Tuesday, May 20, 2014

அத்தியாயம் - 5

அதிகம் போனால் அந்தப் பெட்டியில் ஐந்தாறு பேர் இருக்கலாம். அதிலும் ஒருசிலர் அன்றாடம் அந்த வழித்தடத்தில் பயணம் செய்பவர்கள் போலத் தெரிகிறது. வெளியில் வேடிக்கை பார்ப்பது போல கண்கள் ஜன்னலுக்கு வெளியே இருந்தாலும் அங்கு பார்த்த காட்சிகள் அவர்கள் சிந்தனையில் பதிவாகவில்லை என்பதும் மனதில் வேறு ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் ஆனந்துக்குப் புரிந்தது. திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் வழியில் ஆறுகளும் வயல்களும் மா, தென்னந்தோப்புகளும் வரிசையாக நிறைந்திருக்கும். சிறு வயதில் அப்பாவும் அம்மாவும் அடிக்கடி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்து வருவார்கள். அப்பொழுது ரயிலில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு ஆறுகள் அல்லது வயல்களில் கூட்டமாக நிறைந்திருக்கும் கொக்குகளைக் கண்டால் கை தட்டிக் குதித்துச் சிரிப்பான் ஆனந்த். ஒவ்வொரு முறை அவன் அவ்வாறு சந்தோஷத்தில் துள்ளும் போதும் அம்மா அவன் தோள்களில் தட்டிக் கொடுப்பாள். வெளியில் வேடிக்கை பார்த்து ரசிப்பானே தவிர, அது என்ன, இது என்ன என்று கேள்விகள் கேட்க மாட்டான். சில சமயங்களில் அம்மாவே அவனுக்குச் சில விஷயங்களைப் புரிவதுபோல விளக்கமாக எடுத்துச் சொல்வாள். குறிப்பாக ஒவ்வொரு ஊரைக் கடக்கும் போதும் கோயில் அல்லது கோபுரங்களைக் கண்டால் அதைப் பற்றி, அதன் தலபுராணங்களைப் பற்றிக் கதை கதையாகச் சொல்லிக் கொண்டிருப்பாள். அப்போதும் கண்களை அகல விரித்து ‘ஆங்... ஆங்...’ என்று தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருப்பானே தவிர, எந்தக் கேள்வியும் எழுப்ப மாட்டான். பழங்கள், நொறுக்குத் தீனி விற்பவர்கள் வந்தால் அதில் எதையாவது வாங்கிச் சாப்பிட விரும்பினாலும் வாய் திறந்து கேட்டதில்லை, மாறாக அம்மாவின் முகத்தைப் பார்ப்பான். அவளே புரிந்து கொண்டு அவன் விரும்புகின்ற பொருள் தரமானது என்று நம்பினால், வாங்கித் தருவாள். இல்லையென்றால் வேண்டாமென்று மறுப்பதுடன், “பாரு, கொய்யாப் பழம் நஞ்சுபோயிருக்கு... நல்லாருக்காது.” என்றோ “எண்ணப் பலகாரம் எப்ப சுட்டதோ, வயத்தில மக்கு வைக்கும்.” என்றோ விளக்கமும் சொல்வாள். அவள் கூறும் காரணங்கள் புரிகிறதோ இல்லையோ, அடம் பிடிக்காமல் சரி என்று உடனே தலையாட்டி விடுவான். அப்பா எப்பொழுதும் செய்தித்தாள் அல்லது புத்தகம் படித்துக்கொண்டு வருவார். அம்மா இவனுடன் பேசும் போது மட்டும் வாசிப்பதை நிறுத்தி விட்டு அவள் பேசுவதையே ரசித்துப் பார்ப்பார். அப்போது அவரது முகத்தில் கர்வமும் பிரமிப்பும் கலந்த உணர்வுகள் தோன்றும். அம்மாவின் திடீர் மரணம் வரையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பயணங்கள் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தன. சில நேரங்களில் நரசிம்மன் மாமாவும் மரகதம் அத்தையும் கூட அவர்களுடன் வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் பயங்கரக் கலகலப்பாக இருக்கும். ஆனால் அம்மா இறந்த பிறகு அப்பா ஒரு முறை கூட திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்றதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் தன் உயிர், ஆன்மாவின் நேரடி பிம்பமாக அம்மாவை அவர் தரிசித்திருக்க வேண்டும். அதனால்தான் கோர விபத்தில் அவளை இழந்ததும் தன்னையே தொலைத்தது போல அவர் தடுமாறிப் போனார். அவளுடன் வாழ்ந்த அற்புதமான நினைவுகளின் நிகழ்கால நிஜங்களாக கண் முன் நின்றிருந்த குழந்தைகளுக்காக மட்டுமே தன்னை வெளி அளவிலாவது சரி செய்துகொண்டு அடுத்து வந்த நாட்களை எதிர்கொண்டார். அவனும் படிப்பு, வேலை என்று வெளியூர்களுக்கு நகர்ந்த பிறகு, இதுபோன்ற உள்ளூர்ப் பயணங்களுக்குச் சரியான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அதனால்தான் பிரியா,
“சவுத் சைடுக்கு நான் அவ்வளவாக வந்ததில்லை ஆனந்த். அஞ்சு வயசுல கேப் காமரீனுக்கும் குற்றாலத்துக்கும் என்னையும் கூட்டிக்கிட்டு ஃபேமிலியோட போனதா மம்மி சொல்லியிருக்காங்க. அப்போ நான் அழுதிட்டேயிருந்தேனாம்! ஆனா, இப்ப அங்கெல்லாம் சுத்து சுத்துன்னு சுத்தணும்போல இருக்கு, அதுவும் உங்க கூட” என்று சொன்னதும் உடனே ஒத்துக்கொண்டான்.
கண்டிப்பாகத் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ரயிலில் அவளை அழைத்துச் செல்லவேண்டுமென்றும் முடிவு செய்துகொண்டான். ஆனால் முதலில் கன்னியாகுமரிக்கும் குற்றாலத்திற்கும் செல்ல வேண்டுமென்று  அவள் தீர்மானமாகச் சொல்லி விட்டதால் தங்கள் பயணத்தின் கடைசி நிகழ்வாக திருச்செந்தூர் செல்வதை வைத்துக் கொண்டான். கன்னியாகுமரியில் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் பாறைக்குப் படகுகள் செல்வது ரத்து செய்யப்பட்டிருந்தது. அங்கு செல்ல முடியவில்லையென்பது அவனைப் போலவே பிரியாவிற்கும் வருத்தமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனாலும்,
“கடல் தண்ணீன்னா ரொம்ப பயம் எப்படிடா போட்ல போறதுன்னு யோசிச்சிட்டிருந்தேன்.” என்று அவள் சொன்னதும், “உனக்காக ஹெலிகாப்டர்தான் விடணும்.” என்று கேலி செய்தானே தவிர உண்மையில் விவேகானந்தர் பாறைக்குச் செல்வது தவிர்க்கப்பட்டதில் பிரியாவிற்கு சந்தோஷம்தானோ என்ற சந்தேகமும் எழுந்தது. சங்கினால் செய்யப்பட்ட விதவிதமான மாலைகளையும் தோடுகளையும் வளையல்களையும் வாங்கிக் குவித்த பிரியா, இவற்றையெல்லாம் பெங்களூருவில் மலிவான விலையில் வாங்க முடிவதில்லை என்று சொன்னதும் தலையை அசைத்து ஆமோதித்தானே தவிர, அவளுடைய இந்தப் பேச்சு பரிவர்த்தனைகளில் ஒட்டாமல் விலகி நின்றிருந்தான். ஒருவேளை கன்னியாகுமரி அம்மன் பற்றி அவள் இவனிடம் ஆர்வமாக எதையும் கேட்டுத் தெரிந்துகொள்ள முயல்வாள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால் ஏமாற்றமாய் உணர்கிறோமோ என்றும் எண்ணிக்கொண்டான்.
