செம்பஞ்சுக் குழம்பு பூசியிருந்த பாதங்களில் தகதகத்த தங்கச் சிலம்புகள், முத்தும்
மாணிக்கமும் பதிக்கப்பட்டிருத்ததால் கண்களைக் கூசும் அளவிற்கு ஒளி வீச, சகோதரிகள் இருவரும்
மயிலுக்கு நடை கற்பிப்பதுபோல ஒயிலாக நடந்து சென்றார்கள். அவர்கள் உடுத்தியிருந்த பட்டாடை,
உள்ளங்கையில் மடித்து வைத்துக்கொள்ளும் அளவிற்கு மெல்லியதாக இருந்தது. சுனை அருகே வந்ததும்
தெளிந்த நீரைப் பார்த்து மகிழ்ச்சி மேலிட்டது. கைகளால் அள்ளியெடுத்தார்கள். மார்கழி
மாதத்துக் குளிர்ச்சியைவிட, அதிகமாகக் குளிர்ந்திருந்த நீரைப் பருகியதும் தேனும் பாலும்
கலந்த சுவையில் சிலிர்த்துப்போனார்கள். பின்னால் வந்த தோழிப் பெண்கள் செய்தி ஒன்று
சொல்ல விரும்புவதுபோல தயக்கத்துடன் இவர்களை ஏறிட்டார்கள்.
“ஏதோ சொல்ல விரும்புகிறீர்கள் போல் தெரிகிறது. தயங்காமல் சொல்லுங்கள்.” என்றாள்
மூத்தவள்.
தோழியரில் துடுக்கான ஒருத்தி, “இன்று பாண்டிய மன்னர் உங்கள் இருவரையும் பெண்கேட்டு
வருகிறாராம். அதற்காக, கொற்கையில் விளைந்த முத்துக்கள் அனைத்தையும் பரிசாகக் கொண்டு
வருகிறாராம். சகோதரிகள் இருவரும் இதைக் கேட்டதும் நகைத்தார்கள். சிலம்புகளிலிருந்த
முத்துப் பரல்களும் மாணிக்கக் கற்களும் சிதறிவிட்டனவோ என சுற்றும் முற்றும் பார்த்தார்கள்
தோழிப் பெண்கள். தந்தை என்ன சொல்வார் என எதிர்பார்க்கிறாய் சகோதரி?” இளையவள் கேட்க,
“பாண்டிய மன்னனுக்குப் பதிலைத் தானே கேட்கிறாய்?” என்றாள் பெரியவள்.
“ஆமாம்.”
“நீ கொண்டுவந்திருக்கும் முத்துக்கள் எம் பெண்களுக்கு நீ பேசும் விலையா? அவை
அவர்களின் ஒரு சிறிய புன்னகைக்குக் கூட ஈடாகாது எனச் சொல்லி அனுப்பி விடுவார்.”
“இவ்வளவு தூரம் தந்தை அவனிடம் பேசுவார் என்று நினைக்கிறாயா? கடந்த திங்கள் சோழன்
வந்தபோது, பேசவே மறுத்ததாக அல்லவா கேள்விப்பட்டோம். தந்தை என்ன செய்வார் என்று யார்தான்
முன்னுணர முடியும்? நிமித்தங்கள் கூட அவரிடம் பொய்த்துப் போகின்றனவே.”
“சகுனங்களை மட்டும் ஏன் விட்டுவிட்டாய் சகோதரி? அதோ தெரிகிறதே உன்ன மரம். கடந்த
முறை அவர் போருக்குச் சென்றபோது அந்த மரம் கருகியிருந்தது. இப்போதுபோல் செழிப்பாக இருக்கவில்லை.
ஆனாலும் தந்தை மிகப் பெரிய வெற்றியுடனல்லவா திரும்பி வந்தார்.”
“உன் கூற்று உண்மைதான். சேர மன்னனைப் பாராட்டிப் பாடல் இயற்றிய குறிஞ்சித் திணைப்
புலவரும் ‘உன்னத்துப் பகைவன்’ என நம் தந்தையைப் பாடியிருக்கிறார்.”
“இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. தந்தையிடம் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.
