Tuesday, May 20, 2014

அத்தியாயம் - 4

பரப்பி வைக்கப்பட்டிருந்த பச்சைப் பட்டுத் துணியில் பெரிய, பெரிய மஞ்சள் பூக்களின் சித்திரை வேலைப்பாடு நெய்யப்பட்டிருந்தது போல அழகு மலர்ந்திருந்த தன் சூரியகாந்தி வயலில் நின்றிருந்த ராமர்பாண்டியன் சற்று தூரத்தில் பறம்புக் காட்டில் ஏறக்குறைய ஓடிவந்துகொண்டிருந்த ஒடிசலான பெண் உருவம் கண்டதும்,
“மருதாயி தானே வர்றது? ஏன் இம்புட்டு வேகமா ஓடியாந்திட்டிருக்கா...?” என்று எண்ணமிட்டார். பிறகு அவரே,
“என்னைக்குத்தான் அவ நடந்து வந்திருக்கா? நிதானமா நின்னு வர்றதுக்கோ, ஆசுவாசப்படுத்திக்கிறதுக்கோ அவ தலையில ஆண்டவன் எழுதலையே.” என்று பெருமூச்சு விட்டார். பம்பு செட்டில் குளித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் குதூகலக் கூச்சலினால் கவரப்பட்டவராய் அந்தத் திசையில் திரும்பினார். சற்று உயரத்திலிருந்து கொட்டிய நீரில் மாறி, மாறித் தலையைக் கொடுத்தபடி ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டு, தொட்டியில் குதித்து ஆரவாரித்துக் கொண்டிருந்தனர் குழந்தைகள். கல்யாணமான புதிதில் அவர் மனைவி பொன்னுத்தாயியை, குளிப்பதற்கு இந்த கிணற்றுக்குத்தான் அழைத்து வருவார். ஆரம்பத்தில் அவள் மிகவும் தயக்கம் காட்டினாள். அரசாங்கம் தெருவில் போட்டுக் கொடுத்திருக்கும் குழாயிலேயே தண்ணீர் அடித்து வீட்டிற்குள்ளேயே குளித்துக் கொள்வதாய் அடம் பிடிப்பாள். “அது சப்ப தண்ணி புள்ள. தேங்கா தண்ணி கணக்கா நம்ம கெணத்துத் தண்ணியில குளிக்கிறத விட்டுட்டு இந்தத் தண்ணியில குளிச்சா சீக்கிரமே முடி கொட்டி மொட்டையாயிடுவ.” என அவர் வற்புறுத்தி அழைத்துப் போவார்.
“என்ன ராமரு, மதுரக்காரி இந்தப் பட்டிகாட்டுக்கு வாக்கப்பட்டு வந்துட்டு பம்பு செட்ல குளிக்க வெட்கப்படுறாளாக்கும்” என்று மற்றவர்கள் இவரிடம் கேலி செய்வார்கள்.
அதிகாலையில் வயக்காட்டுப் பக்கம் யாரும் வருவதற்கு முன்பு இவரை அழைத்துப் போகச் சொல்வாள். வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தூரத்திலிருந்த பம்பு செட்டிற்கு வரும் வழியில் காற்றாடி செய்வதற்காகக் குழந்தைகள் சேகரித்துச் சிதறவிட்டிருந்த காக்கா முட்கள் கிடக்கும். எனவே அவர் அவள் கைகளைப் பிடித்து “பாத்து பொன்னு, கல்லு முள்ளு குத்திடப் போவுது.” என்று சொல்லியபடியே அழைத்துச் செல்வார்.
“பொன்னு, பொன்னுன்ணு, பொத்திப் பொத்தி வச்சிருக்கான்யா... பாத்து ராமரு, ஒம் பொண்டாட்டிய காக்கா கொத்திட்டுப் போவப் போது” என்று ஊர்ப் பெண்கள் இவரை வம்பிழுப்பார்கள். இரண்டு, மூன்று மாதங்களிலேயே இவர் துணைக்கு வருகிறேன் என்று சொன்னால் கூட, “எனக்கு வழி தெரியாதாக்கும்? செல்லாயி அக்கா, வரேன்னு சொல்லிருக்காவ. அவுகளோட போறேன்,” என்றோ, “பொம்மி கூட போறேன். அப்படியே நம்ம மேல வயல்ல வெண்டக்கா பிஞ்சு பிடிச்சிருக்கான்னு பாத்துட்டு வர்றேன்.” என்று தினம் ஏதோ ஒரு அக்கா, தங்கச்சி, பெரியம்மா, அத்தை, என்று யாருடனாவது செல்லப் பழகிக்கொண்டாள். வெகு சீக்கிரத்திலேயே முத்தாலங்குறிச்சி அவளுடைய ஊராகிப் போனது. “பிறந்த மண்ணையும் அதன் வாசனையையும் முழுசாக உதறுகிறார்களோ இல்லையோ, வாழ வந்த மண்ணில் ஆழமாக வேர் பிடித்து, பலமாக ஊன்றிவிடுகிறார்கள் பெண்கள்.” என்று யோசித்த ராமர் பாண்டியனின் கண்களில், தூக்கிப் போட்ட கொண்டையில் டிசம்பர், கனகாம்பரத்தையும், கூடவே பச்சிலையையும் செருகியபடி கைகளை வீசி, வீசி பருத்தி வயல் பக்கம் நடந்து கொண்டிருந்த செண்பகம் கண்ணில் பட்டாள். நித்தம், நித்தம் மஞ்சளை அரைத்துப் பூசிக்கொண்டதாலோ என்னவோ, அவளே உயரமாக வளர்ந்திருந்த ஒரு மஞ்சள் கிழங்காகத்தான் தோன்றினாள்.
ராமர் பாண்டியனின் மனம் இப்போது மேலும் பல வருடங்கள் பின்னால் சென்று அவரது இளமைக் காலத்தைத் தொட்டு நின்றது.