மறுநாள் குற்றாலத்திற்கு வந்தபோது பெரிய, பெரிய வெள்ளை பூக்களை கண்ணுக்குத் தெரியாத நார்களில் மிக நெருக்கமாகக் கட்டி மலையிலிருந்து உருட்டி விட்டது போல அருவி வெள்ளமாகக் கொட்டியது. ஐராவதி யானையில் அமர்ந்திருக்கும் இந்திரனின் வானுலகம் வரை செல்லும் அருவியில் சூரியனின் ஒன்பது குதிரைகள் பூட்டப்பட்ட தேர்க்கால்கள் வழுக்கிச் செல்லும் என்ற திரிகூட ராசப்ப கவிராயரின் பாடல் வரிகள் ஆனந்திற்கு நினைவு வந்தது. பிரியாவிடம் அதை அவன் சொன்னபோது,
“இதையெல்லாமா இன்னமும் நினைவில வச்சிட்டிருக்கீங்க” என்று விநோதமாகப் பார்த்தாள்.
“நீ தமிழ் படிச்சிருக்கதானே பிரியா?”
“ஆமா, பத்தாவது வரைக்கும். அப்புறம் ஃப்ரெஞ்சு எடுத்துக்கிட்டேன்.”
“ஏன்? தமிழ் படிக்கிறதுன்னா பயமா?”
“இல்ல பிடிக்கல. பரீட்சைக்காகக் கஷ்டப்பட்டு வேண்டா வெறுப்பா படிச்சேன். ஃப்ரெஞ்சுல நான்தான் எப்பவும் ஃபர்ஸ்ட் மார்க் தெரியுமா?”
“ஓஹோ! நான் ஸ்கூல் படிக்கும்போது எப்பவும் தமிழ்ல ஃபர்ஸ்ட் மார்க்கை விட்டுக்கொடுத்ததில்ல.”
“அதென்ன பெரிய சாதனை மாதிரி சொல்றீங்க!”
“கண்டிப்பா! தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கம்மா சின்ன வயசுலேர்ந்து அருமையா சொல்லிக் கொடுத்தாங்க. பழைய தமிழ் இலக்கியங்கள்ல இருந்து நெறைய கதைகள்லாம் கூட சொல்லித் தந்திருக்காங்க.”
“உங்கம்மா என்ன படிச்சிருந்தாங்க?”
“அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி. கணக்கில கூட அம்மா புலி. நான் ஆறாங்கிளாஸ் படிக்கிற வரைக்கும் அம்மாதான் கணக்கு சொல்லிக் குடுத்தாங்க.”
“அப்புறம்?”
“இறந்து போயிட்டாங்க...” ஆனந்தின் நா தளுதளுத்தது, கண்களில் நீர் நிறைந்தது. சற்று நேரம் நிலவிய நிசப்தத்தில் தடுமாறி நின்ற பிரியா, சட்டென்று அவன் கைகளை பற்றிக் கொண்டு,
“அங்க பாருங்க எவ்வளவு குரங்கு” என்று எதிர்த் திசையில் சுட்டிக் காட்டினாள்.
“வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்”
என்று தமிழ் வாத்தியார் சிவஞானம் ராகத்தோடு பாடுவது நினைவுக்கு வந்தது. முகத்தில் மலர்ச்சி அரும்பியது. ஆனாலும், அதைப்பற்றி பிரியாவிடம் பேசி அவளுக்கு அலுப்பை ஏற்படுத்த வேண்டாமென எண்ணிக் கொண்டவனாய், அருவிக்குப் பக்கத்தில் போகலாமென பிரியாவை அழைத்துச் சென்றான். அருகில் சென்றதும்,
“அய்யய்யோ பயமா இருக்கு. நான் குளிக்கப்போகல.” என்று மறுத்த பிரியாவிடம், “குற்றால அருவியில் குளிப்பது ரொம்ப நல்லது. இங்க வந்திட்டு குளிக்காமப் போனா கேலி செய்வாங்க.” என்று என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் பயன் எதுவும் ஏற்படவில்லை.
தன் தங்கை அங்கு இருந்திருந்தால் நாள் முழுக்க அருவி நீரில் ஆடியிருந்தாலும் ‘இன்னும் கொஞ்ச நேரம் குளிச்சிட்டு வர்றேனே’ என்று அருவியை விட்டு வெளியே வர மறுத்திருப்பாள் என எண்ணிக்கொண்டான். மீனாய்ப் பிறந்திருக்க வேண்டியவள் மனுஷியாய் பிறந்துவிட்டாள் என்று எபி அடிக்கடி தன் தங்கையைக் குறித்து கிண்டல் செய்வது நினைவுக்கு வந்தது. அருவியையும் சுற்றியிருந்தவற்றையும் புகைப்படமெடுத்துக்கொண்டிருந்த பிரியாவைப் பார்த்தான். அவள் இயற்கையிலிருந்து எட்ட நிற்கிறாளோ எனத் தோன்றியது.  அவளைச் சந்தித்து பரிச்சயமாகி, நட்பு பாராட்டிப் பழகிய இந்த ஓராண்டில், பல சமயங்களில் வெளி மாநிலங்களுக்கு கருத்தரங்குகள், பயிற்சிகள், புகழ் பெற்ற கோயில்கள், ஆசிரமங்களுக்குச் செல்வது என்று சேர்ந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் கருத்தளவில், அபிப்பிராயங்களில் இரண்டு பேருக்கும் நடுவே பெரிய இடைவெளியை அவன் உணர்ந்ததில்லை. ஒருவேளை சென்ற ஊர்களும், பார்த்த இடங்களும், சந்தித்த மனிதர்களும் இரண்டு பேருக்குமே பெரும்பாலும் புதிது என்பதால் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நிலையிலேயே இரண்டு பேரும் இருந்ததால் இரசனையிலோ எண்ணங்களிலோ பெரிதாக பேதங்கள் எழவில்லை, அல்லது வேறுபாடுகள் வெளியில் தெரியவில்லை போலும். ஆனால் இப்போது இது தன்னுடைய இடம்; தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து பழகிய சொந்த மண், சந்தோஷமாய் சுவாசித்த காற்று. ஆனால் அது அவளுக்கு முற்றிலும் புதிது என்பதால் தனக்குப் பிடித்தமானதும், தன் நாடி நரம்புகளில் ரத்தமாகக் கலந்து நிற்கின்ற விஷயங்களும் அவளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதைக் காண்கையில் அவற்றிலிருந்து அவள் வேறுபட்டு, அந்நியமாகி நிற்பதைப் பார்க்கையில் இரண்டு பேருடைய தளங்களும் வேறு, வேறு எனத் தோன்றுகிறதோ?
அம்மா, அப்பா – இருவரின் அரவணைப்பில் பாதுகாப்பாய் பயணித்த பால்ய கால நினைவுகளில் பிரியா என்ற பாத்திரத்திற்குக் கிஞ்சித்தும் இடமில்லை போலும்! அதனால்தான் ஒரே ரயிலில் அவள் உடன் வந்தாலும் மற்ற பயணிகள் போலத்தான் என்ற எண்ணம் தனக்கு ஏற்படுகிறதோ? கடந்த காலத்தில் மகிழ்ந்த, இழந்துபோன வளமான தருணங்களைப் புதுப்பிக்கும் முயற்சியில் புதிதாக வந்தவர்கள் இடம் பெறுவது இயலாததுதானோ? ஒரு புள்ளியில் தோன்றி எங்கெங்கோ அலைந்து மீண்டும் அதே புள்ளியை வந்தடைந்த சிந்தனைகளைக் கலைத்தாள் பிரியா,
“என்ன யோசனை ஆனந்த்?”
“சும்மா பழைய ஞாபகங்கள்.”
“நீங்க அந்த நாள் ஞாபகங்களை கொறிச்சிகிட்டிருங்க. எனக்குத்தான் போர் அடிக்குது.”
“ஏன்? வெளியில பாக்கிறதுக்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கே!”
“அதான் எல்லா ஊர்லயும்தான் விதவிதமா இருக்கே. இவர்கூட பேசி எனக்குள்ள என்ன இருக்குதுன்னு புரிய வைக்கலாம்னுதான் இந்த ஊருக்கே வந்தேன். ஆனா ஒண்ணும் நடக்காது போலத் தெரியுது.” என மனதிற்குள் சொல்லிக்கொண்ட பிரியா,
“உள்ளயும்தான் பாக்கிறதுக்கு எவ்வளவோ விஷயம் இருக்கு. ஆனா, உங்களுக்குத்தான் கண்ணுலயும் மனசுலயும் படமாட்டேங்குது...” என்று தொடர்ந்து சொல்லாமல் நிறுத்திவிட்டாள்.
“எனக்கு விளங்கல.”
