Tuesday, May 20, 2014

அத்தியாயம் - 8

நிமலோ ஃப்ரான்சிஸ் நீண்ட நேரம் ஆறடிச் சுவருக்கு வெளியே நின்றவாறு, தான் இரண்டு வருடங்கள் தங்கியிருந்த புத்த மடத்தை ஆழ்ந்த அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்தான். வெளிறிய சாம்பல் சுவருக்குள்ளே நேர்த்தியாக வளர்க்கப்பட்டிருந்த பைன் மரங்கள் முதன் முதலில் அவன் அங்கு வந்தபோது இவனைக் கவர்ந்தது போலவே இப்பொழுது கம்பீரம் குலையாமல் கவனமாகச் செதுக்கப்பட்ட உயிர்ச் சிற்பங்கள் போலத் தோன்றின. தலைமைக் குருவின் உதவியாளரான கே-சான், ஒடிசலான தேகத்தைக் குறுக்கியவாறு சீனத் தளவோடுகள் பதிக்கப் பெற்ற பாதையில் நடந்து பின்புறம் இருந்த புல்வெளியின் சமீபமாய் போய்க் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு, அந்த நகரத்துக்குப் புதிதாக வந்தபோது, தான் தங்கியிருந்த விடுதி மேலாளரிடம் அந்த நகரத்தில் தங்கி ஸென் புத்த மதம் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னதும், குள்ளமாக இருந்த அந்த மனிதர் மிகச் சிரமப்பட்டு அண்ணாந்து அவன் முகத்தைக் கேள்விகளுடன் பார்த்தார். அவனோ மீண்டும் தான் சொன்னதை வேறு வார்த்தைகளில் உறுதியாகத் தெரிவித்தபோது, “புத்த மடங்கள் இருக்கின்றன ஏராளம் இங்கு” என்று உடைந்த ஆங்கிலத்தில் பதில் சொல்லி, பிறகு இந்த மடத்திற்கு வருவதற்கு டாக்ஸியையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். மடத்திற்கு வெளியே நீண்ட நேரம் நின்றிருந்த போதும் உள்ளிருந்து யாரும் வருவதாகத் தெரியவில்லை. அவரைக் கடந்து சென்ற சிலரும் கூட சற்று அதிசயித்து வாயைக் கைகளால் மூடியவாறு தலைகுனிந்து சிரித்தபடி சென்றார்கள். ஐரோப்பாக் கண்டத்தைப் பொறுத்தவரை தன்னுடைய உயரம் சாதாரணமானதுதான். ஆனால், இங்கு அதே உயரம் பெரிதாகத் தோன்றி மேலும் தன்னை அந்நியப்படுத்துவதாகவும், காட்சிப் பொருளாக மாற்றியிருப்பதாகவும் எண்ணினான். கையில், கனத்த பெட்டியைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, மேலும் சிறிது நேரம் காத்திருந்தான். யாரும் வருவதாகத் தெரியவில்லை. உள்ளே செல்வதற்கு உபாயம் என்ன? யாரைக் கேட்க வேண்டும் எனத் தெரியாமல் சற்று மேலே நிமிர்ந்து பார்த்தபோதுதான் சுவரையொட்டி ஆலயங்களில் தொங்கவிடுவது போல மாட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய மணி கண்களில் தட்டுபட்டது. அந்தக் கட்டிடத்திற்கே அழகு சேர்ப்பதுபோல் இருந்த அந்த வெண்கல மணியை இழுத்து அடித்துவிடலாமா என்று எத்தனித்த போதுதான் வெளியில் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த இந்த கே-சான் அவசரமாக இவர் கையைப் பிடித்துத் தடுத்தார்.
“இங்கு ஏதேனும் முக்கியமான புனித சடங்குகள் நடைபெறும்போது மட்டுமே இந்த மணி ஒலிக்கப்படும்.” என்றார் உடைந்த ஆங்கிலத்தில்.
“அப்படியானால் நான் வந்திருக்கிறேன். வாசலில் நீண்ட நேரம் காத்திருக்கிறேன் என்பதை உள்ளே இருப்பவர்களுக்கு எப்படித் தெரிவிப்பது?”
“கதவு திறந்துதானே இருக்கிறது!”
அந்த ஒல்லி மனிதர் தன்னைக் கேலி செய்கிறாரோ என்று அவரது மன உணர்வுகளை முகத்தில் தேடினார் நிமலோ. ஆனால் அவர் உண்மையை உண்மையாகத்தான் சொல்கிறார் என்பதை முகம் காட்டிற்று. அந்த மனிதர் கதவில் கை வைக்க, அது திறந்துகொண்டது. அது உள்ளே பூட்டப்பட்டிருப்பதாக எண்ணி நீண்ட நேரம் காத்திருந்த தன் மடமைக்காக வெட்கப்பட்ட நிமலோ, “நான் இங்கு தங்கி புத்த மதம் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.” என்றான்.
