Tuesday, May 20, 2014

அத்தியாயம் - 6

மொட்டவிழ்ந்திருந்த முல்லைப் பூக்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தையின் முகம் போல மலர்ந்திருக்க, முல்லைக்கொடியின் அருகில் நின்று பத்து மணித்துளிகளுக்கு மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரி, ஒரு பூவையாவது பறித்து அதன் வாசத்தை முகர்ந்துவிடலாமா என்று மனதிற்குள் விவாதம் நடத்திக்கொண்டிருந்தாள். பூக்களைப் பறிக்கலாமா வேண்டாமா என்று அவள் தயங்குவதற்குக் காரணம் இருந்தது. விடுதியில் தங்கள் அறைக்கு வெளியே படர்ந்திருந்த அந்த முல்லைக் கொடியிலிருந்து பூக்களைப் பறிப்பதை சங்கவை பார்த்துவிட்டால் உண்டு-இல்லை என்று ஆக்கிவிடுவாள். செடியில் இருக்கும்பொழுதுதான் பூக்களுக்கும் செடிக்கும் அழகு. பச்சை இலைகளுக்கு நடுவே வெவ்வேறு நிறங்களில் பூத்திருக்கும் எந்தப் பூவைப் பார்த்தாலும் கண்களுக்கு அது விருந்துதான். அவற்றைப் பறித்தால் விரல்களைப் பிடுங்குவதுபோல எனக்கு வேதனையாக இருக்கிறது என சங்கவை அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். அவற்றைப் பறிக்கவேண்டும் என்பதில் ஈஸ்வரிக்கும் ஆர்வம் இல்லை. ஆனால், வீரியமான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டினால் பூமித்தாய் மலட்டுத்தன்மை அடைந்துவிட்டாள் என்பதோடு பூக்களில் கூட நல்ல மணத்தை உணரமுடியவில்லை என்று ஈஸ்வரியின் அக்கா கலைவாணி தங்கையிடம் பலமுறை வருத்தப்பட்டிருக்கிறாள். அதனால் எந்தப் பூவைப் பார்த்தாலும், பறித்து வாசத்தை நுகர்ந்து ஆய்வு செய்வதில் பெரும் விருப்பம் ஈஸ்வரிக்கு. சரி, பறிக்க வேண்டாம், பக்கத்தில் போய் முகர்ந்து பார்க்கலாம் என்றால் கூட மனிதர்களின் சுவாசம் இலைகளுக்கும் பூக்களுக்கும் பெரிய கேடு. நம் காற்று பட்டால் அவை கருகிக்கூடப் போய்விடும் என்று அதற்கும் தடை விதித்திருந்தாள் சங்கவை.
“ச்ச... பூவுல வாசம் இருக்கா - இல்லையான்னு கண்டுபிடிக்கிறதுக்குக் கூட உரிமை இல்லாமப் போச்சு. என்ன செய்றது சங்கவை கோவிச்சுக்குவாளே...” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்ட ஈஸ்வரி, பக்கத்தில் ஏராளமாகப் படர்ந்திருந்த கனகாம்பரச் செடிகளையும் வாடாமல்லிச் செடிகளையும் பார்வையிட்டாள். ஊதா நிறத்தில் மலர்ந்திருந்த டிசம்பர் கனகாம்பரத்திற்குப் பக்கத்திலேயே சிவப்புக் கனகாம்பரமும் கொத்துக் கொத்தாய் பூத்திருந்ததால், அதற்கருகிலேயே வாடாமல்லிப் பூக்கள் செறிவாகக் கொட்டிவைக்கப்பட்ட அடர்த்தியான நீல முத்துக்கள் போல பரவிக் கிடந்ததால் வண்ணங்களின் கலவையில் தன்னை மறந்து நின்றிருந்தாள். கனகாம்பரச் செடியில் வந்து நின்ற பட்டாம்பூச்சி இவள் கவனத்தைக் கவர்ந்தது. சற்றுப் பெரிதாகப் பல நிறங்களில் இருக்கும் பட்டாம்பூச்சியைக் காண்பது அரிதாகப் போய்விட்டது. இதுபோன்ற, கருப்பு நிறத்தில் சிறிய வடிவத்தில் இருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன என எண்ணியவள், மேலும் இரண்டு தும்பிகளைப் பார்த்தாள்.