“சரியான விளக்கெண்ண...” உதடுகளுக்குள் சப்தமில்லாமல் முணுமுணுத்தவள் ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தினாள். எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பிரியாவை இப்பொழுது நேராகப் பார்த்தான் ஆனந்த். வழக்கமாக அவள் கூந்தலைச் சற்று மேலே  தூக்கி வாரி குதிரை வால் போலப் போட்டிருப்பாள், அல்லது க்ளிப் எதுவும் மாட்டாமல் தளரவிட்டிருப்பாள். இப்போது காற்றின் அலைப்புக்கு அஞ்சியோ என்னவோ படிய வாரி இறுக முடிந்திருந்தாள். அப்போதும் கூட சில முடிக் கற்றைகள் காற்றின் வேகத்தில் முன் நெற்றியில் வந்து விழுந்ததால் அவள் முகத்திற்கு மேலும் அழகூட்டுவதாய் அவனுக்குத் தோன்றியது. அதை அவளிடம் சொல்வதற்குக் கூட விரும்பினான். ஆனாலும் தயக்கமாக இருந்தது. ஆண்-பெண் நட்பின் மெல்லிய எல்லைக் கோட்டை உடைத்துப் பார்த்தால் அங்கு காதல் என்ற உணர்வு தயராகக் காத்திருக்கலாம். ஆனால் அதை எதிர்கொள்வதற்கு அப்போதைக்கு அவன் தயாராக இல்லை. இதுபோன்ற உணர்ச்சிகள் அடிவயிற்றிலிருந்து கிளம்பி நெஞ்சுக்குள் வந்து அடைபட்டு அவஸ்தையை ஏற்படுத்தும்போதெல்லாம் போர் முனையில் எந்தத் திசையில் எதிரி இருக்கிறான் என சர்வ ஜாக்கிரதையுடன் அடியெடுத்து வைக்கும் ஒரு சிப்பாய்க்கு உரிய எச்சரிக்கை உணர்வு வந்து தொற்றிக்கொள்கிறது.
சட்டென்று தலையை உதறிக் கொண்டு வெளியே கண்களைத் திருப்பியவன், இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அவள் முகத்தை ஏறிட்டான். அவள் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து கண்களை மூடியிருந்தாள். “அப்பாடா...” என்றிருந்தது. இனி நிம்மதியாக வெளியில் பார்க்கலாம். ‘ஏன் என்னைக் கவனிக்கவில்லை’ என்ற ஏக்கம் நிறைந்த கண்களால் இவள் கேட்டுக்கொண்டிருக்க மாட்டாள். ஒரு பெண்ணுடன் ஏற்படும் நட்பு அந்த வரைமுறையைக் கடந்து வெளியே செல்ல எத்தனிக்கையில் எவ்வளவு பெரிய வீரனும் கோழையாகி விடுவான் போல் தெரிகிறது என சிரித்துக் கொண்டான் ஆனந்த்.
முழுமையாக முற்றாததால் பசுமை மாறாமல் சற்றும் தலை வணங்காமல் நிமிர்ந்து நின்றிருந்த நெற்கதிர்கள்! நடுவே ஒய்யாரமாகக் கூடி நின்றிருந்த வெண்ணிறக் கொக்குகள்! அவற்றைக் கண்டதும் ஆனந்துக்குத் தங்கையின் நினைவு வந்து உற்சாகம் தொற்றிக் கொண்டது. அவனுக்கும், அவன் தங்கைக்கும் ஏழு வயது வித்தியாசம். அவன் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதுதான் அவள் பிறந்தாள். அவனைவிட நிறம் கம்மி என்று குழந்தையை பார்க்க வந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். அவள் அம்மாவோ,
“பாப்பா எவ்வளவு அழக பாருடா... மீன் போல கண்ணு” என்று இவனிடம் தூக்கிக் காட்டியபோது உண்மைதான் எனத் தோன்றியது. கண்கள் மட்டுமல்ல. அவளுக்கு அப்போதே இமைகளும்கூட நீளமாகவும் அடர்த்தியாகவும் இருந்தன. பாப்பாவைத் தூக்கிக் கொள்ளவும் மடியில் வைத்துக்கொள்ளவும் விரும்பி அவன் முயலும் போதெல்லாம் அவள் சிணுங்குவாள்.
“சரியான தொட்டாச் சிணுங்கி. சதா அழுதிட்டேயிருக்கு. அழுகுணிப் பாப்பா.” என்று குறை சொல்லுவான். ஆனால் வளர, வளர இவனிடம் அவள் ஒட்டிக்கொண்டாள்.
திருச்செந்தூர் செல்லும்போது ஜன்னல் ஓரத்தில் இவனை இடித்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்தபடி விடாது கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பாள். கொக்குகளைக் கண்டால் உடனே எண்ண ஆரம்பித்துவிடுவாள். சின்ன வயதில் அவள் ‘ந’வையும் ‘ர’வையும் மாற்றி, மாற்றி உச்சரிப்பாள். எனவே ஒண்ணு கொக்கு நெண்டு கொக்கு, மூணு கொக்கு, ராலு கொக்கு என விரல்களை விரித்து அவள் எண்ணும் போது புதியதொரு சுவையான ராகத்தைக் கேட்டாற் போல இருக்கும். அதுவும் ரயில் வேகமாகச் செல்லும்போது இவள் கொக்குகளை எண்ணுவதற்குத் தடையாக இருப்பதால், ரயிலை ஏன் நிறுத்துக்கூடாதென்றும் கேட்டுக்கொண்டிருப்பாள். சில சமயம் வயலும் ஆறும் ரயில் கூடவே ஒடி வருகின்றனவா என வினவி அதற்கான பதிலையும் விளக்கத்தையும் கேட்டு அதிரவைப்பாள்.
சங்கவைக்கு இரண்டேமுக்கால் வயதில் தலைக்கு மொட்டையடித்துக் காது குத்துவதற்காக, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போயிருந்தார்கள். “பச்சப் புள்ள, இளங்குருத்துக் காது. வலிக்காம குத்தி விடுங்கய்யா” என்று அப்பா திரும்பத் திரும்பக் காது குத்துபவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவளைத் தன்னுடைய மடியில் வைத்திருந்த நரசிம்மன் மாமாவுக்கு, அப்பாவின் தவிப்பு, சிரிப்பை வரவழைத்தது.
“சும்மாயிருங்க. ஒண்ணேகால் வயசுல அவளுக்குக் காது குத்தியிருக்கணும். பச்சை புள்ளைக்கு வலிக்கும், வலிக்கும்னு நீங்க சொன்னதாலதான் இத்தனை நாள் தள்ளிப்போட வேண்டியதாப் போச்சு.” என்று ஆதங்கத்துடன் அப்பாவை அதட்டினாள் அம்மா.
“ஒங்கப்பாவுக்கு ஒண்ணுமே தெரியல. காதுல கம்மல் ஜிமிக்கி போடணும்ல. அதனால, சின்னதா பாப்பாவுக்கு ஓட்ட போடப் போறாங்களாம். வலிக்கவே வலிக்காதாம். பாப்பா அழமாட்டாளாம்.” என்று சற்று ராகம் பாடுவதுபோல சங்கவையிடம் சொல்லிக் கொண்டிருந்தார் நரசிம்மன் மாமா. உடனே சங்கவை மாமாவின் காதைத் தொட்டுக் காட்டி, “கம்மலக் காணோமே” என்று கை விரித்தாள். பிறகு காது குத்துபவரிடம், “மாமாக்கு மொதல்ல ஓட்ட போடுங்க. அவர என் மடியில உக்கார வச்சுக்கிறேன்.” என்று சொல்லி எழுந்துகொண்டாள். பிறகு, அவளைச் சமாதானப் படுத்தி காது குத்துவதற்குள் போதும், போதுமென்றாகி விட்டது.
ஒரு முறை குரும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கையில் கஷ்டப்பட்டு எழுத்துக் கூட்டி பெயர்ப் பலகையில், ‘குரும்பூர்’ என வாசித்தவள், “இங்க இருக்கவங்கள்லாம் ரொம்ப குறும்பு செய்வாங்களோ? அதான் ‘குரும்பூர்’னு பேர் வந்துச்சா?” என்று தெளிவாகக் கேட்ட போது பக்கத்தில் இருந்தவர்களும் சிரித்தார்கள். அந்தப் பெட்டியில் அவர்களுடன் இருந்த நடுத்தர வயது பெண்மணியொருவர் கச்சனாவளையில் இறங்கும்போது அம்மாவிடம்,
“வீட்டுக்குப் போனதும் உப்பு மொளகா எடுத்துக் குழந்தைக்கு மறக்காம சுத்திப்போடும்மா.” என்று சொல்லிச் சென்றதும், வீட்டுக்கு வந்ததும் அம்மா தங்கைக்கு மட்டுமல்லாமல் தனக்கும் சேர்த்து திருஷ்டி சுத்தியதும் நினைவுக்கு வந்தது.