இரட்டைப் புலவர்கள் ஏன் நீண்ட நாட்களாக வரவில்லை?”
“மயிலுக்குப் போர்வை தந்தவன் தன் வீட்டு மயிலை அலைக்கழித்து அழ வைத்திருக்கிறானாம்.”
“நல்லூர்க்காரிதான் காரணமோ?”
“அப்படித்தான் சொல்கிறார்கள்.” இருவருக்கும் சந்து செய்விக்கப் போய்விட்டார்கள்
போல் தெரிகிறது. ‘உன் மலைகளைப் பாடலாம் என்று வந்தேன் மன்னா! ஆனால் தலைவிரி கோலமாக
ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைக் கண்டேன். எப்படிப் பாடுவது? குளிருக்காக நடுங்கிய காட்டு
மயிலுக்குப் போர்வை தந்தவன், வீட்டு மயிலைப் புறக்கணித்து அழ வைப்பது சரியில்லையே.
நீ எங்களுக்குப் பரிசில் தர வேண்டாம். அவள் மேல் உன் காதலைப் பொழிந்து மகிழச்செய் என்று
அவனுக்கு நியாயம் உணர்த்தப் போயிருப்பார்கள்.”
இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் புள்ளிமான் ஒன்று சுனையருகே நீர் பருக வந்தது.
இவர்களைக் கண்டதும் துள்ளிக் குதித்து ஓடி சற்று தூரத்தில் போய் நின்றது. கண்களில்
தெரிந்த மருட்சியைக் கண்டதும், சிரித்தாள் மூத்தவள். “நாம் என்ன மருண்டு போயா வாழ்கிறோம்?
மான் விழி என்று எதற்காக இந்தப் புலவர்கள் அழைக்கிறார்கள்?” என வினவினாள்.
“அதிசய நெல்லிக் கனி கிடைக்கப்பெற்ற அப்பாவின் தோழி வரட்டும். அறிவிற் சிறந்த
அவளிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்.”
“எனக்கு ஒரு ஐயம். யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை.”
“என்னிடமே கேட்கலாமே?”
“பாடல் புனைவதில் ஆற்றல் மிக்கவர்களாகயிருக்கும் சான்றோராகிய பெண்கள் வாழ்வில்
துயர் கொண்டு அலைவதுபோல் தெரிகிறதே?”
“யாரைச் சொல்கிறாய்? எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என்று தமிழைத் தலை நிமிர
வைத்த புலவரைச் சொல்கிறாயா? அவர் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறார்?”
கன்றும் பருகாமல் கலத்தினும் படாமல் நிலத்தில் விழுந்து பாழாய்ப் போகும் பால்
போலத் தன் பெண்மையும் அழகும் வீணாகப் போவதாய்த் தவித்துப் பாடும் புலவரும் காதல் தோல்வியில்
கவலையில் தோய்ந்து துயர் கொண்டு அலைகிறாரே! அந்தத் துயரத்தை, பறவைகளின் பாதுகாவலன்
கொடுத்த நெல்லிக்கனியை உண்ட அப்பாவின் தோழியும் தன் பாடலில் பதிவு செய்திருக்கிறாரே?
“வௌவ்வால்கள் விரும்பும் புளிப்பு கலந்த நெல்லிக்கனி பற்றிப் பாடிய புலவரின்
வாழ்க்கையும் கூட துக்கத்தில்தானே போய்க்கொண்டிருக்கிறது!”
“யாரைச் சொல்கிறாய்?”
“யானைத் தந்தங்கள் போல தாழம்பூக்கள் மலர்கின்றன என உவமையில் அழகு படைத்த புலவரைத்தான்
சொல்கிறேன்.”
“அவர் மன்னரையல்லவா காதலித்தார்?”
