Tuesday, May 20, 2014

அத்தியாயம் - 2

‘அம்மா...!’ அடி வயிற்றிலிருந்து ஓங்கி உரக்க எழுந்த அன்பின் அடையாளச் சொல், தொண்டைக்கு மேல் குரல் வராமல் அங்கேயே அடைபட்டுக்கொண்டது. பயமும் பதற்றமும் தொற்றிக் கொண்டதால், உடல் உறைந்து போனது போல் சில்லிட்டது. இமைகளைப் பிரிக்க இயலவில்லை. கண்கள் கனத்தன. இதயம் நெஞ்சுக்கு வெளியே துடிப்பது போல தாறுமாறான வேகம் காட்டியது. தரையோடு தொடர்பற்றுப் போய் அந்தரத்தில் ஊசலாடுவது போல உணர்வு! தெளிவாகத் தெரிந்த ஆகாயத்தின் நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவே முரண்பட்டு நின்ற மழை மேகத்திலிருந்து நீண்டு வந்த கை ஒன்று, தன்னைப் பிடித்து இழுப்பது போலவும், ஆனால், எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விட்டுவிடலாம் போலவும் திகில் சூழ்ந்தது.
கனவுக்கும் நனவுக்கும் வித்தியாசம் உணர இயலாத அந்தப் புதிரான பயணத்திலிருந்து விடுபட எத்தனித்தாள் சங்கவை. வியர்வையில் நனைந்திருந்த போர்வையை விலக்கி, மடங்கியிருந்த கால்களை நீட்டி உடனே எழுந்துகொள்ள முடியவில்லை. வெகு பிரயாசைப்பட்டுக் கண்களைத் திறக்க முயன்றாள். ஆனால், அவை இருளைப் பார்க்க மறுப்பதுபோல் மீண்டும் மூடிக்கொண்டன. விரல்களால் அழுத்தித் தேய்த்தாள். இப்பொழுது மூடாமல் விடப்பட்டிருந்த, அல்லது மூட மறந்திருந்த வலது பக்க ஜன்னல் வழியே பொழிந்த நிலவின் உபயத்தில் தன்னிலை பெற்று அறையைப் பார்க்க முடிந்தது.
என்ன கனவு இது! அந்தக் குழந்தை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் போது, தாமே நீரில் மூழ்கி தத்தளிப்பது போல் உடம்பு பதறியதே! தேவதைக் கதைகள் போல, நீண்ட அந்தக் கனவில் வந்து சென்ற, தாம் இதுவரை எங்குமே சந்தித்திராத மனிதர்கள் தன்னோடு ஒட்டி உறவாடி வாழ்ந்தது போல் உணர்வு ஏற்பட்டதே! பிரபஞ்சத்தின் ஊற்றுக் கண்ணோடு தன்னை இணைத்துக் கொண்டதுபோல பரவசத்தை ஏற்படுத்திய இந்தக் கனவின் பொருள் என்ன? ஏதோ ஒரு தொலைதூரப் புள்ளியைத் தொட்டுவிடும் அவசரப் பயணம் போல வந்துபோன கனவின் முடிவும் விளங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. இருதயத்தின் படபடப்பு இன்னமும் கூட ஓயவில்லை. எழுந்து விளக்கைப் போட்டாள். மேஜையில் இருந்த எவர்சில்வர் கூஜாவிலிருந்து தண்ணீரை எடுத்துப் பருகினாள். வெள்ளப் பெருக்கெடுத்து கனவில் வந்த நதி நாக்கினை வறண்டு போக வைத்து விட்டதே என்று எண்ணியபடியே பாதி கூஜா தண்ணீரைக் காலி செய்தாள். சிறிது முகத்திலும் தெளித்துக் கொண்டாள். வானத்திற்கும் பூமிக்கும் நடுவே நின்று கொண்டிருந்தவள் முற்றிலும் தரையில் சமதளத்தில் இறங்கிவிட்ட நிலையை எய்தினாள்.