“இதென்ன பறவை ஆனந்த்?” இப்போது கேள்வி கேட்டவள் பிரியா. இதுக் கூடவா தெரியவில்லை என்று ஆச்சரியபட்ட ஆனந்த், “இதுதான் கொக்கு.” என்றான்.
“அப்படின்னா இது வேற, இதை போலவே இருக்குமே இன்னொரு பறவை... அது பேரென்ன… ஆங், ‘டக்’. அது வேறையா?”
“யூ மீன் வாத்து?”
“ஆமாம். அதேதான்.”
“கொக்கும் வாத்தும் வேற, வேறன்னு கூட உனக்கு நிஜமாவே தெரியாதா பிரியா?”
“ரெண்டும் வெள்ளையாத்தானே இருக்குது. அதான் கொழம்பிப் போய்ட்டேன்.”
“நல்ல வேளை நீ தப்பிச்ச. சங்கவை இங்க இல்ல. உன்ன உண்டு இல்லைனு ஆக்கியிருப்பா.”
இதைக் கேட்டதும் பிரியாவின் முகத்தில் சட்டென்று இறுக்கம் கவிழ்ந்தது. தான் அவளைப் புண்படுத்தி விட்டோமோ என்று வருத்தப்பட்ட ஆனந்த்,
“குரும்பூர்னு ஒரு ரயில் நிலையம் வந்துச்சே. அங்கயிருந்து கொஞ்ச தூரத்தில ஏரல்னு ஒரு ஊரு இருக்கு. அப்படியே போனா, பக்கத்திலயே முக்காணி, பழையகாயல், கொற்கை அப்படீங்கிற பழைய ஊர்கள்லாம் வரும். கொற்கை அந்த காலத்துல பாண்டியர்கள் துறைமுகமா இருந்தது. அங்க வெளையிற முத்துக்கள வாங்குறதுக்காக ரோமாபுரி மகாராணிகள் கஜானாவே காலி பண்ணதா சரித்திரம் சொல்லுது.” என்று பேச்சை மாற்றினான். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவள் போல்,
“சங்கவைங்கிற பேருக்கு என்ன அர்த்தம்? கேள்விப்படாத பேரு...” என்று அவன் தங்கை பக்கம் பேச்சைத் திருப்பினாள்.
“பழைய தமிழ் பேரு. எங்கம்மா ஆசையா வச்சாங்க.”
“ஆசையா வச்ச பேருக்கு என்ன அர்த்தம்?”
பிரியாவின் கேள்வியில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்திற்குப் பதிலாக எரிச்சலின் தொனி தெரிந்தது. ஆனாலும் அதைக் கண்டுகொள்ளாதவனாக, “கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய பாரியின் மகள் பெயர் அது. அவளும் அவள் சகோதரியும் பாடிய பாடல் கூட சங்க இலக்கியத்தில இடம் பெற்றிருக்குது.” என்று தெரிந்த தகவல்களைக் கூறினான்.
“அப்படின்னா உங்கப்பா பாரி வள்ளலா?”
பிரியாவைத் தேவையில்லாமல் உசுப்பேத்தி விட்டோமோ என்று அவளுடைய சொற்களிலிருந்த உஷ்ணத்தையும் ஏளனத்தையும் கண்டு சஞ்சலப்பட்டான் ஆனந்த். சிறிது நேரம் மவுனமாக இருந்தான்.
“உன்னை நான் புண்படுத்தியிருந்தால் சாரி.” என்றான் மெல்லிய குரலில். இப்போது பிரியாவிற்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. தான் அவனை காயப்படுத்திவிட்டதாக அவளுக்குத் தோன்றியது. இருவரும் சிறிது நேரம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. திடீரென்று கால்களுக்குக் கீழே பிஞ்சு விரல்களின் ஸ்பரிசம் உணர்ந்த ஆனந்த், சட்டென்று குனிந்து பார்த்தான். சிறுமி ஒருத்தி கைப்பிடியில்லாத சிறிய ஈக்குவாரியலாலே கீழே பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தாள்.
“ஐயோ தூசி...” துப்பட்டாவை எடுத்து மூக்கைப் பிடித்துக்கொண்டு முகம் சுளித்தாள் பிரியா. அவளுடைய இந்தச் செயலைப் பார்த்துப் பதறிய ஆனந்த் சிறுமியைத் தூக்கி நிறுத்தினான். ஒட்டியிருந்த வயிறும், உயிரற்ற கண்களுமாக ஏக்கத்துடன் இவனைப் பார்த்த அந்தப் பிஞ்சு முகம் இதயத்தைப் பிசைவதுபோல் இருந்தது.
“பள்ளிக்கூடம் போலியா?” சிறுமி இல்லையென்று தலையாட்டினாள்.
“சாப்பிட்டியா பாப்பா?”
பதில் சொல்லாது நின்றிருந்தாள் சிறுமி. பசியில் சோர்ந்திருந்த முகத்தின் வாட்டம் தன் மனதையும் வாட்டுவதை உணர்ந்தான். அவசரமாக தன்னுடைய லக்கேஜ் பேக்கை திறந்து பாலித்தீன் கவரில் சுற்றப்பட்டிருந்த ரொட்டிகளை எடுத்துக் கொடுத்தான். சிறுமியின் வறண்டிருந்த உதடுகளில் லேசாக ஈரப் புன்னகை எட்டிப் பார்த்தது. கையெடுத்துக் கும்பிட்டு இன்னொரு கையில் பிடியற்ற வாரியலை எடுத்துக் கொண்டு கிளம்ப முற்பட்டாள்.
“இங்கயே சாப்பிட்டுப் போலாமே பாப்பா”
“வீட்ல தம்பியிருக்கான்.”
உடனே சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாய்த் தாளை எடுத்து அவள் கையில் திணித்த ஆனந்த், தம்பிக்கு பிஸ்கெட் ஏதாச்சும் வாங்கிட்டுப் போ.” என்று தோள்களில் தட்டிக் கொடுத்து அனுப்பினான். இதற்குள் குரும்பூர் ரயில் நிலையம் வந்திருந்தது. வாசல் வரைக்கும் சென்ற சிறுமி மீண்டும் வந்து அவனைப் பார்த்து சிரித்தவாறு கும்பிட்டாள். விழிகளில் நன்றியுணர்ச்சி ததும்பியிருந்தது. அவள் போனதும்,
“எதுக்காக இப்படிலாம் செய்றீங்க? நாமதான் சின்ன குழந்தைகளக் கூட பிச்சைகாரங்களா வளர்த்துவிடுறோம்.” பிரியா படபடத்தாள்.
“அந்தக் குழந்தை சும்மா வந்து பிச்சை கேக்கலியே. குப்பையா கிடந்த இந்தப் பெட்டிய சுத்தப்படுத்தியிருக்காளே.” என்று சொன்ன ஆனந்துக்குப் பதில் பேச முடியாமல் திணறிய பிரியாவை நோக்கி, “ப்ளீஸ் பிரியா இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்.” என்று கையசைத்தான். பின்பு இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
ஒரு முறை சங்கவையுடன் மும்பைக்குச் சென்றுவிட்டு, மும்பை மெயிலில் சென்னைக்குத் திரும்பும் வழியில், ஆந்திர மாநிலத்தில் ஏதோவொரு ரயில் நிலையம் எந்த ரயில் நிலையம் என்று இப்போது அவனுக்குச் சரியாக நினைவில்லை. இருவருக்கும் சாப்பாடு பார்சல் வாங்கியிருந்தான். அவள் கை கழுவச் சென்றிருந்த நேரத்தில் சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்து வைத்தான். திடீரென்று ரெயிலுக்குள் ஏறியிருந்த சிறுவனொருவன் இந்த சிறுமி செய்ததுபோலவே இருக்கைக்குக் கீழே சுத்தம் செய்யத் தொடங்கினான். தூசி பறந்து சாப்பாட்டில் விழுகிறது என்று எரிச்சலடைந்த ஆனந்த் அந்தச் சிறுவனை கைகளால் தள்ளிவிட்டு கோபமாகத் திட்டத் தொடங்கினான். இவன் பேசிய தமிழ் அந்தச் சிறுவனுக்குப் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், கோபத்தில் சிவந்திருந்த முகமும் உக்கிரமான பார்வையும் ஏற்படுத்திய கலவரத்தில் சுதாரித்து எழுந்துகொள்ள முடியாமல் பரிதாபமாக அவன் நடுங்கியபடி ஆனந்தைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த வேளையில்தான் சங்கவை திரும்பி வந்தாள். என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்தவளாய், சிறுவனைத் தூக்கிவிட்டவள், அண்ணனைப் பார்த்து முறைத்தாள். அவனோ,
“சாப்பாடெல்லாம் தூசி. வெளில துரத்து அந்தப் பையனை.” என்று சிடுசிடுத்தான்.
