.  மகாராணியம்மா பச்சை வயல்ல சிரிக்கிற சூரியகாந்திப்பூப் போல அழகா இருந்தாங்களாம்.  அதைவிட சிறப்பு என்ன தெரியுமா?  அவங்க ரொம்பவும் புத்திசாலியாகவும் இருந்தாங்களாம்.  ராஜாவுக்கு எப்பொழுதுமே நல்ல மதி ஆலோசனை சொல்லி வழிநடத்துவாங்களாம்.  அதனால ராஜாங்கம் நடத்துவது ராஜாவுக்கு சுலபமாகவும் சந்தோஷமாகவும் இருந்ததாம்.  ஆனால் ராஜா ராணி ரெண்டு பேருக்குமே இதயத்துல இரும்பைத் தூக்கி நிறுத்தின மாதிரி ஒரு கவலை இருந்ததாம்.  அவங்களுக்குக் கேட்காமலேயே எல்லா வரத்தையும் வாரிக் கொடுத்த கடவுள் அன்றாடம் வேண்டியும் குழந்தைச் செல்வத்தை அருளவில்லையே என்ற கவலைதான் அது!  ராஜாவுடைய ஆட்சியில எல்லாருக்கும் எல்லாமும் கிடைச்சதால கொண்டாட்டமா இருந்த குடிமக்கள் வாழ்க்கையில கூட இது பெரிய குறையா இருந்ததாம்.  அந்தச் சமயத்தில மந்திரி ஒரு யோசனை சொன்னாராம்!  என்ன தெரியுமா அது?
நாட்டுக்கு வெளியில ஏறக்குறைய நூற்றுப்பத்து கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த காடு ஒன்று உள்ளது.  மன்னர் கூட அந்தக் காட்டுப் பக்கம் வேட்டையாடவோ, ரம்மியமாகப் பொழுதைக் கழிக்கவோ சென்றதில்லை.  அந்தக் காட்டின் கிழக்கு மூலையில், குள்ள உருவில் முனிவர் ஒருவர் பல ஆண்டுகள் தவம் செய்து கொண்டிருந்தார்.  அவரைச் சந்தித்து ஆசி பெற்றால் ராஜா ராணியுடைய மக்கள் செல்வம் இல்லாத குறை தீரும் என்று மந்திரியார் யோசனை கூறினார்.  ராஜா உடனே அந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை.  ஏனென்றால் அந்தக் காட்டுக்குள் அதுவரை யாரும் சென்றதில்லை.  மர்மங்களின் மௌன வெளியாகத் தோன்றும் அந்தக் காட்டுக்குள் மகாராணியையும் அழைத்துக்கொண்டு எப்படிச் செல்வது?  அங்கு பயங்கரமான அபாயங்களை எதிர்கொள்ள வேண்டிவரலாம்!  மந்திரியார் சொல்வதைப் பார்த்தால் காட்டுக்குள் தேரைச் செலுத்துவது கடினமானதாக இருக்கலாம்!
தான் நடந்துசெல்ல முயன்றாலும், திசை தெரியாத, உள்ளுக்குள் என்னென்ன இருக்கின்றன என்று விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிய பாதையில் ராணியை எப்படி அழைத்துச் செல்வது?
“ஏன் முடியாது? நான் பெண் என்பதாலா?”
“இல்லை; இல்லை; உன் மேலுள்ள அன்புதான் என்னைத் தயங்கச் செய்கிறது!”
“அன்பினால் என்னை பலவீனப்படுத்துகிறீர்களா?  தேவைப்பட்டால் உங்களையும் சேர்த்துத் தூக்கிக் கொண்டு என்னால் போகமுடியும்!”  ராணியின் சிரிப்பிலிருந்த தெளிவு ராஜாவை மேலும் குழம்பச் செய்திருக்கவேண்டும்.  அவரது குழப்பத்தையும் தயக்கத்தையும் உணர்ந்த ராணி அவருக்கு நம்பிக்கையைக் கொடுப்பது போலப் பேசினார்கள்.  ‘வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களில் அதுவரை தெரிந்து கொள்ளாத புதிய விஷயங்களை, ஏன் புதிரான விஷயங்களைக் கூட எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  அதற்காக அடுத்த அடியை எடுத்து வைத்து நடக்காமல், நிகழ்காலத்தைப் பசையாக ஒட்டவைத்துக்கொண்டு  இறந்த காலத்திலேயே அழுந்திவிடுகிறோமா? இல்லையே!  எதிர்காலத்து ஆச்சரியங்களை, அவை மகிழ்ச்சியானதாகவோ, துன்பமானதாகவோ எப்படி இருந்தாலும் எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்துக் கொண்டுதானே இருக்கிறோம்? ‘கடவுள்’ என்று நாம் பெயரிட்டிருக்கும் பெரிய சக்தி, நம்மில் பிறப்பிலிருந்தே உடன் வரும் அந்த மகாசக்தி, போதும்’ என்று நிறுத்தும் வரை நாம் சுழல் வட்டமான தொடர் வட்டத்தை நிறுத்த முடியுமா?  ராணியின் அடுக்கடுக்கான கேள்விகள், தம்முடைய ஒரு கேள்விக்கான பதிலாக மட்டும் நின்றுவிடாது வாழ்வின் முடிச்சுக்களைக் கட்டவிழ்த்து, சூட்சுமங்களை விளக்கியது ராஜாவுக்குப் புரிந்தது.  ராணியின் அற்புத ஆற்றல்களில் இதுவும் ஒன்று.  அவரது கேள்விகளே பிறரது கேள்விகளுக்குப் பதிலாக அமைந்துவிடும்.
மகாராஜா, ராணியுடன், மந்திரியாரும் சில படை வீரர்களும் காட்டின் எல்லை வரை சென்றார்கள்.  அங்கு தம் தேரை நிறுத்தச் சொன்ன ராஜா, தாமும் ராணியும் மட்டும் காட்டுக்குள் செல்ல விரும்புவதாகவும், மற்றவர்கள் அங்கேயே இருக்கலாம் என்றும் கூறினார்.  இந்த ஏற்பாடு மந்திரியாருக்கு ஏற்புடையதாக இல்லை.  அவர்கள் இருவரையும் தனியாக அனுப்பிவிட்டு நிம்மதியாகக் காத்திருக்க முடியாது என்று ஆதங்கப்பட்டார்.
“எல்லோரும் எல்லா வேளைகளிலும் எல்லோருடனும் சேர்ந்து பயணம் செய்ய முடியாது மந்திரியாரே! கவலைப் படாதீர்கள் போய் வருகிறோம்.” என்று ராணியார் உறுதியாகக் கூறியதும் வேறு வழியின்றி மந்திரி தலையசைத்து ஏற்றுக் கொண்டார்.  காட்டுக்குள் முதல் மனிதக்காலடிகள் தங்களுடையதுதானோ எனும் அளவிற்கு ஏகாந்தத்தின் ஆழ்ந்த நிசப்தம் அச்சத்தைத் தருவதாக இருந்தது.