“ரொம்ப வித்தியாசமாத் தெரியுதே! அக்காவுக்குத் தேவைப்படுமோ என ஆர்வத்துடன் பதுங்கிப் பதுங்கி அதன் அருகில் சென்றவள், “சங்கவை இருக்காளா ஈஸ்வரி என்ற குரல் கேட்டுக் கவனம் சிதறத் திரும்பினாள்.
எபி, கையில் பெரிய பார்சலுடன் நின்றுகொண்டிருந்தான்.
“கொஞ்ச நேரத்தில ஆடிப்போய்ட்டேன். சங்கவைங்கிற பேரக் கேட்டாலே சாவுக்கு சங்கு முழங்குற மாதிரி பயமா இருக்கு. எத்தனைப் பூவப் பறிச்சன்னு கேள்வி கேட்டே கொன்னுருவா ராட்சசி. நான் ஒண்ணும் பூவெல்லாம் பறிக்கலப்பா. பூச்சியைத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன். உன் ஃப்ரெண்டு கிட்ட சொல்லு” என்றாள் எபியிடம் முகத்தைப் பார்த்து சுழித்துப் பழிப்பு காட்டியபடி.
“உங்க பிரச்சனைக்கு நடுவில ஏன் என்ன இழுக்கிற? நான் சொன்னா மட்டும் கேக்கப்போறாளா? எங்க ரெண்ட பேருக்கும் நடுவில நீ யாருன்னு என்ன கேள்வி கேட்பா. அவ கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்றதுக்குள்ள உலகம் விடிஞ்சிரும்.” என்றான் எபி.
“அப்படின்னா அவ கேள்விகளின் நாயகி அப்படீங்கிறீங்களா?”
இதற்கு எபி பதில் சொல்வதற்குள், “யார் கிட்ட பேசிட்டிருக்க ஈஷு?” கேட்டபடி வந்து நின்றாள் தமிழ்ச் செல்வி.
“க்ஹும்... தெரியாமத்தான் வந்தியாக்கும்! கண்ணு முன்னாடி ஆறு அடி உயரத்தில அம்சமா நின்னுட்டிருக்கிற எபிங்கிற ஆபிரகாமோட குரல் கேட்காமத்தான் இங்க வந்தியா?” தமிழ்ச் செல்வி என்ன சொல்வதென்று தெரியாமல் முகத்தை வேறுபுறம் திருப்பினாள். அதே வேகத்தில் எபியின் பக்கம் திரும்பி அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அடி வயிற்றிலிருந்து ஜிவ்வென்று கிளம்பிய உணர்வு, பிறகு உடம்பு முழுவதும் பரவ, உணர்ச்சிகளின் வேகத்திற்குக் கட்டுப்பட்டு நின்ற உடம்பையும் உள்ளத்தையும் கடிந்துகொள்ள முடியாமல் செய்வதறியாது நின்றிருந்தாள் தமிழ்ச்செல்வி. ஒவ்வொரு முறை நேரடியான சந்திப்பின்போதும், அது சில நிமிடங்களாக இருந்தாலும் அவளிடம் ஏற்படுகின்ற இந்த ரசாயான மாற்றம் எபிக்கு ஒரு வெற்றிக் கொண்டாட்டமாகத் தோன்றும். இருவரையும் மாறி, மாறிப் பார்த்த ஈஸ்வரி அந்தச் சில கண மவுனத்தைக் கலைப்பது போல,
“என்ன சார், கையில பார்சல்? யாருக்கு?” என எபியிடம் கேட்டாள்.
சுதாரித்துக்கொண்ட எபி, “இது சங்கவைக்குக் கொடுக்க வேண்டியது. கொஞ்சம் சாக்லேட்டும், அவளுக்கு பிடிச்ச ஸ்வீட்சும் இருக்குது.”
“ஓ! காந்தள் பூவோட வந்துட்டீங்களோன்னு நினைச்சேன். ஆனா, சங்கவைக்குக் கொடுக்கிறதுக்கில்ல.” என்றாள் ஈஸ்வரி. அவள் பேசியது எபிக்குப் புரியவில்லை. ஆனால், தமிழ்ச் செல்வி திகைத்தாள். சில நாட்களுக்கு முன், தன் கனவில் ‘இதோ காந்தள் மலர் என் கையுறைப் பொருள்’ என்று எபி வந்து நின்றது நிஜத்தில் இவளுக்கு எப்படித் தெரியும்! யோசித்துக்கொண்டிருக்கும்போதே சங்கவை வந்துவிட்டபடியால், யோசனை தடைபட்டது.