“சரி.”
“ஐரோப்பாவிலிருந்து வந்திருக்கும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் புத்த மதம் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி எழவில்லையா உங்களுக்கு?”
“கேள்விகளுக்குப் பதில் தேடி வந்திருக்கும் உங்களிடம் நான் ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே தலைமைக் குரு வெளியில் வந்தார்.
“நான் நிமலோ ஃப்ரான்சிஸ். புத்த மதத்தைத் தெரிந்துகொள்ள வந்திருக்கிறேன்.”
தலைமைக் குரு தலையசைக்க கே-சான் உள்ளே வருமாறு சைகை செய்தார். நான்கு அடி தூரம் நடப்பதற்குள்ளாகவே அதிகமான பருமனும் நீளமும் கொண்ட பாம்பு ஒன்று அவர்களுக்கு முன்னே கடந்து சென்றது. கையிலிருந்த பெட்டியைக் கீழே நழுவவிட்ட நிமலோ அலறத் தொடங்கியதும், கே-சான் அவன் தோள்களில் கை வைத்து அழுத்தினார். ‘ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எதுவும் இல்லை; அமைதியாக வாருங்கள்’ என்ற செய்தி அதில் புலப்பட்டது. கதவைத் திறந்துகொண்டு, வந்த வழியே ஓடிவிடலாமா என நிமலோவுக்கு ஒரு கணம் தோன்றிற்று. ஆனால், கீழே குனிந்து பாம்பைத் தடவி, தட்டிக்கொடுத்த தலைமைக் குரு, அதனிடம் மெல்லிய குரலில் ஏதோ கூற, சட்டென்று அது மறைந்துபோனது. படபடப்பு அடங்கி சற்று சகஜ நிலைக்குத் திரும்பியிருந்த நிமலோ, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகத் தண்ணீர் கேட்டான்.
உள்ளே அழைத்துப்போய் தண்ணீர் கொடுத்த தலைமைக் குரு, நிமலோவைப் பார்த்து புன்னகைத்தார். இன்னமும் இங்கே தங்க விருப்பம் இருக்கிறதா என்ற கேள்வி அதில் பொதிந்திருந்தது.
“நான் எந்த அறையில் தங்கிக்கொள்ள வேண்டும்?” நிமலோ கேட்டதும், கே-சான் அவனை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று “இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்” என்று இயல்பாகக் கூறினார்.  அது மரச்சட்டங்களால் உருவாக்கப்பட்டிருந்த சற்று விசாலமான அறை. அருகருகாகவே அதே போன்ற அறைகளில் புத்தத் துறவிகள் தங்கியிருந்தார்கள். தனி அறை, தன்னுடைய அறை, தன் பிரத்யேகமான பொருட்களுடன் தான் மட்டுமே வசிக்கும் அறை என்று பெற்றோருகளுடைய குறிக்கீடு கூட இல்லாமல் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட நிமலோவுக்கு இது முற்றிலும் புதிதாகவும் பெரும் சவாலாகவும் இருந்தது. ஆனாலும் நிமலோ சளைப்பதாகத் தெரியவில்லை. போகிற போக்கில் காலையில் மூன்று மணிக்குத் தியானம் செய்வதற்கு எழுப்பிவிடுவதாகத் தெரிவித்துவிட்டு சென்றார் கே-சான். அதை சரியாகக் காதில் வாங்கிக்கொள்ளாத நிமலோ, படுக்கையில் விழுந்ததும் தூக்கம் வராமல் நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தான். எதைத் தேடி இங்கு வந்தோம்? கடவுளைத் தேடியா? அல்லது தான் படைக்கப்பட்டதன் நோக்கம் பற்றி அறிந்துகொள்ளவா? இதை நினைக்கையில் அவனுக்கே சிரிப்பு எழுந்தது. என்ன பைத்தியக்காரத்தனம் இது? படைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஏதோவொரு பொருள் இருக்கும் என்பது தெரிந்ததுதானே? இதைப் புரிந்து கொள்வதற்காக இவ்வளவு தூரம் ஏன் வரவேண்டும்? கடவுள் என்றொருவர் இருக்கிறாரா? அவரது இருத்தல் பற்றி விளங்கிக் கொள்வதற்காகவா வந்திருக்கிறோம்? நிமலோவுக்கு இந்தியாவில் சொல்லப்படும் கதைகளில் ஒன்று நினைவுக்கு வந்தது. ஆழ்ந்த தவத்திலிருந்த ஒரு குருவிடம் சென்ற இளைஞன் ஒருவன் அவரை உலுக்கி தவத்தைக் கலைத்தான்.