“செண்பகம் சமஞ்சிட்டாளாம்” என்று சிநேகிதப் பட்டாளம் வந்து தகவல் சொன்னபோது, “பதிமூணு வயசுலயேவா?” என்று கேட்ட ராமருக்கு அப்போது பதினெட்டு வயசு ஆகியிருந்தது. விவரம் தெரியாத விடலைப் பருவத்தில் செண்பகத்தின் மேல் அவனுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு, இல்லை இது காதல்தான் என்று உள்ளம் உள்ளூர் தங்கம்மன் மேல் சத்தியம் செய்த பிறகு, புளியந்தோப்பில் அவளுக்காக ஒதப்பழம் தேடிக்கொண்டிருந்த ஒரு மத்தியான வேளையில்தான் அவளிடம் கூறினான். மரத்து மேலிருந்து சொல்லும்போது மனதில் தைரியம் ஏற்பட்டிருந்தது. அதை அவளும் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
“உச்சிக் கிளையில உட்காந்துகிட்டுதான் இதெல்லாம் சொல்வியா? ஏன், நீ சொல்றது ஊருக்கே கேக்கணுமாக்கும்.” என்று பூப் போட்ட சீட்டிப் பாவாடையில் புளியம் பழங்களை ஏந்தியபடி அவள் கேட்டாள். அண்ணாந்தவாறு அவள் அவனைப் பார்த்து இப்படிக் கேட்டதும், அவனுக்குள் பயம் தோன்றியது. முதல் காரணம் உரக்கச் சொல்லிவிட்டோமோ, வேறு யாருக்கும் கேட்டிருக்குமோ என்ற பதற்றம். இரண்டாவது காரணம், பல நாட்கள் சேமித்து வைத்திருந்த ஆசையை இடம், பொருள், ஏவல் எதுவும் யோசிக்காமல் ஆர்வம் மேலிடச் சொன்னதும், அவளிடம் அது எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் மிகச் சாதாரணமாக அவள் அதை எதிர்கொண்ட விதம்; அது அவனுக்குப் பெருத்த ஏமாற்றமாகவும் இருந்தது. உதடுகள் உலர்ந்து, நாக்கு அண்ணத்தின் மேல் ஒட்டிக் கொண்டது. சமாளித்துக்கொண்டு, “செண்பா, நெசமாலுமே ஒம் மேல கொள்ளப் பிரியம்... தங்கம்மன் மேல சத்தியமா...”
இதைக் கேட்டதும் செண்பகம் தடாலென்று தரையில் உட்கார்ந்துகொண்டு சிரித்தாள். அவள் தன்னை நிராகரிக்கிறாளோ, அவளுக்குத் தன் மேல் கொஞ்சமும் இஷ்டம் இல்லையோ? தான் சின்னதாய் சுருங்கிப்போனதாய் உணர்ந்தான்.
“நா சொல்றத நீ நம்பலையா? இல்ல, ஒனக்கு என்ன புடிக்கலியா?” வார்த்தைகள் குளறின.
“ரெண்டுமே இல்ல ராமரு. நீ எவ்ளோ ஒசரத்தில இருக்க பாத்தியா? கஷ்டபட்டு ஒன்ன நா அண்ணாந்து பாக்கவேண்டியிருக்கு.”
ராமர் பாண்டியனுக்கு புரிந்ததுபோலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது. கைகளில் கடித்த பெரிய சிவப்பெறும்பை உதறி விட்டு, கீழே இறங்கி வந்தான். அவன் எதிரில் வந்து நின்ற செண்பா, அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். பார்வையின் கூர்மை தாளாது அவன் தலையைத் திருப்பிக் கொண்டான். தான் கட்டி வைத்திருந்த கோட்டை ஒரே நொடியில் உடைந்து சிதறி விட்டது போல், போரின் உச்சத்தில் ஆயுதங்களை இழந்த நிராயுதபாணி போல் நின்றிருந்தான். கண்களில் நீர் நிறைந்தது. அவள் அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பினாள். பாவாடையிலிருந்து புளியம் பழங்களை, தாவணி முந்தானைக்கு மாற்றியபடியே பேசினாள். “எனக்கு ஒன்ன ரொம்பப் பிடிக்கும். ஆனா, அது உங்க வீட்டுக்கோ இல்ல எங்க ஆத்தாளுக்கோ பிடிக்காது.”
“எங்கய்யாவும் ஆத்தாளும் ஒத்துக்க மாட்டாங்கன்னு சொல்லுதியா பிள்ளை? ஊரே எதிர்த்து வந்தாலும் உன் கழுத்தில தாலி கட்டுவேன்.” என்று அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.
“தாலி கட்டுறதா பெரிய விஷயம்? சந்தோஷமா வாழணும். அதான் முக்கியம்.”
“ஒன்னக் கட்டிக்கிட்டாத்தான் சந்தோஷமா இருப்பேன். அப்போ இந்த உலகத்திலேயே சந்தோஷமான ஆளு நானாத்தான் இருப்பேன்.”
“இன்னும் நீ கருங்குளம் டூரிங் டாக்கீஸ்ல படம் பாக்கிறத விடலியா ராமரு?”
“சினிமா வசனம் பேசுதேன்னு சொல்லுதியா? ஒம் மேல நான் வச்சிருக்க ஆசைய கேவலப்படுத்துதியா?” இப்போது அவனுடைய குரலில் கோபம் ஏறியிருந்தது.
“பாத்தியா. ஒனக்குச் சமமா வாய்க்கு வாய் நான் பேசுறது ஒனக்குப் பிடிக்கல. கேள்வி கேட்டா பதில் சொல்ற பொறுமையும் இல்ல. ஆனா, என் மேல கொள்ளை பிரியம்ங்குற.”
ராமர் பாண்டியன் வெகுவாகக் குழம்பிப் போனான். “அப்டீன்னா ஒம் மேல எனக்குப் பிரியமில்லங்கிறியா?” செண்பகம் எதுவும் பேசாமல் சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டாள்.
“என்ன யோசிக்கிற?”
“என்ன சொல்றதுன்னு யோசிக்கிறேன்.”
“நெசத்த சொல்லு. ஒனக்கு என்ன பிடிக்குமா பிடிக்காதா?”
“அதான் பிடிக்கும்னு சொன்னேனே ராமரு!”
“பொறவு ஏன் இம்புட்டு யோசனையும் பேச்சும்?”
“ஆனாப்பட்டிக்கு அங்குட்டு தெரியிற மலை உனக்குத் தெரியுதா ராமரு?”
“ஆங் தெரியுது. அந்த மலை மேல ஏறி நின்னு செண்பகத்தைக் காதலிக்கிறேன்னு கத்திச் சொல்லணுங்கிறியா?”