பக்கத்துக் கட்டில்களில், தூக்கத்தில் தற்காலிகமாக நினைவுகளைத் தொலைத்திருந்த தமிழ்ச் செல்வியையும் ஈஸ்வரியையும் பார்த்தாள். ஒருக்களித்துப் படுத்திருந்த தமிழ்ச் செல்வியின் முகத்தில் குடிகொண்டிருந்த அமைதிக்குள் ஒளிர்ந்த நிர்மலம் பார்ப்பவரின் கண்களைப் பரிசுத்தமாக்குவதாய் இருந்தது. ஆனால் அந்த அமைதியின் ஆழத்திற்குள் கடலளவு சோகம் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது போலத் தோன்றியது. தமிழ்ச்செல்வியின் வாழ்க்கை தனக்குத் தெரியுமாதலால் அப்படித் தோன்றுகிறதோ என்று எண்ணினாள் சங்கவை. சந்தோஷத்தையும் துக்கத்தையும் சம அளவில் கலந்து, தாம் படைக்கும் மனிதர்களின் வாழ்வில் உணர்வுகளால் கலவை பூசும் கடவுள், சிலரது வாழ்வில் மட்டும் சந்தோஷக் கலவையைத் துளியும் வைக்க அறவே மறந்துவிடுகிறாரோ? துயரத்தையும், கூடவே கண்ணீரையும் மட்டும் வரமாகத் தந்துவிட்டு, பிறவி என்னும் பெருங்கடலை வெகு விரைவில் சுலபமாக நீந்தி தம்மிடம் வருவதற்கு, தாம் அவர்களுக்குச் செய்யும் பெரிய உதவி என இறுமாந்து போகிறாரோ? யாருக்குத் தெரியும்? தமிழின் வாழ்விலும் திடீரென்று ஒரு மழை மேகம் அருள் பொழியலாம். பசுமை, வண்ணம் தீட்டலாம். சிந்தனைகளுடன் தமிழ்ச்செல்வியைப் பார்த்த சங்கவையின் கண்களில் கருணை, சமுத்திரமாய் விரிந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரண்டரைதான் ஆகியிருந்தது.
இனி தூக்கம் வருமா? அல்லது தூக்கத்தில் மீண்டும் கனவு வருமா? அதே கனவு என்றால், முடிவு என்ன என்பது தெரிய வருமா? எங்கிருந்து, எப்படிப் பதில் கிடைக்கும்? வாழ்க்கைச் சுழல் வட்டத்தில் அடுத்த நொடி நிகழ்வும் கூட ஒரு போதும் புலப்படுவதில்லை. இந்தப் பரம இரகசியங்கள் சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதற்கு முற்றிலும் மாறாக நம் நெற்றிப் பொட்டில் உடைபடும் தருணங்களும் உண்டு. திரும்பத் திரும்ப நினைத்து அடிமனதின் மடியில் அசைபோட்ட எண்ணங்கள் பிசிறு தட்டாமல், பிசகாமல் நடைபெறுவதும் உண்டு. அல்லது திட்டமிட்டு நேர்த்தியாக இடப்பட்ட புள்ளிகள் அழிக்கப்பட்டு, புதிதாக ஒரு கோலம் போடப்படலாம்.
கனவில் வந்த நதி அழகாகவும் தூய்மையாகவும் இருந்தது. அதன் பிரவாகம் நெஞ்சுக்குள் இறங்கி ஆன்மாவைத் தொட்டுச் சிலிர்க்கச் செய்கிறது. தம் வாழ்வின் ஆதி முடிச்சு அந்த நதியோடு இறுக்கமாகப் பின்னப்பட்டது போல கனவில் நனவாய் உணர்ந்தோமே! கட்டிலில் கால்களைக் கட்டிக்கொண்டு, கண்ட கனவில் மூழ்கியிருந்தவள், ‘மகாராணி எவ்வளவு அழகு’ என எண்ணிக்கொண்டாள். அந்த அகங்காரமற்ற அழகில் ஞானச் செருக்கும், அதில் பிறந்த உண்மையும், துணிவும் கம்பீரமாய் குடிகொண்டிருந்தனவே!