“சங்கு, பாதி ஸ்வீட்ஸ் எனக்குக் கொடுத்துரு. தமிழுக்கு அதெல்லாம் வேண்டாம். சிலர் சிரிப்பைப் பார்த்தாலே அவளுக்கு இனிப்பு சாப்பிட்ட மாதிரி இருக்கும்.” என்று சொல்லிய ஈஸ்வரி, எபியைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தபடி உள்ளே போய்விட்டாள். அவளுடைய வார்த்தைகளை முழுவதும் காதில் வாங்கிக்கொள்ளாத சங்கவை, “இந்த ஸ்வீட் பாக்ஸ கொடுக்கிறதுக்கா இவ்வளவு தூரம் வந்த? கொஞ்சம் புக்ஸ் கேட்டனே என்ன ஆச்சு?” என்று எபியிடம் கேட்டாள்.
“எங்கயும் கிடைக்கல. ஆர்டர் கொடுத்தா வாங்கித் தர்றதா மைலாப்பூர்ல ஒரு கடையில சொன்னாங்க...”
“ஆர்டர் கொடுத்திட்டியா இல்லியா?”
“முழுசா சொல்லவுடமாட்டியா? நடுவுலயே கேள்வி கேக்குறது...  ஆர்டர் கொடுத்தாச்சு. அடுத்தவாரம் கெடச்சிரும். அப்புறம் இன்னொரு விஷயம்.”
 “என்ன?”
“ஒன்னோட அண்ணன் முக்கியமான தகவல் சொல்லச் சொன்னார்.”
“அவருக்கு என்லைட்டன்மென்ட் கிடைச்சிருச்சா? இல்ல, அதுக்காக வெளிநாட்டுல போய் தியானம் பண்ணப் போறாரா?”
“ம்... அண்ணன்னு ஒரு மரியாதை கெடையாது. அவரோட ஃப்ரெண்டு ஒரு புத்தத் துறவி இந்தியாவுக்கு வர்றாராம். திருநெல்வேலியில ஒங்க வீட்ல வந்து கொஞ்ச நாள் தங்கப் போறாராம். அவரு ஃப்ரெஞ்ச்காரர்ங்கிறதால ஒன்னோட உதவி தேவைப்படும்னு அண்ணன் நெனைக்கிறாரு. நாலு நாள் லீவு போட்டுட்டுப் போ. நானே டிக்கெட் புக் பண்ணிடுறேன்.” இதைக் கேட்டு சங்கவை பதில் எதுவும் சொல்லாமல் பக்கவாட்டில் இருந்த முல்லைக்கொடியைப் பார்த்தாள். இருள் முற்றிலும் பரவாத அந்த நேரத்தில் கொடியில் மரகதப் பச்சையில் பதிக்கப்பட்ட முத்துக்கள் போல தெரிந்தன பூக்கள்.
“என்ன பதிலையே காணோம்?”
“நெறைய நேரம் புடிக்காததையெல்லாம் செய்ய வேண்டியிருக்கு. அப்போ, அந்தச் செயல்கள் முதுகில் கட்டாயமா ஏற்றப்பட்ட பாரச் சுமை போலத் தெரியுது.”
“கிழவி மாதிரி தத்துவம் பேசுற. தத்துவப் பேராசிரியர் தங்கச்சியாச்சே!”
“டிக்கெட் புக் பண்றதப் பத்தி நான் யோசிச்சுச் சொல்றேன். அப்புறம் நான் ஒண்ணும் மொழிபெயர்ப்புப் பணியெல்லாம் செய்யப்போறதில்ல.”
இவர்கள் உரையாடலைக் காது கேட்டுக்கொண்டிருந்தாலும் தமிழ்ச்செல்வியின் மனதிற்குள் அவையெதுவும் பதியவில்லை.  எபியின் முகமும் சிரிப்பும் தவிர... எபியின் குரல் கூட எவ்வளவு இதமாக இருக்கிறது என எண்ணியவள், சங்கவையின் கையைத் தட்டிக் கூப்பிட்டாள். அவள் திரும்பியதும் “நான் போறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல முயன்றாள். ஆனால், மீண்டும் திரும்பி வந்து “புதுசா ஒரு பாட்டு ரெக்கார்ட் பண்ணதா சொன்னியே, அது கெடைக்குமான்னு கேளு.” என்றாள் சங்கவையிடம்.