“ஏன் என் தவத்தைக் கலைத்தாய்?”
“நான் கடவுளை அறிந்துகொள்ள வேண்டும்.”
“உடனே அவன் கழுத்தில் ஒரு துண்டைப் போட்டு இறுக்கிய அந்தக் குரு, அவனைத் தரதரவென்று ஆற்றங்கரைக்கு இழுத்துச்சென்று ஆற்றிற்குள் அவன் தலையை அழுத்தி மூழ்கச் செய்தார். சிறிது நேரம் கழித்து உள்ளே தத்தளித்த அவனை வெளியே இழுத்தார். அவன் மொத்தமாக நிலைகுலைந்து தடுமாறியிருந்தான். இப்போது குரு கேட்டார்.
“ஆற்றில் உன்னை நான் அமிழ்த்தியபோது உனக்கு என்ன தேவைப்பட்டது?”
“அவசரமாக சுவாசிப்பதற்குக் காற்று.”
“அந்தக் கணத்தில் சுவாசிக்க காற்றுக்காக எப்படி அலைபாய்ந்தாயோ, அதேபோல கடவுளுக்காக நீ அலைபாயும் தருணத்தில் என்னை வந்து பார். இப்பொழுது நீ போகலாம்” என்றார் குரு. இந்தக் கதையை சிந்தித்த நிமலோ, அவ்வளவு அவசரமாகவா நான் கடவுளைத் தேடி வந்திருக்கிறேன்? நிச்சயமாக இல்லை. பிறகு ஏன் இந்தப் பயணம்? தாய் நாடான ஃப்ரான்ஸில் இருந்து முதலில் இங்கிலாந்துக்குச் செல்ல விரும்பிய அவன், தன் தந்தையிடம் விருப்பத்தைத் தெரிவித்தபோது, எதுவும் கேட்காமல் பணத்தை எடுத்துக் கொடுத்தார். அதுவும் இரண்டு மூன்று வருடங்கள் தாராளமாக செலவழிக்கின்ற அளவுக்குப் பணம். இருபத்தி மூன்று வயதாகியிருந்த தன் மகன் ஒரு வருடமாகவே எதையோ தேடி நிலை கொள்ளாமல் தவிப்பதை அவர் அறிந்து வைத்திருந்தார். எனவே, எந்தக் கேள்வியும் அவனிடம் கேட்கவில்லை. தெரிந்து கொள்ள விரும்பியதைத் தெரிந்துகொண்டோ தெரிந்துகொள்ளாமலோ விரும்பும்போது திரும்பிவரட்டும் என்ற எண்ணம் அவருக்கு. ஆனால், ஒரேயொரு நிபந்தனை விதித்தார். இங்கிலாந்துக்குச் செல்ல விரும்பினால், ரயில் மார்க்கமாகச் செல்ல வேண்டாம் என்பதுதான் அந்த நிபந்தனை. அது புதிராகத் தோன்றினாலும் அவன் காரணம் கேட்கவில்லை. தனது தந்தை எப்போதுமே இங்கிலாந்து செல்ல விரும்பியதில்லை என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஒரு முறை பிடிவாதமாக இங்கிலாந்திலிருந்த தன் தங்கையைப் பார்க்க விரும்புவதாக இவனது அம்மா தெரிவித்தபோதும் கூட, தான் வர மறுத்து அவளை மட்டும் தனியாக அனுப்பி வைத்திருந்தார். அதுவும் ரயிலில் போகிறேனே என்று பல முறை அவள் சொல்லியும், தேவையில்லையென்று விமானத்திலேயே அனுப்பி வைத்திருந்தார். அப்பாவுக்கு இங்கிலாந்தும் ஆங்கிலேயர்களும் வாழ்வில் பிடிக்காத எதிர் துருவங்களோ? ஃப்ரெஞ்சுக்காரர்கள் பலர், தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் கற்றுக்கொள்ள அனுமதிக்கத் தொடங்கியிருந்த அவனது பள்ளிப் பருவத்தின் போது கூட அவர் ஆரம்பத்தில் பிடிவாதமாக மறுத்திருந்தார். இந்தியாவிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதற்காக வந்திருந்த ஃப்ரெஞ்சும் ஆங்கிலமும் தெரிந்த ஆசிரியை ஒருவர் இவர்கள் வீட்டுப் பக்கத்திலேயே தங்கியிருந்த போது, மிகவும் கெஞ்சி அனுமதி வாங்கித்தான் அந்த ஆசிரியையிடம் அவன் ஓரளவு ஆங்கிலம் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டிருந்தான். சிந்தனைகள் தாய்நாட்டையும் வீட்டையும் சுற்றி