சங்கவைக்குத் தன் தாயின் நினைவு வந்தது. கஸ்தூரி மஞ்சளைப் பூசிக்கொண்ட பௌர்ணமியாய் சிரிக்கும் அம்மாவின் முகத்திலும் அதே கம்பீரத்தைப் பார்த்திருக்கிறாள். இவள் சாப்பிடுவதற்காகவும், தூங்குவதற்காகவும் அம்மாவும் எத்தனையோ கதைகளைச் சொல்லியிருக்கிறாள். ஆனால், இது போன்ற ராஜா ராணி அந்தக் கதைகளில் இடம் பெற்றதில்லை. அவற்றிலெல்லாம் ராணியின் பங்களிப்பு மிகக் கொஞ்சமாகவே இருக்கும். ராஜாக்களின் வீர தீர சாகசங்களும், கூடவே சில மந்திரவாதிகளின் கண்கட்டு வித்தைகளும், எதிரிகளின் போர் முயற்சியும் உடனிருந்து குழி பறிப்போரின் சூழ்ச்சிகளும், இறுதியில் அவற்றை முறியடிக்கும் ராஜாவின் பேராண்மைத் திறமும்தான் வெளிப்படும். ராணிகளை மையமாக வைத்து அம்மா ஏன் ஒரு கதை கூட தனக்குச் சொன்னதில்லை? கனவில் வந்த ராணி போல மதிநுட்பம் வாய்ந்த வீரமிக்க ராணியர் ஒருவர் கூட அம்மா சொன்ன கதைகளில் இடம்பெற்றதில்லை. பாவம் அம்மா! அவளும்தான் என்ன செய்வாள்? காலங்காலமாகத் தனக்குச் சொல்லப்பட்ட, கதைகளை எனக்குச் சொல்லியிருக்கிறாள்.
யோசனை முடிவின்றிப் போவதை உணர்ந்த சங்கவை, தூங்கலாம் எனப் போர்வையைக் கையில் எடுத்தாள். கனவு கண்டு உதறிய வேகத்தில் போர்வையின் ஒரு பக்கம் தமிழின் கட்டிலில் விழுந்திருந்ததால் அதை இழுத்தாள். அதற்குக் கீழ் இருந்த நோட்டுப் புத்தகம் கண்ணில் பட்டது. விரித்து வைக்கப்பட்டிருந்த அதன் நடுவே பேனாவும் இருந்ததால், எழுதியபடியே தமிழ் தூங்கியிருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டாள். ஆனாலும், நோட்டுப் புத்தகத்தின் மேல் தான் உருண்டு படுத்துவிடக் கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டவள் போல் சற்று விலகி, சுருண்டு படுத்திருந்ததால், அதை எடுத்து மேஜையில் வைத்துவிடலாம் என எடுப்பதற்கு எத்தனித்தாள். நோட்டின் மேல் கையை வைத்ததும் அனிச்சைச் செயல் போல நோட்டின் குறுக்காகத் தம் கையைப் போட்டாள் தமிழ்.
என்னதான் எழுதியிருக்கிறாள்? ‘அம்மாவின் கையெழுத்து’ என்ற ஒரு வரி தலைப்பு மட்டும் தெரிந்தது. கவிதை எழுதியிருக்கிறாளோ? காதல் வயப்பட்டவர்கள்தான் வேலைவெட்டி இல்லாமல் கவிதை எழுதுவார்கள் என ஈஸ்வரி அடிக்கடி கிண்டல் செய்வது நினைவிற்கு வந்தது. ‘அம்மாவின் கையெழுத்து’ என்ற தலைப்பைப் பார்த்தால், காதலில் பிறந்த கவிதை போலவா தெரிகிறது? தமிழாவது, காதல் வயப்படுவதாவது? படுக்கையில் சாயப் போனவளுக்கு, தான் விளக்கை அணைக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. மீண்டும் எழுந்துகொள்ள வேண்டுமா? அப்படியே விட்டுவிட்டால் என்ன? இப்படி அவள் எண்ணியதற்கு சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் இல்லை. அறையில் எல்லா விளக்குகளும் எரிந்தால் சங்கவையின் நித்திரை சலனமற்று, நிம்மதி நிறைந்ததாக இருக்கும். வீட்டிலிருக்கும் போது ‘பளீர்’ வெளிச்சத்தில் தூங்குவது அவளது பழக்கம். ஆனால், விடுதியில், இருளின் கனத்த மடியில் கண்ணுறங்க விரும்புபவர்கள் மத்தியில் தன்னிச்சையாக விளக்குகளை எரிய விட்டு எப்படித் துயில் கொள்ள முடியும்? அதுவும் அவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவது போல! இருட்டும், பூட்டிய அறையும் அவளுக்கு உள்ளத்திற்குள் உறைந்து போன பெரும் பயங்கள். பிறருக்குத் தெரியாமல் அதைப் புதைத்து வைத்துக் கொண்டாலும் நெருங்கிய வட்டத்தில் மிரட்டும் பீதி உணர்வை மறைத்துக்கொள்ள முடிவதில்லை. பயங்களையும் பலவீனங்களையும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும்போது மற்ற மனிதர்களின் ஏளனத்திற்கும் இளக்காரத்திற்கும் உரியவர்களாகத் தாழ்ந்து போகிறோம். அதனாலேயே இயல்பான உணர்வுகளைச் செயற்கையாகவும், ஒட்டுப் போட்டிருந்தாலும், உறுதியானது போன்ற பாவனை காட்டும் உணர்வற்ற கண்ணாடிச் சட்டகங்களுக்குள் ஒளித்துக் கொள்கிறோம். ஆனாலும், நேசிப்பவர்களிடமும், நேசத்திற்குரியவர்களிடமும் அந்த ஜோடனை ஒட்டு உடைந்துபோகிறது. அப்பா உயிருடன் இருந்த வரையில் அவளுடைய இந்தப் பழக்கங்களை மாற்ற முயற்சி செய்திருக்கிறார்.