பதிலுக்கு சங்கவை “அறிவில்லாம பேசாதண்ணா. சின்னப் பையனிடம் எவ்வளவு மோசமா நடந்துக்குற! பேசாம போய் எடத்துல உக்காரு.” என்று அதட்டி விட்டு பர்ஸைத் திறந்து எண்ணிப் பார்க்காமல் கையில் கிடைத்த சில்லறைகளை எடுத்து அவனிடம் கொடுத்தாள். பிறகு, “எனக்குப் பசிக்குது. சாப்பிடப் போறேன்.” என்று சொல்லிவிட்டு மளமளவென்று சாப்பிடத் தொடங்கினாள். ஆனந்துக்குத் திகைப்பாக இருந்தது. சாக்லேட்டில் இருக்கும் கவரைப் பிரித்து விட்டு மேஜையில் வைத்தால் கூட, “ஐயோ தூசி பட்டிருக்கும். எனக்கு வேண்டாம்” என்று தட்டி விடுகின்ற அதே தங்கையா இப்படி நடந்துகொள்கிறாள்! இரண்டு வாய் சாப்பிட்டவள் எதுவுமே நடக்காதது போல் “இந்தா நீயும் சாப்பிடு” என்று அடுத்த பொட்டலத்தை அவன் பக்கம் திருப்பினாள்.
ஆனந்த் அவள் சொன்னதைக் காதில் வாங்காதவனாக விறைப்புடன் எழுந்து போய்விட்டான். இப்போது யோசித்துப் பார்த்தாலும் அன்று சங்கவையை, கண்கள் சிவந்து முகம் வீங்க அழ வைத்த சம்பவம் நெஞ்சைப் பிசைந்தது. அந்த ரயில், விரைவு வண்டி இல்லை என்பதால் பெட்டிகளுக்கிடையே இணைப்பு இல்லை. தாங்கள் அமர்ந்திருந்த பெட்டி முழுக்க அண்ணனைத் தேடிய சங்கவை, ஒருவேளை ரயில் நிலையத்திலேயே கோபத்துடன் இறங்கிவிட்டிருப்பானோ எனக் கலங்கியவாறு பரிதாபமாக ஒவ்வொருத்தரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தாள். வாசல் பக்கம் நின்று கதை பேசிக்கொண்டிருந்த இளைஞர் கும்பலுடனே அவன் நின்றிருந்ததை அவள் கவனிக்கவில்லை. பதற்றத்துடன் அவள் தேடியதையும், கண்களில் இருந்து வழிந்த நீரைக் கூட துடைக்கத் தோன்றாமல் ஆதங்கத்துடன் அலைபாய்ந்த காட்சியையும் குரூரமாக, தான் ரசித்துக்கொண்டிருந்தோமா என்ற குற்ற உணர்வு இப்போதும் அவனுக்கு மேலிட்டது. ஏறக்குறைய அரை மணி நேரத்திற்கும் மேலாக அவளை அலைக்கழித்த பின் தங்களுக்குரிய இருக்கையில் வந்து அமர்ந்தவுடன் முகத்தை மூடிக்கொண்டு சுற்றியிருப்பவர்கள் கவனிக்கிறார்கள் என்ற பிரக்ஞையும் இல்லாமல் பெருங்குரல் எடுத்து அவள் அழுததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் தான் அவளை அவ்வளவு தூரம் புண்படுத்தியிருக்கக் கூடாது என்றே தோன்றியது. பாஷை புரியாத மனிதர்களிடம் செய்கையாலும், கொஞ்சம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசிப் பேசி, விசாரித்துக் களைத்துப் போய் இவனைக் கண்டதும் அம்மாவைக் கூட்டத்தில் தொலைத்து விட்ட குழந்தை திடீரென்று கண்டுபிடித்துவிட்ட உணர்வும், கட்டுக்களை தகர்த்தெறிந்த உச்ச வேகத்தில் ‘ஏன் இப்படிச் செஞ்ச’ என்று கேட்காமல் குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது அவள் அழுதுகொண்டிருந்தாள். அவன் “சாரி” என்று கேட்டதும், “நான் என்ன தப்பு பண்ணேன்? அந்தச் சின்னப் பையன் முகத்தில எவ்வளவு பசி இருந்தது? சும்மா பிச்சை எடுக்கக் கூடாதுன்னு இங்க இருக்கிறவங்க குமிச்சு போட்ட குப்பையை சுத்தம் பண்ணிட்டு ஏதாவது வாங்கலாம்னு தானே அந்தப் பையன் பெருக்கிட்டிருந்தான். நீ போட்ட சத்தத்தில உறைஞ்சுபோன அந்த முகமும் பீதியடைஞ்ச கண்களும் இன்னும் என்னால மறக்க முடியல. நீங்கல்லாம் விழிப்புணர்வு, என்லைட்மென்ட்டுன்னு மென்ட்டல்கள் மாதிரி என்னென்னவோ பேசிட்டுத் திரியிறீங்க. இல்லாதவங்க, இயலாதவங்களோட கஷ்டங்களையும் உணர்ச்சிகளையும் புரிஞ்சுசக்க முடியாத உங்களுக்கெல்லாம் விழிப்புணர்வும் ஞானமும் எங்கிருந்து வரும்?”” கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகத்தில் கடுமை ஏறியது. சிறிது இடைவெளி விட்டவள் மீண்டும் விம்ம ஆரம்பித்தாள், விம்மலுக்கிடையில் வார்த்தைகள் கோர்வையாக இல்லாமல் உடைபட்டு வந்தன. “உனக்குத் தெரியுமா அண்ணா. அம்மா திடீர்னு மாயமானப்ப அவங்க எறந்துட்டாங்கங்கிற உண்மைய மறைச்சிட்டீங்க. அத என் நல்லதுக்கு செய்றதா நெனச்சீங்க. எப்பக் கேட்டாலும், ‘அம்மா காசிக்குப் போயிருக்கா, கடவுளப் பார்த்துட்டு வரம் வாங்கிட்டு வருவா’ அப்படீன்னு ரொம்ப நாளா ஏமாத்திட்டிருந்தீங்க. ஒரேடியா  கடவுள்கிட்ட போய்ட்டாங்கன்னு நானா புரிஞ்சிக்கிடுற  வரைக்கும் அம்மா எங்க? எப்போ வருவாங்கன்னு அங்கங்க போய்  நின்னு பரிதாபமாத்  தேடிட்டிருப்பேன் . காசிங்கிறது  பக்கத்தில இருக்கிற ஏதோ ஒரு ஊரு, அல்லது கடைத் தெருன்னு நெனைச்சுக்கிட்டு ஆளுங்க கூட்டமா நிக்கிற எடத்தில போய்  பேந்தை  மாதிரி முழிச்சிக்கிட்டு சுத்திச் சுத்தி வருவேன், அம்மா அங்கதான் இருப்பாங்களோன்னு! அப்ப  ஒரு வேளை  நான் தொலைஞ்சி போயிருந்தேன்னா, இந்த மாதிரிதான் எங்காவது கையேந்தி நின்னுட்டிருந்திருப்பேன்.” அழுகையினூடே அவள் பேசிய சொற்கள் ஆனந்தின் நெஞ்சில் ஆழமாகத் தைத்தன. அவள் அருகில் அமர்ந்து தேற்ற முயன்றவன் தோற்றுப் போனான். ரயிலில் சக பயணிகள் பார்க்கிறார்கள் என்ற பிரக்ஞை இல்லாமல் தொடர்ந்து அழுத சங்கவை, அவனைக் குற்றஞ்சாட்டுகின்ற பாவனையில் மேலும் பேசிக்கொண்டிருந்தாள்.