வந்து தங்கியிருந்த நிகழ்கால புத்த மடத்துக்குத் திரும்பியபோது அயர்ந்து சோர்ந்துபோன உடம்பும், கண்களும் தூக்கத்தை இறைஞ்சின. ஆழ்ந்த தூக்கத்திற்குள் போய் ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது. மரக்கதவை யாரோ இரண்டு முறை தட்டும் சத்தம் கேட்டது. அது அந்த நிசப்தத்தில் தலைக்குள் சம்மட்டியால் அடிப்பதுபோன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தி அவரைக் கலங்கடித்தது. கண்களைக் கசக்கி கடிகாரத்தைப் பார்த்தபோது மணி சரியாக மூன்று ஆகியிருந்தது. ஓ தியானத்திற்காக எழுப்புவதாகச் சொல்லியிருந்தாரே. நினைக்கும்பொழுதே கண்கள் சொக்கின. அடுத்தடுத்த அறைகளில் கதவு தட்டப்படும் சத்தம்  கேட்க, உடம்பை வலிந்து சீர்ப்படுத்திக்கொண்டு எழுந்தவன், இந்த அனுபவம் தேவையா என அலுப்பாக நினைத்துக்கொண்டான். பிறகு சவால்களைத் தேடித்தானே வந்தோம் என்று வெளியில் வந்து தியானத்திற்குத் தயாரானான்.
சொல்லிக்கொடுத்தபடி பத்மாசனமிட முயன்றபோது கால்களில் வலி உயிர்போனது. சற்றுப் பின் சாய்ந்து மடக்கிய கால்களின் வலியை மண்டையில் ஏற்றிக்கொள்ளாமல் தன்னை சமன் செய்து கொள்ளப் பார்த்துத் தடுமாறினான்.  அந்த நேரத்தில், அதே பாம்பு தன் கால்களின் மேல் ஏறிச் செல்ல, இந்தச் சவால் சமாளிக்க முடியாதது என்ற அயர்ச்சி ஏற்பட்டது.
“இந்தப் பாம்பை அடித்துக் கொல்ல வேண்டியதுதானே.” என்று காட்டமாகவே தலைமைக் குருவிடம் கேட்டான். அவர் பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார்.
“சரி, கொல்லவேண்டாம். வெளியிலாவது அனுப்பிவிடலாமே”
இப்பொழுது தலைமைக் குரு வெகு கூர்மையாக அவன் முகத்தைப் பார்த்தபடி கூறினார்: “நீங்கள் தாராளமாகச் செல்லலாம்.”
நிமலோவுக்கு எரிச்சலாக வந்தது. சூடான தேநீர் கொண்டுவந்து கொடுத்த கே-சான், லியோ என்பவரை அப்பொழுதுதான் நிமலோவுக்கு அறிமுகப்படுத்தினார். “ஆரம்பத்தில் பத்மாசனமும் கால்களில் உயிர் போவது போல் வலியை ஏற்படுத்தும். இந்த பாம்பும் கூட...” என்று இடைவெளிவிட்ட லியோ, “இங்கே ஒரு பாம்பு இல்லை, பல பாம்புகள் இருக்கின்றன. அவை நம்மைச் சுற்றும்; நம் மேல் ஏறிச் செல்லும்; ஒருபோதும் யாரையும் கடிப்பதில்லை. நண்பர்கள் போலத்தான்.” என்றார். அவருடைய ஆங்கிலம் அவர் அமெரிக்கர் என்பதைப் புலப்படுத்தியது. ஜப்பானிய மொழியில் அல்லாமல் ஆங்கிலத்தில் பேச ஒருவர் இருக்கிறார் என்பதே நிமலோவுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. தன்னுடைய பிரச்சனை ஏற்கனவே அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட நிமலோ, “பாம்பு, பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.” என்றான் முகத்தை சுளித்தபடி.
“விருப்பு, வெறுப்பு, அருவருப்பு - இவையெல்லாமே நாம் வலிந்து உருவாக்கிக்கொள்ளும் தேவையற்ற உணர்வுகள்.”
“இருக்கலாம். இனிமேல்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.”