“குளிர்ந்த காற்று வீசுகிறது; ஆனால் மரங்களில் இலைகள் கூட அசைவின்றி வார்த்து வைத்த கற்சிலைகள் போல காட்சி தருகின்றனவே” என்று கேட்டார் ராஜா!
“சுற்றியிருப்பவை எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்; இலைகள் சிலைகளாக ஸ்தம்பித்து நிற்கலாம்.  திடீரென்று மரங்களின் கிளைகள் பேயாட்டம் போடலாம்!  நாம் ஏன் இவற்றையெல்லாம் பார்க்க வேண்டும்?  ஏன் கவனம் செலுத்த வேண்டும்?  கண்கள் செல்ல வேண்டிய பாதையில் மட்டுமே பதியட்டும் சிந்தனை, அடைய வேண்டிய இலக்கை மட்டுமே ஏந்திக் கொள்ளட்டும்” என்றார் ராணி.  அவள் கூறியது அவருக்கு மிகச் சரியென்று தோன்றியது.  அறிவில் சிறந்தவளாகவும், உறுதியில் குறையாதவளாகவும் புதையல்களைத் தம்முன் புதைத்துக் கொண்டு அமைதியாகத் தோற்றமளிக்கும் அலையற்ற ஆழ்கடல் போன்றவளாகவும் விளங்கும் அவள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஆச்சரியங்களின் அடையாளமாகத் தோன்றுவதாய் மனதுக்குள் எண்ணிக் கொண்டார் ராஜா.
“பெண்கள் தாம் ஆண்களை விட தீர்க்கமான அறிவுடையவர்கள்; எதையும் ஆழமாக யோசிப்பவர்கள்; உயிர் போகும் அபாயம் என்றாலும் நிதானத்தைத் தவறவிடாது சமயோசிதமாகச் செயல்படுபவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் ராஜா.
“காரணம் என்னவோ?” மிகச் சிறிய குறுகலான வழித்தடத்தில் ராஜாவுக்கு முன்னால் நடந்தபடி கேட்டாள் ராணி.
“வேறென்ன நிச்சயமாய் நீதான்!”
“உங்களுக்கு அதில் எந்த சங்கடமும் இல்லையா?  பொதுவாகப் பெண்களை அழகுப் பதுமைகளாக மட்டுமே பார்க்க விரும்பும் ஆண்கள் ஏனோ அவர்களுக்கு அறிவு உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதில்லை!  அது உண்மை என உணர்ந்தாலும் தங்கள் அசூயையால் அகம்பாவக் காலடியில் போட்டு மிதித்து விடுகிறார்கள்!” ராணியின் குரலில் அயர்ச்சி தெரிந்தது.
“எவனொருவன் தன்னை உயர்வாக மதிக்கிறானோ, தன் சுயத்தில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறானோ, அவன் தன், உடன் வரும் பெண் தனக்கு இணையானவள் என நம்புவான்; மதிப்புடன் நடத்துவான்!”
ராஜா இவ்வாறு சொன்னதும் ராணியின் சூரியகாந்தி முகத்தில் ஆயிரம் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறித்தது போல புன்னகை பிரகாசித்தது.
பேச்சுத் துணைக்காகப் பேசப்படும் சொற்களும் கூட உள்ளார்ந்த பொருளும் தத்துவ மேன்மையும் கொண்டதாக இருக்கும் போலும்! என எண்ணிக் கொண்டார் ராஜா.  பேச்சு திடீரென்று தடைபட்டது.  நடையும் நின்று போனது.  அடுத்த அடியை எடுத்து வைக்க முடியவில்லை.  ஒற்றை வழித்தடம் மாயமாகியிருந்தது.  மனசுக்குள் மண்டிக் கிடக்கும் இலக்கற்ற எண்ணங்கள் போல மார்பு வரை வளர்ந்திருந்த புற்கள் மூச்சுத் திணற வைத்தன.  கூடவே பெயர் தெரியாத, இதுவரை பார்த்திராத செடி கொடிகள்!
“என்ன செய்வது ராணி?”
“சற்றுப் பொறுங்கள்”
சிறிது நேரம் இமைகள் மூடிய கண்களுக்குள் உலகத்து வெளிச்சத்தையெல்லாம் உள்வாங்கி தியானிப்பதுபோல மௌனத்தில் ஆழ்ந்துவிட்டார் ராணி.  சற்று நேரத்தில் விழிகளைத் திறந்த போது செடிகள் விலகி, புற்கள் பூமிக்குள் புதைந்துபோய், பொன்னால் செதுக்கப்பட்டது போல தகதகவென்று ஒளிரும் பாதை விரிந்தது ராஜா நம்பமுடியாதவராய் திக்கு முக்காடிப் போய் ராணியை ஏறிட்டார்.
“மனதில் எண்ணும் எல்லாமே சாத்தியம்தான்!  தேவை நம்பிக்கை மட்டுமே.”
“அப்படியென்றால் குழந்தைச் செல்வமும் கிடைக்கப் பெறுவோம்!”
“அதிலென்ன சந்தேகம்?”
நீண்ட பாதைதான்!  பயணத்தின் தூரமும் அதிகம்தான்!  ஆனாலும் களைப்பு தோன்றவில்லை.  இலக்கை எய்துவதில் உறுதியைக் காட்டும்போது, எரிமலையில் குளித்துச் செல்வதும் கூட இலகுவாகி விடுகிறது!
ஏறக்குறைய அடையாளம் சொல்லப்பட்ட இடத்திற்கு வந்துவிட்டார்கள்.  ஆனால் மேலும் ஒரு தடுமாற்றம்!  அந்த ஒற்றையடி தங்கப்பாதை நான்கு திசைகளில் பிரிந்து சென்றது.  இதில் எந்தத் திசையைத் தேர்ந்தெடுப்பது?
“உன்னுடைய உள்ளுணர்வு ஏதாவது சொல்கிறதா ராணி?”
“அதைத்தான் தெரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.”
திடீரென்று பதின்மூன்று அடி நீளத்தில் உடம்பு முழுக்க மஞ்சளை அரைத்துப்பூசிக் கொண்டது போல, பெரிய பாம்பு ஒன்று அவர்களை வழி மறித்தபடி நின்றது.  ஆனால் சீறவில்லை; சிரித்தது.  அதில் தெரிந்தது நட்பா, நயவஞ்சகமா எனப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.  அவர்களின் எண்ணவோட்டத்தைத் துல்லியமாக விளங்கிக் கொண்டது போல சப்தமாகச் சிரித்தது பாம்பு.
“நான் உங்களுக்கு உதவி செய்யவே வந்திருக்கிறேன்.”
“என்ன உதவி? எங்களுக்குப் பசிக்குமே என்று ஏதேனும் பழம் கொடுக்கப் போகிறாயா?  அதைச் சாப்பிட்டால் கடவுளர்களாகி விடுவோம் என்று கதை சொல்லப் போகிறாயா?”
“ராணியின் யோசனைகள் நியாயமானவைதான்; நீங்கள் என்னிடம் இவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதில்லை!”  இருவரும் வாய் திறவாமல் நிற்பதைப் பார்த்ததும் பாம்பு சற்றே சலித்துக் கொண்டது.