“நாடாளும் மன்னரையல்லவே. தந்தையிடமிருந்து பிரிந்து சென்று புல்லரிசிக் கூழுண்டு
சாதாரண மனிதராய் காடெல்லாம் அலைந்தவரையல்லவா அவர் காதலித்தார். காயம் பட்டு வெற்றிக்
களத்தில் வீழ்ந்துகிடந்த அவரை, பனை மரத்தைப் பற்றியபடி பார்த்துக்கொண்டிருந்த கவியரசி,
தன் உள்ளங்கவர்ந்தவரின் உடலைத் தழுவிக்கொள்ள விரும்பினாலும், ஊர் என்ன சொல்லுமோ என
ஒதுங்கி நின்று வெதும்பிய வேதனையை அவர் பாடலில் வடித்திருக்கிறாரே!”
“ஒரேயொரு பாடலில் தண்ணீர் இருக்கும் திசையெல்லாம் காதலனைத் தேடிப் பேதுற்றலைந்த
பெண்ணரசியின் கதையும் சோகம் தானே!”
இப்போது கலைமான் ஒன்று தூரத்தில் மருண்டு நின்ற பிணை மான் பக்கத்தில் போய் நின்றது.
இரண்டும் சேர்ந்து நிற்கும் அழகையும் பார்த்த சகோதரிகள் நமக்கு அஞ்சி தண்ணீர் பருகாமல்
விலகி நிற்கின்றன. புறப்படுவோம். பாவம், பாலை நிலத்தில்தான் கலங்கியிருக்கும் கையளவு
நீரை, பிணை மான் பருகட்டும் என்று கலைமானும், கலைமான் மாந்தட்டும் என்று பிணைமானும்
விட்டுக்கொடுத்து தாகம் தீர்க்காமல் போகின்றன நம் பறம்பு மலையில் நீர் வளம் கடலை விடப்
பெரியதும், தேனைவிடச் சுவையானதும் அல்லவா.
அவர்கள் புறப்பட்டுச் செல்லும் தருவாயில் அருகில் ஓடிவந்த மான்கள், கால்களுக்குப்
பக்கத்தில் நின்றுகொண்டு நட்புடன் பார்த்தன. “நாம் பேசுவது, பார்ப்பது எல்லாமே இவைகளுக்குப்
புரியும்… ஏன் இங்கிருக்கும் சிறு கொடிகளுக்கும் பெரிய மரங்களுக்கும் கூட விளங்கும்.
நம் ஒவ்வொரு அசைவும் அவற்றைப் பாதிக்கவும் செய்யும்” என்றாள் மூத்தவள். இளையவள் ஆமோதித்தாள்.
பால் நிலவு அமுதத்தைப் பொழிந்துகொண்டிருக்க, அந்த நிலவொளியில் உப்பு மூட்டைகள்
ஏற்றப்பட்ட வண்டிகள் செல்வதை, தந்தையின் பக்கத்தில் அமர்ந்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த
சகோதரிகள், விவரிக்க இயலாத உணர்வில் ஆழ்ந்திருந்தார்கள். “தந்தையே இந்த உலகத்திலேயே
நீங்கள்தான் நல்லவர், வல்லவரும் கூட” என்றாள் மூத்தவள். “ஆமாம் உங்களுக்கு இணை யாருமே
இல்லை.” என்றாள் இளைவள்.
“என் மகள்களுக்குத்தான் இணை உலகத்தில் எவரும் இல்லை. அதனால்தான் எந்த அரசர்
பெண் கேட்டு வந்தாலும் எனக்கு மனம் ஒப்பவில்லை.”
“ஆழிசூழ் உலகில் யாருமே உங்களை வெல்ல முடியாதல்லவா?” இளையவள் கேள்வியில் பெருமை
பொங்கித் ததும்பியது. தன் இரு பெண்களின் முகத்திலும் நிலவொளியில் மின்னிய கர்வம் அவர்கள்
முகத்திற்கு மேலும் அழகு சேர்ப்பதாய் அந்தத் தந்தைக்குத் தோன்றியது. “இல்லை; என்னையும்
தோற்கடிக்க சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கேட்டால் உயிரையும் தருவேன்.”
“யார் அவர்கள்? புலவர்களா? தன்னுடைய காவல் மாமரத்திலிருந்து கனிந்து, தண்ணீரில்
விழுந்து மிதந்துவந்த மாங்கனியை எடுத்துவிட்டாள் என்பதற்காக, பெண் கொலை புரிந்த மன்னனைக்
கூட போற்றிப் பாடுபவர்கள் அல்லவா புலவர்கள்?”