“இல்ல. அது ஒன்னால முடியாது. எனக்கு அது தேவையுமில்ல.”
செண்பகத்தின் குரலில் இப்போது உறுதி தெரிந்தது. முகத்தில் குறும்போ சிரிப்போ இல்லாமல், ஆழ்ந்த இறுக்கம் பரவியது.
“அந்த மலை மேல ஏறி அது உச்சியில நின்னு, சுத்திலும் பாக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. அங்க ஈனாப்பேச்சி நடமாடுதுன்னு எங்க அப்பத்தா சொல்லிருக்காக. அதையும் நேருக்கு நேர் பார்க்கணும்னுட்டு ஆச.” அங்க நிறைய வருஷம் பழைய காலத்துல இருந்து ஒரு பெரிய நெல்லிக்கா மரம் இருக்குதுன்னு பேசிக்கிறாக. அந்த மரத்திலயும் ஏறி நெல்லிக்கா பறிச்சுத் தின்னுட்டு நம்ம ஊர்க் கெணத்துல தண்ணி குடிக்கணும்னு ஆச. ஆனா இதுல எதுவுமே நடக்கப்போறதில்லனு எனக்குத் தெரியும். அதனால நேரங் கெடைக்கும்போது நெனச்சுப் பாக்கிறதோட சரி. அதே மாதிரிதான் நான் ஒம் மேல வச்சிருக்கிற ஆசையும். முன்னெல்லாம் சினிமா பாக்கிறப்போ அதுல வர்ற ஆம்பிள நீன்னும், பொம்பள நான்னும் நெனச்சு சந்தோஷப்பட்டுக்குவேன். ராத்திரி வர்ற சொப்பனத்தில நீ என்ன குதிரைல கூட கூட்டிட்டுப் போவ. ஆனா, இப்பல்லாம் அப்படி நெனக்கிறதில்ல ராமரு.”
“நீ ஒம் மனசுச்கு துரோகம் பண்றியா?”
“இல்ல. என் மனசு நிம்மதியா இருக்கணும்னு பாக்குறேன்.” என்றவள், சிறிது இடைவெளி விட்டு, “நீ ரொம்ப நல்லவன். உங்க அய்யாளும் ஆத்தாளுங்கூட நல்லவங்கதான். ஒனக்காகவே, அய்யா தேடித் தேடி சொத்து சேக்குறாரு. பட்டணத்துக்கெல்லாம் அனுப்பிப் படிக்க வெச்சாக. நீதான் முடியாதுன்னு பாதியிலேயே வந்துட்ட. ஒன்னப் பத்தி நிறைய கனா கண்டுகிட்டிருக்காக.”
“எனக்குங் கூடத்தான் கனவுகள் இருக்கு.”
“அதெல்லாம் நடக்கிறதுமில்ல. நடக்கிறது நல்லதுமில்ல. நம்ம ஆசைகள் கூடி வர்றதுக்காக மத்தவங்க ஆசையில மண் விழுதுன்னா, அந்த ஆசைகளே தேவையில்ல.”
“நீ முனிவர் பொண்டாட்டி கணக்கா பெரிய, பெரிய விஷயமெல்லாம் பேசுற.”
“அதுக்கு முனிவர் பொண்டாட்டியாத்தான் இருக்கணுமா? நானே முக்காலும் தெரிஞ்ச முனிவரா இருக்கக் கூடாதா? சரியான ஆம்பிளப் புத்திடா ஒனக்கு.”
“ஒனக்குச் சரியான பொம்பிளப் புத்தி. என் மனசுல ஆசைய வளத்திட்டு, ஏமாத்திட்டு போகப் பாக்குற பொம்பள புத்தி.”
“ஒங்கிட்ட எது பேசுனாலும் இப்ப தப்பாத்தான் தெரியும் ராமரு. ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ. ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா கல்யாணம் கட்டிகிட்டு ஒங் கூட சேந்து வாழணும்கிற ஆசை இல்ல. ஏன்னா, ரெண்டு எட்டாத துருவங்கள ஒட்ட வைக்க நான் விரும்பல. எனக்கு என் ஆத்தா முக்கியம். விதி அவள ஒண்ணுமில்லாத மூளியாக்கிடிச்சு. அது கூட சேந்து நானும் ஆத்தாளக் கை விட விரும்பல. உங்க அய்யா, ஆத்தா மனச நீ நோகடிக்காத. என்னவிட ரொம்ப நல்லப் பொண்ணாப் பாத்து அவங்க ஒனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. எனக்காக என்னைக்குமே நான் சாமி கும்பிட்டதில்ல ராமரு. ஒனக்காக தங்கம்மனக் கும்பிட்டுக்குறேன்.”
அன்று உறுதியாக சொல்லி விட்டுப் போனவள்தான். எதிரில் வந்தாலும் சின்னச் சிரிப்போடு எதுவும் பேசாமல் வேகமாக நகர்ந்து விடுவாள்.
முதலில் ராமருக்குத்தான் கல்யாணம் நடந்தது. “புளியங்கொம்பா பிடிச்சிருக்காங்கய்யா” என்று அவருக்கு வரவிருக்கின்ற மனைவியைப் பற்றி ஊர் முழுக்கப் பேசிக் கொண்டிருந்த பொழுது, செண்பகம் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொள்ள விரும்பியிருந்தார் ராமர் பாண்டியன். ஆனால், அவள் இவர் கண்ணில் படவேயில்லை. திருமணத்தன்று கூட்டத்தோடு கூட்டமாக ஆத்தாளோடு வந்து நின்றவள் முகத்தில் புன்னகை கனிந்திருந்தது. மஞ்சள் வெயிலடித்த அவள் முகத்தில் எங்காவது கண்ணீரின் சுவடு தெரிகிறதா என்று பக்கத்தில் இருந்த பொன்னுத்தாயியைக் கவனிக்காமல் தேடிக்கொண்டிருந்தார் ராமர் பாண்டியன். ஒரு வேளை அவள் கண்களில் ஒரு துளி கண்ணீர் தெரிந்திருந்தால் தனக்கு சந்தோஷமாய் இருந்திருக்குமோ? என்ற நினைப்பு தோன்றியது. ‘சண்டாளி’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே பொன்னுத்தாயின் கழுத்தில் தாலி கட்டினார்.