“என்ன பாட்டு? யாரு பாடினது?” என்று தன் நெற்றியைச் தட்டியபடி கேட்ட சங்கவை, சட்டென்று நினைவு வந்தவளாக, “எபி ஒன்னதான் கேக்குறா. அதான் ‘ஆகாரின் அழுகுரல்னு’ பாடியிருக்கியே... அந்த பாட்டு. ம்... உன் பாட்டுக்கும் ஒரு ரசிகை என்ற சங்கவை, தமிழ்ச்செல்வியிடம் திரும்பி, அது என் மொபைல்லயே பதிவு பண்ணியிருக்கேன். அதுலயிருந்து எடுத்துக்கோ.” என்றாள். அதன் பிறகும் தயக்கத்துடன் அங்கயே நின்றுகொண்டிருந்த தமிழ்ச்செல்வியைப் பார்த்து, “இந்தத் தமிழ்கிட்ட இதான் பிரச்சனை. எதையும் வெளிப்படையாச் சொல்றதில்ல. தயங்கிகிட்டே நிக்குறா பாரேன். வேறென்ன தமிழ்” என்று அவள் கன்னத்தில் கிள்ளியவள், எபியிடம், “ஆமா நீங்க ரெண்டுபேரும் நல்லா அறிமுகமாயிட்டீங்கல்ல. அப்புறம் இவ ஒங் கிட்ட நேரடியா பேச வேண்டியதுதான. தமிழுக்குத் தைரியமே இல்லையோ என்னமோ? எதுக்கும் ஜாக்கிறதை தமிழ். கிறிஸ்தவத்தை ஒங் கிட்ட திணிச்சிரப் போறான்” என்றாள். இப்பொழுது தமிழ்ச் செல்வி, “அசைன்மென்ட் முடிக்கணும்.” என்று சொல்லிவிட்டு நிஜமாகவே உள்ளே சென்றுவிட்டாள். அறையில் ஈஸ்வரி கொசு விரட்டுவதற்கு முனைந்து நின்றாள். ‘நல்லவேளை இவ கொசு கூட போராடிக்கிட்டிருக்கா. இல்லனா வாயக் கிளறுவா. தப்பிச்சோம்’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட தமிழ்ச்செல்வியின் மனதில் மீண்டும் அந்தக் கேள்வி வட்டமிட ஆரம்பித்தது: ‘இவளுக்கெப்படி என் கனவில் வந்த காந்தள் மலர் விஷயம் தெரியும்? இவளிடமே கேட்டு விடலாமா...? அய்யோ, வேண்டவே வேண்டாம்.’
பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு, “அசைன்மென்ட் எழுதப்போறேன் ஈஷு” என நாற்காலியில் அமர்ந்தாள் தமிழ்ச்செல்வி.
“ஓ கவிதை எழுதப் போறீயாக்கும்னு நெனச்சேன்.”
தமிழ்ச்செல்வி இதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தாள்.
“ம்ம்ம்... நெருடலான விஷயம் ஏதாவது கேட்டா, மாட்டிக்கிடுவோமோன்னு வாயை இறுக மூடிக்கிற; இல்லன்னா சிரிச்சு மழுப்புற.” என்றாள் ஈஸ்வரி, கையில் கடித்த கொசுவை அடித்தபடியே.
தமிழ்ச்செல்வி எழுதத் தொடங்கியிருந்தாள்.
“நாங் கூட ரெக்கார்ட் ஒர்க் முடிக்கணும்.” என்று ஈஸ்வரியும் நோட்டை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள்; ஆனால், கவனம் அதில் பதியவில்லை. பேனாவைத் திருப்பி வாயில் வைத்தபடி, “தமிழு, சங்கு வந்தா ஸ்வீட் சாப்பிடலாம்னு பாத்தா, நின்னு கத அளந்துட்டிருக்கா. ஒன்னோட பங்கையும் எனக்குக் கொடுத்துரு.” என்றாள்.