“ஒரு முறை சொல்லப்படும் கதைகள் ஏன் காலா காலத்துக்கும் அப்படியே நிலைத்து விடுகின்றன?  மனிதர்கள் தினம் தினம் தவறு செய்கிறார்கள்.  ஒரே தவறைச் செய்யமாட்டோம் எனச் சொல்லிவிட்டு, திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்.  அல்லது புதிய புதிய தவறுகளைப் புரிகிறார்கள்.  ஆனால் தவறு செய்பவர்களும், அந்தத் தவறால் பாதிக்கப்படுபவர்களும் அதை மறந்து விடுகிறார்கள்.  ஏன்?  காலப் போக்கில் உறவைக் கூட வளர்த்துக் கொள்கிறார்கள்.  அப்படியிருக்க எனக்கு மட்டும் இந்த ஒரவஞ்சனை ஏன்?”
“உன் விவாதங்களில் நியாயங்கள் இருக்கின்றன;  ஆனால் நிஜ சம்பவங்களைவிட, கற்பனையாகப் பின்னப்படும் கதைகளுக்கு வலு அதிகம்.”
“உங்கள் நியாயங்களையும், நியமங்களையும் நீங்கள் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதில் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.  நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டாலும், வெறுத்து ஒதுக்கினாலும் உங்களுக்கு உதவி செய்யவே வந்திருக்கிறேன்.  வாருங்கள் என்பின்னே, உங்களுக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன், முனிவர் தவம் செய்யும் இடத்திற்குப் போகும் பாதையை நான் அறிவேன்” என்றது பாம்பு.
பாம்பின் பின்னே செல்வதா? இல்லை தாங்களே ஏதோ ஒரு வழியைத் தேர்ந்து நடப்பதா? என்று ராஜாவும் ராணியும் தயங்கி நின்றார்கள்.  பாம்பு மீண்டும் பேசியது.
“உங்கள் வழி வழியான கட்டுக் கதைப்படி நான் கெட்டவனாகவே இருந்து விட்டுப் போகிறேன்.  உங்களைப் போன்ற நல்லவர்களாக வாழ முயற்சி செய்யும் தெளிவற்ற மனிதர்களைக் காட்டிலும் கெட்டவர்களுக்கு, அல்லது கெட்டவன் என்று பெயரெடுத்தவர்களுக்கு நல்லவர்கள் இருக்குமிடம் நன்றாகவே தெரியும்.  இதையேனும் ஏற்றுக் கொள்வீர்களா?”
பாம்புடைய இந்தப் பேச்சு, ராஜாவுக்குப் புதிராகவே இருந்தது.  ராணியோ புரிந்துகொண்டவள் போல “சரி, பாம்பாரே, நீர் முன்னே செல்லும், நாங்கள் தொடர்ந்து வருகிறோம்” என்று தீர்க்கமாகக் கூறினாள்.  அதன் பிறகு ராஜாவும் உற்சாகமாகப் பயணிக்கத் தொடங்கினார்.  பாம்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லையென்றாலும் சமாளித்துக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தார்கள்.
“பசிக்கிறதா? தாகமாகயிருக்கிறதா? களைப்பாக உணர்கிறீர்களா?” திடீரென்று கேட்ட பாம்பின் குரலில் உண்மையான பரிவு வெளிப்பட்டது.
“அப்படி எதுவும் இல்லை” என்றார் ராஜா.  ஆனால், அந்த அவசர மறுப்புக் குரலில் சோர்வு தட்டியது.  ராணியோ, “பெரிய இலட்சியத்தை நோக்கிச் செல்லும் போது இந்தச் சிறிய அசௌகரியங்களும் உடலின் பலவீனமும் நம்மை வெல்வதற்கு இடம் தரக்கூடாது, உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கும் எந்தக் காரியமும் வெற்றி பெறாது” என்றாள்.  பாம்பு அதை ஆமோதித்தது.  அவளுக்குத் தலைவணங்கியது.
“கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.  எதையும் சிந்திக்காமல் சற்று வேகமாக என் பின்னே நடக்க முயற்சி செய்யுங்கள்.  காற்றின் வேகத்தைப் பெறுவீர்கள்.  முனிவரைச் சென்றடையலாம்.” என்றது பாம்பு.
“கண்ணை மூடிக்கொண்டு எப்படி நடப்பது?”
ராஜாவின் கேள்வியிலிருந்த கேலியைக் கண்டு கொள்ளாதது போல, “புறக்கண்களை மூடிக்கொள்ளும் பொழுது ஆன்மாவின் அகக் கண்கள் திறந்து கொள்ளும்; அதன் பிரகாசத்தில் உங்கள் பயணம் எளிதாவதோடு வெற்றியும் பெறும்” என்றது பாம்பு.
“இதைத்தான் எங்கள் ஊரில் சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்கள்” என்றார் ராஜா.  ராணி வாய்விட்டுச் சிரித்தாள்.
“சரிதான், சாத்தானைக் கண்டு கொள்ள வேண்டாம், சாத்தான் ஓதும் வேதத்தைக் கடைபிடிக்கலாமே!”  பாம்பும் சிரித்தது.  ராஜாவும் ராணியும் விழிகளை மூடிக்கொண்டார்கள்.  முனிவர் முன்னால் வேகமாகச் சென்று, முடிந்தால் அடுத்தகணமே நிற்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டார்கள்.  உடம்பு இலகுவாவது போலத் தோன்றியது; காற்றில் மிதக்கும் பஞ்சு போல உண்ர்ந்தார்கள்.  சுவாசத்தில் புதிய ஆவி புகுந்தது போல மணம் கமழ்ந்ததை உள்வாங்கி அனுபவித்தார்கள்.  இந்தப் பரவசம் ஒரு சில கணங்கள் நீடித்தது.  இதற்கு மேல் நடக்க வேண்டாம் என்பதுபோல, கால்கள் தாமாகவே நின்றன.  கண்களைத் திறந்து பார்க்கச் சொல்லி ஆன்மாவின் குரல் கட்டளையிட்டது.  அப்படியே செய்தார்கள்.  எதிரில் பச்சைப் பசேலென்று ஆலமரம் வானத்துடன் கை குலுக்க விரும்புவது போல ஓங்கி வளர்ந்திருந்தது.  ஆனால் அதன் மையக் கிளைகளில் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது.
“பச்சை மரத்தில் நெருப்பா? எப்படிச் சாத்தியம்?”
இருவரும் சுற்றிலும் பார்த்தார்கள்.  பாம்பு அங்கு இல்லை!  அடுத்து என்ன என்று திகைத்திருக்கும்போதே, கையில் சிறிய கமண்டலத்துடன் குள்ள உருவிலிருந்த அந்த முனிவர் இவர்கள் முன் தோன்றினார்.  அவர் முகத்திலிருந்த தேஜஸ் இவர்கள் கண்களுக்குள் ஊடுருவி மின்னலென மனதுக்குள் இறங்கியது.  விசையில் பொருத்தப்பட்ட இயந்திரம் போல் மண்டியிட்டார்கள்.  எதுவும் பேசவில்லை.