“அவர்கள் என் மரியாதைக்குரியவர்கள். அவர்கள் புலமைக்கும் தமிழுக்கும் நான் என்றென்றும்
தலை வணங்குகிறேன்.”
“வேறு யார்? எங்கள் தாயும் இப்போது உயிரோடில்லையே?”
“என் ஆவி நிகர்த்த அந்த அன்னத்தைப் பிரிந்த பின்னும் நான் உயிரோடிருக்கிறேன்
என்றால், ஒரு காரணம் நீங்கள். மற்றொன்று...” என நிறுத்தினார் தந்தை.
“அதைத்தான் யாரெனக் கேட்கிறோம்.” ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல்
காதளவோடியிருந்த கயல் விழிகளால் கெஞ்சுவது போல தந்தையிடம் வினவினார்கள்.
“வேறு யார்? கூத்தரும், பாணன்-பாடினிகளும்தான். அவர்களின் பாடலுக்கும் கலைக்கும்
என் உயிரைவிடப் பெரிதாக வேறென்ன பரிசு தர முடியும்?” முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்தவன்
கண்கள் பனிக்கச் சொன்னபோது அவன் பெண்களின் விழிகளிலும் நீர் முத்துக்கள் கோர்த்து நின்றன.
அதே நிலவு, அது பொழிவது அமுதமாய் இருந்தாலும் சகோதரிகளின் கண்களில் கண்ணீரை
வரவழைத்தது. “நிலவே, அப்போதும் நீ காய்ந்தாய். குளிர்ச்சியாய். அருகில் எங்கள் தந்தை
இருந்தார். பறம்பு மலை எங்களுக்குச் சொந்தமாய் இருந்தது. உப்பு வண்டிகள் வரிசையாய்ச்
சென்றன. எங்கள் தந்தையின் பக்கத்தில் அமர்ந்து உன்னையும் உன் தண்ணொளியில் உப்பு வண்டிகளையும்
பார்த்து மகிழ்ந்திருந்தோம். இப்போது நீயும் இருக்கிறாய், உப்பு வண்டிகளும் வரிசையாய்ச்
செல்கின்றன. எங்களுக்குச் சொந்தமாயிருந்த பறம்பு மலையும் எங்களை விட்டுப் போய்விட்டது.
உயிராக இருந்த தந்தையும் கூட எங்களோடு இல்லை.” முகத்தை நீண்ட காந்தள் விரல்களால் மூடிக்கொண்டு
முலைகள் நனைக்க அழுதார்கள் சகோதரிகள் இருவரும்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சங்கவையும் வாய்விட்டு அரற்றினாள்.
“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர் கொள்ளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்று எறிமுரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே...” சொல்லிவிட்டு அழுதாள்.
அறிவில் சிறந்த தோழியும் அந்தண நண்பனும் ஊர், ஊராக அழைத்துச் சென்றார்கள். என்
பெண்களை மணம் செய்துகொள்ள உலகிலேயே எவரும் இல்லை என்று தந்தை இறுமாந்திருந்த காலம்
போய், இப்பெண்களா? எங்களுக்கு வேண்டாம் என்று சென்ற இடமெல்லாம் சீந்துவாரின்றிப் போனார்கள்.
சங்கவை விசும்பி, விசும்பி ஓய்ந்து போனாள். குன்றும் மலையும், அவரைக்கொடியும், கோடல்,
கொன்றை, முல்லை மலர்களும் மறைந்து போக, விளக்குகள் பளீரென கண்ணுக்குள் அடித்தன. இவை
என்ன உயர்ந்த கட்டிடங்கள்? மாடங்களும் மாளிகைகளும்போல் தெரியவில்லையே! யோசித்துக் கொண்டிருக்கும்போதே,
தலையை மொட்டையடித்து, காவி உடுத்தி கையில் ஏதோ மணிகளை உருட்டியபடி மந்திரத்தை முணுமுணுத்த
வாயுடன் புத்தத் துறவிகள் வரிசையாக நின்றிருந்த பைன் மரங்களைக் கடந்து நடந்து வந்து
கொண்டிருந்தார்கள். சங்கவையின் கண்களுக்குள் உணர்வுகள் குழப்பத்தில் சிறகடித்தன. இமைகளைப்
பிரித்து இதென்ன காட்சியென்று விளங்கிக்கொள்ள ஆழ்மனம் கட்டளையிட்டும், அவள் பகீரதப்
பிரயத்தனம் செய்து பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. துறவிகளின் முகத்தில் நிரம்பியிருந்த
தேஜஸ் அவளை ஆட்கொண்டு காந்தமென அந்த மடத்திற்கு வரும்படி அழைத்தது.