“ஏம்பா மாத்தணும்? வெளிச்சத்தில தூங்கினா என்ன? எல்லாருக்கும் வெளிச்சம்தானே பிடிக்கும்? இருள் வேண்டாம்னு தானே நினைக்கிறோம்?” எனக் கேள்வி கேட்டிருக்கிறாள்.
இது ஒரு நோயோ என அவர் அச்சப்பட்டிருக்கிறார்.
“இது ரொம்ப விசித்திரமான பழக்கம் அம்மா! மத்தவங்க விநோதமாவும் பார்ப்பாங்க.” என்று அவர் எதையெதையோ சொல்லி அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்திக்கொண்டே இருப்பார்.
மற்றவர்கள் செய்யாததைச் செய்கிறோம்; வேறுபட்டு நிற்கிறோம். அவர்களுக்கு அது புரியவில்லை அல்லது அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதற்காக அதை விசித்திரமான பழக்கம் என்றும் தன்னை விநோதமான பிறவி என்றும் எப்படி முத்திரை குத்த முடியும்? என்றும் அவள் விவாதிப்பாள்.
கேள்விகள் கேட்கத் தொடங்கினால், அவள் நிறுத்தமாட்டாள். பதில் சொல்லவில்லையென்றால், அவளே பதிலையும் கூறிவிட்டு, அந்தப் பதிலிலிருந்தே புதிதாக ஒரு கேள்வியைத் தொடுத்து அதற்கும் பதில் இல்லையென்றால், தாமே அந்தப் பதிலையும் கூறி தொடர் கேள்விகளால் எதிராளியைத் திணறடிப்பது அவள் வழக்கம்.
“அம்மா, ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ அப்படின்னு ஒண்ணு இருக்குதுமா. நிர்வாண நாட்டில் கோவணம் கட்டித் திரிபவனைப் பைத்தியக்காரன்னு சொல்வாங்க.” என்று ஒரு நாள் தீவிரமாக அவளுக்குப் புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவரது விளக்கங்களுக்கும், தாம் சொல்வது சரியானது என்று அவள் ஏற்றுக் கொள்வதற்கு எடுத்த முயற்சிகளுக்கும் மொத்தமாக முற்றுப் புள்ளி வைக்க நினைத்தாளோ என்னவோ, பலமான அஸ்திரம் ஒன்றைத் தொடுத்துவிட்டாள்.
இளம் வயதில் மனைவி இறந்துவிட்டால், ஆண்கள் மீண்டும் கல்யாணம் செய்து கொள்வதுதானே உங்கள் உலக வழக்கு? எத்தனையோ பேர் உங்களை வற்புறுத்தியும் பைத்தியக்காரா, குழந்தைகளுக்காகவாவது திருமணம் செய்துகொள். உனக்கும் சின்ன வயசு என்று பலரும் சொல்லி, நீங்கள் மறுத்ததற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த காரணங்கள் உங்களுக்கு நியாயமானவை. அதை நீங்கள் மற்றவர்களுக்கும் விளக்க முற்பட்டதில்லை. அதுபோலத்தான் இதுவும் என்று அவள் தெளிவாகப் பேசியபோது, வாயைத் திறக்க முடியாமல் உட்கார்ந்திருந்தார். பதில் அவருக்குத் தெரியும். ஆனாலும் அமைதி காத்தார்.