“இது தெரிந்துகொள்வதில்லை. உணர்ந்துகொள்வது.” லியோ சொல்லிக்கொண்டிருக்கும்போதே இருவரையும் விட உயரமாக இன்னொருவர் அங்கு வந்தார். “இவர் பீட்டர். லண்டனிலிருந்து வந்திருக்கிறார். இங்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிறது.” என்று லியோ அறிமுகப்படுத்திய அந்த மனிதருக்கு நாற்பத்து நான்கு வயதிருக்கலாம் என மதிப்பிட்டான் நிமலோ. தொடக்க நாட்கள் புத்த மடத்தில் சமாளிப்பதற்கு வெகு சிரமமாகத் தோன்றினாலும், தேடலில் இருந்த விருப்பம் நிமலோவுக்குக் குறையவேயில்லை. அதனால்தான் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்துகொள்வதும், குறைந்தது எட்டு மணி நேரம் பத்மாசனமிட்டு தியானம் செய்வதும் போகப் போகப் பழகியிருந்தது. தன் புத்த மடத்து அனுபவங்களில் ஆட்பட்டிருந்த நிமலோ, எதிரில் ஜப்பானிய மொழியில் பேசிக்கொண்டிருந்த குரல்களால் கவரப்பட்டார். அங்கு ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டபோது, சூ-கி என்ற ஆசிரியையிடம் மற்றவர்களைப் போல் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தான். சிநேக புன்னகையுடன் எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்து அந்த மொழியை அவருக்குக் கற்றுக்கொடுத்திருந்த சூ-கி, அவன் அவள் சொல்லிக் கொடுப்பதை கிரகித்துக்கொண்டு சரியாக ஜப்பானிய மொழி பேசும் ஒவ்வொரு முறையும் கைகளைத் தட்டி உற்சாகப் படுத்துவாள். அவர்தான் மற்றொரு பெண்ணுடன் பேசியபடி வந்துகொண்டிருந்தார். உடன் வருவது அவரது மகளில்லை. வேறொரு இளம் பெண். இவனைக் கடக்கையில் தலை தாழ்த்தி வணக்கம் சொல்ல, பதிலுக்கு அவளும் சொல்லிவிட்டு சிரித்தபடி சென்றாள். சூ-கியின் மகளை மடத்திற்கு வந்திருந்த ஆறேழு மாதங்கள் கழித்து முதல் முறை சந்தித்தபோது, அன்றாட தியானங்களையும், உச்சரித்த மந்திரங்களையும் தூக்கிச் சுருட்டி வீசிவிட்டு வீரியமாய் மனதை ஆட்கொண்ட சதை-தின்னும் வெறி அவனுக்குள் சட்டென்று பற்றிக்கொண்டது. உடனே அவளைத் துய்க்க வேண்டும் என்று அவனைப்போலவே இருந்த வேறொருவன் உள்ளத்துக்குள் ஓங்கி ஆர்ப்பரித்ததை நினைக்கையில் இப்போதும் அவனுக்குச் சங்கடமாக இருந்தது. ஆச்சரியமாகவும் கூட! நிச்சயமாக அந்தப் பெண் மேல் துளி கூட காதல் எழவில்லை. அதை விருப்பம் என்றுகூட சொல்ல முடியாது. ஆசைக்கும் மேலே, இச்சிக்கவேண்டும் என்ற வெறி. எழுந்த வேகத்தில் மீண்டும் கடலுக்குள் செல்லும் ராட்சத அலை போல அவன் வெறியும் கூட அடங்கிப்போனது. அதன் பிறகு அவளைச் சந்திக்க நேர்ந்த ஓரிரு சந்தர்ப்பங்களில் வெகு இயல்பாக அவளை எதிர்கொள்ள முடிந்தது. இந்த அனுபவம் அதற்கு முன் எப்போதும் அவனுக்கு ஏற்பட்டதில்லை. எந்தப் பெண்ணிடமும் இதுவரை தனக்குக் காதலும் தோன்றியதில்லை என்ற உண்மை அவனுக்கு இந்த நேரத்தில் உறைத்தது. இனிமேலும் ஏற்படுமா? தெரியாது.
ஏன் இவ்வளவு நேரம் வெளியில் நின்றுகொண்டிருக்கிறோம்? அதுவும் அங்குமிங்குமாக ஊசலாடும் நினைவுகளுடன். அந்த மடத்தில் தனது அனுபவத்தின் இறுதி நாள் அது என்பதாலா? வேறு எதாவது ஒரு நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தபோது, பீட்டரும் லியோவும், ஏன் தலைமைக் குருவும் கூட இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறினார்கள். இந்தியாவில் எங்கு செல்வது? என அவன் கேட்டபோது, ஜப்பானுக்கு வந்தபோது இந்த மடத்திற்கு வரவேண்டும் என திட்டமிட்டு வந்தாயா என தலைமைக் குரு கேட்டிருந்தார்.