பிறகு வந்த நாட்களில் புது மனைவியின் அன்பும் அரவணைப்பும் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றியிருந்தது. ஆனாலும், சீட்டிப் பாவாடையில் புளியம் பழங்கள் ஏந்தியபடி, சிரிக்கும் செண்பகத்தின் நினைவு எப்போதாவது எட்டிப் பார்ப்பதுண்டு. ஐந்தாறு வருடங்கள் கழித்து, செண்பகத்திற்கும் ஆண்டிப்பட்டி ஊரான் சேட்டுவுக்கும் கல்யாணம் முடிவான பிறகு, அந்த நினைப்பும் கூடக் குறைந்து போக ஆரம்பித்திருந்தது. அவன் வண்டிப்பெரியாறில் கடை வைத்து வசதியாக இருப்பதாக ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.  செண்பகத்தை ஆத்தா வீட்டில் விட்டு விட்டு, கடையை ஒட்டிய சிறிய அறையில் தான் குடியிருப்பதாகவும், குடும்பம் நடத்துவதற்குப் போதுமான அளவுக்கு ஒரு வீடு வாடகைக்குப் பிடித்துவிட்டு அவளை வந்து அழைத்துச் செல்வதாகவும் திருமணமான இரண்டாம் நாளே சேட்டு மட்டும் வண்டிப்பெரியாறுக்குச் சென்றுவிட்டான். ஏறக்குறைய ஒரு மாதம் கழித்து, தானே போய்ப் பார்த்து வருவதாக திடீரென்று செண்பகம் கிளம்பிப் போனாள்.
“கடுதாசி கூட போடாம போறியே தாயி, தொணைக்கு நா வரட்டுமா?” என்று கேட்ட ஆத்தாவிடம், தான் மட்டும் சென்று பார்த்து வருவதாக அவள் பிடிவாதமாய் புறப்பட்டுச் சென்றாள். போன இரண்டாம் நாளே திரும்ப வந்தவள், “ஊரு பிடிக்கவே இல்ல. சனங்க வித்தியாசமா இருக்காக. வீடும் வசதியா கெடைக்கிற மாதிரி இல்ல. இங்கயே நான் இருந்துக்குறேன். அப்பப்ப வந்து பார்த்துட்டு போகட்டும்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன்.” என்றவள், ராமர் பாண்டியன் வீட்டு எதிரிலேயே ஓலை வேய்ந்த மண் குடிசையில் டீக்கடை போட்டபோது முதல் ஆதரவு கொடுத்தது அவர்தான்.
சேட்டு ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கொரு முறை என்று எப்பொழுதாவது முத்தாலங்குறிச்சிக்கு வரும்பொழுது, விடைக் கோழி அடித்துக் கொழம்பு வைத்து சாப்பாடு போட்டு அனுப்புவாள். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சேட்டு ஆள் சதை கூடி தொப்பையின் அளவு பெரிதாகித் தெரிவான். ஆனால், செண்பகமோ குலை தள்ளாத குமரி வாழையின் குருத்து இலை போல, அவர் தன் ஆசையைச் சொன்னபோது தெரிந்த அதே பருவப் பெண்ணாகவே தோன்றினாள்.
செண்பகத்திற்குக் குழந்தை இல்லாதது போலவே, ராமர் பாண்டியனுக்கும் பொன்னுத்தாயிக்கும் திருமணமாகி ஏழு வருடங்கள் வரை குழந்தை இல்லை. “ஒங் கூட்டாளி பயலுவ, ஒனக்குப் பின்னாடி பொண்டாட்டி கட்டுனவனுங்கெல்லாம் கையில ஒண்ணு இடுப்பில ஒண்ணுன்னு புள்ள குட்டியோட இருக்கிறானுக. கோயில் கொளம்னு சுத்தாம, ஆஸ்பித்திரிக்குப் பொண்டாட்டிய கூட்டிட்டுப் போய் என்னான்னு பாருப்பா.” என்று செண்பகத்தின் டீக்கடைத் திண்ணையில் உட்கார்ந்தபடி பெரிசுகள் இலவச அறிவுரை வழங்கத் தொடங்கியிருந்தார்கள். இவர்கள் வீட்டிற்கு எதிரிலேயே டீக்கடை இருந்ததால் அங்கு பேசுவது பொன்னுத்தாயிக்கு நன்றாகவே கேட்கும். தன்னுடைய காதில் எதுவும் விழவில்லையென்று முகத்தைச் சலனமின்றி வைத்துக் கொண்டாலும், அதற்குப் பின்னே இருக்கின்ற ஆதங்க அலைகள் இவரது இதயத்தையும் தட்டி வலிக்கச் செய்யும். இதற்காகவே டீக்கடைக்குச் செல்வதை விட்டு விடலாமா என்று கூட யோசித்திருக்கிறார். ஆனால், விறகடுப்பில் வெந்தபடி திண்ணையில் கதையளந்து காத்திருப்போருக்கு ஏலக்காயும் இஞ்சியும் தட்டிப் போட்டு கொடுக்கும் சூடான டீயில் செண்பகத்தின் கனிந்த அன்பு குளிர்ச்சியாய்த் தொடும் என்பதால் டீக்கடைக்குச் செல்வதை நிறுத்த முடியவில்லை. மேலும் அவளது உள்ளத்தைப் போலவே, பளிச்சிடும் கண்ணாடி கிளாஸில் பரிமாறப்படும் டீயின் சுவைக்கு நாக்கு பழக்கப்பட்டு விட்டதால், நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் அந்த டீயைக் குடிக்கவில்லையென்றாலும் யாரோ தலையில் செம்மட்டியால் அடிப்பது போன்ற வலி. உண்மையில் தலை வலிக்கிறதா அல்லது பிரம்மையா என்று கூட யோசித்திருக்கிறார்.