“மொத்த ஸ்வீட்டையும் நீயே எடுத்துக்க.”
“தாராள மனசுக்கு நன்றி தமிழே!” என நெஞ்சில் கை வைத்து தலையைக் குனிந்து அவள் பேசிய விதம் பார்த்து தமிழுக்குச் சிரிப்பு வந்தது. சங்கவை இப்போது உள்ளே வந்தாள். வந்ததும் பார்சலைப் பிரித்து முதலில் ஈஸ்வரியிடம்தான் கை நிறைய சாக்லேட்டுகளைக் கொடுத்தாள். அவற்றை வாங்கி அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்த ஈஸ்வரி, “ஃபாரீன் சாக்லேட் போலத் தெரியுது!” எனக் கேட்டாள்.
“ஆமாம், எபியோட கம்பெனில வேலை செய்ற அவன் ஃப்ரெண்டு ஜெர்மெனி போய்ட்டு வந்தாராம். அவர் வாங்கிட்டு வந்தது.” என்ற சங்கவை தமிழ்ச்செல்வியிடமும் சாக்லேட்டுகளைக் கொடுத்துவிட்டு பார்சலுக்குள் தனியாக இருந்த இன்னொரு பெட்டியிலிருந்த லட்டையும் கேசரியையும் வெளியே எடுத்தாள். அதைப் பார்த்த ஈஸ்வரி,
“லட்டு ஃப்ரான்ஸ்ல இருந்தும் கேசரி இங்கிலாந்துல இருந்தும் வாங்கிட்டு வந்ததா?” எனக் கேட்டாள்.
“கண்டிப்பா ஒனக்குக் கிடையாது. கேசரி தமிழுக்குப் பிடிக்கும்னு வாங்கிட்டு வந்ததா எபி சொன்னான்.”
“ஓ! எனக்குக் கூடத்தான் பொரி உருண்டையும் கோயில்பட்டி கடல முட்டாயும் பிடிக்கும். வாங்கித் தரத்தான்பா ஆளில்ல” என்ற ஈஸ்வரி மனதிற்குள் ‘தமிழுக்குக் கேசரி பிடிக்கும்கிறது எபிக்கு எப்படி தெரியும்னு இந்த மக்கு யோசிக்குதா பாரேன்’ என்று எண்ணமிட்டாள்.
தமிழ்ச்செல்வி கேசரியைக் கையில் எடுத்தபோது தன் இதயம் முழுக்க இனிப்புப் படர்வதை உணர்ந்தாள். தன்னையும் நினைவில் வைத்துக்கொண்டு தனக்காகத் தனக்குப் பிடித்ததை எபி வாங்கி வந்திருக்கிறான் என்பது அவள் உள்ளத்திற்குள் பெரும் இன்பக் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த உணர்ச்சிகள் முகத்தில் தெரிந்துவிடாதபடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பெரிதும் முயன்று கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி.
“கேசரி நல்லாயிருக்கா? எனக்குங் கொஞ்சங் குடேன்” என்று எழுந்து வந்து தமிழ்ச்செல்வியின் கையிலிருந்து கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொண்ட ஈஸ்வரி, “எபி மாதிரியே ஸ்வீட்டா இருக்குப்பா.” என்றாள். பிறகு, அவள் எழுதிக் கொண்டிருந்த பேப்பரைப் பார்த்துவிட்டு, “என்ன தமிழ் இங்லீஷ் அசைன்மென்ட்ட தமிழ்ல எழுதிட்டிருக்க?” என ஆச்சரியத்துடன் வினவினாள்.
“அவள சும்மா தொந்திரவு பண்ணாத ஈஷு. வா, நாம ரெண்டுபேரும் செஸ் விளையாடலாம்.”
“சரிதான் சங்கு. ரெக்கார்ட் ஒர்க் முடிக்கலன்னா நாளைக்கு அந்தக் கலாகுமாரி இந்த ஈஸ்வரி மகாராணிக்கு செக் வச்சு சங்கு ஊதிருவா.”
“சரி அப்ப ஒன்னோட விளையாட்டையும் சேர்த்து நானே விளையாடுறேன்.” என்ற சங்கவை, செஸ் போர்ட்டையும் காய்களையும் எடுத்துக்கொண்டு விளையாடத் தொடங்கினாள்.