“நிச்சயமாக இல்லை. இந்த கியோட்டோ நகரத்தில் ஏராளமான புத்த மடங்கள் இருக்கின்றன என்று கேள்விபட்டிருக்கிறேன். அதில் ஏதாவது ஒரு மடத்தில் நான் தங்கி அனுபவம் பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.”
“இரண்டு வருட அனுபவத்துடன் இங்கு புத்த மதத்தைப் பற்றிய தெளிவு கிடைத்துவிட்டதா?”
“எதையும் தெரிந்துகொள்ளவேயில்லை. பிறகு எப்படித் தெளிவு கிடைக்கும்? நீங்கள் முதல் நாளில் சொன்ன மந்திரத்தின் பொருள் எவ்வளவு தியானித்தும் இன்று வரை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. தலைமைக் குரு வழக்கம்போல் மொளனமாய் புன்னகைத்தார். அப்போது குறுக்கிட்ட பீட்டர்,
“நான் பன்னிரெண்டு வருடங்களாக எனக்குக் கொடுக்கப்பட்ட மந்திரத்தைத் தியானித்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை.” என்றார். இந்த உரையாடலைச் சிந்தித்த நிமலோவுக்கு லேசாகச் சிரிப்பு வந்தது. இந்த இரண்டு வருடங்களில் ஒருமுறை கூட பொருள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று மந்திரத்தைச் சொல்லிப் பார்த்ததில்லை எனத் தோன்றியது. அதுவும் முதல் ஆறு மாதங்களில் தியானம் செய்வதாய் தூங்கியதும், கனவு கண்டதும், கனவில் புத்தர் வந்து சிரித்ததும், அவ்வப்பொழுது தூங்குபவர்களையும் கனவு காண்பவர்களையும் தலையில் குட்டி எழுப்புவதற்கென்றே நியமிக்கப்பட்டிருந்த குரு கடமை தவறாமல் அதைச் செய்தும் கூட தான் முழுமையாக தியானத்தில் ஈடுபட்டதில்லையென்று தோன்றியது. அங்கிருந்து புறப்படவேண்டுமென்ற எண்ணம் எழுந்த கடைசி வாரங்களில், தியானத்தில் முனைப்புக் காட்டினாலும், பெரிய பயன் ஒன்றும் ஏற்படவில்லை. இப்போது நூடுல்ஸ் விற்பவன் ஒருவன் வண்டியைத் தள்ளிக்கொண்டு அந்தப் பக்கமாக வந்தான். வண்டியை இவன் பக்கம் நிறுத்தியவன், “வேண்டுமா நூடுல்ஸ் உங்களுக்கு” என கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் மிகப் பணிவுடன் கேட்டான். வாங்கலாமா என்ற யோசனை ஒருகணம்தான். வேண்டுமென்ற பாவனையில் தலையசைத்தான். சூடான நூடில்ஸை ஆவி பறக்க கப்பில் நிரப்பிக்கொடுத்தவன், தயக்கத்துடன் குச்சியையும் சேர்த்துக் கொடுத்தான். ஸ்பூனில் பழக்கப்பட்ட தான் இதை உபயோகிக்க முடியுமா என்று யோசிக்கிறானோ என்று யூகித்தவன், லாவகமாக குச்சியால் எடுத்துச் சாப்பிட்டான்.  சந்தோஷமாகப் பார்த்த அவனிடம் கையிலிருந்த சில்லறையை கொடுத்தபோது, நூடில்சுக்கு உரிய பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியைக் கொடுத்தான். கப்பிலிருந்து சிந்திய நூடில்ஸை தான் உண்பதற்குரிய புழு என்று நினைத்து, பாய்ந்து வந்த கோழியைக் கண்டதும் இருவருமே சிரித்து விட்டார்கள். வண்டிக்காரர் வணங்கிச் சென்றதும், அந்த கோழியைப் பார்த்தான். கொத்திக் கொத்திப் பார்த்து அது புழு இல்லை என்று தெரிந்துகொண்டு வேறு பக்கம் சென்ற கோழி இவனுடைய உள்ளத்தில் பல சிந்தனைகளைக் குப்பையைக் கிளறுவதுபோல் கிளறிவிட்டுச் சென்றது. தன் தேடலின் பதில் இங்கு கிடைக்கும் என்று வந்தவன், இல்லை என்று இந்தியா செல்கிறோமோ? இந்தக் கோழியும் தானும் ஒன்றுதானோ என எண்ணிக்கொண்டான்.