வழக்கம்போல் ஒரு பெரிசு இவனுக்குப் பிள்ளைகள் இல்லாத குறையைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் டீ கிளாஸை கொடுத்தபடி செண்பகம், மற்றவர்கள் போன பிறகும் இவனை சற்று தாமதிக்கும்படி கண் சாடை காட்டினாள். ராமர் பாண்டியனும், “டீ ஆறிடிச்சி புள்ள. இன்னொரு டீ கொண்டா.” என்று சாகவாசமாக உட்கார்ந்துகொண்டார். அடுத்த டீ கிளாஸை ஏந்தியபடி வந்தவள், அவர் கையில் கொடுக்காமலேயே,
“ஏன் ராமரு, வாயில இம்புட்டு தூரம் வார்த்தை தடிச்சுபோய் பேசுறாங்களே... எசக்கியம்மன் கோயிலுக்கு நேர்த்திக் கடன் இருந்தா செஞ்சுர வேண்டியதுதானே.” என்று சொல்லி அவர் கையில் டீ கிளாஸை கொடுத்தாள். அவர் சற்று அதிர்ச்சியடைந்தார். குழப்பத்துடன் அவளைப் பார்த்தார். அதில் உனக்கெப்படி தெரியும் என்ற கேள்வி இருந்தது.
“ஒங் கிட்டயோ, பொன்னு கிட்டயோ எந்தக் கொறையும் இல்லன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஒங்க கல்யாணம் ஆன மூணாவது மாசமே பொன்னு கொழந்த உண்டானதும் அப்புறம் இருபது நாளையிலயே கலைஞ்சு போனதும் எனக்குத் தெரியும். எசக்கிக்குக் கோவம் வந்தா கர்ப்பத்ததானே தொடைச்சிட்டுப் போவா. ஏதாச்சும் பரியாரம் பண்ண முடியுமா பாரு.” என்றாள் செண்பகம்.
“இந்த விஷயத்தையெல்லாம் பொன்னு ஒங் கிட்ட எப்ப சொன்னா? நீங்க ரெண்டுபேரும் நெருக்கமாப் பேசி நான் பாத்ததேயில்லையே!”
“நானும் நீயும் கூடத்தான் நெருக்கமாப் பேசி பொன்னு பாத்ததில்ல.” வெடுக்கென்றாள் செண்பகம்.
ராமர் பாண்டியனின் முகம் சற்று வெளிறி, பின்பு சரியானது.
“பயப்படாத ராமரு. நான் அவளிடம் எதுவும் சொல்லல. ஒன்ன விட அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு நெனைக்கிறேன்.” டீ கிளாஸை வாங்கிக் கொண்டு மீண்டும் அடுப்படிக்குச் சென்று ஊது குழலை எடுத்து ஊத ஆரம்பித்தாள் செண்பகம்.
ராமர் பாண்டியன் அந்த பழைய இசக்கி சம்பவத்தை நினைத்துப் பார்த்ததும் மனம் கிலேசப்பட்டார்.
கல்யாணம் ஆன மூன்று மாதங்களில் வீட்டுக்குப் பின்னால் இருந்த வேப்ப மரத்துப் பக்கம் சற்றே இருட்டிய நேரத்தில் நின்று கொண்டிருந்த பொன்னுத்தாயி திடீரென்று உள்ளே ஓடி வந்து முகங்குப்புற கட்டிலில் படுத்துக் கொண்டாள். என்னவோ ஏதோவென்று ஆளுக்காள் பதறிப் போய்க் கேட்டதில் அவளிடமிருந்து பதில் எதுவும் இல்லை. ஜன்னி கண்டதுபோல் உடம்பு தூக்கிப் போட்டது. கைகளும் கால்களும் சில்லிட்டுப் போயிருந்தன. சூடாகக் காபி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பிறகு விசாரித்ததில், சிவப்பு சேலை கட்டிய பெண்ணொருத்தி திடீரென்று எதிரில் வந்து நின்று சிரித்ததாகவும், பிறகு மாயமாய் மறைந்து போய் கொஞ்சம் தள்ளியிருந்த மற்றொரு வேப்ப மரத்துக்கடியில் நின்று இவளைப் பார்த்து பக்கத்தில் வரும்படி செய்கை காட்டி அழைத்ததாகவும் மிரண்டு போய் ஓடி வந்ததாகவும் வாய் குளற தெரிவித்தாள் பொன்னுத்தாயி. அன்று இரவு அவளைத் தூங்க வைப்பது பெரும்பாடாக இருந்தது. ஆனால், அடுத்து வந்த நாட்களில் வீட்டில் எல்லாருக்குமே தூக்கம் போய்விட்டது. குழந்தையைக் கையில் ஏந்தப் போகிறோம், வாரிசு வரப்போகிறது என்று காத்திருந்தவர்களுக்கு கர்ப்பம் கலைந்து விட்டதென்று தெரிந்த பிறகு சஞ்சலப்பட்ட மனசு எப்படி துயில் கொள்ளும்?
“டே ராமரு, காளாத்திமடத்துல இருக்கிற இசக்கியம்மன் கோயிலுக்கு நேர்ச்சை பண்ணிருக்கோம்டா. எது செஞ்சாலும் சாமி குத்தம் மட்டும் பண்ணக்கூடாது. ஆத்தாளுக்குக் கடன் வச்சா சும்மா விடமாட்டா. பொண்டாட்டிய கூட்டிட்டு போலைனாலும் நீயாச்சும் ஒரு எட்டு போய் காணிக்கைய குடுத்திட்டு வந்துடுடா” என சாகும்வரை சொல்லிக் கொண்டிருந்தாள் ராமர் பாண்டியனின் ஆத்தா. தன் மனைவியும் செத்துப் போய், பேரக் குழந்தைகளையும் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்துடனேயே அய்யாவும் கண்ணை மூடிக்கொண்டார். செண்பகம் சொன்னது ராமர் பாண்டியனுக்கு நியாயமாகப் பட்டது. சிவப்புச் சேலையொன்றை எடுத்துக் கொண்டு போய் இசக்கியம்மனுக்கு சாத்திவிட்டு ஊருக்குத் திரும்பியவர் செண்பகத்திடம் தெரிவித்தார். “சீக்கிரமே ஒனக்கு ஆம்பிளப் புள்ள பொறக்கும் பாரு” என்று அவள் கூறியது பலித்தது. பொன்னுத்தாயி அதன் பிறகு தலை நிமிர்ந்து நடப்பதாகவும் எல்லா வீட்டு விசேஷங்களுக்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஆர்வத்துடன் செல்வதாகவும் அவருக்குத் தோன்றியது. அவனுக்கு இசக்கி பாண்டி என்று பேர் வைத்தார்கள். பட்டணத்தில் படித்து ஹைதராபாத்தில், அரசு வங்கி ஒன்றில், உத்தியோகத்தில் இருக்கும் அவன், எப்போதாவது ஊருக்கு வரும்போதெல்லாம் இசக்கி பாண்டி என்ற பெயரை தனக்கு வைத்ததற்குக் குறைபட்டுக் கொள்வான். “ஸ்கூல்ல சேர்க்கும்போதாவது மாத்தியிருக்கலாமே பா” என்று ஆதங்கப்பட்டுக் கொள்வான்.