“இந்த கொழந்தைங்கெல்லாம் எந்த நெலமைல வந்து இப்படி ரயில்ல ஏறி பெருக்கி காசு கேக்குறாங்கன்னு ஒனக்குத் தெரியுமா? இவங்கள யாராவது கடத்திட்டு வந்து பிச்சை எடுக்க வச்சிருக்கலாம். அப்பா விட்டுட்டுப் போயிருக்கலாம். ஏன்? அம்மா அப்பா ரெண்டு பேருமே செத்துப் போயிருக்கலாம், எனக்கு நடந்த மாதிரி... அதும் அப்பா உயிர என் கையில ஏந்துன பாவி நான்.”
“ஏன் இப்படிப் பேசுற சங்கீ. ஒனக்கு நான் இல்லையா?”
“நா அம்மா அப்பா இல்லாத அனாதை. நீ யாரு? எனக்கு என்ன செஞ்சிட்ட? சதா தத்துவ புஸ்தகம் படிச்சிக்கிட்டு, ஊர் ஊரா போயி செமினார்ல பேப்பர் வாசிச்சிக்கிட்டு... அப்புறம் விழிப்புணர்வு அது இதுன்னு விளங்காததெல்லாம் பேசிக்கிட்டு... கூட அந்த கொண்டைக்காரி வேற... தண்ணி குடிக்கிற நேரத்தில கூட என்லைட்மென்ட் வரும். எப்பவும் அவேக்கனிங்கா இருக்கணும்னு எனக்கே உபதேசம் பண்றா! நீங்கெல்லாம் தவிச்ச வாய்க்கே தண்ணி கொடுக்காதவங்க. பக்கத்தில இருக்கவன் பசியில செத்துட்டிருந்தா கூட கண்டுக்காம தத்துவம் பேசிட்டிருந்தா ஞானம் வரும்னா எப்படி வரும்? மொதல்ல நீ மனுஷனா இருக்கக் கத்துக்கோ...” நீளமாய்ப் பேசியதில் அவளுக்கு மூச்சிறைத்தது. முகம் முழுக்க வியர்த்திருந்தது. கைகளும், கால்களும் இழுத்துக்கொண்டு போவதுபோல உணர்ந்தாள். இப்போது எதிர் இருக்கையில் இருந்த சற்று வயது முதிர்ந்த பெண்மணி, தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வந்து சங்கவையிடம் கொடுத்துத் தண்ணீர் பருகச் சொன்னாள். தமிழ் தெரியாத அந்தப் பெண்ணுக்கு இவள் பேசிய வார்த்தைகள் புரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதன் பொருள் நன்றாக விளங்கியிருக்க வேண்டும். முகத்தில் அளவற்ற வாஞ்சையுடன் சங்கவையிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டியபோது முதலில் அவள் மறுத்தாள். பிறகு வாங்கி மளமளவென்று பருகியவள், மீண்டும் தலையைக் கவிழ்த்தபடி விம்மத் தொடங்கினாள். அந்தப் பெண்ணோ பக்கத்தில் அமர்ந்துகொண்டு இவளை மடியில் சாய்த்து முதுகைத் தடவிக் கொடுத்தாள். சில நிமிடங்களிலேயே சங்கவை தூங்கிப்போயிருந்தாள். அந்த இருக்கையிலேயே அவளைப் படுக்க வைத்த பிறகு, தங்கள் பக்கத்தில் அமர்ந்துகொள்ள ஆனந்துக்கு இடம் கொடுத்ததோடு ஒரு உணவுப் பொட்டலத்தையும் அவனிடம் கொடுத்து உண்ணச் சொன்னாள். அவள் கணவனும் கூட வற்புறுத்தினார். பசிக்கவில்லை என்று மறுத்து விட்ட ஆனந்த் எதுவுமே சாப்பிடாமல் அழுது, அழுது களைத்துப்போய் குழந்தைபோல் உறங்கிக் கொண்டிருந்த தன் தங்கையைப் பார்த்தான். தொண்டை அடைத்து நாக்கு வறண்டது. தான் பொறுப்பான அண்ணனாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்ற உணர்வு நெஞ்சில் தகித்தது. மேலும் கொண்டைக்காரி என்று அடைமொழி கொடுத்து அவள் சாடிய பிரியாவும் அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று புரிந்துபோனது. அப்பா இறந்த அன்று மாலையில், அவர் அவனிடம் தொலைபேசியில் பேசும்போது, ‘சங்கவையை பத்திரமா பார்த்துக்கோ. அவளுக்குப் பிடிக்காத எதையும் செய்யாத.’ என்று திரும்பத் திரும்பக் கூறியது நினைவுக்கு வந்தது.” வாழ்வின் தத்துவங்களையும், பிரபஞ்சத்தையும், அதன் சூட்சுமத்தையும் புரிந்துகொள்ள விரும்புகிறேன் என்ற புதிரான தேடலில் தன் உடன் பிறந்த தங்ககையைத் தொலைத்துவிட்டோமோ என்ற அச்சம் மேலிட்டது. தான் யாருமற்ற அனாதை என்று குமுறும் அளவிற்கு அவளிடம் பாராமுகமாய் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டோமோ என்ற வேதனையில் மனசு வெம்பியது.
தாங்கள் இறங்கவேண்டிய ரயில் நிலையம் வந்ததும் உடைமைகளை எடுத்துக்கொண்டு ஆயத்தமான அந்தப் பெண்மணி, தான் வைத்திருந்த பழக்கூடையிலிருந்து இரண்டு ஆரஞ்சுப் பழங்களை எடுத்து அவனிடம் கொடுத்தாள். சைகையாலேயே, கவலைப்படவேண்டாம், தங்கையை நன்றாகப் பார்த்துக்கொள் என்பது போன்ற பாவனையில் அவள் புன்னகைத்துச் செல்ல அவள் கணவரோ அவன் முதுகில் தோழமையுடன் தட்டிக் கொடுத்துச் சென்றார்.
வெளியில் பனிக்கட்டிப் போல் சிரிக்கும் சங்கவையின் உள்ளத்தில் பாறையாய் இறுகியிருந்த வேதனைகள் அன்று வெடித்துச் சிதறியதில் ஆடிப்போயிருந்த ஆனந்த், ஒரு அண்ணனாகத் தான் நிறைவேற்ற வேண்டிய கடமையிலிருந்தும் பொறுப்புகளிலிருந்தும் இனியாகிலும் விலகியிருக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான். அந்த ரயில் சம்பவமும் சங்கவை அவனைக் கேட்ட கேள்விகளும் பல ஆண்டுகள் அவன் கட்டமைத்து உருவாக்கியிருந்த தேடல் என்ற கருத்துக் குளத்தில் பெரிய, பெரிய கற்களை எறிந்துவிட்டிருந்தன. ஆயாசத்துடன் கண்களை மூடித் திறந்தவன், எதிரில் ஜன்னலில் சாய்ந்து ஆழ்ந்த தூக்கத்திலிருந்த பிரியாவைப் பார்த்தான். உதடுகள் சிரிப்பதுபோல லேசாகப் பிரிந்திருந்தன. அந்தச் சிரிப்பின் பிரகாசம் நிலவின் குளிர்ச்சி போல முகத்தில் பரவியிருந்தது. அதன் இனிமை அவன் நெஞ்சை தாக்குதவற்குள் நினைவுகள் மீண்டும் சங்கவையிடம் பயணித்தன.
குழந்தைப் பருவத்தில் சங்கவை தூங்கும்போது தொட்டிலில் சென்று அடிக்கடி பார்க்கும் ஆனந்த் சில சமயங்களில் அவள் சப்தமாய் சிரிப்பதைப் பார்த்து அதிசயித்திருக்கிறான். தனக்கு மிக நெருக்கமானவர்கள் காட்டுகின்ற விளையாட்டையும் வேடிக்கையும் கண்டு உற்சாகம் கொண்டதுபோல் பொங்கியெழும் அந்தச் சிரிப்பு! அம்மாவிடம் ஓடிச் சென்று “சங்கீ பாப்பா சிரிக்குதுமா” என்பான். அவளோ “சங்கீன்னு சொல்லாதன்னு எத்தனை தடவ சொல்லியிருக்கேன். சங்கவைன்னு கூப்பிடணும் என்ன?” என்று புன்சிரிப்புடன் சொல்லிவிட்டு, தேவதைகள் வந்து பாப்பாவுக்கு விளையாட்டுக் காட்டுவதாகவும், அதனால் அவள் சிரிக்கிறாள் என்றும் விளக்கம் சொல்வாள். திடீரென்று இமை மூடியிருக்கும் கண்களுக்குள் யாரையோ கண்டு நடுங்குவதுபோல் உதடுகளை பிதுக்கிக் குழந்தை சங்கவை அழுவதை அவன் கண்டிருக்கிறான்.