“நான் மன்னனின் மகள். எனக்காகவும் என் சகோதரிக்காகவும் தந்தையின் உற்ற நண்பர்
குறிஞ்சி பாடிய அந்தணரும், எங்கள் தந்தையின் தோழியும் ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி
நல்லை, வாழிய நிலனே’ என்று உலகம் உய்வதற்கு வழி சொன்னவருமான கவிப்பேரரசியும் மணமகன்
தேடிக்கொண்டிருக்கிறார்கள். நான் எப்படி அங்கே வர முடியும்? இந்த இடம் எனக்குப் புதிதாகவும்
புதிராகவும் இருக்கிறது. வேங்கைப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மலைகளும் பனிச்சுனைகளும்,
நெய்தல் நிலத்துத் தாழைகளும் அங்கு நின்றிருந்த நாரைகளும் எங்கே போயின? சங்கவை நெஞ்சுக்குள்
கதறி அழுதாள். “பெண்ணே, நீ இங்கே இருக்க வேண்டியவள். நீ சொல்கிறாயே... அந்த அறிவு சார்ந்த
பெண்.” அவருடைய அந்தப் பாடல் கருத்து கூட புத்தரின் தம்ம பதத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான்
பெண்ணே. தலையை மழித்து இதோ காவி ஆடை கட்டிக்கொள்.” என்றார்கள் அந்தப் புத்தத் துறவிகள்.
“இவை மாபெரும் பத்தினி மகளுக்குரியவை அல்லவா? அவள் கையிலிருந்த அமுத சுரபிதானா
உங்கள் கையிலிருக்கும் கமண்டலம்?”
“பழம்பிறப்புக்கள் குறித்துப் பேசிக்கொண்டிராதே மகளே!” மனதை ஒருமுகப்படுத்து.
இதோ உனக்குரிய மந்திரம். தலைமைக் குரு போல தோன்றிய துறவி அவள் காதுகளில் ஏதோ மந்திரச்
சொல் கூற அவளும் தியானிக்கத் தொடங்கினாள். ஆனால், அய்யோ, சிந்தனையை ஒருமுகப்படுத்த
முடியவில்லை. அங்குமிங்குமாகச் சிதறிப்போன நினைவுகளைச் சேர்த்துப் பிடித்து மையப்படுத்த
முனைகையில், யாரது புத்த துறவிகளுக்கு நடுவில் வெளிறிப்போன ஜீன்சும் நீல நிற டீ ஷர்ட்டும்,
சுத்தமாக மீசை தாடி மழிக்கப்பட்டிருந்த எழுதப்படாத ரோஜா நிற ஸ்லேட்டு போல முகமுமாக
உயரமான அந்த இளைஞன் யார்? அவன் தலைக்கு மேலே பெயர்ப் பலகையொன்று தெரிந்தது.
“இது என்ன ஊர்?” திறந்துகொள்ள முடியாத கண்களுக்குள் வாசிக்க முற்பட்டாள். எழுத்துக்கள்
பரிச்சயமின்றி இருந்தன. மனம் பயணப்பட்டு கம்ப்யூட்டரில் கூகுளுக்குள் சென்று ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கச் சொன்னது. ‘KYOTO’.
“கி.. யோ..ட்டோ.. கியோட்டா” மெல்ல முணுமுணுத்தாள் சங்கவை. “இது எந்த நகரம்?