“அந்தப் பெயருக்குப் பின்னால ஒரு பெரிய கதையே இருக்குது” என்று அவர் சிரித்தபடி சொல்வார். அவனோ, “பழைய கதைகள்ல மூழ்கிப்போயி மூட நம்பிக்கைகளோட அலையறதே நம்ம ஜனங்களுக்கு வாடிக்கையாகிப் போச்சு” என்று சலித்துக் கொள்வான். சொந்த மண்ணும், சொந்த பந்தமும் அவன் பெயரைப் போலவே ஒட்ட முடியாமல் அந்நியமாகிப் போயின.
பொன்னுத்தாயி மறைவிற்குப் பிறகு அவன் வருகையும் அருகிப் போனது. தனிமையின் வெறுமை ராமரை வாட்டாமல் வயல் வெளிகளே அவரைக் காத்து வந்தன. உள் மனதின் சூனியம் அவரைத் தவிக்க விடும் போதெல்லாம் செண்பகத்தின் தோழமையான பேச்சு பெரும் ஆறுதலாக அமைந்தது. வெடித்திருந்த பருத்தியைப் போலவே வெள்ளை மனது கொண்ட செண்பகம், ஆரம்பத்திலிருந்து இன்று வரை தனக்கு சிநேகிதியாக இருந்து வருகிறாள் என்ற உண்மையை தொடக்கத்தில் புரிந்துகொள்ளவில்லையென்றாலும் இப்போது பக்குவப்பட்ட அவரது மனதிற்கு விளங்கிற்று. எந்த கருங்குளம் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தபோது காதல் காட்சிகள் வரும்போதெல்லாம் செண்பகத்தை நினைத்து கிளுகிளுத்துப் போவாரோ, அந்த டூரிங் டாக்கீஸை மற்ற ஊர்களில் உள்ள டூரிங் டாக்கீஸ்களை மூடியது போலவே மூடிவிட்டார்கள். ஆனால், பெஞ்ச் டிக்கெட்டில் அமர்ந்து தான் ரசித்த காதல் படங்களும், பாடல்களும் இன்னும் நினைவில் நிற்பது போலவே செண்பகத்திடம் தோன்றிய அந்த விடலைப் பருவத்து அன்பும் மனதில் அழியாத படக்காட்சி போல பதிந்து நிற்கிறது என எண்ணிக்கொண்டார்.
“பயிறி பயிறி ஓடியாறேன்யா. தீர்த்தாரப்பபுரத்தில பெருமாள் அய்யா வீட்ல நாத்தங்கால் பாவக் கூப்டாவ. அதான் கொஞ்சம் சொணங்கிப் போச்சு.” என்று மூச்சிறைக்க வந்து நின்ற மருதாயின் குரல் அவரது கடந்த கால, நிகழ்கால  எண்ண ஓட்டங்களைக் கலைத்துப் போட்டது. சுதாரித்துக் கொண்டவராய், “பரவாயில்ல மருதாயி. இன்னைக்குப் பெரிசா வேலை ஒண்ணுமில்ல. முடிஞ்சா உளுந்து வயல்ல களை எடுத்திட்டிருக்கவங்களோட சேந்துக்க முடியுமான்னு பாரு.” என்றார்.
“அதுக்காத்தானேய்யா இம்முட்டு தூரம் ஓடியாந்தேன். செண்டுக்குப் பணம் அனுப்பனும். ஏதோ பரீட்சை வருதாம்.” என்று அவள் உளுந்துச் செடி வளர்ந்திருந்த வயலை நோக்கி விரைந்து சென்றாள்.
“பாவம் மருதாயி. இவ மவ படிச்சு வேலைக்குப் போயிட்டான்னா, போற எடத்துல உட்கார்ந்து நிம்மதியா கஞ்சு குடிப்பா.” மருதாயின் நிலைக்காக இளகியவர், “மோட்டார் ரொம்ப நேரம் ஓடிட்டிருக்கு. ஆப் பண்ணணும்” என பம்பு செட்டுப் பக்கம் நடையைக் கட்டினார்.
வாய்க்கால் வரப்பில் அமர்ந்தபடி சுட்டிக் கல் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த ராஜகனியைக் கண்டதும், “ஏ புள்ள எப்ப வந்த? சின்னப்பிள்ள கணக்கா புள்ளைகளோட பிள்ளையா சுட்டிக்கல் விளையாண்டுட்டிருக்க... ஒம் புருஷன் வரலியா?” என வினவினார்.
மரியாதையுடன் எழுந்து நின்ற ராஜகனி, விலகியிருந்த மாராப்பைச் சரி செய்தபடியே, “ரெண்டு பேருந்தான் வந்திருக்கோம் மாமா. ஊர்ல நெலம சரியில்ல. அவரால ஆடு மேய்க்க முடியல.., வேற பளுவான வேலையும் செய்ய முடியல.” என்றாள்.
“ஆத்தா வீட்ல வந்து உட்காந்து பொழைப்பு தேடிக்கலாம்னு பாத்தியோ புள்ள? கவலைப்படாத எல்லாம் சரியாப் போயிடும்” என்று தைரியம் சொன்னார். பிறகு மோட்டாரை அணைப்பதற்காகத் தண்ணீர் தொட்டிக்குப் பின்னாலிருந்த சிறிய அறைக்குள் சென்றார்.
“ஐயா ராமர் ஐயா. கொஞ்ச நேரம் ஓட விடுங்க. நான் குளிச்சிட்டுப் போயிடறேன்.” என்று குரல் கேட்டு திரும்பிப் பார்த்த ராஜகனி, கோவங்காட்டக்கா வந்திருக்காக. கொஞ்ச நேரம் ஓடட்டும்யா.” என்று குரல் கொடுத்தாள். மோட்டார் அறைக்குள்ளிருந்து வெளியில் வந்த ராமர் பாண்டியன், கையில அம்பாரத் துணி வச்சிருக்க கோவங்காட்டா...! சரி, குளிச்சிட்டுப் போ.” என்று சொல்லிவிட்டு ஏலே வண்டியேறி ஒரு அரை மணி நேரம் கழிச்சு மோட்டரை ஆப் பண்ணிட்டு வீட்டுக்கு வா. தேங்காய உரிச்சு போடணும் என வரப்பு வெட்டிக்கொண்டிருந்த வண்டியேறியிடம் கூறியவாறு ஒத்தையடிப் பாதையில் நடந்துசென்றார்.