“உங்களுக்கு என்ன வேண்டும்?”
முனிவரின் குரல் எங்கோ ஆகாயத்தின் ஒரு மூலையில் மழையை மடியில் கட்டிக் கொண்டிருக்கும் மேகத்துக்குள்ளிருந்து எழுவது போலக் கேட்டது.
“எதுவும் வேண்டாம்; இங்கேயே, இப்படியே இருந்தால் மகிழ்ச்சியாக இருப்போம் போல் தெரிகிறது?” என்றார் ராஜா.
“எதுவும் வேண்டாம் என்று சொல்வதற்காகவா இவ்வளவு சிரமப்பட்டு வந்தீர்கள்?”
“சிரமம் என்றுதான் எண்ணினோம் சுவாமி; ஆனால் வந்து சேர்ந்த பிறகு இந்தப் பொற்கணத்திற்காக மேற்கொள்ளப்படும் எதுவும் கஷ்டம் இல்லை என்றே தோன்றுகிறது” என்றார் ராணி.
அவர்கள் இருவரையும் எழுந்து கொள்ளச் செய்த முனிவர் ஆலமரத்தடியில் அமரச் செய்தார்.  கமண்டலத்திலிருந்த நீரை அவர்கள் உள்ளங்கையில் ஊற்றிப் பருகச் செய்தார்.  அதைப் பருகிய பின், இனி ஒருபோதும் தாகம் ஏற்படாது என்பது போன்ற நிறைவான உணர்வு ஏற்பட்டது.
பிறகு கமண்டலத்தை, ராணியின் கையில் கொடுத்த முனிவர், “இந்தக் கமண்டலத்துத் தீர்த்தத்திலிருந்து ஒரு வற்றாத ஜீவ நதி உங்கள் நாட்டில் உதயமாகும்” என்றார்.  முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் ராணி.  ராஜாவோ, முனிவரிடம் எதையோ கேட்க விரும்பி ஆனால் தயக்கமாய் அவரது முகத்தை ஏறிட்டார்.
“உங்கள் நாட்டில் ஏற்கனவே பல சிற்றாறுகள், நீரோடைகள், சுனைகள் இவையெல்லாம் நிறைந்து நீர்வளம் செழிப்புற்று இருக்கிறதே, பிறகும் ஏன் இந்தப் புதிய ஆறு என்றுதானே எண்ணுகிறாய் மன்னனே?” என்ற முனிவரின் கேள்விக்கு,
“இந்த நதி வேண்டாம் என்று நான் நினைக்கவில்லை சுவாமி” என்ற பதிலில் தடுமாறினார் ராஜா.
“உம்முடைய நாட்டு நீர் வளமும் மண் வளமும் எனக்கு நன்றாகத் தெரியும்.  அதிலும் உங்கள் நீர் நிலைகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர் எவ்வளவு சுவையானது என்பதும் எனக்குத் தெரியும்.”
“ஆமாம் சுவாமி, எங்கள் பறம்பிலிருக்கும் சுனைநீர் மார்கழி மாதத்துக் குளிர்ச்சி நிறைந்ததாகவும், பாலில் மயங்கிய தேன் போல இனிமையானதாகவும் இருக்கும்” என்றார் ராஜா.  இதைக் கூறும் பொழுது அவரது முகத்தில் மகிழ்ச்சியும் வார்த்தைகளில் கர்வமும் கூடி நிற்பதைக் கண்ட முனிவர் சிறு குழந்தையின் மழலையைக் கேட்டு நகைக்கும் முதியவர் போல நகைத்தார்.  பிறகு, “நீர் சொல்வதும் சரிதான்; சிறிய ஆறுகள், ஏரிகள் ஓடைகள், சுனை, அருவி, என்று எல்லாவற்றையும் இணைக்கும் பெரும் நதியாக உருவெடுக்கும் அந்தப் பேராறு எல்லாவற்றையும் சேர்க்க வேண்டிய இடத்திலும் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும்.  அதாவது பிறப்பிடத்திலேயே!”  அரசருக்கு அப்பொழுதும் எதுவும் விளங்கவில்லை!  ராணியின் முகத்தில் மந்தகாசப் புன்னகை விரிந்தது.
“நாங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?” 
இனி கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம். அதற்கு அவசியமுமில்லை என்று முடிவெடுத்து விட்டவள் போல ராணி முனிவரிடம் பணிவுடன் கேட்டாள்.
“இந்தக் கமண்டலத்தைப் பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள்.  உங்கள் நாட்டின் பொன்மலை உச்சியில் இருக்கும் ஒரு குகைக்குள் சுரங்கத்திற்காக வெட்டப்பட்டது போல இருக்கும் ஒரு சிறிய வட்டக் குழியில் இதிலிருக்கும் நீரைக் கவிழ்த்து விடுங்கள்.  அந்தப் பொங்குமாக் கடலிலிருந்து அருவி ஒன்று பெருக்கெடுத்து, பிறகு ஆறாகப் பிரவாகமெடுத்து வரும்.  அது உங்கள் நாடு முழுக்கச் செழிக்கச் செய்யும்.”
“நல்லது சுவாமி; எங்கள் குழந்தை வரம்...?”  ராஜா கடைசிச் சொல்லை விழுங்கியவாறு கேட்டார்.  ராணியோ விரும்பியது நிறைவேறப் போகிறது என்ற நம்பிக்கையில் வேரூன்றி நின்றிருந்தாள்.  முனிவர் ராஜாவைக் கருணையுடன் நோக்கினார்.  அவரது புன்னகையில் ஆயிரம் கிரணங்களின் பிரகாசம் தெரிந்தது.  அதோடு விளங்கிக் கொள்ள இயலாத மறைபொருளின் பூரணத்துவம் துலங்கியது.  சுவாமி கண்களைச் சற்றே மூடிக்கொண்டார்.  பிறகு,
“ஆறு பிறந்த பதின்மூன்றாவது மாதத்தில் நீர் வற்றிக் காய்ந்து போகும்” என்றார்.
ராஜாவும் ராணியும் திகைத்தார்கள்.
“இது எப்படிச் சாத்தியமாகும் சுவாமி?  வற்றாத ஜீவ நதி என்றுதானே சொன்னீர்கள்?” ராணி சற்றே படபடப்புடன் கேட்டாள்.
“ஆமாம், அதில் என்ன சந்தேகம்? வற்றாத ஜீவநதிதான்!  கடவுள் கூட சில வேளைகளில் உடன் இல்லாதது போலத் தோன்றுவதில்லையா? அந்தத் தற்காலிக பிரம்மை போன்றுதான் இதுவும்!  பதின்மூன்றாவது மாதத்தில், நீர் இல்லாது வறண்டு போன பதின்மூன்றவாது நாளில் ஆற்றங்கரைக்குச் சென்று சிறிய ஊற்றுக் கண்ணை உருவாக்குங்கள்.  அதிலிருந்து ஒரு மண் குவளை நிறைய தண்ணீர் எடுத்து ஆற்றில் ஊற்றுங்கள்.  இதை நீங்கள் கருக்கல்லில் ஆள் அரவமற்ற வேளையில் செய்ய வேண்டும்.  துணைக்கு யாரையும் அழைத்துச் செல்லக் கூடாது.  பிறகு அங்கேயே அமர்ந்து இரவு முழுக்க இறைவனை எண்ணி, தியானம் செய்யுங்கள்.  காலையில் உங்கள் வரம் உங்கள் கையில் இருக்கும்!” என்றார்.