“என்ன? பதில் சொல்ல முடியலையா?” என்று சிரித்த சங்கவை, திடீரென்று உடைந்துபோய் விம்ம ஆரம்பித்தாள். பதறிப்போய் பக்கத்தில் வந்த அப்பாவின் கைகளை பற்றிக்கொண்டவள், எனக்குத் தெரியும்பா. எனக்காகக்தானே இதெல்லாம்... என்று என்னென்னவோ சொல்ல முயன்று, வார்த்தைகள் அழுகையில் கரைந்துபோக, பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். அவளைத் தேற்ற முடியாமல் தடுமாறினார் அப்பா. அந்த உணர்ச்சி மயமான தருணத்தில் அப்பாவும் தன்னை விட்டு வெகு சீக்கிரம் போய்விடுவாரோ என்று எழுந்த எதிர்மறையான எண்ணத்தையும் அது ஏற்படுத்திய தீவிரத்தையும் வெளிக்காட்டாமல், அதற்கும் சேர்த்து விம்மிக்கொண்டிருந்த மகளுக்குத் தைரியம் கொடுப்பதற்கு, “அழாதேம்மா” என்ற சொல்லைத் தவிர வேறு எந்தச் சொல்லும் தட்டுப்படவில்லை அவருக்கு.
கடந்த காலத்தின் ஈரமான வடுக்கள் நெஞ்சில் ஏற்படுத்திய அதிர்வலைகளுக்குள் ஆட்பட்டிருந்தவள், நீண்ட பெருமூச்சுடன் விடுபட்டு வெளியில் வந்தாள். ஒரு வழியாகத் தூங்கலாம் என முடிவெடுத்து, விளக்கை அணைக்கச் சென்றவள், மீண்டும் தாகம் எடுப்பதுபோல் தோன்றவே, கூஜாவைக் கையில் எடுத்து வாய்க்கு அருகில் கொண்டு போனாள். “ஐயையோ, வெட்டுக்கிளி, வெட்டுக்கிளி! ஓடுது, ஓடுது! பிடிச்சிரு, பிடிச்சிரு” என்ற ஈஸ்வரியின் பரபரப்பான குரல் கேட்டுத் திரும்பினாள். தூக்கத்தில் கைகளை தூக்கியபடி மேலும் கீழும் ஆட்டி, “ஆங் அங்கதான், அங்கதான். விட்ராத” என்ற ஈஸ்வரி, விடாமல், “அந்தா பாரு! செவப்பு றெக்க மொளச்ச புட்டான். அதையும் பிடி.” என்று சத்தமாக யாரையோ துரத்துவதுபோல் சொல்லிக்கொண்டிருந்தாள். சங்கவைக்குச் சிரிப்பு வந்தது. தூக்கத்திலும் தன் அருமை அக்காவிற்குப் பூச்சி பிடிக்க ஆரம்பித்துவிட்டாளா ஈஸ்வரி என எண்ணியபடியே அவள் பக்கத்தில் சென்று கன்னத்தில் மெதுவாகத் தட்டினாள். அவள் கண்களைத் திறப்பதாக இல்லை. மாறாக, “ஆங், பிடிச்சிட்டியா! கொண்டா, கொண்டா” என்று கைகளை ஏந்தினாள். “இந்தா பிடிச்சுக்கோ” என்று ஏந்திய கைகளில் தண்ணீரை ஊற்றினாள் சங்கவை. ஜில்லென்ற நீர் பட்டதும் “ஐயோ மழை, மழை” என்று விருட்டென்று எழுந்தாள் ஈஸ்வரி. “ஆமா ஈஷு, குடை கொண்டு வர்றேன்.” என்று சத்தமாகச் சிரித்த சங்கவை, அவள் தலையில் தட்டினாள். கண்களை அகலத் திறந்த ஈஸ்வரி, மலங்க, மலங்க விழிப்பது வேடிக்கையாக இருந்தது.
“எத்தன புட்டான் புடிச்ச ஈஷு? வெட்டுக்கிளி மாட்டுச்சா?” என்றாள் சங்கவை. ஈஸ்வரிக்குப் புரிந்து போனது. “ஏதோ கனவு கண்டேன். அதான்...”
“எல்லோரும் கனவுதான் காண்கிறோம். அதுல எதெது நடக்கும்னு தெரியல. ஆனாலும், உன் கனவு ரொம்ப விசித்திரம். சீக்கிரம் உங்கக்காவ பிஎச்.டி. முடிக்கச் சொல்லு. இல்லைன்னா, தூக்கத்தில எந்திரிச்சுப் போய், பாம்பு, பல்லின்னு இருக்கிற பூச்சி பொட்டெல்லாம் நிஜமாவே ரூம்ல கொண்டு வந்து போட்டிருவ.”