யார் இவன்? புலம்பிக்கொண்டிருக்கும்போதே “சங்கவை. சங்கவை” என்று குரல் கொடுத்தபடி தமிழ்ச்செல்வியும்
ஈஸ்வரியும் அவள் அருகில் நின்று அவளை தட்டியெழுப்பிக்கொண்டிருப்பது புரிந்தது. கண்களைத்
திறந்து திகைப்புடன் விழித்தாள். “நான் எங்கிருக்கிறேன்? பறம்பு மலையிலா? ஜப்பானிலா?”
“ம், பைத்தியக்கார ஆஸ்பத்திரியில. மூளை கீள பிசகிப் போச்சாடி?” இப்போது கனவிலிருந்து
முற்றிலுமாக விடுபட்டிருந்தாள் சங்கவை. “அய்யோ ஒரு விசித்திரமான கனவு” சொல்லியபடியே
எழுந்து தண்ணீர் எடுத்து மளமளவெனப் பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். பிறகு,
தமிழ்ச்செல்வியிடம், பறம்பு மலை பாரியுடையதுதானே?” எனக் கேட்டாள். அவள் ஒன்றும் புரியாமல்
தலையசைக்க, “கியோட்டோ பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்” என்று பரபரத்தாள்.
“நீ போய் முதல்ல மொகத்த கழுவிட்டு வா. நான் பாத்துச் சொல்றேன். ரொம்பக் குழம்பிப்
போயிருக்க.” என்று கையில் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு
அமர்ந்தாள் ஈஸ்வரி. சற்றுத் தெளிவாக படுக்கையில் சங்கவை சாய்ந்திருக்க, அருகிலேயே தமிழ்ச்செல்வி
அவளைக் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். மளமளவென்று கியோட்டோ பற்றிய தகவல்களைக்
கூறினாள் ஈஸ்வரி.
“ஜப்பானில் ஆயிரம் வருடங்களுக்கு மேல் தலைநகரமாக இருந்த கியோட்டோவை, புனித நகரம்
என்றே சொல்லலாம். ஏராளமான புத்த மடங்கள் அங்கிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது,
பலத்த விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பின் இந்நகரின் மீது அணுகுண்டு வீசப்பட வேண்டாம்
என்று ரூஸ்வெல்ட்டின் தலைமையில் இயங்கிய அமெரிக்க அரசு முடிவு செய்தது. இதற்குக் காரணம்
ஹென்றி ஸ்டிம்சன். அவர் இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக
இருந்தும் கூட, இந்நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்படக்கூடாது என்று உறுதியாக இருந்தாராம்.
காரணம், தனது தேனிலவுக்காக அவர் சென்ற இடம் இதே கியோட்டோ நகரம். அப்போதும், அதற்குப்
பிறகு அரசு அதிகாரியாக அங்கு சென்றபோதும், ஆசியாவின் மிகப்பெரும் கலாச்சார பண்பாட்டுத்
தளம் கியோட்டோ என்பதை அவர் உணர்ந்திருந்தார்.” மூச்சு விடாமல் விளக்கம் வாசித்த ஈஸ்வரி,
“எதுக்காக சங்கு கியோட்டோ பத்திக் கேக்குற? ஒன்னோட ஹனிமூனுக்கு அங்க போகப் போறியா”
என கண் சிமிட்டி, சிரித்தாள்.
அவளது கிண்டலை ரசிக்க மனமில்லாத சங்கவை, “நீண்ட பயணம் செய்ததுபோல் களைப்பாக
இருக்கிறது. துயில்கொள்ளச் செல்கிறேன்.” என்று கண்களை மூடிக்கொண்டாள். அடுத்த கணமே
தூங்கியும் போனாள். தன் தலையில் தட்டிக்கொண்ட ஈஸ்வரி, “நாம இதுவரைக்கும் கேட்காத தமிழ்ல
அவ பேசுனதக் கவனிச்சியா தமிழ்?” என்றாள் குழப்பத்துடன்.
“எனக்குந்தான் புரியவில்லை” என்றாள் தமிழ்ச்செல்வி குழப்பம் நிறைந்த பார்வையை
சங்கவையின் முகத்தில் பதித்தபடி.
((( அத்தியாயம் 10 முற்றும்
)))