“அப்படியே ஆகட்டும் சுவாமி!” முழு மனதுடன் கூறிய ராணி தரையில் முகம் குப்புற விழுந்து முனிவரை வணங்கினாள்.  ராஜாவும் அவ்வாறே செய்தார்.  முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பி நடக்கத் தொடங்கினார்கள் ஒரு மைல் தூரம் நடந்திருப்பார்கள்.  மீண்டும் அந்த மஞ்சள் பாம்பு எதிர்ப்படுமா? வழிகாட்டுமா? என்று சிந்தித்தாள் ராணி.
‘இப்போது பாதை தெரிகிறது; பாம்பின் துணை தேவையில்லை, ஆனாலும் அந்தப் பாம்பு வந்தால் நன்றாகயிருக்குமோ’ என்று எண்ணமிட்டது ராணியின் மனது.  அடுத்த கணம் ‘உஸ் உஸ்’ எனப் பெரும் சப்தத்துடன் எதிரில் வந்து நின்றது பாம்பு.  ஆனால் முற்றிலும் நிறம் மாறியிருந்தது.  முன்பு பொன்னிறத்தில் தகதகவென ஜொலித்த பாம்பு இப்போது இருட்டின் உடன்பிறப்பு போல கருகருவெனக் காட்சியளித்தது.  ராஜாவும் ராணியும் அதே பாம்புதானா? எனத் திகைத்து நின்றார்கள்.  அவர்கள் மனதைப் படித்துவிட்டதுபோல, “அதே பழைய நண்பன்தான்; நிறம் மாறியதால் தடுமாறிவிட்டீர்களா?  இந்தக் கறுப்புதான் என் உண்மை நிறம்” என்றது பாம்பு பெருமையாக!
“பிறகு ஏன் முன்பு மஞ்சள் நிறத்தில் வந்தாய்?” ராஜா கேட்டார்.
“பொதுவாக யாருக்கும் கறுப்பு பிடிப்பதில்லை; கறுப்பு என்றாலே முகம் சுளித்து தீண்டத்தகாததைக் கண்டுவிட்டது போல விலகி ஓடுகிறார்கள்.  நீங்களும் அதே மனிதக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தானே!  விதிவிலக்கல்லவே?  அதனால்தான் நிறமாற்றம்” என்றது பாம்பு.
“அப்படியானால் நீ வெள்ளை நிறத்தில் அல்லவா வந்திருக்க வேண்டும்?  அதுதானே கருமையின் எதிர்ப்பதம்; மேலும் தூய்மையைக் குறிப்பதும் வெண்மைதானே?”  ராணியின் கேள்வியிலிருந்த வெகுளித்தனத்தைக் கவனித்த பாம்பு சிரித்தது.
“வெண்மையை, தூய்மையின் அடையாளமாக நீங்கள் கொண்டாடுகிறீர்கள். அடையாளங்கள் அனைத்தும் உண்மையாவதில்லை.”
ராஜாவும் ராணியும் புரியாமல் பார்த்தார்கள்.  எதுவும் கேட்காமல் அமைதியாய் நின்றார்கள்.
“நீண்ட வெள்ளை ஆடை அணிந்த பலர் பொய்மையும் வஞ்சகமும் நிறைந்தவர்களாக உலவுவதை நீங்கள் பார்த்ததில்லையா?  ஒருவேளை உங்கள் நாட்டிற்குள் அவர்களுடைய விஜயம் நிகழவில்லையோ?” என்று கேட்ட பாம்பு மேலும் தொடர்ந்தது.
“அவர்களிலும் சிலர் கஷ்டப்பட்டுப் படித்து வாங்கிய பட்டம் போல, பெயருக்குப் பின்னால் ச.ச., உ.ச., ம.ச., சே.ச., கு.ச. என்று எதையாவது பெருமையகாப் போட்டுக்கொண்டு தாங்கள் மேலானவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்!”
“இதெல்லாம் என்ன பட்டங்கள்?” ராஜா ஆர்வமாகக் கேட்டார்.
“அட கு.ச., என்றால் குறளிவித்தைக்காரர்கள் சபை, அல்லது குழப்பவாதிகள் சங்கம் என ஒவ்வொன்றுக்கும் நாம் எதையாவது அர்த்தம் செய்துகொள்ள வேண்டியதுதான்” என்றது பாம்பு.
“ஓ! மொத்தத்தில் குழப்பவாதிகள் என்கிறாய்?”ராணி வினவியதும்,
“ஆமாம், உங்கள் மண்ணில் இன்னும் அவர்கள் காலடி படவில்லை என்று சந்தோஷப்படுங்கள்” என்ற பாம்பு, மேலும் அவர்களைப் பற்றிப் பேச வேண்டாம் என்பதுபோல, “மஞ்சள் மங்களகரத்தின் அடையாளம் அல்லவா? உங்களுக்கும் மங்களம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தியது.
“நன்றி” என்றாள் ராணி.  ராஜாவும் ஆமோதிப்பது போலத் தலையசைத்தார்.
“சரி, கண்களை மூடிக் கொள்ளுங்கள், உங்கள் இரதம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குக் கண நேரத்திற்குள் போய்விட வேண்டும் என்று எண்ணிக் கொள்ளுங்கள்!  அடுத்த கணம் அங்கிருப்பீர்கள்” என்றது பாம்பு.  இந்த யோசனை சரி எனத் தோன்றினாலும் “சற்று தூரம் நடக்கலாமே, உன்னோடு பேசிக்கொண்டிருப்பது நன்றாயிருக்கிறது” என்றாள் ராணி.  ராஜாவும் “ஆமாம், ராணி சொல்வது சரிதான்” என்றார்.
பாம்பு சிலிர்த்துக் கொண்டது.  “மிக்க மகிழ்ச்சி! என்னோடு அளவளாவுவதில் ஏன் ஆர்வம்.  நட்பு பாராட்டவா?  உங்களோடு சேர்ந்துகொள்ள எனக்குத் தகுதி இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?”
“சாத்தானுடன் உறவு கொண்டாடக்கூடாது என்று சொல்கிறாயா?”
ராஜாவின் குரலில் இருந்த கிண்டலைக் கவனிக்கத் தவறவில்லை பாம்பு.
மனிதர்களுக்கு முதன்முதலில் பகுத்தறிவைப் புகட்டியவனுக்கு நீங்கள் கொடுத்த பட்டம் கொடியவன், தீயவன், சாத்தான்!  நல்லது செய்பவர்களைப் பழிப்பதுதான் உங்கள் வேலை போலும்.”  பாம்பு தெளிவாகப் பேசியது.  பிறகு அதுவே தொடர்ந்து “நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறப் போகிறது வாழ்த்துக்கள்” என்றது.