ஈஸ்வரியும், சங்கவையும் தூங்கச் செல்லும்வரை தமிழ்ச்செல்வி எழுதிக் கொண்டிருந்தாள். “கண்ண சொக்குதுப்பா. தூங்கும்போது மறக்காம லைட் ஆஃப் பண்ணீடு” என்று ரெக்கார்ட் நோட்டை ஓரமாக வைத்துவிட்டுத் தூங்கிய சில மணித் துளிகளிலேயே “அந்தப் பூச்சிய கையில எடுக்காதக்கா. கடிச்சு வைக்கப் போவுது” என்று உளறத் தொடங்கியிருந்தாள் ஈஸ்வரி.
நள்ளிரவில் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்துகொண்ட ஈஸ்வரி, விளக்கு அணைக்கப்படாமல் இருப்பதையும் தமிழ்ச்செல்வி மேஜையிலேயே எழுதிய வாக்கில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருப்பதையும் கவனித்தாள். அவளை எழுப்ப முயற்சிக்கையில் அவள் எழுதி வைத்திருந்த அந்தக் கவிதை கண்களில் பட்டது. அதை எடுத்து தன் ரெக்கார்ட் நோட்டில் வைத்துவிட்டு, தமிழ்ச் செல்வியை மெல்ல எழுப்பி, கட்டிலில் கொண்டுபோய்ப் படுக்க வைத்தவள், தண்ணீரைப் பருகிவிட்டு சாவகாசமாகத் தன் படுக்கையிலமர்ந்து அந்தக் கவிதையைக் கையில் எடுத்தாள். ‘கொங்கைகள் வேண்டும்’ என்ற தலைப்பைப் பார்த்ததும் புருவங்கள் கேள்விக் குறியாய் உயர்ந்தன. ‘இந்தத் தலைப்பில் கவிதையா? தமிழ் என்ன எழுதியிருக்கிறாள்?’ எண்ணியபடியே வாசிக்கத் தொடங்கினாள்
‘கொங்கைகள் வேண்டும்’
வானம்
கறுப்புக் குடை பிடித்திருக்க
இரவெல்லாம்
கொட்டிய மழையில்
மண் சுவருக்கு வெளியே
முளைத்திருந்த
குட்டைக் காளான்கள்
நான்காவது
கண்டிப்பாக
ஆண்தான்
அசலூர் ஜோசியக்காரன்
அடித்துச் சொன்னபிறகும்
இரட்டையாய் பிறந்திருந்த
தங்கச்சிப் பாப்பாக்களின்
விரல்களைப் போலவே
மெத்தென்றிருந்தன

நேற்று வரையிலும்
நெஞ்சுக்கு ஏறிய
வயிற்றுப் பாரத்தோடு
முதுகு நிமிராது
பனிக்குடம்
உடையும் வரை
பீடிசுற்றி,
பெற்றுப் போட்ட
ரெண்டும் பெட்டை
என்றதும்
ஜன்னி கண்டு
விழுந்தாள்.

உள்ளுர் மருத்துவச்சி
கைவிரித்த பிறகும்
கையில் காசில்லை
என்று
காணாமல் போய்விட்டான்
மலையாண்டி
பெரண்டை ஊறிய
கள் தலைக்கேறியதும்
மூதேவி!
ரெண்டு மூதேவிகளை
பெத்துப் போட்டுட்டா
சாமியாடி
சாமியாடி
மலையேறிய அப்பனின்
கண்ணைக் குத்தச் சொல்லி
எசக்கி அம்மனிடம்
வேண்டிக் கொண்ட
பேச்சிக்கு
ஈரக்காளான்
ஸ்பரிசம்,
தங்கச்சிப் பாப்பாக்களை
கண்ணுக்குள் கொண்டுவர
நாடா இல்லாத
முக்கால் பாவாடையை
இடுப்பில் இறுக முடிந்து
ஒரே பாய்ச்சலில்
குடிசையில் நின்றாள்.

கோணிப் பாயில்
விறைத்துப் போய்க்
கிடந்த செல்லாயி!
ஒன்ன நிர்க்கதியாக்கிட்டுப்
போய்ட்டாளே
மாரில் அடித்துக்கொண்ட
பெண்கள்!