“அம்மா, பூச்சாண்டி பயம் காட்றாரோ? சங்கீ அழுதும்மா.” என்பான். அப்போதும், “சங்கவைன்னு சொல்லணும் சரியா” என்று பொறுமையாய் எடுத்துரைக்கும் அம்மா, “பூச்சாண்டியெல்லாம் இல்ல” என்பாள்.
“அப்ப பேயா?”
“பேயுமில்ல பூதமுமில்ல, பாப்பா ஏதாவது கனவு கண்டிருக்கும்.” என சமாளிப்பதுபோல் பதிலளிப்பாள் அம்மா. அவனோ விடாமல் நீங்க சும்மா சொல்றீங்க. திடீர், திடீர்னு பாப்பா எதுக்கு அழணும் என்று அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள் அவனைப் பக்கத்தில் இருத்தி வைத்துக்கொண்டு அம்மா கூறிய பதில் இன்னமும் நினைவில் இருக்கிறது. “தேவதைகள் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களைப் பிடுங்கியிருப்பாங்க.”
“ஏன் கொடுக்கணும்? ஏன் பிடுங்கணும்?”
“எது கிடைத்தாலும், போனாலும் ஒரே மாதிரி சந்தோஷமா இருக்கணும்னு இப்பவே அவங்க பாப்பாவுக்கச் சொல்லிக் கொடுக்கிறாங்க.”
“ஒஹோ...” பெரிய மனுஷன்போல் தலையை ஆட்டி தாயின் மடியில் தலை வைத்துக் கொண்டானே தவிர அம்மா சொன்ன வாழ்க்கைத் தத்துவம் அக்கணத்தில் அவனுக்குப் புரியவில்லை. அன்று அம்மா சொன்னவற்றையும் தனக்கு எதுவுமே கிடைக்கவில்லை, நிலைக்கவில்லை என்பதுபோல் ரயிலில் சங்கவை அழுததையும் சேர்த்துப் பார்த்தான் ஆனந்த். அம்மா இறந்தபின் சங்கவை தூங்குகையில் முகம் இறுக்கமாக இருப்பதைக் கூர்ந்து பார்த்திருக்கிறான். அதைப்பற்றிப் பெரிதும் யோசிக்காமல் “சரியான உம்மணாமூஞ்சுப்பா. தூங்கும்போது கூட முகத்தை உம்முன்னு வச்சிருக்குப் பாருங்க என்று அப்பாவிடம் கேலி பேசுவான். சில நேரம் இவனுடன் சேர்ந்து சிரிக்கும் அப்பா, ஏதோவொரு சமயத்தில் இவனால் விளங்கிக் கொள்ள முடியாதபடி, “அவளுக்கு நடந்தது அப்படி” என்று பெருமூச்சுடன் சொல்லியிருக்கிறார். சங்கவைக்கு ஐந்து வயதாகும்போது திடீரென்று ஒருநாள் காய்ச்சலும் ஜன்னியும் தூக்கிப்போட, குறைந்தது மூன்று நாட்கள் கண் திறக்காமல் கிடந்ததும் அப்பா என்னென்னவோ சொல்லி தலையில் அடித்துக்கொண்டு அழுததும் நினைவிருக்கிறது. மேலும் கருப்பட்டி மாமா என்று அழைக்கப்பட்ட செல்லத்துரையின் சட்டையைப் பிடித்து இழுத்து “ஏண்டா இப்படிச் செஞ்ச? எம்மகளை என்ன பண்ணுன? மூஞ்சிலியே முழிக்காத போ” என்று துரத்தியதும், மருத்துவமனையில் அவள் கண் விழிக்காமல் துவண்டுகிடந்தபொழுது நரசிம்மன் மாமா, “அவன ஏன் தப்பிச்சுப் போக விட்டீங்க? எங் கையில கெடச்சிருந்தான்னா நெஞ்சப் பொளந்து ரத்தத்தைக் குடிச்சிருப்பேன்.” என்று வெறியுடன் கத்தியதும், அதன் பிறகு எப்போதுமே கருப்பட்டி மாமா தங்கள் வீட்டுக்கு வந்ததில்லை என்பதும் ஞாபகத்தில் எட்டிப் பார்த்தது. சின்னஞ்சிறு வயதில் தங்கைக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சியும் பயமும் என்னவாக இருந்திருக்கும்? அதில் கருப்பட்டி மாமாவின் பங்கு என்ன என்று யோசித்தவன், ஒருவேளை எபிக்கு இது தெரிந்திருக்கலாம் என்றும் நினைத்துக்கொண்டான். முதலில் அபி என்றும் பிறகு எபி என்றும் சங்கவையால் செல்லமாக அழைக்கப்பட்ட பிறகு, எல்லோராலும் எபி என்றே அழைக்கப்படுகின்ற ஆபிரகாம் ஆனந்தை விட மூன்று வயது இளையவன். அம்மாவின் மரணத்திற்குப் பிறகு, பாளையங்கோட்டையிலிருந்து குலவணிகர்புரத்திற்கு வீட்டை மாற்றிக்கொண்டு போன பிறகு பக்கத்து வீட்டில் இருந்த எபி குடும்பத்தாரின் ஆழமான நட்பு இவர்களுக்குக் கிட்டியது. சங்கவையும் எபியும் மொட்டை மாடியிலோ பின்புறத் தோட்டத்திலோ வேறு சில குழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு ஐஸ்பால், குச்சிக்கம்பு என்று எதையாவது விளையாடிக்கொண்டிருப்பார்கள். பள்ளி சென்ற நேரம் தவிர தூங்கும்போது மட்டும்தான் சங்கவையை வீட்டில் பார்க்க முடியும். பல நாட்கள் வீட்டுப் பாடத்தைக் கூட எபியின் வீட்டிலேயே செய்துவிட்டு அங்கேயே சாப்பிட்டுத் தூங்கிவிடுவதும் உண்டு. எபிதான் அவளை எழுப்பி வீட்டிற்கு அழைத்து வருவான். சில சமயம் ‘கணக்கு தப்பா போட்டுட்டேன்னு எபி மண்டையில கொட்டிட்டான்ப்பா’ என்று நோட்டுப் புத்தகத்தை ஒரு கையில் பிடித்தபடி, இன்னொரு கையால் தலையைத் தடவியபடி சப்தமாக அழுதுகொண்டு வருவாள் சங்கவை. பின்னாலேயே வரும் எபி, “சரியா போடச் சொல்லித் தர்றேன் வா என்று சமாதானப்படுத்த முயற்சிக்கும்போது, “போடா எபி, ஒங்கூட இனிமே பேசமாட்டேன். நீ கெட்ட பையன். என்னை அடிச்சிட்டே இருக்க” என்று தலையைத் திருப்பிக்கொண்டு அப்பாவின் மடியில் வந்து அமர்ந்துகொள்வாள். ஆனால், மறுநாள் காலை விடிந்ததும் “எபி வீட்ல செவப்பு கலர் ரோஜாப்பூ பூத்திருக்கப்பா” என்று ஓடுவாள். முந்தின நாள் சண்டையின் சுவடே தெரியாமல் இரண்டுபேரும் சிரித்துக்கொண்டு ரோஜாப்பூ செடியின் பக்கம் நின்று கையை ஆட்டிக் கதை பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனந்த், படிப்பிற்காக பேங்களூர் சென்ற பிறகு, சங்கவையின் ஒரே நண்பனான எபி, அவளுக்கு அம்மாவாகவும், அண்ணனாகவும் மாறிப் போயிருந்தான். சங்கவை பத்தாம் வகுப்பிற்குச் செல்லும் போதுதான் எபியின் குடும்பம் சென்னைக்கு மாறிச் சென்றது. ஆனால், கடிதங்கள், தொலைபேசித் தொடர்புகள், விடுமுறைக்கு வருவதென்று இரு குடும்பங்களின் நட்பு மட்டும் மேலும் நெருங்கி தொடர்ந்து கொண்டிருந்தது.