“நாங்கள் என்ன நோக்கத்திற்காக வந்தோம் என்பது உனக்குத் தெரியுமா?” ராஜா கேட்டார்.  பாம்பு சிரித்தது.  சற்று உரத்த குரலில் சொல்லத் தொடங்கியது.
“படைப்புப் பலபடைத்துப் பலரோடுண்ணும்
உடைப்பெருஞ் செல்வராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக் குறை இல்லை தாம் வாழு நாளே.”
ராஜாவும் ராணியும் திகைத்துப் போய் நின்றார்கள்.
“இது ஒரு பழந்தமிழ்ப் பாட்டு என்பதாவது உங்களுக்குப் புரிகிறதா? மகாராஜா, இது உங்கள் முன்னோர்களில் அறிவு சான்ற மன்னர் ஒருவர் பாடிய பாட்டு.”
“இதன் பொருள்… ?”
“செல்வங்கள் ஏராளமாகச் சேர்த்து, ஒவ்வொரு வேளையிலும் பலரோடு சேர்ந்து உண்ணும் வளம் பெற்ற பெருஞ் செல்வந்தராக ஒருவர் இருக்கலாம்; ஆனால் குறுக்கே வந்து குறுகுறுவென்று நடந்து, தம் சின்னஞ்சிறு கைகளை நீட்டி உண்ணும் கலத்தில் உள்ள நெய்ச் சோற்றில் கையை இட்டும், தொட்டும், எடுத்தும், துழாவியும் உடம்பில் படுமாறு சிதறியும் உள்ளத்தை மயக்கும் குழந்தைகள் இல்லையானால் அந்தச் செல்வர்க்கு வாழ்நாள் பயனற்றதே ஆகும்.”  பாம்பு வகுப்பு எடுப்பது போல சொல்லி முடித்ததும், “உண்மைதான்; குழந்தைச் செல்வம் வேண்டியே வந்தோம்” என்றார் ராஜா.
“நீ பேசுகின்ற தமிழும் அதிலிருந்து எடுத்துக் கூறுகின்ற பழம்பாட்டும் அதன் பொருளும் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  உன்னிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம் என நினைக்கிறேன்” என்றாள் ராணி.
“உங்கள் சங்கப் பாடல்களைப் படியுங்கள்; வாழ்க்கையில் சீரான சிந்தனையும் தெளிவும் ஏற்படும்!...” என்ற பாம்பு, “மன்னரே, மக்கள் மேல் வரிச் சுமையை ஏற்றாமல் எப்படி நாடாள வேண்டும் என்று அதே அரசனுக்கு ஒரு புலவர் அறிவுரை வழங்கிய பாடல் கூட அதில் இருக்கிறது.  படித்துப் பாருங்கள்!  நல்லாட்சி நல்குவீர்கள்” என்றது.
இதுவரை இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லையே என்ற சங்கடத்துடன், மையமாகத் தலையாட்டி வைத்தார் ராஜா.  “என்னை வெறுப்பது போலவே தமிழையும் மக்கள் புறக்கணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்!  உங்கள் நாட்டில் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்; ஆணிவேரைப் பிடுங்கி விட்டால் அப்புறம் வாழ்க்கை ஏது?” என்று சிரத்தையாகக் கூறிய பாம்பு,
“புறப்படுங்கள். மீண்டும் வாழ்த்துக்கள்” என்றது.  ராணியின் கண்களில் நீர் திரையிட்டது.  “இன்னுமொரு மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள்!  அதுவும் உங்களுக்குப் பிடித்தமான பச்சை நிறத்தில்!” என்று சிரித்தது.
‘இரதம் இருக்குமிடத்திற்கு உடனே போய்ச் சேர வேண்டும்’ என்ற ஒரே சிந்தனையுடன் விழிகளை மூடிக் கொண்டார்கள்.  காற்றோடு கலப்பது போல உணர்ந்தார்கள். அடுத்த கணம் இரதத்தின் முன்னால் நின்றிருந்தார்கள்.  ஆவலுடன் காத்திருந்த மந்திரியாரும் படை வீரர்களும் தலை வணங்கி வரவேற்றார்கள்.  என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் மகாராஜாவையும் ராணியையும் ஏறிட்டார்கள்.  அவர்கள் முகம் வைகறைச் சூரியனாய் ஒளிர்ந்தது. அந்த ஒளி தம் உள்ளங்களையும் தொட்டு, தங்களைப் புதிய பிறவி எடுக்கச் செய்ததாக அவர்களுக்குத் தோன்றியது. வார்த்தைகளுக்கு வேலை இல்லை என்பது போல எல்லோருமே மௌனம் காத்தார்கள். அந்த மோனம் தெய்வீகத்தின் கருவறையாக, புனிதத்தின் புதுமையாகப் புலப்பட்டது.
“நிறைவேறிற்று, எல்லாம் நிறைவேறிற்று” என்றாள் ராணி.  அவர்கள் புறப்பட்டார்கள்.  நாடு திரும்பியதும் முனிவர் சொன்னபடியே, கமண்டலத்திலிருந்த நீரை, பொன் மலையின் உச்சியில் சிறிய வட்டக் குழிக்குள் தாமே சென்று ஊற்ற விரும்பினார் ராஜா.  ஆனால், அந்த வனப்பகுதி யாருக்கும் சரியான பரிச்சயம் இல்லை என்பதால், எப்படிச் செல்வது, படை வீரர்கள் கூட இதில் உதவ முடியுமா என்ற மலைப்பு ஏற்பட்டது.
“அங்கிருக்கும் பழங்குடி மக்கள் உதவுவார்கள்.” என்றார் மந்திரி.
“அவர்களா எப்படி?”
“அவர்கள் தானே நம் நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் மகாராஜா”
“அப்படியென்றாலும் நாமும் நம் மக்களும்...?”
“இந்த ஆராய்ச்சி இப்போது வேண்டாம் மகாராஜா!  அந்த மக்கள்தான் மலை மாதாவின் மடியின் செல்லப் பிள்ளைகள்; விலங்குகளோடும், பறவைகளோடும், மரங்களோடும் உறவாடுவார்கள்.  இயற்கையிலிருந்து நாம் விலகி வந்து வேறுபட்டு நிற்கிறோம் மகாராஜா.  ஆனால் அவர்கள் அதனோடு வாழ்பவர்கள்.  இயற்கையின் நண்பர்கள்.  எனவே பழங்குடி மக்கள்தான் இந்த விஷயத்தில் நமக்கு உதவ முடியும்” என்றார் மந்திரி உறுதியான குரலில்.  ராஜாவும் அதை ஏற்றுக் கொண்டார்.