ராமர் பாண்டியன் செல்வதைச் சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ராஜகனி, “மாமா, ஆளே உருக்கொலைஞ்சு போயிட்டாருக்கா. அத்தை இருந்தவரைக்கும் ஒரு சின்னக் கொற கூட இல்லாமப் பாத்துக்கிட்டாக. மனுஷன் நெஞ்ச நிமித்திக்கிட்டு கம்பீரமா நடந்துபோறத, கண்கொட்டாமப் பாத்துக்கிட்டிருக்கலாம். இன்னிக்கு எம்புட்டு தளர்ந்து போய்ட்டாக பாத்தியா அக்கா” என்றாள்.
“நீ சொல்றது நெசந்தான் கனி. பொன்னத்த கைப் பக்குவத்தில கறி மீனுன்னு ஆக்கிப்போட்டு நேரம் சொணங்காம சாப்பிட வச்சு பச்சப் புள்ளைய கவனிக்கிறாப்ல பாத்துக்கிட்டாக. அவுக மீன் கொழம்பு வச்சா ஊரே மணக்கும்! ம்... சாவு இவ்வளவு சீக்கிரம் அவுகளக் கொண்டு போகும்னு யாரு நெனச்சா?
“சாவு பல நேரம் நம்ம பக்கத்திலேயேதான் நின்னுட்டிருக்குக்கா. அது தெரிஞ்சாலும் தெரியாதது மாதிரி கண்ணை மூடிக்கிட்டு, கனா கண்டுக்கிட்டு வாழ்வப் பத்தி யோசிச்சுக்கிட்டு வாழ்க்கைய கடத்திட்டிருக்கோம்.” ராஜகனி முணுமுணுப்பாகக் கூறிய வார்த்தைகள் கோவங்காட்டாளுக்குக் கேட்கவில்லை. ஆனாலும், அவள் முகத்தில் இருந்த வருத்தத்தை இவள் மனசு படித்துவிட்டது.
“உனக்கு ஏதாச்சும் மனக்கஷ்டமா தாயி? ஊருக்கு வந்ததிலேர்ந்து ஒங் கிட்ட கலகலப்பே காணோமே?”
“ஒண்ணுமில்லேக்கா”
“பிள்ளை கிள்ளை எதுவும் பெத்துக்கிடலன்னு கவலபடுதியா? உனக்குக் கண்ணாலமாகி ஒரு அஞ்சாறு வருஷம் இருக்குமா தாயி?”
“வர்ற ஐப்பசியோட ஆறு வருஷம் முடியுதுக்கா.”
“ராமர் மாமா – பொன்னத்தைக்குக் கூடத்தான் ரொம்ப வருஷம் புள்ள பாக்கியம் இல்ல. அவுக மனச தளரவிடலியே! ராஜாவாட்டும் பையன பெத்துக்கலையா? இன்னொண்ணும் ஞாபகம் வச்சுக்க. புள்ளைங்க பொறந்துட்டா மட்டும் சந்தோஷம் வந்துடும்னு நினைக்காத. இப்ப பாரு, பொண்டாட்டியப் பறிகொடுத்துட்டு ராமர் மாமா ஒத்த மரமா ஊருக்குள்ள தனியாத்தானே கெடக்காரு.”
“எங் கவல அதில்லக்கா.”
“அப்ப ஏதோ கவல இருக்குதுங்க?”
“கோவங்காட்டாளின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்த ராஜகனி, “மாமாக்கு இப்ப சோறு பொங்கி போடுறது யாரு “ என்று கேட்டாள்.
“மேலத்தெரு ஒத்தக் கை செவிட்டு ராசம்மாதான் பொங்கிப் போடுறா. அவளால வெரசலா எதுவும் செய்ய முடியாது. கொழம்புல உப்பு கூடிப்போச்சுனு சொன்னா, கொறஞ்சு போச்சாக்கும்னு நெனச்சு கூடக் கொஞ்சம் அள்ளிப் போட்டிடுதாளாம்! தினமும் மத்தியானம் சாப்பாட்டுல இப்படி ஏதாவது ஒரு கூத்துதான் நடக்குதாம். ரவைக்கு மாமாவே கேப்ப ரொட்டி சுட்டுக்கிடுதாகளாம். நல்லது கெட்டதுக்கு கறி சோறு செஞ்சு கொடுத்து விட்டாக் கூட மாமா வாங்கிக்கிறதில்ல. எப்பவாச்சும் எள்ளு துவையலு செஞ்சா அவுகளே கேட்டு வாங்கிக்குவாக.”
“அடிக்கடி அவுக பையன் வந்து பாத்தாக்கூட நல்லாயிருக்கும்லக்கா?”
“எங்கிட்டிருந்து வர்றது? திடீர்னு வந்தா ரெண்டே நாளுதான். வர்றதும் தெரியாது... போறதுந் தெரியாது! மனசு கேக்காம மாமாதான் அப்பப்ப ஃபோன் போட்டுப் பேசுவாரு. பத்தாததுக்கு நெல்லு வித்த காசு, கல்லு வித்த காசுன்னு எல்லாத்தையும் அவனுக்கு அனுப்பிவிட்டிடுதாரு. புள்ளை பெத்துக்கிட்டாலும் கஷ்டம், பெத்துக்கிடலனாலும் கஷ்டம்.”