இன்னொரு புதிய நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது? எப்படியிருந்தால் என்ன. எங்கிருந்தாலும் வாழ்வை சுகமாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணினால், நரகத்திலும் சந்தோஷமாக இருக்கலாம். ஆரம்பத்தில் தியானத்தைப் போலவே உணவுப் பழக்கமும் கூட கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், போகப் போக ரொட்டித் துண்டிகளுடன் பரிமாறப்பட்ட செர்ரி பழ ஜாமும், பெரிய கோப்பை நிறைய தரப்பட்ட காப்பியும் விருப்பத்திற்குரியதாய் மாறிப் போனது. அடிக்கடி பக்கத்திலிருந்த முடி திருத்த நிலையம் சென்று முகத்தில் தாடி வளராதபடி சவரம் செய்துகொண்டதும் அப்போது அங்கு பணிபுரிந்த இளம்பெண்கள், கன்னத்தையும் தோள்களையும் அழுத்தி மசாஜ் செய்தபோது உற்சாகம் கொண்டதும், எல்லாமே பிடித்தவைகளாகிப் போயின. அந்தப் பெண்கள் தன்னைத் தொட்டு மசாஜ் செய்தபோதும் தனக்கு எந்த ஈர்ப்பு ஏற்படவில்லை என இப்போது தோன்றியது. அவர்களும் அழகாகத் தானே இருந்தார்கள். யாரிடமும் விருப்பமும் காதலும் அங்கும் எழவில்லை. ஒரு வேளை இது இந்தியாவில் எழுமோ எண்ணிக்கொண்டிருந்தபோதே பீட்டரும், லியோவும், கே-சானும் வந்து சேர்ந்தார்கள்.
“புறப்படத் தயாராகிவிட்டாயா?” கேட்டது பீட்டர்.
“ஆமாம்.”
“இங்கிருந்து கொண்டு செல்லும் அனுபவம் உனக்கு பயனுள்ளதாக இருக்கும்.” என்றார் லியோ.
“தெரியவில்லை. வாழ்க்கையின் மையம் துயரம் என்று சொன்ன புத்தரின் தத்துவம் எனக்கு இன்னும் பிடிபடவில்லை. அவருடைய எட்டு வழி பாதையில் பயணப்பட விருப்பம். ஆனால், அந்த எட்டு வழிகளே விளங்கிக்கொள்ள முடியாததாக இருக்கும்போது, அதை வாழ்க்கையில் கடைபிடிப்பது எப்படி? புத்தரும் புத்தரின் போதனைகளும் அழகான பாடங்கள். உண்மையை நம்மை உணர்ந்துகொள்ளச் செய்பவை என்பது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால் அந்த அனுபவத்தை இங்கே நான் பெற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை இந்தியாவில் கிடைக்கலாம். கிடைக்காமலே போகலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. என் தேடல் மட்டும் தொடரும்.” என்றான் நிமலோ.
 “இந்தியாவில் யாரைப் பார்க்க வேண்டும்? எங்கு உதவி கிடைக்கும் என்ற தகவலை உனக்குச் சொல்லியிருந்தேனல்லவா” என்று பீட்டர் கேட்டதும்,
“ஆமாம், ஆனந்த் என்று ஒருவரைப் பற்றிக் கூறினீர்கள். அவருக்கு என் வருகை பற்றி தகவல் அனுப்பிவிட்டதாகவும் சொன்னீர்கள். தலைமைக் குருவை சந்தித்துவிட்டு உங்களிடம் விபரங்களை பெற்றுக் கொள்கிறேன்.” என்றான் பணிவுடன் நிமலோ.
அன்று மாலை அவன் புறப்படும்போது ஜப்பானிய மொழி ஆசிரியை சூ-கி வந்தாள், கூடவே அவள் மகளும். வாழ்த்துக்கள் என்று சூ-கி தெரிவித்தபோது, “நன்றி” என ஜப்பானிய பாஷையிலேயே இருவருக்கும் வணக்கம் தெரிவித்தான். வெளிக் கதவுக்கு வந்தபோது, தலைமை குருவுடன் முதல் நாள் பார்த்த அதே பாம்பு வந்து கொண்டிருந்தது. குனிந்து அதனைத் தடவித் தட்டிக் கொடுத்த நிமலோ, அதன் அருகே நெருக்கமாகச் சென்று ஏதோ கூறினான். தலைமைக் குருவிடம் விடைபெற்று பீட்டர், லியோவுடன் புறப்பட்டு ஒசாகா கன்சாய் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் வழியில் ஏராளமான சுங்கச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றரை மணி நேரத்தில் போய்விடலாம் என லியோ கூற, தாமதமானாலும் பரவாயில்லை. விமனாத்தை பிடிக்க முடியவில்லை என்றால் கடல் மார்க்கமாகச் செல்ல வேண்டியதுதான்” என்றான் நிமலோ சாதாரணமாக.