பொன் மலை உச்சிக்குச் செல்வதற்கு, பழங்குடி மக்களுடன், ராஜா அதுவரை பார்த்திராத விலங்குகளும் பறவைகளும் அவருக்கு உதவி செய்தன.  குறுகலான வழிதான்.  ஆனால், ராஜாவுக்காக அவர்கள் பாதைகளைச் செம்மைப்படுத்தியிருந்தார்கள்.  எனவே பயணம் இலகுவாக அமைந்தது.  அதே வேளையில் ராணி அரண்மனையில், தன் தனியறையில் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தார்.  அதோ அவரது அகக்கண்ணில் ராஜா மலையுச்சியில் ஏறி சுரங்கத்திற்காக வெட்டப்பட்ட அந்த வட்டக்குழியின் அருகில் நிற்பது தெரிகிறது.  மந்திரியாரோடு ஆண்களும், பெண்களும் குழந்தைகளுமாக அங்கே ஆர்வத்துடன் நின்று கொண்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது.  நெருங்கிய சிநேகிதர்கள்போல் சிங்கம், புலி, யானை, மான், முயல், இன்னும் பெயர் தெரியாத விலங்குகளோடு பறவைகளும் அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.  இதோ ராஜாவிடம் பழங்குடியினரின் தலைவர் அந்தக் குழியைச் சுட்டிக்காட்டி, கமண்டலத்தில் இருக்கும் நீரை அதில் ஊற்றச் சொல்கிறார்.  குட்டி முயல் ஒன்று எட்டிப் பார்க்க முடியாமல் சிங்கத்தின் முதுகில் ஏறிக் கொள்கிறது.  இப்போது ராஜா சற்றே குனிந்து நீரை ஊற்ற முயற்சி செய்ய, அவர் கைகள் நடுங்குகின்றன.  யானையின் முதுகில் ஒய்யாரமாக வீற்றிருந்த காகம் ஒன்று சட்டென்று பறந்துவந்து ராஜாவின் கையிலிருந்த கமண்டலத்தைத் தட்டிவிட்டு நீரை நேர்த்தியாகக் குழிக்குள் விழச் செய்கிறது.  எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.  ராஜா ஒரு கணம் அதிர்ந்து போனாலும் பிறகு சப்தமாகச் சிரிக்கிறார்.  அதில் பெரும் நிம்மதி கலந்திருக்கிறது.  இந்தக் காட்சிகளையெல்லாம் மனத்திரையில் கண்ட ராணி மேலும் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார்.  முகத்தில் பௌர்ணமி பூத்தது.
முனிவர் சொன்னபடியே பொங்குமாக்கடலிலிருந்து புறப்பட்ட அருவி, வற்றாத ஜீவநதியாய் புனல் பெருக்கெடுத்து ஓடியது.  அந்த நீரின் சுவைக்கு ஒப்பிட்டு எதையும் உவமை சொல்ல முடியவில்லை.  பூமித்தாய் பச்சைச் சேலையை உடுத்திக்கொண்டாள்.  நாடு முழுக்க திருமகள் சிரித்தாள்.  ஆனால் அவர் கூற்றுப்படியே பதின்மூன்றாவது மாதத்தில் சட்டென்று வறண்டு போனது நதி.  விவரம் தெரியாத குடிமக்கள் கவலைப்பட்டனர்.
பதின்மூன்றாவது நாளில் கருக்கல்லில் மகாராஜாவும் ராணியும் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள்.  ஊற்று தோண்டி மண் குவளையில் நீர் எடுத்து ஆற்றில் ஊற்றினார்கள்.  இரவு முழுக்க அதே இடத்தில் முழு நிலவு சாட்சியாகத் தியானம் செய்தார்கள்.  அதிகாலைச் சூரியனின் முதல் கதிர் அவர்களை முத்தமிட்டதும் சலசலவென்று ஓடும் நீரின் சப்தம் அவர்கள் காதுகளில் இறங்கியது.  கண் திறந்து பார்த்தார்கள்.  மிகுந்த வேகத்துடன், அதே வேளையில் கரையை மீறாமல் பொங்கிப் பெருகி வந்தது ஆறு.  மலை மங்கை சூடிக் கொள்ளும் பூக்களும் இலைகளும் சூழ இதோ ஒரு பெண் குழந்தை ஆவாரம் பூக்களாலும் தாமரை இதழ்களாலும் பின்னப்பட்ட பூம்படுக்கையில் மிதந்து வந்தது.  ஓடிச்சென்று அதை வாரிக் கொள்ள முயன்றார் ராஜா.  ஆனால் நீரின் வேகத்தில் அவர் கைகளை மீறிப் போய்க் கொண்டிருந்தது குழந்தை.  அவரும் ராணியும் பதறினார்கள்.  சில மணித்துளிகளில் தன்னை நிதானித்துக் கொண்ட ராணி, விழிகளை மூடி மனதை ஒருமுகப்படுத்தினாள்.  மந்திரம் சொல்வதுபோல் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.  நீரின் வேகத்தை எதிர்த்து முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்த பூம்படுக்கை, இப்போது திடீரென்று பின்னோக்கி வந்தது.  ராஜா ஆச்சரியத்துடன் கூர்ந்து பார்த்தார்.  யாரோ அதை அவர்கள் பக்கம் இழுத்து வருவது போலத் தோன்றியது.  யாராகயிருக்கும்?  அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஆன்மா கட்டளையிட, ராணி கண் திறந்து கைகளை ஏந்தி நின்றாள்.  அவர்கள் முன்வந்து வந்து நின்ற பூம்படுக்கை, குழந்தையுடன் ராணியின் கைகளுக்கு சமீபமாய் உயர்ந்தது.  அனிச்சைச் செயல் போல் தன் கைகளில் அதைப் பெற்றுக்கொண்ட ராணி, குழந்தையை அவள் கையில் சேர்த்த உருவத்தைப் பார்த்தாள்.  பச்சை நிறத்துக்கு மாறியிருந்த அதே பழைய பாம்பு!
“உங்கள் நண்பன்; உங்களுக்கு வாக்களித்தபடியே உங்களுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் உங்கள் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணத்தில் உங்களைச் சந்தித்துவிட்டேன்.  உங்கள் குழந்தை வரம் கைகளில் வருவதற்கு எனது மிகச் சிறு பங்கினையும் செய்துவிட்டேன்.  இந்த வாய்ப்புக்கு இயற்கைக்கு நன்றி சொல்கிறேன்!  வாழ்த்துக்கள்.”
ராஜா மந்திரத்தால் கட்டுண்டவர்போல நின்றிருந்தார்.  ராணி பரவசத்தில் வாய் திறக்க முடியாமல் பாம்புக்குக் கைகூப்பி நன்றி தெரிவித்தார்.  அதற்கெல்லாம் காத்திராதது போல அது கண நேரத்தில் காணாமல் போயிருந்தது.
அப்போது சூரியனையும் புறந்தள்ளுவது போல மின்னலென வந்த புதிய ஒளி இவர்கள் மேல் வட்டமிட்டது.  நிமிர்ந்து நேரே பார்க்க முடியாமல் கண்கள் கூசின.  செய்தி கேள்விப்பட்டு திரண்டு வந்திருந்த குடிமக்களும் கூட உருமாறிய பதுமைகள் போல நின்றார்கள்.  ஒளியின் மையத்திலிருந்து குரல் ஒன்று கேட்டது.