“எசக்கி பாண்டிக்கு ஒரு இருபத்தஞ்சு இருபத்தியாறு வயசு இருக்குமாக்கா?” ராஜகனி கேட்டதும், “அதவிட ஒரு வயசு அதிகமாவே இருக்கும்...” என்று பதில் சொன்ன கோவங்காட்டாள், “நீ என்ன கேக்க வர்றன்னு தெரியுது. ஒவ்வொரு வாட்டி ஃபோன்ல பேசும்போதும் கல்யாணத்தப் பத்தி மாமா கேட்டுக்கிட்டுதான் இருக்காரு. ஆனா, எசக்கி பிடிகொடுத்தே பேசுறதில்லையாம்” என்ற கோவங்காட்டாள், “நம்ம ஊரு பக்கத்திலயே ஏதாவது ஒரு நல்லப் பொண்ணா பார்த்து வெரசலா பையனுக்குக் கட்டிவச்சிடணும்னு ஆசப்படுதாக... யார் தலையில என்ன எழுதியிருக்கோ!” என்றாள் களைத்துப்போன குரலில்.
பதில் எதுவும் சொல்லாத ராஜகனி வாய்க்காலில் சீராக ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் காலை விட்டு அசைத்தபடி யோசனையில் ஆழ்ந்தாள். கோவங்காட்டாள் கொண்டுவந்திருந்த அழுக்குத் துணிகளை சோப்பு போட்டு துவைக்கத் தொடங்கினாள்.
“நீ தொவக்கா, நான் அலசுறேன்” என்று உதவிக்கு வந்தவள், “ஆளுங்க மனச வெளுக்கிறதுக்கு கடையில படியாரம் எதுவும் கெடச்சா நல்லாயிருக்கும்.” என்று சொல்லிவிட்டு துணிகளை அலச ஆரம்பித்தாள்.
நிச்சயமாக ராஜகனிக்கு மனசு சரியில்லை என்று எண்ணிக்கொண்ட கோவங்காட்டாள், இப்போதைக்கு அவளை எதுவும் கேட்கவேண்டாம் என்று முடிவு செய்துகொண்டவளாய் வேகமாகத் துணிகளை துவைக்கத் துவங்கினாள்.
இன்னமும் கூழாங்கல் வைத்து வரப்பில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து, “ஏளா சிறுக்கிகளா, சளி பிடிச்சிக்கப் போகுது. வீட்டுக்கு போங்க. பள்ளிக்கூடம் லீவுன்னா தண்ணியில கெடந்து ஆடுறது” என்று அதட்டிய கோவங்காட்டாளைச் சற்று சங்கடத்துடன் பார்த்த குழந்தைகள், “கொஞ்ச நேரம் வெளாண்டுட்டு போறோமே” என்று கோரஸாகக் கெஞ்சினர். அவளும் சிரித்தபடி ‘சரி’ என தலையாட்டி விட்டு தன் வேலையில் ஆழ்ந்தாள். பிறகு, “ரெண்டு ரெட்ட சுளியையும் வீட்ல விட்டுட்டு வந்திருக்கேன். ஒண்ணு தொட்டில்ல கெடக்குது. ரெண்டு வயசுக்கு மேலாகியும் பால்குடி மறக்கல. வெரசலாப் போகணும்.” என்றாள் ராஜகனியிடம். அவள் பதிலுக்குப் புன்னகைத்தாள்.
“மூத்த கொரங்கிருக்கு  பாரு, பொட்டச்சி... வாய் ஜாஸ்தி. கடவாப்பட்டி கணக்கா இழுத்துக்கிட்டுப் போகும். ரெண்டாவதும் சளைச்சதில்ல. அக்கா தம்பிக்குள்ள சண்டைய தீத்து வைக்கிறதே பொழுதன்னைக்கும் வேலையாப் போச்சு.” என்றாள் சற்று அலுப்புடன் கோவங்காட்டாள். ஆனால், குரல் அலுத்துக்கொண்டதுபோல் இருந்தாலும், அதில் ஒரு ரகசிய குதூகலம் இருப்பதாக ராஜகனிக்குத் தோன்றியது.
“இந்தக் குடுப்பனை எனக்கு இருக்குமோ இருக்காதோ. அந்தத் தங்கம்மனுக்குத்தான் தெரியும்” என்று சத்தமாகவே கூறினாள். ஆனால் தண்ணீர் விழுந்த இரைச்சலில் சரியாகக் கேட்காததால் அதைப் பற்றி எதுவும் கோவங்காட்டாள் கேள்வி எழுப்பவில்லை என்பது ராஜகனிக்கு ஆறுதலாக இருந்தது.
துணி துவைத்து முடித்து கோவங்காட்டாள் குளிக்கத் தொடங்கியதும் வண்டியேறி வந்து “ஐயா, அரை மணி நேரம்னு சொல்லிட்டுப் போய் ரொம்ப நேரமாச்சு. மோட்டர ஆஃப் பண்ணப் போறேன்.” என்று சொன்னான்.
“சும்மா புகலு சொல்லாத. இந்தா குளிச்சு முடிச்சுடறேன்.” என மேலிருந்து கொட்டிய தண்ணீரில் தலையை கொடுத்தாள் கோவங்காட்டாள். எதிர்த் திசையில் செண்பகமும் மருதாயியும் நெருக்கமாகப் பேசிக்கொண்டு வருவதைப் பார்த்த ராஜகனி, பெருமூச்சு விட்டாள். ஊர்க் கதையும் புறணியும் பொம்பளைங்க பேசிக்கிறாங்கன்னு சொல்லிட்டுத் திரியுது சில ஜென்மங்கள். கஷ்டப்பட்ட பொம்பளைங்க ஒருத்தருக்கொருத்தர் பேசும்போது அவங்கவங்க சீரழிஞ்ச பொழப்ப உள்ளது உள்ளபடி சொல்லுதாகளோ இல்லியோ, மனசுல இருக்கிற பாரத்தைக் கொஞ்சமாவது எறக்கி வச்சுக்கிறாக என கோவங்காட்டாளைப் பார்த்துக் கூறினாள். தண்ணீரின் இரைச்சலில் அவளுக்கு எதுவும் கேட்காததால் கையை உயர்த்தி ‘என்ன’ என்று சைகையில் கேட்டாள். இவளும் ‘ஒன்றுமில்லை’ என்பதுபோல் கையை அசைத்துவிட்டு தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கினாள். குளிர்ந்த தண்ணீர் உடம்பில் பட்டதும் ‘மனப் புழுக்கம்’ கொறஞ்சா நல்லாயிருக்கும்.” என எண்ணியபடியே நீருக்குள் மூழ்கினாள் ராஜகனி.

••• அத்தியாயம் 4 முற்றும் •••

No comments:

Post a Comment