“கடல் பயணம் உனக்கு ஒத்துக்கொள்ளுமா?”
“தெரியவில்லை. ஆனால் கடல் பிடிக்கும். இதுவரை கடல் பிராயணத்திற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை” என்ற நிமலோவிடம், “வாழ்வைத் தேடிச்செல்கிறாயா?” என வினவினார் பீட்டர்.
“வாழ்வில் என்ன இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளச் செல்கிறாயா?” எனக் கேட்டார் லியோ.
“தெரியவில்லை.” தலையசைத்த நிமலோ, “இந்தியாவில் நான் சந்திக்க வேண்டிய ஆனந்த் உங்கள் நண்பரா?” எனக் கேட்டான்.
“இல்லை. என் நண்பருடைய நண்பர்.”
“உங்கள் நண்பர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?”
“அவரும் இங்கிலாந்துக்காரர்தான்.”
“உங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு விஷயம் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.”
“என்ன?”
“ஃப்ரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கு ரயில் மார்க்கமாக வருவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா?”
“அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.”
“என்னுடைய அப்பாவுக்கு இங்கிலாந்துக்குச் செல்வது ஒருபோதும் பிடித்தமானதாக இருந்ததில்லை. அவர் வந்ததும் இல்லை. நானும் அம்மாவும் போக வேண்டுமென்றாலும் கூட ரயில் மார்க்கமாக செல்லவே கூடாதென்று நிபந்தனையிடுவார்.”
“அது ஏன் என்று உனக்குத் தெரியவில்லையா?” பீட்டர் சற்று சப்தமாகச் சிரித்தார். பிறகு ஃப்ரான்ஸிலிருந்து இங்கிலாந்து வரும் ரயில்கள், கடைசியாக வந்து சேரும் ரயில் நிலையத்திற்கு, எங்கள் நாட்டுக்காரர்கள் வைத்திருக்கின்ற பெயர் ‘வாட்டர்லூ’. இப்பொழுது புரிந்திருக்குமே உனக்கு, உன் அப்பாவின் நிபந்தனைக்கான காரணம்...”
“மாவீரன் நெப்போலியனையும் ஃப்ரான்ஸையும் வாட்டர்லூ போரில் வெற்றி கொண்டதைக் கொண்டாடவா அந்தப் பெயர்?”
“ஆமாம்.” என்ற பீட்டர், வெற்றி மயக்கமும், தோல்வியின் கலக்கமும் மனிதர்களிடம் இயல்பாக இருக்கின்றன. தோல்வி கண்டவனை இழிவு படுத்துகிறோம் என்பதாக எண்ணிக் கொண்டு வெற்றி பெற்றவன் அந்த வெற்றியின் அடையாளமாக ஏதோ ஒரு செயலைச் செய்கிறான். அந்த மமதையைத் தாங்கிக் கொள்ள முடியாத தோல்வியுற்றவன், வெற்றி பெற்றவனையும், அவன் பெற்ற வெற்றியையும் வெறுக்கிறான். அதுபோலத்தான் இந்த வாட்டர்லூ ரயில் நிலையக் கதையும்; உன்னுடைய அப்பாவின் வெறுப்பும்... மேலும், யாரையும் நாம் மாவீரன் என்று கொண்டாட வேண்டிய அவசியமில்லை. புலனடக்கம் இல்லாதவர்களும், ஆசைகளை துறக்காதவர்களும் எப்படி மாவீரர்கள் ஆக முடியும்?” என்றார்.
“நீங்கள் சொல்வது சரிதான்.”

விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும், பீட்டரிடமும் லியோவிடமும் நன்றி சொல்லி விடைபெற்ற நிமலோ, விமானத்திற்குள் ஏறியதும் சற்று நேரம் கண்களை மூடியிருந்தான். விமானம் புறப்பட்டு ஒசாகா புள்ளியாய்த் தெரிய ஆரம்பித்த சிறிது நேரத்திற்கொல்லாம் “பருகுவதற்கு என்ன வேண்டும்?” என அருகில் வந்து பெரிய புன்னகையுடன் விசாரித்த விமான பணிப் பெண்ணிடம், “குளிர்ச்சியாக இரண்டு பியர் பாட்டில் வேண்டும்” எனச் சொல்லிவிட்டுக் காத்திருந்தான்.

No comments:

Post a Comment