வைசூரி கண்டு
மருந்தில்லாமல்
தங்கை மாரி
சாமியிடம் சென்றபோது
செல்லாயி அழுதது
ஏனோ நினைவுக்கு
வந்தது பேச்சிக்கு

பறச்சேரி சுடுகாட்டில்
செல்லாயி புதையுண்ட பிறகும்
புழுதி மண்ணை
தலையிலிறைத்து
ஒப்பாரி வைத்த
மலையாண்டி
மீண்டும் மீண்டும்
சாமியாடி
மலையேறினான்.
ஈரமான
துணித் தொட்டிலில்
வீறிட்ட
தங்கச்சிப் பாப்பாக்களுக்கு
யார் பால் கொடுப்பார்கள்?

குழந்தைகள்
தாமாகவே
சாமியிடம் செல்லும்வரை
உயிரோடு
விட்டிருக்கிறார்கள்
என்று
எட்டு வயது
பேச்சியின்
புத்திக்கு எட்டவில்லை

மாராப்புக்குள்
மாரியை
சாய்த்துக்கொண்டு
பேச்சியின்
தலைகோதும்
செல்லாயி
மறுபடி
பிறக்கமாட்டாளோ
இசக்கி அம்மா
எனக்காவது
கொங்கைகளைக்
கொடு தாயே!
பேதலித்துப் புலம்பினாள்
பேச்சி.
முதலில் வேகமாக கவிதையை வாசித்தவள், திரும்பத் திரும்ப அதைப் படித்தாள். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ‘எவ்வளவு ஆழமாக எழுதியிருக்கிறாள்!’ எனத் தமிழின் ஆற்றலை வியந்துகொண்டிருந்தாள் ஈஸ்வரி.
“லைட்ட போட்டுக்கிட்டு என்ன பண்ணிக்கிட்டிருக்கிற ஈஷு? வியர்த்துக் கொட்டுது” என்று கண்ணைத் திறக்காமலேயே குளியலறைக்குச் சென்று உடம்பெல்லாம் நனைத்துக் கொண்டு வந்த சங்கவை, வேதப் புத்தகம் படிப்பதுபோல ஈஸ்வரி வாசித்துக் கொண்டிருந்த பேப்பரை அருகில் சென்று பார்த்து, “தமிழுடைய கவிதை...”, பிரமிப்பு விலகாத முகத்துடன் ஈஸ்வரி அவளிடம் அதைக் கொடுத்தாள். ஒரே மூச்சில் வாசித்த சங்கவை, மீண்டும், மீண்டும் ஈஸ்வரியைப் போலவே வாசித்துக் கொண்டிருந்தாள்.
மறுநாள் காலையில், “கவிதையைக் கூட கதை மாதிரி எழுதுற தமிழு! எப்படி ஒன்னால இவ்வளவு அழகா, இத்தன அற்புதமா எழுத முடியுது?” என்று ஈஸ்வரி கேட்க, சங்கவையும் அதை ஆமோதித்து, தமிழ் என்ன சொல்லப் போகிறாள் என ஆவலுடன் பார்த்தாள்.
“நான் எழுதினது ஊர்ல பாத்ததும், மனசுல பதிஞ்சதும்; உண்மையான வாழ்க்கையை நாம எழுதினா அது நல்ல கவிதை அல்லது கதையா மாறுது. வெறும் வறட்சியான கற்பனையில உயிர் இருக்காது.” என்றாள்
“இந்தக் கவிதைக்காகக் கண்டிப்பா ஒனக்குப் பெரிய பரிசாக் கொடுக்கணும்.”
“அப்படின்னா பூவரசம் பூ பறிச்சு குடு ஈஷு.” என்றாள் தமிழ்.
ஈஸ்வரியுடன் சங்கவையும் புரியாமல் பார்க்க, சிறு வயதிலிருந்தே தனக்குப் பூவரசம் பூ மிகவும் பிடிக்கும் என்றும், தான் எதை எழுதினாலும், ஏன் கிறுக்கியே கூட வைத்தாலும் எழுதப் படிக்கத் தெரியாத அவள் ஆத்தா யாரையாவது மரத்தில் ஏற வைத்து, பூவரசம் பூ பறித்துத் தருவாள் என சிரித்தபடியே கூறினாள் தமிழ்ச்செல்வி.

- அத்தியாயம் 6 முற்றும் -

No comments:

Post a Comment