“போ சங்கு. கிண்டல் பண்ணாத. சங்குகள்ல கூட சின்னப் பூச்சி இருக்கு. தெரியுமா உனக்கு?”
“சங்குன்னு கூப்பிடாதன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்?”
“ஆமா, சங்.. ..க..வை” நீட்டி முழக்கி இழுத்த ஈஸ்வரி, “நல்ல கிழவி பேரு. தூக்கி வச்சுக் கொண்டாடு.” எனப் பழிப்புக் காட்டினாள்.
“எங்கம்மா வச்ச பேரு. அது எங்கேருந்து எடுத்ததுன்னு தெரியுமா உனக்கு...? ஆங், உனக்கெப்படித் தெரியும். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?” என்ற சங்கவையின் குரலில் இருந்த குறும்பைக் கவனித்த ஈஸ்வரி, “கண்டிப்பா தெரியாது. அதாவது உனக்குத் தெரியாது” என்றாள். இப்போது, மூன்றாவது குரல் கேட்டது. “என்ன சண்டை இங்க? ராத்திரி நேரத்தில. தூங்குங்கப் பா” என்று கண்ணைத் திறக்காமலேயே அக்கறை தோய்ந்த குரலில் சொல்லிவிட்டுப் புரண்டு படுத்தாள் தமிழ்ச் செல்வி.
“ஆமா பூச்சி, போய் தூங்கு. காலையில மிச்ச பூச்சியைப் பிடிக்கலாம்” என்றாள் சங்கவை.
“நான் பூச்சின்னா நீ சங்குன்னுதான் சொல்லுவேன் சங்கு.”
“ஆமா உனக்கு நாளைக்கு சங்குதான் மவளே, ஃபர்ஸ்ட் ஹவர் ப்ராக்டிகல்ஸ்-ல”
“ஐயோ! இப்பத்தான் ஞாபகம் வருது. துப்பட்டாவ எடுத்து வைக்கணும். துப்பட்டா போடாம போனா அந்த பொம்பள கலாக்குமாரி கூவத்தை குடிச்ச மாதிரி வார்த்தையில வாந்தி எடுக்கும்.” பதறிய ஈஸ்வரி, பெட்டியைத் திறந்து அடுத்த நாள் போட வேண்டிய சுடிதாருக்கான துப்பட்டா, அதனுடனேயே இருக்கிறதா என்று ஆராய்ந்துகொண்டிருந்தாள்.
“லைட்ட அணைக்கப் போறேன். கண்ணு சொக்குது. சீக்கிரமா தேடி எடு.”
“கருணை காட்டு சங்கு. அந்த முண்டக்கண்ணு கலாக்குமாரி, காது வரைக்கும் கண் மைய்ய தீட்டி விட்டுக்கிட்டு, நாக்க புடிங்கிக்கிற மாதிரி ஆம்பிள பயலுக முன்னாடி கண்டபடி பேசும்.”
“இருக்கிற பயலுகளை எல்லாம் மயக்க வந்துட்டியான்னு கேக்குமா? ஆமான்னு சொல்லு.”
“இதெல்லாம் இங்க பேசுறதுக்கு நல்லா இருக்கும். . . . . கெடைச்சிருச்சுப்பா” என்று ஒரு சிவப்பு நிற துப்பட்டாவை எடுத்து, வேகமாக வருகின்ற இரயிலை நிறுத்துகின்ற பாவனையில் அசைத்தாள் ஈஸ்வரி. இனிப் பிரச்சனை இல்லை என்ற நிம்மதி அவள் முகத்தில் தெரிந்தது.
“நானும் கொஞ்சம் தண்ணி குடிச்சுக்குறேன்.” என்று கூஜாவை வாங்கிய ஈஸ்வரி, “இதென்ன நோட்டு. இவளுக்கு ரெக்கார்ட் நோட்டு முடிக்கிற வேலையெல்லாம் இல்லையே! நோட்ஸ் எடுத்திட்டே தூங்கிட்டாளா?” என்று தமிழ்ச் செல்வியின் படுக்கையிலிருந்த அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தாள். பட்டென்று அதனுள்ளிருந்து புகைப்படம் ஒன்று கீழே விழுந்தது. குனிந்து எடுத்தவள் சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ஃபோட்டோ அது?”