“இது என் மகள்; என்னுடைய அங்கம்!  மீண்டும் விரைவில் என்னிடமே திரும்பி வருவாள்.  அதுவரையில் உங்களிடம் விடப்படுகிறாள்.  உங்கள் மகிழ்ச்சிக்காக!”
அந்தப் பேரொளி மேகத்துக்குள் சென்றுவிட்டது.  பதுமைகள் போல நின்றவர்கள் சுயநினைவு வந்தவர்களாக சிலிர்த்துக் கொண்டார்கள்.  சொல்லப்பட்ட வார்த்தைகளின் பொருள் அவர்களுக்குப் புரியவில்லை.  பொருள் தேடும் நிலையிலும் அவர்கள் இல்லை.  நிகழ்காலத்தின் தலைகால் தெரியாத சந்தோஷ தருணங்களில் வரப்போவதைப் பற்றி யார்தான் சிந்திப்பார்கள்?
‘ஜோதி’ எனப் பெயரிடப்பட்டு வளர்கிறது குழந்தை.  பெயருக்கேற்றாற் போல கண்களிலும் சிரிப்பிலும் கொஞ்சும் மழலையிலும் ஒளியை ஏந்தியிருந்த குழந்தை வளர, வளர அந்நாட்டில் சுபிட்சம் பெருகியது.  பருவம் தவறாது மழை பொழிந்தது.  கழனிகளில் காற்றுக்கு முக்காலமும் கைகுலுக்கிய கதிர்கள் குடிமக்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரிக் கொடுத்தன.  இல்லை என்ற சொல்லே அங்கு இல்லை என்றாகிப் போனது.
முத்துக்கள் பதிக்கப் பெற்ற பொற்சிலம்புகள் ஒலிக்க, அரண்மனையில் தத்தித் தத்திக் குழந்தை ஓடும் அழகை மகாராஜாவும் ராணியும் பார்த்துப் பார்த்துப் பரவசம் எய்தினார்கள்.  ‘த்தத்தா’ என்று அவள் பொருள் இல்லாச் சொற்களைப் பேசத் தொடங்கியபோது, அவள் வார்த்தைகளில் பெரும் தத்துவ மேன்மையைக் கண்டுவிட்டது போல, கர்வம் கொண்டவர்கள், நன்றாகப் பேச்சு வரத் தொடங்கி, புதிய, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியதைக் கண்டதும், கலை மகளே, தங்களுக்கு மகளாக வாய்த்ததாகப் பெருமை கொண்டார்கள்.
வாழ்க்கையில் பெரும் நிறைவு ஏற்பட்டதாக உணர்ந்த ராஜாவும் ராணியும் ஜோதிக்கு ஐந்து வயது பூர்த்தியானதும் ஆற்றுக்கு மறுகரையில் மலையுச்சியிலிருந்த கொற்றவை கோவிலுக்குச் செல்ல முடிவு செய்தார்கள் – குழந்தையையும் அழைத்துக் கொண்டு.  அந்த முடிவு, இன்னொரு பெரிய முடிவின் ஆரம்பப் புள்ளி என்று அப்போது அவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை.  தொடக்கமும் முடிவும் புலனாகாத வாழ்வின் பயணத்தில் ஈரநதி நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டப் போகிறது என்று தெரிந்திருந்தால் கொற்றவை தரிசனம் பற்றி யோசித்திருக்கவே மாட்டார்கள்.  வரவிருக்கும் மீளமுடியாத துன்பம் பற்றிய முன்னுணர்வு இல்லாத அவர்களின் மனது எல்லையற்ற இன்பத்தில் திளைத்தது.  ஆற்றைக் கடந்து மறு கரை அடையும் வரை, படகில், ஜோதி துள்ளிக்குதித்துக் கொண்டேயிருந்தாள்.  மேலே பட்டுச் செல்ல விரும்புவதுபோல எழுந்துவரும் பால் அலைகளைத் தொட்டு விளையாடியதில் குழந்தை உற்சாகம் கண்டது.  கொற்றவையை வணங்கியபோது அன்னையின் அருள் குழந்தைக்குப் பரிபூரணமாக வாய்க்கவேண்டும் என்றும், அவளை அந்த அன்னையின் பாதத்திலேயே சமர்ப்பித்து விடுவதாகவும் ராஜாவும் ராணியும் மனமுருக வேண்டிக்கொண்டார்கள்.
கொற்றவை கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்த பிறகு தினமும் மாலையில் ஆற்றங்கரைக்குச் சென்று விளையாட வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியிருந்தாள்  ஜோதி. உடன் செல்லும் அரண்மனைப் பாதுகாவலர்கள் தங்கள் பார்வைக்கெட்டிய தூரத்தில் மணலில் அவள் விளையாடுமாறு பார்த்துக்கொண்டாலும், திடீர், திடீரென்று மின்னல் போல் அவர்களது கண்களை மறைத்துவிட்டு ஆற்று நீருக்குள் இறங்கிவிடுவதையும், எவ்வளவு அழைத்தாலும் வர மறுப்பதையும் ராஜா ராணியிடம் அவர்கள் ஆரம்பத்தில் சொல்லத் தயங்கினாலும், பிறகு, ஒரு சமயத்தில் தெரிவித்துவிட்டார்கள். அப்படியென்றால் அவள் இனி விளையாடப் போக வேண்டாம் என ராஜாவும் ராணியும் தடைபோட முயல்கையில், “ஏன் போகக் கூடாது? ஆறு அழகாத் தானே இருக்கு? மணல்ல ஓடி விளையாடுறது சந்தோஷமாத்தானே இருக்கு?” என்று தன் மழலைக் குரலில் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களைத் திணறடித்தாள் ஜோதி. எனவே, அவளைத் தினமும் ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்வதை நிறுத்த வேண்டாம் என்றும், ஆனால் பத்திரமாக, பாதுகாப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் பாதுகாவலர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. அப்படிச் சொல்லப்பட்டாலும், மனம் கேட்காமல், அன்று மாலையில் ராணியே குழந்தையுடன் ஆற்றங்கரைக்கு உடன் சென்றிருந்தாள். அங்குமிங்குமாக சிரித்தபடியே ஓடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத தருணத்தில் தண்ணீருக்குள் இறங்கி, அப்படியே வேகமாக நடக்கத் தொடங்கியது. பதறிப்போன ராணியும் பாதுகாவலர்களும் ஓடி வர, அமைதியான ஆறு சட்டென்று சீறிப் பொங்கியதுபோல் வெள்ளப் பெருக்கெடுத்து, குழந்தையை இரு கரம் நீட்டி அணைத்துக்கொள்ளும் தாய் போல் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றது. கூச்சலிட்டு ஓடிய பாதுகாவலர்கள் வெள்ளத்தின் உக்கிரம் கண்டு பின்வாங்கினார்கள். மணலில் மயங்கிச் சரிந்தாள் ராணி.

••• அத்தியாயம் 1 முற்றும் •••

1 comment:

  1. Dear Ma'am, Your narrative makes the reader to think beyond the written words, lots of subtle sarcasm, symbolism and textual anagram leaving me spell bind. It is a pure awesome experience. Well thought out and very well crafted phrases.
    - happiness, hem

    ReplyDelete