சங்கவை பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் ஹெல்த் இன்ஸ்பெக்ட்டராய் பணிபுரிந்து கொண்டிருந்த அவளது அப்பா நோயின் எந்த முன்னறிவிப்பும் இல்லாமலேயே மரணத்தோடு திடீரென்று கைகுலுக்கிக் கொண்டார். அவள் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்த போதுதான், எபி அவளைச் சென்னைக்கு அழைத்து வந்து கல்லூரியில் சேர்த்து விடலாம் என்று ஆலோசனை தந்ததுடன், அவனே அவளைக் கல்லூரியில் சேர்த்தும் விட்டான். பெண் குழந்தை இல்லாத தங்கள் வீட்டில் அவள் தங்கியிருந்தால் சந்தோஷமாக இருக்கும் என்று எபியின் அம்மா ஸ்டெல்லா தெரிவித்தார்கள். ஆனந்த்தும் கூட ஒத்துக்கொண்டான். ஆனாலும், ஒரு மாறுதலுக்காக தான் விடுதியிலேயே தங்கிப் படிப்பதாக சங்கவை கூறிய போது, அதுவும் சரியென்றே பட்டது.
அண்ணன் - தங்கை பாசம் என்ற இரத்தத் தொடர்பையும் கடந்து எபி - சங்கவை நட்பில் ஆழமான உறவு பின்னப்பட்டிருப்பது ஆனந்துக்கு நன்றாகவே புரிந்திருந்தது. தான் செய்ய விரும்பி கால அவகாசம் இல்லாததால் முடியாமல் விட்டதையெல்லாம் எபி அவளுக்காக செய்துகொண்டிருந்தான். தன்னைவிட அவனிடம் உரிமையுடன் உதவி கேட்கவும் சந்தோஷமாக சண்டை போடவும் அவள் கற்று வைத்திருந்தாள். அந்த நட்பில் அவள் பாதுகாப்பாய் இருப்பதாய் ஆனந்துக்குப் பெரிய நிம்மதி இருந்தது. யோசித்துக் கொண்டிருந்தபோதே கைபேசியில் அழைப்பு மணி ஒலிக்க, எடுத்துப் பார்த்தான். அழைத்தது எபி என்றதும் இவனுக்கும் சங்கவை நட்புக்கும் ஆயுசு நூறு என்று சிரித்தபடியே, தொடர்பு எண்ணை அழுத்தி “நினைச்சிட்டிருக்கும்போதே கூப்பிட்டுட்ட.” என்றான்.
“நினைச்சிட்டிருந்தீங்களா? திட்டீட்டிருந்தீங்களா?” என்று கேட்ட எபி, “அண்ணா, நீங்க சொன்ன அந்த புத்திஸ்ட் மாங்க் எப்ப வர்றாரு? தங்குறதுக்கு எடம் ஏற்பாடு செய்யணும்னு சொல்லியிருந்தீங்களே” என வினவினான்.
“அடுத்த மாசம் கடைசில வர்றாரு. ஆனா, நேரா திருநெல்வேலிக்கு வர்றதாதான் தகவல் வந்திருக்கு. அதனால சென்னையில அகாமடேஷன் தேவையிருக்காதுன்னு நெனைக்கிறேன். தேவைனா ஒங் கிட்ட சொல்றேன்.”
“ஓகே அண்ணா.”
“சங்கவை எப்படியிருக்கா?”
 “வழக்கம்போல என் கூட சண்டை போட்டுட்டிருக்கா. நேத்து கூட புக்ஸ் வாங்க கடைக்குக் கூட்டிட்டுப் போயிருந்தேன். பைக்குல கூட்டிட்டுப் போய் வெயில்ல வேக விடுறியே... கார் வாங்க வேண்டியஷதுதான அப்படீன்னு ஒரே சண்டை.” என்று சிரித்தான் எபி. தொடர்ந்து அவனே, “அலையன்ஸ் ஃப்ரான்செய்ஸ்ல ஃப்ரெஞ்ச் க்ளாஸ் போயிட்டிருக்கா. என்ன திடீர்ன்னு ஃப்ரெஞ்ச் படிக்கிறன்னு கேட்டா ஃப்ரெஞ்ச்காரன கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்றா. பாவம் அந்த ஃப்ரெஞ்ச்காரன்” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான் எபி.
“ஓ, ஃப்ரெஞ்ச் படிக்கிறாளா! நல்லதாப்போச்சு. வர்ற அந்த புத்தத் துறவி ஃப்ரெஞ்ச்காரர்தான். எப்படி அவரோட சரளமா பேசுறதுன்னு யோசிச்சிட்டிருந்தேன். சங்கவைகிட்ட உதவி கேட்டுக்கலாம்.” இப்பொழுது எபி பெரிதாக சிரிக்கும் கேட்டது. “சரி அண்ணா. வேற எதுவும் இல்லியே... நான் அப்புறம் பேசறேன்...”
தொடர்பு துண்டிக்கப்பட்டதும் பிரியாவின் குரல் கேட்டது. ஃப்ரெஞ்சா என்று தூக்கம் கலையாமல் கேட்டாள். ஆனந்த் அவளிடம் புத்தத் துறவியின் வருகைப் பற்றிக் கூறினான்.
“உங்க தங்கை இப்பதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கா. அவளால எப்படி உதவி செய்ய முடியும்? கூட நான் இருக்கிறத மறந்துட்டீங்களா?”
அப்படியில்ல. சங்கவையும் புதிதாக அந்தத் துறவியிடமிருந்து எதையாவது கற்றுக்கொள்ளமாட்டாளா என்ற ஆசைதான்.
“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசை. எது நடக்கும், நடக்காதுன்னு யாருக்குத் தெரியும் என்று பிரியா கூறியபோது வார்த்தைகளோடு கலந்துவந்த பெருமூச்சில் யூகிக்க முடியாத அர்த்தங்கள் பொதிந்திருந்ததாய் தோன்றியது ஆனந்துக்கு.
“இப்ப நாம தங்கியிருக்கிற குலவணிகர்புர வீட்டை ஏன் சும்மாவே வச்சிருக்கீங்க? வாடகைக்கு விடலாமே?” என திடீரென்று கேட்டாள் பிரியா. தானோ சங்கவையோ விடுமுறைகளுக்கு வந்து தங்கிக் கொள்வதற்கு வசதியாகவும், அதே நேரத்தில் வீட்டை வாடகைக்கு விடுவதில் தன் தங்கைக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை என்பதாலும் அதைப் பற்றித் தான் யோசித்ததில்லை என்று தெரிவித்த ஆனந்த், “பக்கத்தில இருக்கிற வீராபுரத்தில எங்களுக்குக் கொஞ்சம் வயல் இருக்கு. அதப் பாத்துக்கிட்டிருக்கிற வெள்ளச்சாமி அண்ணனும் அவர் மனைவியும், எங்க வீட்டையும், சுத்தியிருக்கிற தோட்டத்தையும் ரெண்டு நாளைக்கு ஒரு முறை வந்து பாத்துக்குறாங்க. செடிகள் வாடிப் போறது சங்கவைக்குப் பிடிக்காது.” என்றான்.
“சங்கவைக்குப் பிடிக்காத எதையும் செய்ய மாட்டீங்களோ?” என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சற்றுத் தடுமாறிய ஆனந்த், “அவளுக்குப் பிடிக்காத எதையும் செய்யக்கூடாதுன்னு அப்பா சாகிறதுக்கு முன்னாடி சொன்னது இன்னமும் நினைவிருக்கு” என்றான் கலங்கிய குரலில். அவன் கூறிய கூர்மையான சொற்கள் அவள் முகத்தில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன எனக் கவனியாதவனாக ஜன்னலுக்கு வெளியே தலையைத் திருப்பிப் பார்த்தான். விடாது ஓடிக்கொண்டிருக்கும் அவனது சிந்தனைகள் போலவே வயலிலிருந்து கொக்குகள் ஏதோ திசை நோக்கிப் பறந்துகொண்டிருந்தன.

- அத்தியாயம் 5 முற்றும் -

No comments:

Post a Comment