“இந்தா, நீதான்! உன் பெரிய மொச்சக் கொட்டை பல்ல காட்டீட்டிருக்க பாரு.”  புகைப்படத்தை ஈஸ்வரியிடமிருந்து வாங்கிப் பார்த்த சங்கவையின் முகத்தில் மந்தகாசமான புன்னகை மலர்ந்தது.
தனக்கு முன்னாலிருந்த கீபோர்ட்டில் விரல்கள் இருக்க உள்ளத்திலிருந்து வந்த சிரிப்பு முகமெங்கும் படர்ந்திருக்க, எபி! பக்கத்திலேயே முகத்தைத் தூக்கி சற்றே அண்ணாந்து அவன் முகத்தைப் பார்த்து பழிப்பு காட்டிய வாக்கில், சங்கவை! இருவரையும் பார்த்தபடி தமிழ்ச் செல்வி! அவள் கையில் சிவப்பு அரளிப் பூ இருந்தது.
“கடவுளையே தரிசித்துவிட்டது மாதிரி மூஞ்சில பாரு, பெரிய பரவசம்! ஆனா, கையில அரளிப் பூ! என்ன காம்பினேஷனோ?” என்றாள் ஈஸ்வரி.
“நீ மட்டும் பூச்சிய கையில புடிச்சிட்டுத் திரியலையா?”
“இது பூச்சிகளோட உலகம், தெரியுமா உனக்கு? நாம அத அழிச்சிட்டு உட்கார்ந்திருக்கோம். உலகம் இன்னைக்கு உருப்படியா இயங்குதுன்னா, பூச்சிகளோட பங்கு நம்ம பங்கைவிட அதிகம்.”
“சரி தாயே, பூச்சிகளுக்குக் கோயில் கட்டீரலாம்.” என்ற சங்கவை, அந்தப் புகைப்படத்தைக் கண்களுக்கு வெகு அருகாக வைத்துக்கொண்டு பார்த்தபோது மகிழ்ச்சியாக உணர்ந்தாள். தமிழ்ச்செல்வி அதில் ரொம்ப அழகாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாகத் தோன்றியது.
“ரசிச்சது போதும். தூங்கலாம்.” என்று சொல்லிவிட்டு படுக்கையில் சென்று ஈஸ்வரி தொப்பென்று விழுந்தாள். அதன் பிறகும் சில மணித் துளிகள் கண்கொட்டாமல் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சங்கவை, பத்திரமாக அதனை, தமிழின் நோட்டுப் புத்தகத்தில் வைத்து, மேஜையில் வைத்துவிட்டு, கட்டிலில் வந்து அமர்ந்தாள். சிறிது நேரம் எதையோ யோசிப்பதுபோல இருந்தவள், ஈஸ்வரியின் பக்கம் பார்வையைத் திருப்பினாள். அவளும் தூங்காமல் இவளைக் கவனித்தபடி இருப்பதைக் கண்ட சங்கவை,
“நிஜங்கள் கூடவே இருக்க, நிழல்களைப் பத்திரப்படுத்துவது அர்த்தமே இல்லாமல் இருக்குது. ஆனாலும் அதில ஒரு சந்தோஷம்தான். இல்லையா ஈஸ்வரி?” என்று கேட்டாள்.
“ஃபோட்டோவை வைத்துக்கொள்வது முட்டாள்தனம்னு சொல்றியா?”
“தெரியலை. ஆனால், நான் கூடவேதான் இருக்கேன். இந்த மக்கு தமிழ், என் ஃபோட்டோவ பத்திரமா வச்சிருக்குப் பாரு!” சொல்லி விட்டு கட்டிலில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் சங்கவை.
“யாரு மக்கு? நீதான்டி மக்குனி பண்டாரம். தமிழ் அந்த ஃபோட்டோவ எதுக்காக வச்சிருக்கான்னு கூட தெரியல... ” ‘சரி, தெரியும்போது தெரியட்டும்’ என்று மனதில் எண்ணமிட்டபடி தன் சிரிப்பை மறைப்பதற்காகத் திரும்பிப் படுத்துக்கொண்டாள் ஈஸ்வரி.

/அத்தியாயம் 2 முடிவு/

No comments:

Post a Comment